கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

‘என் ரூமுக்குப் போயி வெயிட் பண்ணு. அஞ்சு நிமிஷத்துல வரேன்’ என்று ஹெட் மாஸ்டர் சொன்னார்.

இதென்னடா ரோதனை என்று பத்மநாபனுக்கு அடிவயிற்றில் ஒரு பூச்சி பறந்தது. இன்றைக்கு ரிசல்ட். நாளைக்குப் பள்ளி திறக்கிறது. ரிசல்ட் பார்த்தாகிவிட்டது. அது ஒரு சம்பிரதாயம். கும்பலில் முட்டிமோதி போர்டில் ஒட்டியிருக்கும் பேப்பரில் தன் நம்பரைத் தேடிப் பிடிக்கிற சடங்கு. பிரச்னை ஒன்றுமில்லை. பாஸாகிவிட்டிருந்தான். ஒரு முழு நாளை நிம்மதியாகக் கழித்துவிட்டு நாளை முதல் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிடலாம் என்று இருந்தவனுக்கு இப்படி திடீரென்று ஹெட் மாஸ்டர் கூப்பிட்டு ரூமுக்கு வரச் சொன்னது மிகுந்த அச்சத்தை விளைவித்தது.

என்ன தப்பு செய்திருப்போம்? யோசித்தபடி அவரது அறையில் காத்திருந்தான். நாற்காலி இருக்கிறது. ஆனாலும் உட்காருவதற்கில்லை. ஹெட் மாஸ்டர் அறையில் மாணவனாகப்பட்டவன் எப்போதும் நின்றபடி தான் இருக்கவேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டு செப்பேடு ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீண்ட மேசையில் நிறைய குப்பைகள். எப்போதோ பள்ளிக்கூடம் பெற்ற பித்தளை, வெண்கலக் கோப்பைகள் அடைத்துவைத்த ஷோ கேஸ். எதிர்ப்புற மர பீரோவில் பிதுங்கும் பழைய ஃபைல்கள். தூசு. மேலே சத்தமுடன் சுழலும் மின்விசிறியின் அடியில் பின்புறம் டர்க்கி டவல் போட்ட மர நாற்காலி ஹெட் மாஸ்டருக்காகக் காத்திருக்கிறது.

எதற்கு வரச் சொன்னார்? பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. வளர்மதி ஏதாவது சொல்லியிருப்பாளா? வாய்ப்பில்லை. அவள் சமத்து. கடங்காரன் கலியமூர்த்தி ஏதாவது டபுள் கேம் ஆடியிருப்பானோ? விடுமுறைக் காலத்தில் அவனைப் பார்க்கவேயில்லை. பள்ளி தொடங்கும்போது திருப்பணியைத் தொடங்கும் அளவுக்கு முன்விரோதம் ஏதுமில்லை. ஒருவேளை நிரந்தர வில்லன் பெருமாள் சாமி என்னவாவது வத்திவைத்திருப்பானோ?

எப்படியும் அவன் பாஸாகியிருக்கமாட்டான் என்று பத்மநாபனுக்கு உறுதியாகத் தோன்றியது. நம்பர் தெரியாது. தெரிந்திருந்தால் பார்த்திருக்கலாம். ஆனால் ரிசல்ட் பார்த்த கூட்டத்தில் அவன் கண்ணில் படவில்லை. பெரும்பாலானவர்கள் பாஸாகி, ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஃபெயில் ஆன முகம் எதுவும் தென்படவில்லை. ஃபெயில் ஆனவர்களுக்கு ரிசல்ட் பேப்பர் அத்தனை முக்கியமில்லை. அந்தராத்மா முன்னறிவிப்பு செய்துவிடும். அன்றைய தினம் அவர்கள் பள்ளிக்கு வருவதை அநேகமாகத் தவிர்த்துவிடுவார்கள். அல்லது இருட்டியபிறகு கதவேறி குதித்து உள்ளே வந்து வத்திக் குச்சி கிழித்து ரிசல்ட் பேப்பரைப் பார்த்து, தாங்கள் ஃபெயில் என்பதை உறுதி செய்துகொள்வது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்.

எதற்கு வரச் சொல்லியிருப்பார் ஹெட்மாஸ்டர்?

நின்றபடி யோசித்துக்கொண்டிருந்தான். கால் வலித்தது. ஐந்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னவர் இருபது நிமிடங்கள் கழித்து வந்தார். கூடவே மகாலிங்க வாத்தியார்! கடவுளே, இன்றைய ராசிபலன் ஏன் இத்தனை மோசமாக அமைந்திருக்கிறது? எதிரிகளின் கிரக சஞ்சாரம் உச்சத்திலும் என்னுடைய கிரகங்கள் பாம்பின்மீதும் ஏன் பயணம் செய்கின்றன?

‘என்னடா, பாஸ் பண்ணிட்டியா?’ என்று கேட்டபடி மகாலிங்க வாத்தியார் ஹெட் மாஸ்டருக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தார். ஹெட்மாஸ்டரும் உட்கார்ந்து ஒரு வாய் மோர் எடுத்துக் குடித்தார். வீட்டிலிருந்து அவர் சாப்பிடுவதற்கென்று எடுத்துவரும் பொருள்களின் பட்டியல் மிகப்பெரிது. மோர், மிளகாய் வற்றல், வெங்காய வற்றல், வறுத்த வேர்க்கடலை, அரிசிப் பொறி, மிளகாய்ப்பொடியில் பிரட்டிய இட்லி, சாத்துக்குடி பழம் என்று மணிக்கொன்றாக உள்ளே போய்க்கொண்டே இருக்கும். கேட்டால் அல்சர் என்பார். அல்சருக்கு மிளகாய்ப் பொடியும் வறுத்த வேர்க்கடலையும் வெங்காய வற்றலும் அதி உன்னத மருந்துகள் போலிருக்கிறது.

‘அப்பறம்? நீதான் பத்மநாபனா?’ என்றார் ஹெட்மாஸ்டர்.

இதென்ன அபத்தம்! ஹெட் மாஸ்டர்கள் இப்படித்தான் சொற்பொழிவுகளைத் தொடங்கவேண்டுமென்று டி.ஓக்களும் சி.ஓக்களும் சொல்லியிருக்கக்கூடும். நல்லது கனவான்களே, எனக்கான கழு எங்கே இருக்கிறது?

‘உக்காருடா’ என்றார் மகாலிங்க வாத்தியார்.

பத்மநாபனுக்கு சகலமும் சுழல்வது போலிருந்தது. இது ஆகாதகாரியமல்லவா.

‘அட உக்காருடா பரவால்ல’ என்று திரும்பவும் சொன்னார். அவன் தோளைப் பிடித்து அருகிலிருந்த நாற்காலியில் அழுத்தினார். பத்மநாபன் அடித்துப் போட்ட கரப்பான்பூச்சி போல் நாற்காலியின் ஓரத்தில் தொங்கியபடி அமர, ‘அன்னிக்கி நீ சொன்னப்ப நான் நம்பலை. ஆனா இப்ப நம்பறேன்’ என்று அந்தரத்தில் ஆரம்பித்தார் ஹெட் மாஸ்டர்.

அவனுக்கு உண்மையில் ஒன்றும் புரியவில்லை.

‘ஐயம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ மை பாய்! அல்மோஸ்ட் எல்லா பாடத்துலயும் நைண்ட்டிஃபைவ் பர்சண்ட்டுக்கு மேல வாங்கியிருக்க. கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னா அடுத்த வருஷ பப்ளிக் எக்ஸாம்ல ஸ்டேட் லெவல் மார்க்குக்கு கிட்ட வந்துடுவ’

பேசுவது யார்? ஹெட் மாஸ்டரா? பக்கத்தில் உட்கார்ந்து கையை அழுத்திப் பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டிருப்பது மகாலிங்க வாத்தியாரா? கடவுளே, இங்கு என்னதான் நடக்கிறது? இதெல்லாம் நிஜம்தானா.

‘முழிச்சிக்கடா! நிசந்தான். என்னாலயே நம்பமுடியல. நீ எப்படி நம்புவ?’ என்று வாத்தியார் சிரித்தார்.

‘சார்… யார் சார் ஃபர்ஸ்ட் ரேங்க் என் கிளாஸ்ல?’ என்று குழறியபடி கேட்டான்.

‘போடா லூசு! ஆறு செக்ஷன்லயும் சேத்து நீதாண்டா ஃபர்ஸ்டு! என்ன ஃப்ராடு பண்ணியோ, என்னமோ. ஐநூறுக்கு நாநூத்தி எண்பத்தொம்பது மார்க் எடுத்திருக்க! மேத்ஸ்ல செண்டம். சயின்ஸுல செண்டம், இங்கிலீஷ் செகண்ட் பேப்பர்ல செண்டம்! உங்கப்பாட்ட சொல்லு. சந்தோஷப்படுவாரு.’

பத்மநாபனுக்குக் கரகரவென்று கண்ணிலிருந்து நீர் பொங்கி வழிந்தது.

‘சேச்சே. இல்ல மகாலிங்கம். அன்னிக்கி எதுக்கோ இவன கூப்பிட்டு வார்ன் பண்ணேன். அப்பவே சொன்னான், இனிமே ஒழுங்கா படிக்கறேன், க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் வந்து காட்டறேன்னு… டேலண்ட் உள்ள பையன் தான். வயசு பாருங்க! நடுவுல கொஞ்சம் தடுமாறிட்டான் போல. என்னடா?’ என்றார் ஹெட் மாஸ்டர்.

‘எப்பவும் ஒம்பது, பத்தாவது ரேங்க் வருவான் சார். திடீர்னு புத்தி வந்திருக்கு போலருக்கு’ என்று மகாலிங்க வாத்தியார் விடாமல் சிவப்புத் தொப்பி அணியப் பார்த்தார்.

‘எப்படியோ. தபாரு பத்மநாபா! கவர்மெண்டு ஸ்கூல்ஸ்ல பெரிய ரேங்க் வாங்கறவங்க யாரும் வர்றது கிடையாதுன்னு ஒரே குற்றச்சாட்டு. போன டி.ஓ. மீட்டிங்லகூட இதப்பத்தித்தான் பேசினாங்க. கல்வித்தரம் வளரல, டீச்சர்ஸ் இங்க சரியா சொல்லிக்குடுக்கறதில்லன்னு வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. இப்ப நீ மொததடவையா ஸ்கூல்லயே அதிக மார்க் எடுத்திருக்க. இதே மார்க்க நீ பப்ளிக் எக்ஸாம்ல காட்டிட்டன்னா, பேசறவங்க வாய அடைச்சிரலாம்! என்ன சொல்ற?’

‘நிச்சயமா சார்… இங்க சொல்லிக்குடுக்கறமாதிரி வேற எங்கயுமே முடியாதுசார்’ என்று மகாலிங்க வாத்தியார் தலையில் ஒரு கட்டி பனியை வைக்கும் விதமாக அவரைப் பார்த்தபடியே சொன்னான். ‘ஒலகத்துலயே இவர்தான் சார் பெரிய மேக்ஸ் வாத்தியாரு!’

‘சேச்சே.. நீ நல்லா படிச்சேடா.. அதான் காரணம்!’ என்றார் தியாகியாகும் உத்தேசத்துடன்.

‘நாளைக்கு ப்ரேயர்ல அனோன்ஸ் பண்றேன் பத்மநாபன். அடுத்த வருஷம் நீ பிச்சி ஒதரணும். எப்படியாவது நைண்ட்டி ஃபைவ் பர்செண்ட் காட்டிடு. ஒனக்கு ஸ்பெஷல் கோச்சிங் தர சொல்றேன். வேற என்ன வேணும்னாலும் கேளு. கண்டிப்பா கிடைக்கும். என்ன சொல்றிங்க சார்?’ என்று ஹெட்மாஸ்டர் மகாலிங்க வாத்தியாரைப் பார்க்க, ‘ஷ்யூர், ஷ்யூர்’ என்றார் தலையாட்டியபடி.

பத்மநாபனுக்குக் கிறுகிறுவென்றிருந்தது. இன்னும் நம்பமுடியாமல்தான் இருந்தது. படித்திருந்தான். தேர்வு எழுதியதும் திருப்திகரமாகவே இருந்தது. ஆனாலும் இத்தனை மார்க் எதிர்பார்க்கவில்லை. ஒரு வகையில் ஹெட் மாஸ்டர் சொல்வது சரிதான். பள்ளியில் முதல் மார்க் என்று வருவதெல்லாம் நாநூற்றுப் பத்து, நாநூற்றுப் பதினைந்து என்கிற அளவில்தான். அதற்குமேல் முடியாது. குட்டிக்கரணம் அடித்தாலும் ஆங்கிலத்தில் யாரும் எண்பதைத் தாண்டியதில்லை. ஆனால் இதென்ன, செகண்ட் பேப்பரில் செண்டம் என்கிறாரே! உலகம் வலப்பக்கமாகச் சுழலத் தொடங்கிவிட்டது போலிருக்கிறது. இனி தயங்காமல் இங்கிலீஷ் பேசலாம். ப்ரசண்ட் பர்ஃபெக்டன்ஸ், பாஸ்ட் கண்டின்யுவஸ்டென்ஸ் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடலாம். பழிகாரப் பன்னீர் செல்வம் முகத்தில் கரி பூசலாம்.

ஹெட் மாஸ்டர் அறையை விட்டு அவன் வெளியே வந்தபோது விஷயம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. அவனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் ‘ஹுர்ரேஏஏஎ’ என்று தூக்கிச் சுற்றி வீசினார்கள்.

‘க்ரேட்ரா டேய், சைலண்டா சாதிச்சிட்ட!’ என்று பன்னீர் கூட வந்து கைகொடுத்தான். கலியமூர்த்தி உடனடியாக ஒரு பாக்கெட் கமர்கட் வாங்கி அனைவருக்கும் வினியோகித்தான். ‘பின்னிட்டடா மாப்ள. இன்னமே இஸ்கோல்ல இருக்கற எல்லா பொண்ணுங்களும் உன்னியத்தான் லவ் பண்ணும்’ என்றான் பாபு.

வளர்மதி!

ரிசல்ட் போர்டுக்குக் கீழே பெண்கள் அணி வட்டமிட்டு அமர்ந்திருந்தது. வளர்மதி இருந்தாள். பொற்கொடி, ராஜாத்தி, சுமதி, க்ளாரா எல்லோரும் இருந்தார்கள். பத்மநாபன் ஓடி வந்தபோது வளர்மதி புன்னகையுடன் எழுந்து நின்றாள்.

‘இங்க வாடா’ என்று அழைத்தாள். அருகே சென்றதும் நம்பமுடியாமல் ஒரு காரியம் செய்தாள்.

‘கங்கிராட்ஸ்!’ என்று கைகுலுக்க, நீட்டினாள். நம்பமுடியாமல் மெல்லக் கை உயர்த்தி அவள் கையைப் பிடித்துக் குலுக்கும்போது காதுக்குள் சூடாக உணர்ந்தான்.

‘எனக்குத் தெரியும்டா குடுமி. நீ இந்தவாட்டி சாதிச்சிருவேன்னு எதிர்பாத்தேன். எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உங்கப்பா, அம்மா எவ்ளோ சந்தோஷப்படுவாங்க?!’

‘ஆமா வளரு. என்னால நம்பவே முடியல. நாநூத்தி எண்பத்தொம்போதாம்!’

‘பழனி வாத்தியார் இப்பத்தான் சொல்லிட்டுப் போனாரு. தமிழ்லகூட தொண்ணூத்தி ஆறாம்டா! என்னடா செஞ்ச?’

‘தெரியல வளரு’ என்று சொன்னான். தலை சுற்றுவது போலிருந்தது. பசிப்பது போலவும் வயிறு நிரம்பியது போலவும் உணர்ந்தான். கண்ணுக்குள் யாரோ இரண்டு கை பஞ்சை அள்ளித் திணித்தது போல் இருந்தது. எல்லாமே தித்திப்பாக, எல்லாமே வண்ணமயமாகத் தெரிந்தன.

இனி ஒன்றுமில்லை. தன்னால் முடியும். நிச்சயம் முடியும். என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஃபர்ஸ்ட் ரேங்க் என்பது ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் சொத்து அல்ல. உழைக்க முடிந்த யாருக்கு வேண்டுமானலும் கிடைக்கக்கூடிய ம்யூசிக்கல் சேர். அடுத்த வருடம் நிச்சயம் இதற்குமேலே மார்க் வாங்கிவிட முடியும். போகிற போக்கில் ஹெட் மாஸ்டர் சொல்லிவிட்டார். ஸ்டேட் ரேங்க். முடியாதா என்ன? ஒரு முயற்சி தானே? செய்து பார்த்தால்தான் என்ன?

உற்சாக வாழ்த்துகள் ஓய்ந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்ட வேளையில் வளர்மதி மீண்டும் அவனிடம் வந்தாள். புன்னகை செய்தாள்.

‘குடுமி, என்னை மன்னிச்சிருடா.’

‘ஐயோ என்னாச்சு வளரு?’

‘ஒன்ன ரொம்ப அலைய விட்டுட்டேன் இல்ல? பாவம் நீ. திரும்பத் திரும்ப என்னாண்ட வந்து நின்னுக்கிட்டே இருந்த. பெரிய இவ மாதிரி நான் கண்டுக்கவே இல்ல ஒன்ன.’

‘சேச்சே. அப்படியெல்லாம் இல்ல வளரு. நான்..’

‘நீ நெசமாவே பெரியாளுடா. உன் அருமை தெரியாம இருந்துட்டோம் இத்தன நாளா.’

அவன் அமைதியாக இருந்தாள். எல்லாம் கூடி வருகிற நேரம். பைபாஸ் முத்துமாரி அம்மா! உன் கருணைக்கு ஓர் அளவே கிடையாதா! மனம் சிறகடிக்க அவன் காத்திருந்தான். சொல், சொல், சொல் வளர்மதி. இதற்காகத்தான் இத்தனை நாளாகத் தவமிருக்கிறேன்.

‘நீ தப்பா நினைச்சிக்கலன்னா ஒண்ணு சொல்லுவேன்..’

‘சொல்லு வளரு.’

ஒரு கணம் தாமதித்தாள். பிறகு சிறிது வெட்கப்பட்டாள். ‘வந்து.. நானும் உன்னிய.. லவ் பண்றேண்டா’ என்று சொன்னாள்.

பத்மநாபனுக்கு சகலமும் அமிழ்ந்து அடங்கியது போல் இருந்தது. இதுதான். இவ்வளவுதான். இதற்குமேல் ஒன்றுமில்லை. ஒரு கணம் கண்ணை இறுக்கி மூடி பெருமூச்சு விட்டான். சட்டென்று அவளைப் பார்த்து உறுதியாகச் சொன்னான்:

‘தெரியும் வளரு. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணு. அடுத்த வருசம் பப்ளிக் எக்ஸாம் எளுதிட்டு பதில் சொல்லுறேன்.’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று திரும்பிப் பாராமல் வீட்டுக்கு ஓடினான்.

(முற்றும்)

Share

19 comments

 • Para,

  Welcome back after a long time……

  >> ஃபெயில் ஆனவர்களுக்கு ரிசல்ட் பேப்பர் அத்தனை முக்கியமில்லை. அந்தராத்மா முன்னறிவிப்பு செய்துவிடும்.

  நினைத்து நினைத்து சிரித்தேன்.

  அதென்ன ‘என்று மகாலிங்க வாத்தியார் விடாமல் சிவப்புத் தொப்பி அணியப் பார்த்தார்.’ ?

 • மளிகைக் கடைக் காதல் ஓவரா?! 🙂

  இல்லை பப்ளிக் எக்ஸாம் பிராதபத்தை முதல் பத்தியில் சொல்லிட்டு அதுக்கு அப்புறம் காலேஜ் போகும் வரை நடந்ததை அரைக்கிலோ காதல் அறுநூறு கிராம் கனவுன்னு பொட்டலம் கட்டி விக்கப் போறீரா? :))

 • கதை மிகவும் பிடித்திருந்தது . வளர் – குடுமி பாகம்-2 ஆவலுடன் எதிபார்த்து காத்திருக்கிறேன் 😉

 • அப்பாடா, ஒரு வழியா முடிச்சுட்டீங்க. இனிமேலாவது வெரைட்டியா எழுதுவீங்கன்னு எதிர் பார்க்கிறேன்.ஆதம்முஹம்மத், பெல்ஜியம்.

 • என்ன இப்படி முடிச்சுட்டீங்க? ஒரு நல்ல பையனை கெடுத்திட்டீங்க!

 • Athammohamed :

  உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு! 😉

  விஷயம் என்னவென்றால், நாட்டு மக்களில் எத்தனை பேருக்கு இப்போது தொடர்கதை விருப்பம் இருக்கிறது என்று பார்க்கத்தான் இந்த கனமற்ற கதையை மீள் பிரசுரம் செய்தேன். யார் என்ன சொன்னாலும் இடையில் வேறு எதுவும் எழுதவேண்டாம் என்றும் இருந்தேன். [மலைக்கள்ளன் குறித்த கட்டுரை மட்டும் என்னை மீறி வந்தது.]

  ஆனால் நான் நினைத்ததுதான் சரி! தொடர்கதைகளின் காலம் முடிந்துவிட்டது. யாருமே அத்தியாயம் தவறாமல் படிக்கவில்லை. சிலர் எடுத்து வைத்து மொத்தமாகப் படிப்பதாகச் சொன்னார்கள். சிலர் நாலு சேப்டர் படிச்சேன் சார், கண்டின்யுடி விட்டுருச்சி என்றார்கள்.

  எனக்கு இதில் வருத்தமோ கவலையோ ஏதுமில்லை. ஒவ்வொரு காலத்துக்குமான விருப்பம் என்று ஒன்றுண்டு. இது காட்சி ஊடகங்களின் காலம். நமது திருப்திக்கு சிறுகதை, நாவல் எழுதிப் பார்க்கலாமே தவிர, பெரும்பாலான வாசகர்களுக்கு அது போய்ச்சேர இது தக்க தருணமல்ல.

  இதுவும் மாறும். உலகம் சுழன்று இன்னும் சில சூரிய/சந்திர கிரகணங்கள் வந்து போனபிறகு மீண்டும் மக்கள் கதைகளைப் *படிக்க* வருவார்கள்.

  ஆனால் ஒரு விஷயம். கதை படிக்கத்தான் ஆள் இன்று இல்லையே தவிர *படிக்கவே* ஆளில்லாத சூழல் இல்லை. கதையல்லாத அனைத்தையும் ஆர்வமுடன் வாசிக்கவே செய்கிறார்கள். சமீபத்தில் வெளியான என்னுடைய பிரபாகரன் குறித்த புத்தகம் ஒன்று நான் எண்ணியதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் விற்றிருக்கிறது. சற்றும் வேகம் குறையாமல் இன்னும் விற்றுக்கொண்டிருக்கிறது. தினசரி பத்து பேராவ்து அந்தப் புத்தகம் குறித்துப் பேசுகிறார்கள். மின்னஞ்சல்கள் வருகின்றன. வெட்டியும் ஒட்டியும் விவாதிக்கிறார்கள்.

  அதற்கு முன் வெளியான புத்தகங்களும் தத்தம் அச்சில் பிசகாமல் சுழன்றுகொண்டேதான் இருக்கின்றன.

  எனக்கு சந்தோஷம்தான். கதை எழுதும் கலை அறிந்தவன் என்பதால்தான், கதையல்லாத விஷயங்களையும் சுவாரசியம் கெடாமல் எழுத முடிகிறது. கதைகளுக்கான காலம் மீண்டும் வரும்போது மீண்டும் பத்திரிகைத் தொடர்களில் இறங்கலாம்.

  முன்பே சொன்னதுபோல் இது காட்சி ஊடகங்களின் காலம். என் கதைகளை இனி நீங்கள் அங்கே காணலாம். நிச்சயம் போரடிக்காது!

  மற்றபடி இன்னொருமுறை இங்கே தொடர்கதை போட்டு இம்சிக்க மாட்டேன். நேரமும் விருப்பமும் அமையும்போதெல்லாம் வழக்கம்போல் வேறேதாவது மட்டுமே எழுதுவேன். நிச்சயம் நம்பலாம்!

  பி.கு: பதினைந்து நாள்களில் இதனை வெளியிட்டு முடித்திருக்கலாம். ஆனால் முடியாமல் போய்விட்டது. இடையே பல வேலைகள். பலநாள் இணையத்துக்கே வர இயலாத சூழ்நிலை. ரொம்ப இழுத்துவிட்டேன். பொறுமை காத்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி – வாசிக்காதவர்களுக்கும் சேர்த்து.

 • என்ன சார் அதுக்குள்ளார முடிசிட்டிங்க. எமாற்றம் மிஞ்சியது. இன்னும் இதுபோல எழுதங்க. வாழ்த்துக்கள்.

  கருணாகரன்
  சென்னை

 • para, i don’t know on how to you came to these conclusions ! I read the story part by part everyday just after you published it. Just for the way you presented the story with humour and i like it. Didn’t want to skew your statistics about the number of people who are interested to read stories but still wanted to let you know.

 • இணையத்தைப் பொறுத்தவரை உண்மை தான். யாருக்கும் தொடர்கதை படிக்க பொறுமையில்லை. வார பத்திரிக்கையில் வந்தால் நிறைய பேர் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  எப்படியோ நீங்கள் திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி 🙂

 • எனக்கென்னமோ, தொடர்கதை எல்லாம் இனி தேறும் என்று தோன்றவில்லை.

  தொடர்கதை தருகிற முக்கியமான இன்பமே, அதன் திருப்பங்கள் தரும் சுவாரசியம் தான். தீபத்தில், எழுதிய ஆதவன் கூட, காகித மலர்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும், அடுத்த பகுதியை எதிர்பார்க்கும் படி வைத்துத் ‘தொடரும்’ போட்டார்.

  ஒரு சன்னலில், பிரபுதேவா – நயனதாரா விவகாரம், மற்றொன்றில், சாரு-ஜெமோ சர்ச்சை, இன்னொரு சன்னலில் தட்ஸ்தமிழின் பரரப்புச் செய்திகள் என்று கைக்கெட்டும் தூரத்தில் சுவாரசியங்களை வைத்துக் கொண்டு பறக்கும் தலைமுறையிடம், தொடர்கதைகளுக்கு ஆதரவு தேடுவது அராஜகம்.

  நாலைந்து சினிமா பாடல்களின் தரிசனத்துக்காக, வெள்ளிக்கிழமைகளின் இரவுகளுக்காகக் டிவி முன் காத்திருந்தது ஒரு காலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ராஜேஸ்வரி சண்முகம், நாகபூஷணி , மயில்வாகனம் போன்றோரின் சேவைக்காகக் காத்திருந்தது அதற்கும் முந்தைய கற்காலம். ஆனால், டிவி முன் காத்திருப்பதும், வானொலியின் வீச்சும் இப்போது குறைந்தா இருக்கிறது? எல்லாக் கலைகளையும் மக்கள் விடாமல் புசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் வெவ்வேறு வடிவங்களில், தங்களுக்கு வசதியான கருவிகளில்.

  வானமெனும் வீதியிலே தொடர்கதை கதிரில் வந்த பொழுது, அதை, ஒரு ஸ்ட்ரிப் போல மடித்து, யூனிட் டிரெயினில் தொங்கிக் கொண்டே படித்தவாறு பயணம் செய்த கதையை சித்தப்பா அடிக்கடிச் சொல்வார். சுஜாதா தந்த புனைகதை சுவாரசியத்தை, சித்தப்பாவுக்கு அந்த காலகட்டத்தில் வேறு யாரும் தந்ததில்லை. (மிஞ்சிப் போனால், அலுவலக காசிப்)

  ஆனால், இப்போது அப்படியா? மிக மிக நன்றாக எழுதப்பட்ட பெயர் முகம் தெரியாத ஒருவரின் அருமையான ஒரு பிளாக் போஸ்ட் போதாது? ராத்தூக்கத்தைக் கெடுக்க? 🙂

 • வார பத்திரிகைகளில் வரும் தொடர்கதை எல்லாம் படிக்க இப்பொழுது பொறுமை இல்லை சார். மற்றபடி நான் தங்களின் எழுத்திற்கு தீவிர வாசகனாக்கும் (மாயவலை,நிலமெல்லாம் ரத்தம்,இராக் + சதாம் -, யுத்தம் சரணம்,பிரபகாரன் எல்லாம் படித்திருக்கிறேன்)

 • என்ன பா.ரா., இப்படி சொல்லிட்டீங்க? எல்லா சாப்டரையும் அப்பப்ப படிச்ச்சவங்கள்ள நானும் ஒருத்தன். என்னுடைய ஒரு பதிவுலே இதுக்கு லிங்க் கூட கொடுத்துருந்தேன்.

  ஒரேயடியா படிக்காம அடுத்த சாப்டர் வர வரைக்கும் வெயிட் பண்றது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் சிறுகதை, நாவல் எல்லாத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்குன்னுதான் எனக்கு தோணுது.

  அப்புறம் denouement நல்லா இருந்துது. ஒரு ஓ. ஹென்றி திருப்பம் மாதிரி. அப்பா கேளம்பாக்கத்தில வேலை பாத்தாரோ?

 • முன்னே நான் விகடன் எடுப்பதே தொடர்கதை படிக்கத்தான், இப்போது தொடர்கதை தவிர்த்து எல்லாமே படிக்கிறேன் 🙂 எங்கள் ஊர் வீட்டில் இன்றும் கட்டுக்கட்டாக பழைய கல்கி, குமுதம், ஆனந்த விகடன் தொடர்கதைகளை கத்தரித்த தொகுப்புக்களை இன்றும் என்அம்மா பத்திரமாக வைத்திருக்கிறார், அவை பத்திரமாகவே இருக்கும் போல 😉

 • http://www.blog.sanjaigandhi.com/2009/07/blog-post.html

  மேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.

  தொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.

  ***

  வாசந்தியின் கதை – விகடனில் நன்றாக இருந்தது!

  ஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.

  சுஜாதா மாதிரி வராது!

  அப்புசாமி கதைகள் இன்னும் அருமை…

 • ஒழுங்காக, முழுவதுமாக, தேடிப் பிடித்துப் படித்தவர்களில் ஒருவன் நான். நல்ல கதை. பாராட்டுகள். நிறைய எடிட் பண்ணினால், இன்னமும் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய கதை.

  எழுதுவது தான் நம் தர்மமே தவிர, அதை யார் எப்போது படிப்பார்கள், படித்தார்கள், படிப்பார்களா என்பதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத வெத்து ஆராய்ச்சி- “அந்தக் காலத்துல இப்படித்தான் …” என்பது போன்ற வெட்டிக் கதை.

  மாற்று ஊடகங்களின் பால் அமிழ்ந்து கிடப்பவர்களையும், ட்விட்டர், ஃபபேஸ்புக்கில் புதைந்து கிடப்பவர்களையும் கூடத் திரும்பி இழுத்துப் போட்டுக் கரை(த) சேர்க்க வேண்டிய அளவில் எழுதவேண்டியதே நம் சுய தர்மம்.

  சொல்வது எளிது. நானும் செய்ய முயற்சி செய்கிறேன். இன்னும் பெரு முயற்சிகள் செய்வேன். எழுத வேண்டியது இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.

  என்றென்றும் உங்களிடம் தனி அன்புடன்,

  லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

 • appadi. ippathan nimmathia irukku.Inimel indha 1/4kg
  and 1/2 kg kadhaiyellam vendam. vazhakkam pol ezhuthungal sir.

 • அருமையான கதை, தற்பொழுதுதான் தமிழ் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிரேன். தங்களின் இந்த படைப்பு நன்றாக இருந்தது.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter