எனக்கு எதுவும் எளிதாக இருக்கவேண்டும். கண்ணை உறுத்தக்கூடிய எதையும் என்னால் ஏற்க இயலவில்லை. நிறங்களானாலும் சரி. பொருள்களானாலும் சரி. வடிவமைப்பானாலும் சரி. நுணுக்கங்கள் வெளியே தெரியக்கூடாது என்பது என் எண்ணம்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் மென்பொருளை உதாரணமாகக் காட்டுகிறேன். bold, italic, rich text, align left, align right, view options உள்ளிட்ட எந்த அலங்காரங்களும் என் கண்ணில் படக்கூடாது. அப்படி அவை தென்பட்டால் எனக்கு இதில் வேலை செய்ய வராது. இதன் காரணத்தாலேயே நான் மைக்ரோசாஃப்ட் வேர்ட், பேஜஸ் போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறேன். நோட்பேடினும் எளிமையான write room என்ற இம்மென்பொருளில் எழுதுகிறேன். கையால் எழுதிக்கொண்டிருந்த நாள்களில்கூட கோடு போட்ட பேப்பரில் எனக்கு எழுதுவது சிரமம். பள்ளிக்கூட நாள்களில் கோடில்லா நோட்டுப் புத்தகங்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தியிருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது.
எழுதுவதில் மட்டும்தான் இப்பிரச்னை என்றில்லை. எல்லாவற்றிலுமே. உதாரணமாக என்னால் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் புத்தங்களை இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாது. ஒவ்வொரு பக்கத்திலும் மிகச் சிறு அளவிலேனும் ஏதாவதொரு அலங்காரம் இருக்கும். ஒன்றுமில்லாவிட்டால் ஒரு கோடாவது கிழித்திருக்கும். பக்க எண்களுக்குக்கூட அலங்காரம் செய்வார்கள். அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன். என் பிரச்னை இது.
ஓர் இணையத் தளத்தைத் திறந்தால் சரி பாதி அளவுக்கு வெண்ணிடம் இருக்கவேண்டும் என்று விரும்புவேன். கொசகொசவென்று கட்டங்கள் போட்டு, நிறைய பொத்தான்கள் வைத்து, குறுக்கும் நெடுக்கும் ஸ்கிரால் ஓடும் இணையத்தளங்களைத் திறக்கவே மாட்டேன். அதிலும் பாப்-அப் வரும் இணையத் தளங்களென்றால் தலை வைத்தும் படுப்பதில்லை.
மிக எளிய, சிறிய கோடுகளில் கச்சிதமாக எதையும் கொண்டுவந்துவிடும் ஓவியர்களை எப்போதும் வியக்கிறேன். இன்று பாலைவன லாந்தரின் புதிய புத்தகத்துக்கு (ஓநாய்) சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்த அட்டைப்படம் ஒன்றைப் பார்த்தேன். எவ்வளவு எளிமை! மிகச் சிறு வரிகளில் அவரால் ஓர் உணர்வைத் துல்லியமாகக் கொண்டு வந்து நிறுத்திவிட முடிகிறது. கலையின் ஆகப்பெரிய சவால் என்பது அதன் சுருக்கத்தில்தான் உள்ளது.
உணவகங்களுக்குச் சென்றால் எனக்கு பரோட்டா சாப்பிடப் பிடிக்கும். ஆனால் அதன் அடர்த்தி என்னை அச்சுறுத்தும். லேயர் லேயராகப் பிரித்துச் சாப்பிடவே விரும்புவேன். அப்படிப் பிரிக்க வரும்விதமாக பரோட்டா கிடைக்கும் உணவகங்களில் மட்டுமே அதனை முயற்சி செய்வேன். வேறெங்காவது சென்றால் இட்லி அல்லது தோசை என்று சொல்லிவிடுவேன்.
இலக்கியம் படிக்கத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் லாசராவும் ஜானகிராமனும்தான் மனத்துக்கு நெருக்கமான எழுத்தாளர்களாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அசோகமித்திரனுக்கும் சுராவுக்கும் நகர்ந்து வந்ததற்கே இந்த மனநிலைதான் காரணம் என்று இப்போது தோன்றுகிறது. கனமோ ஆழமோ ஒரு பிரச்னையே அல்ல. ஆனால் அது கண்ணில் படக்கூடாது. இதனால்தான் இப்போதும் ருஷ்டியைவிட முரகாமி; முரகாமியைவிட பாமுக் என்று சட்டென்று மனம் தாவிப்போய் விடுகிறது.
சிறு ஓய்வுப் பொழுதுகளில் ஆஸ்வல்ட், டோரிமான் போன்ற கார்ட்டூன் படங்களைப் பார்க்கிறேன். பாவனைகளோ ஜோடனைகளோ அற்ற எளிய அற்புத யதார்த்தம். ஒரு ஆக்டோபஸும் பெங்குவினும் எப்படிப் பழகும் என்ற கேள்விக்கே இடமில்லை. அவை ஓர் அழகிய நகரத்தில் வசிப்பது எப்படி என்ற வினா என்றுமே வந்ததில்லை. டோரிமானின் பேட்டரி வலுவிழந்து போவதற்குள் நோபிடா அவன் உடலுக்குள் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு வெளியே வந்து விடுவது மிகுந்த ஆசுவாசம் தரவே செய்கிறது. டோரிமான் ஒரு ரோபோ என்றும் நோபிடா ஒரு சிறுவன் என்றும் நம்பவே செய்கிறேன். இரண்டுமே கார்ட்டூன்கள் என்ற எண்ணம் வருவதில்லை.
வாழ்வின் ஆகப்பெரிய அற்புதம் என்பது நம்பற்கரிய எளிமையும் சுருக்கமும்தான். இந்த மொத்தக் குறிப்பையும் ஒரு வரியில் சொல்லிவிட முடிந்தால் என்னைப் பாராட்டிக்கொள்ள எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.