புத்தக அறிமுகம் புத்தகக் காட்சி 2011

பாவி, பழுவேட்டரையா! குறுக்கே வராதே!

ஊரில் யாருக்காவது கல்யாணமானால், காலக்ரமத்தில் ஒரு குழந்தை எதிர்பார்க்கலாம், நியாயம். தாலி கட்டி முடித்துவிட்டு நேரே போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து க்ளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாறை எழுதுகிற ஜென்மத்தை அறிவீர்களா?

சென்ற வருடம் கிளுகிளு ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையை எழுதி புத்தகக் கண்காட்சியைக் கலக்கிய முகில் இந்த வருடம் தருவது கிளியோபாட்ரா.

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவாணி என்கிற அற்புதமான இலக்கிய நயம் மிக்க பாடலின் மூலம் கிளியோபாட்ராவைத் தமிழ் மகாஜனங்கள் ஏற்கெனவே ஓரளவு அறிந்திருப்பார்கள் என்றாலும் அந்த கழுதைப்பால் கனவுக்கன்னியின் காலமும் இடமும் இருப்பும், அரசியலில் ஒரு பெண் வெளிப்படுத்திய ஆளுமையும் இன்னபிறவும் இந்தளவு முழுமையாக வேறு எந்த நூலிலும் திரைப்படப் பாடல்களிலும் சினிமாக்களிலும் மற்றவற்றிலும் வெளிப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

புத்தகம் அருமையாக வந்திருப்பது பற்றி முகிலின் புதிய மனைவிக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஓர் எழுத்தாளனைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதன்மூலம் அனுபவிக்கவேண்டிய நியாயமான இம்சைகளை அவர் திருமணமான முதல் மாதத்திலேயே அனுபவிக்க நேர்ந்தமைக்காக என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் 😉

0

சென்ற வருடம், மருதனின் இரண்டாம் உலகப்போர் தான் கிழக்கின் பெஸ்ட் செல்லர். அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு முதல் உலகப்போர். ஆனால் இரண்டாம் உலகப்போரைப் போல் இதை எழுதுவது எளிதல்ல.

இரண்டாம் உலகப்போரில் ஒரு கதாநாயகன் உண்டு. அவரே வில்லனாகவும் இருந்தது கூடுதல் சௌகரியம். தவிரவும் அந்தச் சரித்திரத்தை ஒரு நேர்க்கோட்டுக் கதையாக வார்ப்பது எளிய காரியமும்கூட. ஹிட்லர் என்கிற மனிதரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட சரித்திரம் அது. எழுதியது மருதன் என்பதால் கொஞ்சம் கூடுதலாக சோவியத் ஓட்கா வாசனை இருந்தது என்றாலும் கட்டுமானத்தைப் பொருத்தவரை அதிக சவால்கள் இல்லாத சப்ஜெக்ட் அது.

ஆனால் முதல் உலகப்போர் அப்படியல்ல. இதற்கொரு சரியான மையப்புள்ளியைப் பிடிப்பதே முதல் கஷ்டம். ஆஸ்திரிய இளவரசரை யாரோ பூச்சாண்டி மாமா சுட்டுக்கொன்றுவிட்டான் என்று ஆரம்பித்தாலும், கதையில் அந்த ஆஸ்திரிய இளவரசனுக்கு அந்த ஒரு வரிக்குமேல் தரமுடியாது. சுட்டுக்கொன்றவனைப் பின் தொடரலாமா என்றால், அவனுக்கு அட்ரஸே கிடையாது. யார் எதற்காக அடித்துக்கொள்கிறார்கள் என்றே புரியாத குழப்பம். ஒரு ஹீரோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட வில்லன் கிடையாது. நடுவில் என்னவாவது சூழ்ச்சி கீழ்ச்சி வருகிறதா என்றால் அதுவும் கிடையாது. என்ன எழவு சரித்திரம் இது? வெறும் சாவு கதை. வேண்டுமானால் ஜெர்மன் கெய்சரின் கேனத்தனங்களை மையப்படுத்தலாம். ஆனால் ஒரு பெரிய உலக யுத்தத்தைத் தாங்கக்கூடிய வலு அதற்குப் பத்தாது.

