சுகம் பிரம்மாஸ்மி – 7

இளங்கோவன் ஒரு நாத்திகர் என்று ரங்கராஜன் சொன்னது எனக்கு மிகவும் வியப்பான விஷயமாக இருந்தது. அவர் குருகுல வாசம் செய்த இரு இடங்களுமே சாமிநாதய்யார் தமது என் சரித்திரத்தில் விவரிக்கும் சைவ மடாலயங்களுக்கு நிகரானவை. ஆசார அனுஷ்டானங்கள் மிக்க, கடும் நியம நிஷ்டைகள் கடைப்பிடிக்க வேண்டிய இடங்கள். முதலாவது கி.வா. ஜகந்நாதன் பள்ளி. அடுத்தது ஏ.என். சிவராமன் பள்ளி.

இந்த இரண்டு பத்திரிகை உலகப் பெரியவர்களையும் நான் அதிர்ஷ்டவசமாக ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். வணக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால் பழக வாய்ப்புக் கிடைத்ததில்லை. ஏ.என்.எஸ். அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, யார் மூலமாவது அறிமுகம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தேடிக்கொண்டிருந்த நாள்களில் அவர் மிகவும் முதுமை எய்தியிருந்தார். பத்திரிகைத் துறையிலிருந்து விலகியுமிருந்தார். ஆனால் தள்ளாத வயதிலும் குர்ஆனைப் படிக்கவேண்டுமென்பதற்காக அரபி கற்றுக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன்.

கி.வா. ஜகந்நாதனை எனக்குத்தான் தெரியாதே தவிர என் அப்பா, பெரியப்பாவுக்கெல்லாம் வெகு நன்றாகத் தெரியும். சைதாப்பேட்டையில் என் பெரியப்பா நடத்திவந்த பாரதி கலைக்கழகக் கூட்டங்களுக்கெல்லாம் வந்திருக்கிறார். ஒடுங்கிச் சுருங்கிய குறுந்தேகம். கதராடைக்கு மேலே கத்திரிப்பூ நிறத்தில் மேல் துண்டு அணிந்திருப்பார். குரலெழுப்பாமல் பேசுவார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஒரு தவளை பேசுவது போலிருக்கும். அவர் யார், எத்தனை பெரிய மனிதர் என்றெல்லாம் சற்றும் அறியாத வயதில் ஒரு சில சமயங்களில் அவரது சொற்பொழிவுகளை மட்டும் கேட்டிருக்கிறேன். நான் வளர்ந்த சூழலன்றி அதற்கு வேறு காரணங்கள் கிடையாது.

இளங்கோவன் இந்த இருவரிடமும் தமிழ் படித்தவர். பத்திரிகைத் துறையின் அடிப்படைகளைப் பயின்றவர். இந்த விவரத்தை அவர் எனக்கு அப்போது சொன்னதில்லை. ஆனால் கி.ராஜேந்திரன் ஒரு சமயம் சொன்னார். ‘தப்பில்லாம எழுத அவருகிட்ட கத்துக்கங்க சார். தமிழ் சுத்தமா இருக்கும்.’

எனக்கு அப்போதெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது. சுத்தமான தமிழ் என்பது போரடிக்கக்கூடியது. சுவாரசியம் என்பது சுத்தம் விலக்கினால்தான் வரும்.

இது பண்டிதர்களின் எழுத்துகள் சிலவற்றைப் படித்ததால் உருவான அபிப்பிராயம். குறிப்பாக மு.வவின் சில புத்தகங்களை வாசித்துவிட்டுத் தலை தெரிக்க ஓடியிருக்கிறேன். எல்லோரும் சொன்னார்களே என்று காசு கொடுத்து வாங்கிப் படித்து விரிச்சுவல் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். சுவாரசியத்தைத் தூரத் தள்ளிவைத்துவிட்டு என்னத்துக்காக ஒரு கதையை எழுதவேண்டும்? இந்த லட்சணத்தில் கல்லூரி மாணவர்களெல்லாம் மு.வவை அவசியம் படித்தாக வேண்டுமென்று ஒவ்வொரு தமிழாசானும் வேறு அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்கள். ‘தம்பிக்கு’ என்றொரு புத்தகம். கடித வடிவில் கடிகள். கொடுமையாக இருந்தது. போதனைகளைக் கூட அழகாகச் சொல்ல முடியும். எழுத்துத் தொழில்நுட்பமோ, கலையுணர்வோ சற்றுமில்லாமல், தனது பண்டிதத்தனத்தை மட்டும் காட்டுகிற நோக்கம் அத்தகு எழுத்துகளில் எனக்குத் தெரிந்தது. நன்றாகத் தமிழ் தெரிந்தவர் என்பது மட்டும்தான் ஒரே குவாலிஃபிகேஷன் என்று நினைத்துக்கொண்டேன்.

இதற்கு இன்னொரு காரணமும் இப்போது தோன்றுகிறது. இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எதையும் நிராகரிப்பதில் எனக்கு ஒரு மேலான சுகம் கிடைத்துக்கொண்டிருந்தது. போதை என்றே சொல்லவேண்டும். இவர் பெரிய ஆள் என்று யாரையாவது யாராவது அடையாளம் காட்டினால், உடனே கொஞ்சம் படித்துவிட்டுக் குப்பை என்று சொல்வதில் பரம சந்தோஷம் ஏற்பட்டது. வயது காரணமாயிருக்கலாம்.  மிகச் சிறிய வயதில் கிடைத்துவிட்ட உத்தியோகம் ஒரு காரணமாயிருக்கலாம். அதுவும் கல்கி. எத்தனை பெரிய இடம்! கறார்த்தன்மைக்குப் பெயர்போன இடம்.

கொஞ்சம் கர்வம் வளர்த்தேன் என்பது உண்மையே. அதன் தலையில் தட்டியவர் இளங்கோவன். கி.ரா. சொன்னதன்பிறகு, இளங்கோவன் எழுதிய கட்டுரைகளை கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஆசிரியர் சொன்னது உண்மைதான். அவரது தமிழ் பரம சுத்தமானது. தவறியும் உங்களால் ஒரு பிழை கண்டுபிடித்துவிட முடியாது. காற்புள்ளி, அரைப்புள்ளிகள் கூட மிகத் துல்லியமாக விழுந்திருக்கும். ஒற்றுகள், சந்திகள் எல்லாம் அவருக்குக் கைகட்டிச் சேவகம் புரியும். அபாரமான வொக்காபிலரி. சற்றும் எதிர்பார்க்க முடியாத சொற்களையெல்லாம் வெகு அநாயாசமாகக் கையாள்வார்.

ஆனால் ஆச்சர்யம், அவரது சுத்தத் தமிழ், பண்டிதத் தமிழாக இல்லை. ஒவ்வொரு சொல்லும் புரியும். ஒவ்வொரு வரியும் சிறியதாக, நறுக்கென்று இருக்கும். சேர்த்துச் சமைப்பதில் அசாத்தியமான மேதைமை தெரியும். சாதாரணமான பத்திரிகைக் கட்டுரைகள்தாம். ஆனால் என்னைப்போன்ற பயிற்சி நிலைப் பத்திரிகையாளர்களுக்கு அந்தக் கட்டுரைகள் மிகப்பெரிய வரப்பிரசாதம். கட்டுடைத்துக் கற்றுக்கொள்ள அநேகம் விஷயங்கள் அதில் இருந்தன.

இளங்கோவன் பெரும்பாலும் தன்னுடைய எந்தக் கட்டுரையிலும் பெயரைப் போட்டுக்கொள்ள மாட்டார். ரொம்ப அவசியம் ஏற்பட்டால் என்னவாவது ஒரு புனைபெயரை அந்தக் கணத்துக்குத் தேர்ந்தெடுத்துப் போடுவார். எழுதியதைத் திரும்ப வாசிப்பது, அடித்துத் திருத்திச் செதுக்குவது, இப்படி அப்படி மாற்றி மாற்றி வைத்து அழகு பார்ப்பது, அச்சானதும் ஆர்வமுடன் அந்தப் பக்கத்தப் புரட்டி முகர்ந்து பார்ப்பது போன்ற வழக்கங்களெல்லாம் அவரிடம் அறவே கிடையாது. பெயர், புகழ், பிரபலம் எதிலும் துளி ஆர்வம் இல்லாத மனிதர்.

நியூஸ் ப்ரிண்ட் டம்மி நோட்டு ஒன்றைத் திறந்து வைத்து பார்க்கர் பேனாவில் வழுவழுவென்று பட்டையாக எழுதுவார். கையெழுத்து தெளிவாக, குண்டு குண்டாக இருக்கும். ஆனால் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். ஒரு கட்டுரைக்காகப் பேனாவைத் திறந்து முதலெழுத்தை எழுதினால், முடிகிற வரை கை நிற்காது. விறுவிறுவிறுவென்று எழுதுவார். இடையில் ஒரு கணம் கூட அவர் சொல்லுக்காகச் சிந்தித்ததையோ, ரெஃபரன்ஸ் புரட்டியதையோ நான் கண்டதில்லை. எழுதி முடித்ததும் கம்போஸுக்கு அனுப்பிவிட்டு வெளியே தம்மடிக்கப் போய்விடுவார்.

இலக்கண சுத்தமான அவரது கட்டுரைகள், வாசிக்கவும் எளிமையாக, ரசமாக இருந்ததுதான் என்னை வியப்புற வைத்தன. அந்த சூட்சுமத்தைக் கற்க விரும்பினேன். ‘எட்டாங்கிளாஸ் இலக்கணப் புஸ்தகத்த மொதல்ல படிய்யா’ என்றார். கொஞ்சம் கோபம் வந்தாலும் கஷ்டப்பட்டுத் தேடிப் பிடித்து அந்நூலை வாசிக்க ஆரம்பித்தேன். எட்டாம் வகுப்பில் நான் அதை அத்தனை சரியாகப் படித்திருக்கவில்லை என்பது அப்போது புரிந்தது. ஆனால் வழக்கொழிந்து போன குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆயுதக் குறுக்கமெல்லாம் என்னத்துக்கு இன்னும் இந்த நூலில் ஜீவித்துக்கொண்டிருக்கின்றன என்ற கேள்வி மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தது.

‘எதெல்லாம் கூடாதுன்னு தெரிஞ்சிக்கவும் படிச்சித்தான் ஆகணும்’ என்று சொன்னார்.

நான் அந்த இலக்கண நூலை வாசிக்கத் தொடங்கியதுதான் ஆரம்பம். கூடவே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இலக்கண நூல்களையும் வாசித்தேன். ஒரு கட்டத்தில் மனத்துக்குள்ளேயே வேகமாக சீர் பிரித்து வெண்பா இலக்கணம் சரிபார்க்கக் கூடிய அளவுக்குத் தேர்ச்சி வந்துவிட்டது. வெண்பாக்கள் எழுதத் தொடங்கியதும் அப்போதுதான். நேர்நேர்நேர் தேமாங்காய். நிரைநேர்நேர் புளிமாங்காய். நாள் மலர் காசு பிறப்பு.

‘என்ன வேணா எழுதுய்யா. ஆனா எழுதறதுக்குமுன்ன வாயத் தொறந்து சொல்லிப்பாரு. கஷ்டமில்லாம உன்னால சொல்ல முடிஞ்சாத்தான் படிக்கறவன் கஷ்டமில்லாம படிப்பான்’ என்பார் இளங்கோவன். இலக்கணப் புத்தகம் படிக்கச் சொன்னதற்குப் பிறகு அவர் எனக்களித்த இரண்டாவது பாடம் இது. எழுத்தில் நான் பயிலும் எளிமைக்கு அதுதான் வித்து. இன்றுவரை கடைப்பிடிக்கிறேன். என்ன எழுதினாலும் எழுதுமுன் ஒருமுறை சொல்லிப்பார்ப்பது. சொல்லியபடியே எழுதுவது. கூடவே, ‘இலக்கணம் தெரிஞ்சிருக்கறது ஒரு அட்வாண்டேஜ். தெரியாம தப்பு பண்ணமாட்ட. தெரிஞ்சி செய்யற தப்பு எழுத்தைப் பொருத்தவரைக்கும் அழகா இருக்கும்’ என்கிற அவரது கண்டுபிடிப்பு நூறு சதவீதம் உண்மை என்பதும் புரிந்தது. தளை பார்க்காமல், தாள லயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெண்பா எழுத ஆரம்பித்தது அதன்பிறகே. [பின்னாளில் அது இணையத்தில் வெண்பாம் என்று ஹரி கிருஷ்ணனால் அழைக்கப்பட்டதும் இன்றைக்கு அது ஓர் இயக்கமாகவே உருப்பெற்றுவிட்டதும் சரித்திரம்.]

இதிலிருந்தே இளங்கோவன் பண்டித மரபுக்கு எதிரானவர் என்பது எனக்கு விளங்கிவிட்டது. அதனாலேயே அவரைப் பிடித்தும் விட்டது. அவர் கூப்பிட்டு உட்காரவைத்து எதையும் எனக்குக் கற்றுக்கொடுத்ததில்லை. இன்றைக்கு எனக்குத் தெரிந்த அனைத்தும், நான் வாசிக்கிற அனைத்தும் அவரைப் பார்த்து, அவரிடமிருந்து மட்டுமே கற்றறிந்தது. வேதங்கள், உபநிடதங்கள், கீதை, ஆழ்வார், நாயன்மார்கள், அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ், தம்ம பதம், லத்தீன் அமெரிக்க அரசியல் என்று கலந்து கட்டிய ஆர்வம் அவருடையது. எதையும் படிப்பார். ஆனால் ஆழமாக. ரசித்து அனுபவித்துப் படிப்பார். சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியங்களில் மட்டும் அவரது ரசனை அபாயகரமானது. மற்றபடி தேர்ந்த வாசகர்தான். சந்தேகமில்லை. அவரளவு பக்தி இலக்கியம் வாசித்தவர்கள் வேறு யாரும் இருப்பார்களா என்று தெரியாது.  ஆனால் நாத்திகர். பரம நாத்திகர். தீவிர வைஷ்ணவரும் அதிதீவிர பக்திமானுமான சக ஊழியர் ரங்கராஜன் அடிக்கடி அவரிடம் மாட்டிக்கொள்வார். ரங்கராஜனுக்கென்றே பிரத்தியேகமாக அவரிடம் எப்போதும் பல ஏடாகூடக் கேள்விகள் இருக்கும். வெகு விரைவில் பொறுமை இழந்து கோபித்துக்கொண்டு போய்விடக்கூடிய அவரது குணத்தை ரசிப்பதில் இளங்கோவனுக்கு ஆர்வம் மிகுதி.

‘சார் எங்களுக்கு சாய்ந்துகொள்ளக் கடவுள் தேவைப்படுகிறார். உங்களுக்கு விளையாடிப்பார்க்கத் தேவைப்படுகிறார். ஆனாலும் உங்களுக்கும் கடவுள் வேண்டித்தான் இருக்கிறார்’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்.

அப்போது அவர் சொன்ன பதில் என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. ‘யோசிச்சிப் பார்த்தா கொஞ்சம் சரிதான்யா. உன்னமாதிரி ஆஸ்திகர்களைவிட நாஸ்திகர்கள்தான் அதிகமா கடவுளை யோசிக்கறாங்க. நிராகரிக்கறதுக்கான காரணங்களை சேகரிக்க வேண்டியிருக்கு பாரு?’

அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கிய பிறகு எனக்கு ஓர் உண்மை புரிந்தது. அவர் கடவுளை ஏற்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அவருக்குக் கடவுள் வேண்டியிருக்கவில்லை. அவ்வளவுதான்.

Share

12 comments

  • அருமை.
    கடவுள் மறுப்பாளர்கள் என்று யாருமே கிடையாது. கடவுள் உருவாக்குபவர்களை மறுப்பவர்கள்தான் இருக்கிறார்கள்.
    நாத்திகர்கள் இல்லாவிட்டால் புதிய மதங்கள் எப்படி தோன்றியிருக்கக் கூடும்? :))

  • .நல்லாருக்கு… கேப் விடாமல் தொடர  தமன்னாஅம்மன் அருள் புரியட்டும்
    //எழுதியதைத் திரும்ப வாசிப்பது, அடித்துத் திருத்திச் செதுக்குவது, இப்படி அப்படி மாற்றி மாற்றி வைத்து அழகு பார்ப்பது, அச்சானதும் ஆர்வமுடன் அந்தப் பக்கத்தப் புரட்டி முகர்ந்து பார்ப்பது போன்ற வழக்கங்களெல்லாம் //
    இதல்லாம் common ஆன விஷயங்களா? ஆச்சர்யமாக இருக்கிறது

  • //இதற்கு இன்னொரு காரணமும் இப்போது தோன்றுகிறது. இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எதையும் நிராகரிப்பதில் எனக்கு ஒரு மேலான சுகம் கிடைத்துக்கொண்டிருந்தது. போதை என்றே சொல்லவேண்டும். இவர் பெரிய ஆள் என்று யாரையாவது யாராவது அடையாளம் காட்டினால், உடனே கொஞ்சம் படித்துவிட்டுக் குப்பை என்று சொல்வதில் பரம சந்தோஷம் ஏற்பட்டது.//
    எல்லோரும் கடந்துவர வேண்டிய கட்டம் இதுவென்று புரிகிறது.  🙁 சீக்கிரமாக கடக்க வேண்டும்.
    இளங்கோவன் சார் சுத்தமான தமிழில்தான் எழுதுவார் என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் சுத்தமான, எளிமையான தமிழில் தான் திட்டுவார் என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம்.
     
    //அவர் கடவுளை ஏற்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அவருக்குக் கடவுள் வேண்டியிருக்கவில்லை. அவ்வளவுதான்//
    சூப்பர் 🙂

  • அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், பாரா, நன்றி.

  • மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.

  • //தெரிக்க//! சின்னத் தப்புன்னாலும் இந்தக் கட்டுரைக்கு… 🙂
    நிச்சயம் தொடரவும் (மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்!)
    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  • //அவர் கடவுளை ஏற்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அவருக்குக் கடவுள் வேண்டியிருக்கவில்லை//
    yesssssssssssss

  • […] This post was mentioned on Twitter by nchokkan and luckykrishna, saravanan. saravanan said: RT @luckykrishna: இலக்கியம் என்ற தகுதி இந்த எழுத்துக்கு இல்லையென்றால் வேறு எந்த எழுத்துக்கும் இல்லவேயில்லை – http://writerpara.com/paper/?p=1120 […]

  • தலைவரே, புத்தகக் கண்காட்சியில் நீங்க இரண்டு பாகமும் பார்த்து வாங்குன்னு ரெஃபர் செஞ்சீங்கள்ல…
    அதை தினமும் படித்து வருகின்றேன். ஆனால் பாராயணம் பண்ணலை 🙂

  • மீண்டும் தொடங்கியதற்கு மிக்க நன்றி.
     
    ரொம்ப நாட்களாக செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்ததை உங்களால் இன்று தொடங்கி விட்டேன். அது – எட்டாம் வகுப்பு இலக்கண புத்தகத்தைப் படிப்பது. 

  • அவர் கடவுளை ஏற்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அவருக்குக் கடவுள் வேண்டியிருக்கவில்லை
    பிரச்னை அதுவல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.
    கடவுளுக்கு இளங்கோவனைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் பிரச்னை.

  • தமிழிலக்கணம் கற்க தமிழ்நாடு அரசின் பாடநூல்களை இங்கே வாசிக்கலாம் :
    http://www.textbooksonline.tn.nic.in/
    தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் செய்துவரும் தமிழ்சேவையில் ஆயிரத்தில் ஒரு பங்கை கூட தமிழ் இலக்கியவாதிகளால் செய்துவிட முடியாது என்று திடமாக நம்புகிறேன் 🙂

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி