கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 8

பாண்டியாடிக்கொண்டிருந்த வளர்மதி திரும்பிப் பார்த்தபோது அவள் கண்ணில் முதலில் பட்டது பத்மநாபன் இல்லை. ஹெட்மாஸ்டர்தான். எனவே அவள் ஜாக்கிரதை உணர்வு கொண்டாள். ஆட்டத்தை நிறுத்தாமலேயே, ‘என்னடா?’ என்று அலட்சியமாகக் கேட்டாள்.

‘உன்னாண்ட கொஞ்சம் பேசணும்’ என்று பத்மநாபன் சொன்னான்.

‘இப்ப முடியாது. அஞ்சு நிமிஷத்துல கிளாசுக்கு வந்துடுவேன். இங்கிலீஷ் சார் ‘மிஸிண்ட்ரப்ரடேஷன் லீட்ஸ் டு மிஸரி’ல இன்னிக்கி டெஸ்ட்னு சொன்னாரே, படிச்சிட்டியா?’

பத்மநாபனுக்கு அவளுடைய பேச்சும் கவனிக்காத பாங்கும் குழப்பம் தந்தன. அதைவிடக் குழப்பம், சம்பந்தமில்லாமல் பாடம் குறித்து அவள் நினைவூட்டியது. எரிச்சலாக இருந்தது. அடக்கிக்கொண்டு திரும்பவும் அழைத்தான். உன்னாண்ட கொஞ்சம் பேசணும்.

வளர்மதியும் தோழிகளும் ஆட்டத்தை முடித்துக்கொண்டு முகம் துடைத்தபடி வகுப்புக்குப் புறப்பட்டார்கள்.

‘அப்ப நீ வரமாட்ட?’

‘எங்கடா?’

‘பேசணும்னு சொன்னனே?’

வளர்மதி அவனை உற்றுப்பார்த்தாள். வெறும் பத்தடி தொலைவிலேயே கையில் பிரம்புடன் காவல் காக்கும் ஐயனார் போல் மைதானம் முழுவதையும் தன் பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருக்கிறார் ஹெட் மாஸ்டர். இந்தக் குடுமிக்கு ஒரு சின்ன உள்ளுணர்வு கூடவா இருக்காது? மடையன், மடையன். திரும்பிப் பாருடா தடியா.

ஆனால் பத்மநாபன் கொக்குக்கு மதி எப்போதும் ஒன்று. வளர்மதி. அவள்மீது வளர்த்துக்கொண்ட காதல். அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கும் ஹெட் மாஸ்டர். விஷயம் என்னவாகப்போகிறது? இன்று விடை தெரியும். இது குறித்து அல்லது வேறு எது குறித்தாவது அவன் வளர்மதியுடன் பேசியாகவேண்டும். அதைவிட என்ன பெரிய விஷயம்? மிஸிண்ட்ரப்ரடேஷன் லீட்ஸ் டு மிஸரி நாசமாய்ப் போகட்டும்.

‘உஸ்கூல் விட்டதும் கண்டிப்பா உன்னாண்ட பேசணும். ராஜமாணிக்க மொதலியார் கொடோனாண்ட வாய்க்கால் கரையோரம் வெயிட் பண்ணிட்டிருப்பேன். நீ வரலன்னா செத்துருவேன் வளரு’ என்று கண்ணைத் துடைத்தபடி சொல்லிவிட்டு ஓடிப்போனான். வளர்மதி தலையில் அடித்துக்கொண்டு வகுப்புக்குச் சென்றாள்.

பதினொரு மணிக்கு பத்மநாபனின் அப்பா பள்ளிக்கு வந்தார். உடனே ப்யூன் எட்டியப்பன் வகுப்புக்கு வந்து ஹெட் மாஸ்டர் அவனை அழைப்பதாகச் சொன்னான். டிசி அல்லது திருந்திய மாணவன். புத்தம்புதிய காதல் காவியம். உங்கள் கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் காணத்தவறாதீர்.

விபரீத எண்ணங்களும் கலவையான திட்டங்களும் புத்தியில் முட்டி மோத, அவன் தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றார்.

அப்பா நின்றுகொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் பல்லைக் கடித்தார்.

‘பத்மநாபனா ஒம்பேரு? காலைல கிரவுண்ட்ல பாத்தனே? பொண்ணுங்களோட ஒனக்கு என்னடா பேச்சு?’ என்று எடுத்த எடுப்பில் ஹெட்மாஸ்டர் சட்டையைப் பிடித்தார்.

‘இங்கிலிஷ் க்ளாஸ்ல இன்னிக்கி டெஸ்டு சார். ஒருவாட்டி ஒப்பிச்சிப் பாக்கலாம்னு போனேன்.’

‘ஓஹோ. பாடம் ஒப்பிச்சிப் பாக்க ஒனக்கு க்ளாஸ்ல வேற பசங்களே கிடையாதா?’

‘வளர்மதி இங்கிலீஷ்ல ஃபர்ஸ்ட் சார்.’

ஹெட் மாஸ்டர் முறைத்தார்.

‘இந்தா பாருங்க சார், உங்க பையன பத்தி விசாரிச்சேன். சுமாராத்தான் படிக்குறான். நிறைய டைவர்ஷன்ஸ் இருக்குது. எனக்கு இந்த லவ்வு கிவ்வுன்னா சுத்தமா புடிக்காது. படிக்கற பசங்க ஒழுங்கா இல்லன்னா நாளைக்கு எனக்குத்தான் கெட்ட பேரு. என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க’

அப்பா, பத்மநாபனைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். ‘ஹெட் மாஸ்டர் கால்ல வுழுடா. இன்னோர்வாட்டி இந்தமாதிரி விசயம் வந்திச்சின்னா வீட்ல சேக்கமாட்டேன் உன்னிய’ என்று சொன்னார்.

அடடே விஷயம் இத்தனை எளிமையானதா? பத்மநாபன் சந்தோஷமாக ஹெட் மாஸ்டர் காலில் விழுந்தான். மன்னிச்சிருங்க சார். தெரியாம தப்பு பண்ணிட்டேன். இன்னமே என்னப்பத்தி நல்ல விஷயம் மட்டும்தான் உங்க காதுல விழும். இந்த பத்மநாபன் திருந்திட்டான் சார். நேத்தே எங்கப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் சார்.

‘நிஜமாவா?’ என்றார் ஹெட் மாஸ்டர்.

‘ஆமா சார். நைட்டு வீட்ல சொன்னான். இந்தமாதிரி ஒரு பொண்ணு.. அப்படின்னு. இந்தக் காலத்துப் பசங்க புத்தி ஏன் இப்பிடிப் போவுதுன்னு தெரியல..’ என்று அப்பா பொதுவில் சில வரிகள் கவலைப்பட்டார்.

‘மொதல்ல சினிமா பாக்குறத நிறுத்தணும்.’

‘இன்னமே தியேட்டர் பக்கமே போகமாட்டேன் சார்’ என்றான் பத்மநாபன்.

‘லாஸ்டா என்னா படம் பாத்த?’

‘அலைகள் ஓய்வதில்லைக்கு அப்பறம் எதும் பாக்கல சார். அதுகூட அப்பாதான் இட்டுக்கினு போனாரு.’

ஹெட்மாஸ்டர் அவனது அப்பாவைத் திரும்பிப் பார்த்தார்.

‘ஹிஹி. நல்லபடம்னு யாரோ சொன்னாங்க சார். போய்ப் பாத்தாத்தான் தெரியுது, ஒரே லவ்வு.’ என்றார். இப்போது அப்பா காலில் விழும் சம்பவம் அரங்கேறினால் பார்க்க நன்றாக இருக்கும். பத்மநாபன் சிரித்துக்கொண்டான்.

‘தபார் பத்மநாபன், இதெல்லாம் நல்லது இல்லே. அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா உன் தோலை உரிச்சிடுவாரு. ஊர்ல அவங்களுக்கு இருவது ஏக்கர் உப்பு ஏரி கெடக்குது. ரெண்டு மண்டி போட்டிருக்காங்க. ஆள்பலம், அடியாள் பலம்னு ஒருமாதிரியானவங்க. படிக்கற வயசுல ஒனக்கு ஏண்டா இதெல்லாம்?’

‘தப்புதான் சார். தெரியாம செஞ்சிட்டேன். இப்பலேருந்து அந்தப் பொண்ணு என் தங்கச்சி சார். நேத்து எங்கப்பாவாண்டகூட இதான்சார் சொன்னேன்.’

தயங்காமல் கண்ணைத் துடைக்கும் அளவுக்கு நினைத்த சமயம் அழுகை வருகிறது. பெரிய விஷயம்.

ஹெட் மாஸ்டர் அவனை உற்றுப்பார்த்தார். ‘நம்பலாமா?’

‘எங்கப்பான்னா எனக்கு உசிரு சார். அவர் மேல சத்தியமா சொல்றேன். என்னிய நம்புங்க சார்..’

இப்போது பத்மநாபனின் அப்பாவுக்குக் கண்ணில் நீர் கோத்துக்கொண்டது. அடடே, இத்தனை நல்லவனா? தெரியாமல் போய்விட்டது. பாதகமில்லை. இனி தெரிந்துகொள்ளலாம்.

‘எனக்கு ஏன் அப்பிடி தோணிச்சி, ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு இப்பவும் தெரியல சார். ஆனா தப்புனு புரியுது. அந்தப் பொண்ணு கிளாஸ்ல செகண்ட் ரேங்க் வாங்கும் சார். ஒருவேள அதனால லவ்வு வந்திச்சோ என்னாமோ. ஆனா இப்ப தெளிஞ்சிட்டேன் சார். அடுத்த எக்சாம்ல இந்த பத்மநாபன் தான்சார் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவான். எளுதி வெச்சிக்கங்க. எங்கப்பாவுக்கு நான் செலுத்தற மரியாதசார் இது!’

ஹெட் மாஸ்டரும் அப்பாவும் ஒருசேர உணர்ச்சிவசப்பட, பத்மநாபனுக்கு மிகவும் குஷியாகிவிட்டது. ராஜலட்சுமி திரையரங்கில் அவன் காண நேர்ந்த எந்தத் திரைப்படத்திலும் இத்தனை நேர்த்தியான வசனங்கள் வந்ததில்லை. தன் நாவில் சரஸ்வதி நர்த்தனமாடுகிறாள். சந்தேகமில்லை. இனி கையும் களவுமாகப் பிடிபட்டால்கூட ஹெட் மாஸ்டர் அத்தனை சுலபத்தில் தன் விஷயத்தில் நடவடிக்கை ஏதும் எடுத்துவிடமாட்டார்.

‘சரி ஒழுங்கா கிளாசுக்குப் போ. ஒன்ன வேணா செக்ஷன் மாத்தட்டுமா?’

‘ஐயோ வேணாம் சார். நைன்த் பிக்குதான் சார் மகாலிங்க வாத்தியார் கணக்கு எடுக்குறாரு. அவரு க்ளாஸ்னா எனக்கு உசிரு சார்.’

அவனை ஏற இறங்கப் பார்த்தவர், ‘கணக்குல நீ எவ்ளோ?’ என்று கேட்டார்.

பத்மநாபன் யோசித்தான். ஆபத்துக்குப் பாவமில்லை. ஒரு சிபிஐ ஆபீசர் மாதிரி ஹெட்மாஸ்டர் தன் பிராக்ரஸ் கார்டுகளைத் தேடி எடுத்துப் பார்ப்பார் என்று தோன்றவில்லை. எனவே எண்பத்தி ஆறு சார் என்று சொன்னான்.

‘ஓகே. அடுத்ததுல நூறு வாங்கணும். புரிஞ்சிதா?’

‘எஸ் சார்’ என்று விட்டான் சவாரி. சந்தோஷமாக இருந்தது. இரண்டு தலைகள் வசமாக அகப்பட்டன, மிளகாய்ப்பழம் அறைப்பதற்கு. பெரியவர்களை ஏமாற்றுவதில் ஒரு லயம் கலந்த சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. சந்தர்ப்பங்கள் தொடர்ந்து இப்படிக் கைகொடுத்தால் நல்லது.

மாலை வகுப்புகள் முடிந்ததும் கலியமூர்த்தியின் சைக்கிளை வாங்கிக்கொண்டு நேரே ராஜமாணிக்க முதலியார் உப்பு கொடோனுக்கு எதிரே உள்ள ஏரிக்கரைக்குச் சென்றான். கரையோரம் நிறைய கட்டுமரங்கள் இருந்தன. காத்திருந்தான். வளர்மதி வரவேண்டும். வந்ததும் என்னடா விஷயம்? சீக்கிரம் சொல்லு. நான் அவசரமா போகணும் என்பாள். சந்தேகமில்லை. அவசரமாகக் கிளம்பிச் சென்று அவள் ராக்கெட்  விட்டாக வேண்டும். விடுகிற ராக்கெட் ‘ஸ்கைலாபா’க இல்லாமல் இருக்கவேண்டும். அவளை ஏற்றிக்கொண்டு கட்டுமரத்தில் புறப்படவேண்டும். கிழக்கே கடல் கண்ணுக்கெட்டும் தொலைவில் இருக்கிறது. ஏரித் தண்ணீர் அங்கு சென்று சேர்கிறது. வழியெங்கும் ஏரியில் பாத்தி கட்டி ஆங்காங்கே உப்புப்பூ பூத்திருக்கிறது. இம்மாதிரி ஒரு லொக்கேஷன் அமைவது கஷ்டம். காதலை வெளிப்படுத்த உப்பளங்களைக் காட்டிலும் உன்னதமான இடம் வாய்ப்பதற்கில்லை.

காத்திருந்தான். கண்ணை மூடிக் கனவு கண்டான். கட்டுமரம் மிதக்கிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவனைத் தெரிந்த யாருமில்லை. அவனும் வளர்மதியும் மட்டும்.

‘சொல்லு. என்ன விஷயம்’

‘ஐ லவ் யூ வளர்மதி.’

வளர்மதி புன்னகை செய்தாள். ‘நானும்தாண்டா குடுமி’ என்று சொன்னாள்.

நினைவு மிகவும் இதமாக இருந்தது. கண்ணைத் திறந்தபோது வளர்மதியுடன் அவள் வீட்டு ஸ்லேவ் வீரபத்திரனும் நின்றிருந்தான்.

[தொடரும்]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter