புனைவுக் கதைகளின் மீது எப்போதுமே எனக்கு ஒரு விவரிக்க முடியாத பிணைப்பு உண்டு. இந்த தொடரில், எழுத்தாளர் அவரின் கற்பனை உலகத்தை நம்மிடம் அழகாக கடத்தி இருக்கிறார். இது தான் கதையின் முதல் வெற்றி. காட்சிகள் கண் முன் விரிந்து படர்ந்து நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. சூனியனின் மீது ஒரு விதப் பற்று உருவாகி விட்டது. எப்படியும் அவன் தண்டனையில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. மனிதர்கள், தேவர்கள், சூனியர்கள், இப்படி எந்த உலகத்தை எடுத்து கொண்டாலும், அங்கே கண்களுக்குப் புலப்படாத, புலப்பட்டாலும் எதுவும் செய்ய முடியாத அரசியல் நிலவி கொண்டு தான் இருக்கிறது.
” இல்லாமல் போவதல்ல, இல்லாமல் போவதை உணர முடிவது தான் உண்மையான மரணம்”
எழுத்தாளரின் வார்த்தைக் கட்டமைப்பைக் கண்டு நான் வியந்த இடம் இங்கு தான்.
சூரியன் கேட்ட கேள்விக்கு நியாய கோமான் யூதாஸ் நியாயமாக பதில் சொல்வதென்றால் என்ன சொல்லி இருக்கலாம் ?
ஆம் நான் எனக்கு தந்த பணியை சரியாய் நிறைவேற்றினேன் ஆனால் அதன் விளைவாய் நிகழ்ந்த நன்மைக்கெல்லாம் நான் பொறுப்பல்ல, எந்த ஒரு நன்மைக்கு பின்னும் ஒரு தீமை ஒளிந்திருக்கும், ஒவ்வொரு தீய செயலின் பின்னும் ஒரு நன்மை வெளிவரத்தான் செய்யும். இது உலக நியதி. என்னை இன்னும் ஏமாற்றும் மக்களுக்கு உவமையாகத்தானே சொல்கின்றனர். இப்போது சொல் உன் கூற்று சரியானதா ?
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!