உண்மையில் உலகைப் பல கூறுகளாக அரிந்துபோட்ட, பல தேசங்களை எழமுடியா பாதாளத்தில் தள்ளிவிட்ட இந்த மாபெரும் கேவலத்தை எழுத்தில் காட்சிப்படுத்துவது மிக மிகச் சிரமமான காரியம். ஆனால், எழுதிப் பழகிய கரம் என்றபடியால் ஒரு வடிவமற்ற வடிவத்தை இப்புத்தகத்துக்கு வழங்கியிருக்கிறான் மருதன். இன்னும் புரியும்படிச் சொல்வதென்றால் சாரு போன்ற எழுத்தாளர்கள் புனைகதைகளுக்குப் [உதா: ஸீரோ டிகிரி] பயன்படுத்தும் உத்தியை முதல் முதலில் ஒரு அபுனை நூலுக்குப் பயன்படுத்தியிருக்கிறான்.

சென்ற கண்காட்சியின்போது இரண்டாம் உலகப்போரை வாங்கிய வாசகர்கள் அத்தனை பேரும் முதல் உலகப்போர் எங்கே என்றார்கள். இங்கே என்று இந்த வருடம் சொல்லிவிடலாம்.

0

ச.ந. கண்ணனின் முதல் சரித்திர முயற்சி ‘ராஜ ராஜ சோழன்’. ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் இம்மாதிரி சரித்திரக் கதாபாத்திரங்களை, அவர்களது உண்மையுருவில் மீள்பிறப்பளித்தால் வாசகர்களுக்குப் பெரிய குழப்பம் முதலில் ஏற்பட்டுவிடும். ஏனென்றால் ஏற்கெனவே சிவாஜி கணேசன் இவர்களையெல்லாம் எவரெஸ்டுக்குப் பக்கத்தில் ஃப்ளாட் கட்டிக் குடிவைத்திருப்பார். உங்களால் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையை மிகையில்லாமல் எழுதி வெற்றிபெற வைக்கவே முடியாது. ஒரு வ.ஊ.சி? வீர சிவாஜி?

இருப்பதை இருக்கிற மாதிரியே நாம் எழுதினால் மக்கள், இது இல்லை இவர் வாழ்க்கை என்று சொல்லிவிடுவார்கள். நடிகர் திலகம் செய்துவைத்த சரித்திர மோசடி இது. ஆனால் குறைசொல்லிப் பயனில்லை. இது சினிமாவும் இல்லை. ராஜராஜனின் வாழ்க்கையின் ஊடாக பிற்கால சோழர்களின் சரித்திரத்தை அழகாகக் காட்சிப்படுத்தும் இந்தப் புத்தகம், கூடிய சீக்கிரம் என்னவாவது ஒரு காலேஜில் ஏதாவது ஒரு கோர்ஸில் துணைப்பாடமாகிவிடும் என்று நேற்று ராத்திரி என் கனவில் குந்தவை வந்து சொல்லிவிட்டுப் போனாள். பாவி பழுவேட்டரையன் குறுக்கே புகுந்து கெடுக்காமல் இருக்கவேண்டும்.

0

பி.கு: கிழக்கு பதிப்பகம் இவ்வாண்டு வெளியிடும் சரித்திர நூல்களில் சிலவற்றைப் பற்றிய என் தனிப்பட்ட குறிப்புகள் இவை. மருதன், முகில், கண்ணன், முத்துக்குமார் எழுதுவதைப் பற்றியெல்லாம் நான் என்ன சொன்னாலும் அது தற்புகழ்ச்சி என்று விமரிசிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், இந்த வயதில் இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழ்கூறும் நல்லுலகில் வேறு யாரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது? இந்த வரிசையில் பாலுவின் முத்துராமலிங்க தேவர் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். எழுதாததன் காரணம், அது தனி இட ஒதுக்கீடு கேட்பதுதான்.

Share

4 Comments

 • கிழக்கின் அங்கங்களான அனைவருக்கும் என் வாழ்த்துகள்…

  ஹாய் பா.ரா – அதென்ன முகிலின் புதிய மனைவிக்குத் தெரியுமா…….
  சமீபத்தில்தான் திருமணமானவர் என்று சொல்லலாம் இல்லையா??

 • //எழுதியது மருதன் என்பதால் கொஞ்சம் கூடுதலாக சோவியத் ஓட்கா வாசனை இருந்தது என்றாலும் கட்டுமானத்தைப் பொருத்தவரை அதிக சவால்கள் இல்லாத சப்ஜெக்ட் அது.//

  அட! படிக்கும் போதே யோசிச்சேங்க. ஆனா, இப்பத்தான் புரியுது. வோட்கா வாசனை எனக்கு இப்போ தான் தெளிஞ்சது போல… 🙂

 • பிப் 18 முதல் தினந்தோறும் இரவில் பத்து மணி நேரம் தூங்க ஆசிர்வதிக்கின்றேன்.

  • பத்து மணி நேரமா? நான் உருப்பட நினைப்பவன். ஆளை விடுங்கள்.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி