கழுதைகள் இழுக்கும் வண்டி

சில மாதங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்குவதற்காக நான் என்னுடைய அடையாள ஆவணங்களை எடுத்துச் சரிபார்க்க வேண்டிவந்தது. அதாவது அரசாங்க முத்திரையுடன் என்னிடம் உள்ள ஆவணங்கள்.

முதலாவது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். நல்ல மார்க். சிறந்த எதிர்காலம். நன்கு படித்துக்கொண்டிருந்த பையன் என்பதற்கான அத்தாட்சி. என் பெயர், பள்ளியின் பெயர் விவரங்களுடன் கோபுர முத்திரை போட்ட சான்றிதழ். அதை ரிசல்ட் வந்த ஒரு சில தினங்களுக்குப் பிறகு சமீபகாலம் வரை யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் நேராததால் பத்திரமாக பீரோவில் வைத்திருந்தேன். பாஸ்போர்ட்டுக்காக எடுத்து, பிரதிகள் செய்து விண்ணப்பித்தபோதுதான் அதிகாரியாகப்பட்டவர்கள் தூக்கிக் கடாசினார்கள்.

இந்த ஆவணம் செல்லாது. பெயர் சரியில்லை என்று சொல்லிவிட்டார் ஓர் அதிகாரி. இதென்ன அநியாயம்? ராகவன் என்பது என் தாத்தா பெயரின் சுருக்கம். அவர் நினைவுக்காக என் தந்தை எனக்கிட்ட பெயர். இதைச் செல்லாது என்று யாரோ ஒருத்தர் சொன்னால் அவரை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணாமல் எப்படி விடுவது?

பலநூறு பேர் வரிசையில் காத்திருந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில் அந்த அதிகாரிக்கும் எனக்குமான துவந்த யுத்தம் ஒரு மத்தியானப் பொழுதில் தொடங்கியது. சரமாரியான என் வினாக்கள் எதற்குமே அவர் பதில் சொல்லவில்லை. புத்தர் மாதிரி மோனநிலை காத்து இறுதியில் ஜென் குருவைப் போல் ரத்தினச் சுருக்கமாகத் தன் தரப்பை விளக்கினார். சான்றிதழில் இருந்த பெயர் P. RAGAVAN. என் பாஸ்போர்ட் அப்ளிகேஷனுடன் நான் இணைத்திருந்த பிற அனைத்து ஆவணங்களிலும் இருந்த பெயர் P. RAGHAVAN. எனவே செல்லாது, செல்லாது என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

என் முதல் அரசு ஆவணத்தைத் தயாரித்த, முகமறியா டைப்பிஸ்ட் இப்படி ஓர் எழுத்தை விழுங்கி இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து என் வாழ்க்கையில் விளையாடக்கூடுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

என் அப்ளிகேஷனை நிராகரித்துவிட்டார்கள். தோல்வியை விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவதன் பொருட்டு நான் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து இரண்டு பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்து, அதை ஒரு கெசட்டட் ஆபீசரிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கி இம்முறை மிகச் சரியாக அனைத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்த்துத் திரும்பக் கொண்டு போனேன்.

இம்முறை வேறு அதிகாரி. வேறு கவுண்ட்டர். ஆதாரங்களை அவர் புரட்டிக்கொண்டே வர, நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லா ஆவணங்களிலும் நான் ராக்ஹவனாக அல்லவா இருக்கிறேன்? கண்டிப்பாக நிராகரிக்க முடியாது!

உங்கள் முகவரி எட்டாவது குறுக்குத் தெருதானே என்றார் அதிகாரி.

இதிலென்ன சந்தேகம்? அதுதான் சரியாக இருக்கிறதே.

ஆனால் உங்கள் டிரைவிங் லைசென்ஸில் எட்டுக்கு பதில் ஆறு என்று இருக்கிறது பாருங்கள் என்று காட்டினார். பகீரென்றது. ஐயா அது எட்டுதான். கால மாற்றத்தில் ஆறு போல் ஆகிவிட்டது. விரைவில் குட்டை போலவும் ஆகக்கூடும். பாலையாகவும் மாறலாம். அதற்கும் வயதாகிறது அல்லவா? தவிரவும் அந்நாளில் அழியாத பிளாஸ்டிக் அட்டைகளில் லைசென்ஸ் தருவதில்லை. டாட் மாட்ரிக்ஸ் ப்ரிண்டரில் அச்செடுத்த தாள். எப்படி அழியாதிருக்கும்?

என் நியாயமான விளக்கத்தை அவர் நல்லவராக இருந்திருந்தால் நிச்சயம் ஏற்றிருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அவர் ஓர் அரசு அதிகாரியாக இருந்தபடியால் ரிஜெக்டட் என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

எனக்கேற்பட்ட கடுங்கோபத்துக்கு அளவே இல்லை. ஆனால் கோபித்துப் பயனுமில்லை. எல்லை தாண்டவேண்டுமென்றால் பாஸ்போர்ட் அவசியம். வாழ்க்கையில் முன்னுக்குவர, தேவைப்படும்போது எல்லைமீறத்தான் வேண்டும்.

எனவே கட்டுப்படுத்திக்கொண்டு என் அடுத்த புனித யாத்திரையை ஆரம்பித்தேன். இப்போது மோட்டார் வாகன லைசென்ஸ் வழங்கும் அதிகாரி. பழைய லைசென்ஸைப் புதுப்பிப்பதற்கான விஞ்ஞாபனம். இப்பவும் நாளது பங்குனி 23 விரோதி வருஷம் புண்ணிய க்ஷேத்திரமாம் குரோம்பேட்டை, நியூ காலனி எட்டாவது குறுக்குத் தெரு, முதலாம் எண் வீட்டில் வசிக்கிற பிராகவனாகிய நான் எனது லைசென்ஸ் அட்டையைப் புதுப்பிப்பதன் பொருட்டும் அதிலுள்ள எழுத்துப் பிழைகளைக் களைவதன்பொருட்டும் இவ்விண்ணப்பத்தினைத் தங்கள் மேலான கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

அவர்கள் அதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டை எடுத்து வரச் சொன்னார்கள். குலை நடுங்கிவிட்டது. அதிலென்ன எழுத்துப் பிழை இருக்கப் போகிறதோ என்று பத்துப்பக்கங்கள் கொண்ட அந்த அட்டைப் புத்தகத்தை அரிசி/கோதுமை/அஸ்கா/மண்ணெண்ணெய் என்று காலம் காலமாகப் போட்டிருந்த பக்கங்கள் முதற்கொண்டு பின்னட்டை இறுதி வாசகம் வரை ஒழுங்காக ஒருமுறை ப்ரூஃப் பார்த்தேன். எல்லாம் சரிதான் என்று தீர்மானமாகத் தோன்றினாலும் ஒருமாதிரி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டவனின் பதற்ற உணர்விலேயே இருந்தேன்.

பெரிய பிரச்னையில்லாமல் ஓரிரு தினங்களில் நாலைந்து இடங்களுக்கு மட்டும் அலையவைத்து என் டிரைவிங் லைசென்ஸைப் புதுப்பித்துக் கொடுத்துவிட்டார்கள். புதுப்பித்த கணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. என்னை உட்காரவைத்து, என் கண் முன்னாலேயே ஒரு பெண்மணி என்னைப் பற்றிய விவரங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்தார். நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே P. RAGHAVAM என்று அவரது விரல்கள் விளையாட, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று அப்படியே எழுந்து சாஷ்டாங்கமாக அவர் காலில் விழப் போய்விட்டேன். பதறி எழுந்தவர் என்னவென்று விசாரிக்க, முன்கதைச் சுருக்கத்தை அவருக்கு விளக்கி, ‘கொஞ்சம் நகர்ந்துகொண்டீர்கள் என்றால் நானே டைப் செய்கிறேன். என்பொருட்டு உங்களுக்கு அந்த சிரமம்கூட வேண்டாம்’ என்று சொன்னேன்.

பாஸ்போர்ட் அலுவலகத்தின்மீது நான் நிகழ்த்திய மூன்றாவது படையெடுப்பின்போது என் ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருந்தன. நிச்சயமாக வேலை முடிந்துவிடும் என்ற அபார நம்பிக்கையுடன் சென்றேன்.

என் நம்பிக்கை வீண் போகவில்லை. எனக்கு பாஸ்போர்ட் கிடைத்து, இரண்டு நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன் என்பது உண்மையே. ஆனால் அம்மூன்றாம் படையெடுப்பில் எனக்கு ஓர் இக்கட்டு வர இருந்ததும் உண்மையே.

ஆவணங்களில் ஒன்றாக நான் எடுத்துச் சென்றிருந்த – ஆனால் அவசியம் தேவைப்படாத ஓர் ஆவணம் என்னுடைய PAN. இது நான் வரி கட்டுமளவு வருமானமில்லாத காலத்தில் என் தந்தையின் ஆர்வக்கோளாறினால் அவசரப்பட்டு வாங்கப்பட்ட ஒரு துண்டுக் காகிதம்.

அப்போதைய PAN அப்ளிகேஷனில் என்னென்ன கேட்டிருந்தார்கள் என்றெல்லாம் எனக்கு சுத்தமாக நினைவில்லை. என் பெயர், என் அப்பா பெயர், என் தாத்தா பெயர் மூன்றையும் அவசியம் கேட்டிருக்கவேண்டும். என் பெயர் ராகவன், என் அப்பா பெயர் பார்த்தசாரதி, தாத்தா பெயர் ராகவாச்சாரி என்று வெகு நிச்சயமாக என் தந்தை சரியாகத்தான் அதனை நிரப்பியும் இருப்பார்.

என் பிரத்தியேகச் செல்ல விதி அதிலும் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தியிருந்தது. எனது அட்டையில் என் பெயர் பார்த்தசாரதி ராகவன் என்றும் என் அப்பாவின் பெயர் ராகவாச்சாரி என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அட்டை கிடைத்துப் பல்லாண்டு காலம் வரை அதை உபயோகிக்குமளவு வருமான விருத்தி எனக்கு ஏற்படாதபடியால் அது பாட்டுக்கு எங்கோ ஒரு மூலையில் சும்மா கிடந்தது. அதிலிருந்த பிழையை எண்ணிப் பதறி, சரி செய்யத் தோன்றவேயில்லை.

இப்போதைய அனுபவங்களுக்குப் பிறகு, எப்படியும் இந்த அட்டை என்றேனும் பிரச்னை தரலாம் என்று தோன்றியதால் புதிய PAN கார்டுக்காக மறுவிண்ணப்பம் செய்து, நாந்தான் ராகவன், என் அப்பா பார்த்தசாரதிதான் என்பதற்கான உரிய ஆவண ஆதாரங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தேன்.

நேற்று வருமான வரித்துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் ராகவன் என்பதற்கும் உங்கள் அப்பா பார்த்தசாரதி என்பதற்கும் மட்டுமே நீங்கள் ஆதாரம் அளித்திருக்கிறீர்கள். ராகவாச்சாரி என்பார் உமது தாத்தாதான் என்பதற்கான போதிய ஆதாரங்களை நீங்கள் காட்டியிருக்காதபடியால் இந்த விண்ணப்பம் செல்லாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் ஆவணங்களின்படி உங்கள் அப்பா ராகவாச்சாரிதான் என்பதையும் உடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஃபார்வர்டட். பை ஆர்டர்.

மேற்கொண்டு போரிட எனக்கு விருப்பமோ தெம்போ இல்லை. நியாயமாக இது குறித்துப் போரிடவேண்டிய என் அப்பா என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்கிறேன்.

Share

31 comments

  • விதி வலியது. (செம காமெடினும் சொல்லலம்)

  • நல்ல அனுபவம். சரியான அதிகாரிகளிடம்தான் போயிருக்கிறீர்கள். அரசு அதிகாரிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் திருத்தமாகச் செய்திருக்கிறார்கள். நீங்கள் ராகவனாகவே இருக்கலாம். ஆனால், பிரும்மாண்ட அரசு இயந்திரத்தின் முன், நீங்கள் மிகச்சிறிய வஸ்து. அங்கே படிவங்கள், எழுத்துகள், பச்சை மை ஆகியவைதான் முக்கியம்.

    அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பிரகஸ்பதிகளைக் கேட்டுப் பாருங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு விண்ணப்பிப்பார்கள். அமெரிக்கா சோறு போடுகிறது என்றவுடன் வாலைச் சுருட்டிக்கொண்டு அனைத்து ஆவணங்களையும் சரி பார்ப்பார்கள்.

    அதே உள்ளூரில் அரசு ஆவணங்கள் என்றால், அது கிள்ளுக்கீரை. என்னைத் தெரியாதா? இது வேஸ்டு அரசாங்கம், நடைமுறைகள் என்று பேசுவார்கள்.

    கழுதைகள் இழுக்கும் வண்டி என்றெல்லாம் எழுதாதே ராகவன். இந்தக் கழுதைகள் இழுத்துதான் இந்த நாடு, சீனாவுக்குச் சவால் விடுகிறது.

    அரசையும் அதன் நடைமுறைகளை புறங்கையால் தள்ளிவிட்டுப் போவது ரொம்ப ரொமாண்டிக்காக இருக்கலாம். ஆனால், இவர்கள் இல்லையென்றால், இந்த அளவு முன்னேற்றத்தைக் கூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம்.

    நேசமுடன்
    வெங்கடேஷ்

  • வெங்கடேஷ், கட்டுரையைச் சரியாகப் படிக்கவும். நான் கழுதை எனக் குறிப்பிட்டது பாஸ்போர்ட் அதிகாரிகளையல்ல. பெயர் விவரங்களைக்கூடச் சரியாக / கவனமாக உள்ளிடத் தெரியாத கழுதையல்லாதவர்களை.

  • இதிலிருந்து மக்களுக்கு சொல்ல விரும்புவது?
    1 இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் இது போன்ற தவறுகள் இல்லாமல் பார்த்துகொள்ளவும்.
    2 என்னால் எந்த தஸ்தாவேஜையும்(?) ஒழுங்காக ……………….

  • //சீனாவுக்குச் சவால் விடுகிறது. // எந்த விஷயத்தில் என்பதையும் வெங்கடேஷ் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 🙂

  • பாரா சார்…நீங்களும் குரோம்பேட்டையா….!!! நான் வளர்ந்ததெல்லாம் நல்லப்பா தெரு, நேரு நகர், குரோம்பேட்டை…ஆனா இப்போ இருக்கிறது சிங்கப்பூரில்..ஹி..ஹி…!

  • கழுதைகளின் அலட்சியப்போக்கிற்கு கனவான்களும் தப்ப முடியாது.
    இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழும் ஊர்களில் இதுபோன்ற ஹாஸ்ய கதைகள்
    ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன.சாம்பிளுக்கு ஒன்று வாக்காளர் அடையாள அட்டைக்கு பெயர் எழுதிசென்றார்கள்.
    பெண்ணின் பெயர்: குரைசா அட்டையில் இருந்த பெயர்: துரைசாமி
    பாலினத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல்,மதம் மாற்றவும் துணிந்துவிட்டார்கள்.
    இஸ்லாமிய பெயர்கள் உங்களுக்கு உச்சரிப்பதற்கும்,எழுதுவதற்கும் சிரமமாக இருக்கும்
    நாங்களே எழுதிதருகிறோம் என்றாலும் இந்த பிரகஸ்பதிகள் கேட்பதில்லை.

  • ஆஹா..இதே பிரச்சனை தான் என் PAN card-இலும். என் தாத்தாவின் பெயரை என் அப்பாவின் இடத்தில் போட்டிருக்கிறார்கள். இது குறித்து மாற்றி கொடுக்கச் சொல்லி இப்போது தான் விண்ணப்பித்திருக்கிறேன். பார்க்கலாம்.

  • நல்ல நகைச்சுவை!
    இதே பிரச்சினை எனது PAN மற்றும் Driving License லும் உண்டு. ஆனால் ரேஷன் கார்டு, வோட்டர்ஸ் கார்டு சரியாக இருந்ததால் தப்பித்தேன். Unique Identity card வந்தால் இந்த பிரச்சினைகள் குறையும் என்று நினைக்கிறேன்.

    http://en.wikipedia.org/wiki/Unique_Identification_Authority_of_India

  • ஹஹா, எனக்கு வேறு ஒரு காரணம் கூறினார்கள். புகைப்படப் பின்னணி கரு நீலத்தில் உள்ளது, வெள்ளை பின்னணியுடன் புகைப்படம் எடுத்து வா என்று. மீண்டும் கல்பாக்கம் சென்று புகைப்படம் எடுத்து அடுத்த முறை அதே பயத்துடன் சென்று எப்படியோ வாங்கிவிட்டேன்.

    பி.கு :- இணையத்தில் சந்திதலில் மிக்க மகிழ்ச்சி — கல்பாக்கம் ஸ்ரீகாந்த் லக்ஷ்மணன்.

    • ஸ்ரீகாந்த், உன்னை இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ தமிழ் எழுதுவது பார்க்க, அதைவிட மகிழ்ச்சி. பெங்களூரில் நீ இருக்குமிடம் குறித்த விவரங்களை எனக்குத் தனி அஞ்சலில் எழுது.

  • பா. ரா. , அரசு அதிகாரிகளையும் கழுதைகளையும் இணைத்து இனி கட்டுரை எழுத வேண்டாம் , கழுதைகளை இழிவு
    படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

    இப்படிக்கு கழுதைகளை பாதுகாப்போர் சங்கம் …

  • இதாவது பரவாயில்லை.

    மிகச் சமீபத்தில் (உடனே 1956 அப்படீன்னு எல்லாம் ப்ளாஷ்-பேக்க்குக்கு போயிடப்படாது. இது நம்ம ‘சமீபத்தில்’ தான்) – மூன்று மாதங்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பம் குட்டிகளோடு (அட, பசங்களைச் சொன்னேன் சார்) தாய்நாட்டிற்கு திரும்பி வந்து ஆரம்பித்திருக்கும் போராட்டம்….

    – ரேஷன் கார்டு
    – பான் கார்டு
    – கேஸ் கனெக்‌ஷன்
    – புதிய பேங்க அக்கவுண்ட்

    இதெல்லாம் தவிர, ரொம்ப நீதிவானாக கையில் இருந்த கொஞ்சம் அமெரிக்க டாலரை பேசாமல் ஒரு சில நிமிடங்களில் பர்மா பஜாரில் மாற்றித் தொலைத்திருக்காமல் பேங்க் சென்று 3 மணி நேரம் உட்கார்ந்து மாற்றி, அதுவும் மறுநாள் தான் அதுவும் அக்கவுண்ட்டில் வரவு வைப்பேன் என்று அவர்கள் சொல்லி…

    பெரும் கதையே இருக்குது!

    ’அவர்கள்’ அப்படித் தான் சார்!

    ‘அவர்களுக்கு’ உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் நினைப்பு தான் எப்பொழுதும்.

    திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் எனது மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்கச் சென்றிருந்த போது என்ன காரணம் என்றே சொல்லாமல் அப்ளிகேஷனை ஒரு ஜந்து தூக்கி எறிந்தது. அட நாதாறி, காரணத்தைச் சொல்லுடா என்று சண்டையிட்ட போது, “அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்லை. கீழே தான் பத்து ரூபா வாங்கிகிட்டு அப்ளிகேஷன் எழுதித் தர்றாங்கலே. அவங்ககிட்ட எழுதிட்டு வரது தானே. பெரிசா தெரிஞ்ச மாதிரி சொந்தமா பில் பண்ணி தப்பும் தவறுமா எடுத்துட்டு வந்திருக்க?” என்று கத்தினான். (அவனுக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு?!)

    கடைசியில் என்ன காரணம் என்று பார்த்தால், தேவையில்லாத இடங்களில் கோடு (”—-”) போட்டிருந்தேன். அதை (”N/A”) என்று எழுதியிருந்திக்க வேண்டுமாம்.

    அடப்பாவிகளா..

    இவனுங்களையெல்லாம் எத்தால அடிக்கிறது?!

  • என்ன பாரா இது…

    சமர்பிக்கும் அனைத்து ஆவணங்களிலும் பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற புரிதல் இருக்க வேண்டாமா.?

    ஒட்டுநர் உரிமத்தில் முகவரி தெளிவாக இல்லையென்றால் முகவரி தெளிவாக உள்ள வேறு எதாவது ஆவணம் எடுத்துசென்றிருக்கலாமே..(வாக்காளர் அடையாள அட்டை போன்ற எதாவது).

    எல்லாம் சரி நீங்கள் இரண்டு வருடங்களாக வசிப்பது கோடம்பாக்கத்தில் ஆனால் சில் மாதங்களுக்கு முன் வாங்கிய பாஸ்போர்ட் குரொம்பேட்டை முகவரியில்….என்ன கொடும சரவணன் இது…

  • //என் நியாயமான விளக்கத்தை அவர் நல்லவராக இருந்திருந்தால் நிச்சயம் ஏற்றிருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அவர் ஓர் அரசு அதிகாரியாக இருந்தபடியால்//
    🙂

  • எனது வங்கிக் கணக்கு இருப்பது இனிஷியல்களுடன். இன்கம் டாக்ஸ் ரீஃபண்ட் செக் வந்தது அப்பா பெயரை முன்னால் விரித்து எழுதி. இதில் எனக்கு அனாவசியமாகப் பள்ளி நாட்களில் இருந்து இரண்டு இனிஷியல்கள் (அப்பா பெயரை உடைத்து ஏற்படுத்தியவை) இருப்பது கூடுதல் குழப்பம். பயந்து கொண்டே போய் ஆக்ஸிஸ் வங்கியில் செக்கைக் கொடுக்க, பான் கார்டைக் கொடுங்க என்று கேட்டு அவர்களே ஜெராக்ஸ் செய்து எடுத்துக்கொண்டு, செக்கை வாங்கிக் கொண்டுவிட, எனக்கு அப்போதும் நம்பிக்கை இல்லை. எப்படியும் இன்கம் டாக்ஸ்காரர்களின் வங்கியான ஸ்டேட் பாங்க் அந்த செக்கை நிராகரித்துவிடும் என்றே பயந்து கொண்டிருந்தேன். பிறகு மறுநாள் பணம் என் கணக்கில் வரவு வைக்கப்பட்ட போது என்னாலேயை நம்பமுடியவில்லை!

  • பாரா, எனது அனுபவம் மிகவும் காமெடியானது. உங்களுக்காவது உங்கள் பெயர். எனக்கு நான் பிறந்த ஊரான திருச்சி தான் வில்லன். எனது birth certificate, marriage certificate, passport, license நான்கிலும் அதற்குரிய ஸ்பெல்லிங் மாறி / மாறி உள்ளது.

    நான் வசித்து வரும் தேசத்தில் driving license exchange செய்யும் போதும், ரெசிடென்ஸ் பர்மிட் வாங்கும் போதும் கொடுமை. ஊரின் பெயர் எப்படி மாறி வரலாம் என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லி மாளவில்லை. நல்லவேளையாக அங்கு வேலை செய்த நாட்டவரின் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடைசியில் பேவகூப் என்று இந்திய அரசாங்கத்தை திட்டிவிட்டு ஆவன்களை கொடுத்தார்

  • //கடைசியில் என்ன காரணம் என்று பார்த்தால், தேவையில்லாத இடங்களில் கோடு (”—-”) போட்டிருந்தேன். அதை (”N/A”) என்று எழுதியிருந்திக்க வேண்டுமாம்//

    மாயவராத்தான்,

    http://passport.gov.in/cpv/column_guidelines.htm

    தேவையில்லாத இடங்களில் NOT APPLICABLE என்று எழுத வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.அதை கவனிக்காமல் உங்கள் இஷடத்திற்க்கு எழுதிவிட்டு,தவறினை சுட்டிகாட்டினால் அவன் இவன் என்று பேசுவது..நல்லாயிருக்கு..

    அரவிந்தன்

  • பா ர அவர்களே.. சந்தோஷ பட்டு கொள்ளுங்கள். உங்களுக்கு என்னை போல் முகவரி பிரச்னையும் INITIAL பிரச்சனையும் இல்லை.. நாங்கள் வாடகை வீட்டில் வசித்ததால் ஒவ்வொரு ஆவணமும் வெவ்வேறு முகவரியில் இருக்கும். பதில் சொல்லி மாளாது. என்னை போல் இரு initial இருந்தால் அதை விட கொடுமை ஒன்றும் இருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் எந்த FORM பூர்த்தி செய்தாலும் என் பேரை எழுதும் பொழுது கடவுளை வேண்டி கொள்வேன் , இந்த முறையாவது இதை கணினியில் feed செய்பவர் சரியாக செய்ய வேண்டும் என்று.

  • ஒரு ஆவணம் கூட உருப்படியாக இல்லாத எனக்கு பாஸ்போர்டு, பேன்கார்டு, ரேஷன்கார்டு, பேங்க் அக்கவுண்டு, கேஸ் கனெக்‌ஷன், இலவச டிவி எல்லாமே எந்தப் பிரச்சினையும் இல்லாம கிடைக்குதே? என்ன தவம் செய்தேனோ….

  • நானும் இதே போல் அனுபவப்பட்டேங்க. ஆனா நீங்க அதை ரொம்ப ரொம்ப ரசிக்கும்படி எழுதி இருக்கீங்க..அடையாள அட்டை, முகவரி சம்மந்தப்பட்டதுன்னா உள்ளூரு, வெளியூரு, வெளிநாடு எல்லாத்துக்குமே நாய் அலைச்சல் தாங்க 🙂 எல்லாமே சரியா வெச்சிருந்து முதல் நடையிலையே பாஸ்போர்ட்/விசா வாங்கின ஆளு ஒருத்தர் கெடையாது போங்க !!
    நேரம் இருந்தால், என்னுடைய இதே போன்ற அனுபவத்தையும் வாசிக்கவும் . நன்றி.
    http://pradeepapushparaju.blogspot.com/2010/07/blog-post.html

  • அரவிந்தன்..

    தவறாகச் சொல்கிறீர்கள்.

    தவறை அவன் சுட்டிக்காட்டவில்லை. அதனால் தான் பிரச்னையே.

    மேலும் பாஸ்போர்ட் அப்ளிகேஷன் அங்கே கொடுக்கும் போது கூடவே இந்த இன்ஸ்ட்ரக்‌ஷன் எல்லாம் கொடுக்கவில்லை.

  • அப்புறம் அரவிந்தன்.. அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்னால் இதையும் சொல்லி விடுகிறேன்.

    இது நடந்தது 2001-ல். இது குறித்து என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்.

    அப்போது நீங்கள் கொடுத்த வெப் சைட் லிங்க் இல்லை.

    பாஸ்போர்ட் அப்ளிகேஷன் வாங்கும் போது இது போல தெளிவான இண்ஸ்ட்ரக்‌ஷன் மானுவல் கொடுக்கவில்லை.

  • இது எதுவும் இல்லாது மும்பையில் எஜெண்ட் க்கு காசு கொடுத்தால், எப்ப வேணுமோ அப்ப passport கிடைக்கும். என்ன காசு செலவு 🙂

  • அடேங்கப்பா எல்லோருக்கும் பாஸ்போர்ட் வாங்கும் போது பலத்த அனுபவம் இருக்கும் போல இருக்கே! 🙂 ஹி ஹி எனக்கும்.

  • எல்லோருடைய வாழ்க்கையும் இப்படித்தான் சிரிப்பாய் சிரிக்குது. இந்த லட்சணத்தில் அரசு எந்திரமும். நிர்வாகமும் சிறப்பாக செயல்படுகிறது என்று அரசியல்வாதிகள் கூறும் போது அவ்ர்கள் வாயில் ஈயத்தை காய்ச்சி ஊத்தலாம் என்று தோன்றும்

  • வீட்டில் முதல் கல்யாணம் மாதிரி தான் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ட்ரிவிங் லைசென்ஸ் எல்லாமே.

  • நான் passport புதுப்பிக்க சென்றபோது, எனது முகவரியான மகாகவி பாரதி நகர் என்பதனை, மாமாகவி பாரதி நகர் ஆக்கிவிட்னர் :(, இத்தனைக்கும் எனது பழைய பாஸ்ப்போர்டையும் இனணத்து இருந்தேன், விண்ணப்பத்தையும் சரியாக பூர்த்திசெய்து இருந்தேன்.

    மகாகவிக்கும் மாமாகவிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

  • One of the biggest problem here is trying to spell a “Tamil/Indian” name in english. Raghavan can be spelled in multiple ways each one of us have our own way. My name is Seetharaman. Many a times I have seen my name spelled as “Sitaraman”. I live in the US and everytime you have to say your name, the other person asks how to spell it and it makes life a bit easy.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!