விரதம் எனும் புரதம்

நண்பர்களுக்கு விஜயதசமி தின நல்வாழ்த்துகள். இந்த வருட நவராத்திரி எனக்குச் சற்று ஸ்பெஷல்.

பன்னெடுங்காலம் முன்னர் லாசரா ஒருமுறை நவராத்திரி விரதம் குறித்துச் சொன்னார். நவராத்திரியோ, சிவராத்திரியோ ஏதோ ஒரு சாக்கு. விரதம் நல்லது. உண்ணாதிருப்பது அனைத்திலும் நல்லது.

ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, இருவேளை குளித்து பூஜை செய்து, செய்யும் தொழில்தவிர வேறெதையும் நினையாதிருந்து பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆசைதான். எங்கே முடிந்தது? ஒவ்வொரு வருடமும் நினைத்துக்கொள்வதோடு சரி.

இந்த வருடம் முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கிவிட்டேன். முதல் இரண்டு நாள்கள் பசி கண்ணைக் கட்டிவிட்டது. மூன்றாம் நாள் தொடங்கி, பழகிவிட்டது. இந்த ஒன்பது தினங்களில் வீட்டில் சமைத்த சாப்பாடு தவிர வேறு எதையும் விரலாலும் தொடவில்லை. அதுவும் மதியம் மட்டும். நொறுக்குத் தீனிகளுக்கும் தடை போட்டுக்கொண்டேன். இந்நாள்களில் ஏகப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்களும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கார வகைகளும் வெங்கடேஸ்வரா மிளகு வடை, தட்டை ரகங்களும் இன்னபிற நானாவித ருசிமோகினிகளும் என்னைச் சுற்றி கும்மியடித்துக்கொண்டே இருந்தன. தொடுவேனா? வீரன் தான். சந்தேகமில்லை.

விரதம் எனக்குத்தானே தவிர படப்பிடிப்பாளர்களுக்கில்லை. நான்கு ஷூட்டிங்குகளும் தினசரி அமோகமாக நடந்தன. அடாத மழையிலும் விடாது அவுட் டோர் படப்பிடிப்புகளும் நடைபெற்றன. என் வேலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. விரதம் காரணத்தினால் சற்றே சோர்வு இருந்தாலும் ஒரு மாதிரி சமாளித்துவிட்டேன்.

நடுவில் மழையால் ஒன்றரைநாள் மாவா இல்லாமல் போனதுதான் சற்று பேஜாராகிவிட்டது. [முன்னதாக முப்பெரும் தேவியரிடம் பேசி மாவாவுக்கு விரத விலக்கு வாங்கியிருப்பேன் என்பதை நீங்களறிவீர்கள் என்பதை நானறிவேன்.]

எனது விரதத்துக்கு எம்பெருமான் சிறப்பாக என்ன பலன் தருவான் என்று யூகிக்க முடியவில்லை. எடையில் இரண்டு கிலோ குறைத்திருந்தால்கூடப் போதும். ஜீவாத்மா சந்தோஷப்பட்டுவிடும்.

Share

5 comments

  • /// ஒவ்வொரு வருடமும் நினைத்துக்கொள்வதோடு சரி.

    எடையில் இரண்டு கிலோ குறைத்திருந்தால்கூடப் போதும். ///

    இது போல் பலவற்றை ரசித்தேன்…

    விழாக்கால வாழ்த்துக்கள்…

    நன்றி…

  • நீங்களெல்லாம் ஒரு மாசம் ஒண்ணும் சாப்பிடாமல் இருந்தாலும் தங்கள் உடம்பு குறையாது. ஏனென்றால் அது அப்படித்தான். இதை தான் உடல் வாகு என்று சொல்லுவார்கள். உடம்பு குறையும் என கனவு கண்டு விரதமிருந்து உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள். பின் அல்சர் எனும் அசுரன் வயிற்றில் புகுந்து விடுவான்.

  • சிவம் ப்ராப்னோதி சிவாய நமஹ! பயம் ப்ராப்னோதி மானசா சரஹ!! என்ற வாக்கின்படி, மனமே எல்லாம். அதனால் நான் விரதங்களைக்கூட மனதால் மட்டுமே அனுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டேன். டயட்டை. அதன் பலனாக, மனதால் பல்லாயிரம் கிலோ எடையும் குறைந்திருக்கிறது. இருந்தாலும் உங்களின் இம்மாயாவுலக விரதத்திற்கும் இம்மாயாலோகத்திலேயே பலன் கிடைக்க வாழ்த்துகள்

  • மேற்படி நாட்களில் காபி எத்தனை என்று சொல்லவில்லையே? அதற்கு சகல தேவர்களும் சகல விரத் நாட்களிலும் விதி விலக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று பூலோக புராணம் 16வது காண்டத்தில் இருக்கிறதே?

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!