ருசியியல் – 20

முழுநாள் விரதம். அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் இல்லையா? முடித்துவிடுவோம்.

விரதங்களை இரவுப் பொழுதில் தொடங்குவது நல்லது. இது ஏதடா, நாமென்ன நடுநிசி யாகம் செய்து இட்சிணியையா வசப்படுத்தப் போகிறோம் என்று நினைக்காதீர். ஒரு நாளில் நாம் தவிர்க்கவே கூடாதது இரவு உணவு. இந்த ரெடிமிக்ஸ்காரர்கள், ஓட்ஸ் வியாபாரிகள், சீரியல் உணவு தயாரிப்பாளர்கள் கூட்டணி வைத்து சதி பண்ணித்தான் காலை உணவைக் கட்டாயமாக்கியது. உண்மையில், காலை சாப்பிடாதிருந்தால் எந்தப் பிரச்னையும் இராது. சொல்லப் போனால் காலைப் பசி என்ற ஒன்று நமக்கு இயல்பில் கிடையவே கிடையாது.

புரியவில்லை அல்லவா? உங்கள் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கவனித்துப் பாருங்கள். காலை டிபன் சாப்பிட அசகாய சண்டித்தனம் செய்வார்கள். மிரட்டி, அதட்டி, திணித்துத்தான் பெரும்பாலான அம்மாக்கள் அனுப்பிவைப்பார்கள். அதே பிள்ளைகள் மாலை பள்ளி விட்டுத் திரும்பி வந்ததும் என்ன கொடுத்தாலும் அள்ளி அள்ளி கபளீகரம் செய்வதைப் பார்த்தால் சற்று விளங்கும். மனிதப் பிறவிக்குப் பசிக்கத் தொடங்குவதே மதியத்துக்குப் பிறகுதான். இதுதான் இயற்கை.

எனவே விரதங்களை இரவில் ஆரம்பிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

என் இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இன்றிரவு பத்து மணிக்குத் தொடங்குகிறது என்றால், ஒன்பதரைக்கு நான் சாப்பிட உட்காருவேன். அப்போது உண்ணுவது வெறும் சாப்பாடல்ல. அமர்க்களமானதொரு விருந்தாக அது இருக்கவேண்டும். ஒரு சாம்பிள் மெனு சொல்லவா?

நெய்யில் சமைத்த பனீர் ஒரு கால் கிலோ. தேங்காய் சேர்த்து, அதேபோல் நெய்யில் சமைத்த ஒரு காய் இருநூறு கிராம். கத்திரிக்காய், வெண்டைக்காய், கோஸ், காலி ஃப்ளவர், பூசனிக்காய், சுரைக்காய் என்று எதுவாகவும் இருக்கலாம். தரைக்கு அடியில் விளையும் காய்கறிகளை மட்டும் நான் சேர்ப்பதில்லை. என் பிரியத்துக்குரிய உருளைக்கிழங்கை நான் விவாகரத்து செய்து சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன. ஆச்சா? ஒரு காய்கறி சூப் சேருங்கள். வேண்டிய அளவுக்கு இதில் சீஸ் போடலாம். ருசி அள்ளும். பனீர், காய்கறி வகையறாக்களுக்குத் தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய்ச் சட்னி அல்லது வேறெதாவது சட்னி. ஒரு கப் முழுக் கொழுப்பு தயிர். பத்தாத குறைக்கு ஐம்பது கிராம் வெண்ணெய்.

இந்த மாதிரி ஒரு விருந்தை என்றாவது ஒரு நாளாவது முயற்சி செய்து பாருங்கள். ருசியில் சொக்கிப் போய்விடுவீர்கள்.

இதில் அரிசி கிடையாது. கோதுமை, சோளம், க. பருப்பு, உ.பருப்பு, ப.பருப்பு, து.பருப்பு உள்ளிட்ட எந்த தானிய வகையறாவும் கிடையாது. எண்ணெய் கிடையாது. முழுக்க முழுக்க நல்ல கொழுப்பும், நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குறைந்த அளவு கார்போஹைடிரேடும்தான் இருக்கும். உடம்புக்கு ஒன்றும் செய்யாது. இதைச் சாப்பிட்டு, ஒரு பத்து நிமிஷம் காலாற நடந்துவிட்டுப் படுத்துவிட்டால் முடிந்தது.

காலை உறங்கி எழும்போது ஃப்ரெஷ்ஷாக இருக்கும். புத்துணர்ச்சியைக் கூட்டிக்கொள்ள பால் சேர்க்காத ஒரு கறுப்பு காப்பி குடிப்பேன். அதில் ஒரு கலோரிதான் இருக்கும் என்பதால் அதனால் விரதம் கெடாது. இல்லாவிட்டால் சிட்டிகை உப்புப் போட்டு பச்சைத் தேநீர் அருந்தலாம். ஆனால் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

இதன்பிறகு வெறும் தண்ணீர் மட்டும்தான். ஒரு மணி நேரத்துக்கு அரை லிட்டர் என்பது என் கணக்கு. விரதம் இருக்கும்போது இப்படித் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பது அவசியம். என்ன ஒரு ஏழெட்டு முறை கூடுதலாக சுச்சூ வரும். அவ்வளவுதானே தவிர, உடம்பு டீ ஹைடிரேட் ஆகாமல் இருக்கவும் உள்ளே போன கொழுப்புணவு சக்தியாக உருப்பெறவும் இது அவசியம்.

இம்மாதிரியான விரதம் இருக்கும்போது பசி என்ற உணர்வே வராது. இதுவே நீங்கள் முதல் நாள் இரவு ரெகுலர் சாப்பாடோ, பரோட்டா சப்பாத்தி வகையறாக்களையோ, ஃப்ரைட் ரைஸ், புலாவ் இனங்களையோ ஒரு கை பார்த்திருந்தீர்கள் என்றால் காலை எழுந்ததுமே பசிக்கும். ஒன்பது மணிக்கே என்னத்தையாவது கொண்டு வா என்று வயிறு ஓலமிடும். அது மாவுச்சத்து உள்ள உணவு வகையின் கல்யாண குணம். மிஞ்சிப் போனால் அன்று மதியம் வரை சாப்பிடாமல் இருக்க முடியும். அதற்குமேல் தாங்காமல் மாயாபஜார் ரங்காராவ் ஆகிவிடுவோம்.

தானிய உணவுக்கு பதில் கொழுப்புணவு உட்கொள்ளும்போது பசியுணர்ச்சி மட்டுப்படும். உள்ளே போகும் கொழுப்பு தவிர, ஏற்கெனவே அங்கே பிதுரார்ஜித சொத்தாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பும் சேர்ந்து எரிந்து சக்தியாக மாறும்.

இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும். இத்தனைக் கொழுப்பு சாப்பிட்டால் உடனே மோட்ச சம்பந்தம் வந்துவிடாதா?

என்றால், வராது! தானியங்களைத் தவிர்த்துவிட்டு, கொழுப்பை மட்டும் உணவாகக் கொள்ளும்போது ஹார்ட் அட்டாக் பிரச்னை இராது என்பதே பதில். இரண்டும் சேரும்போதுதான் சிக்கல்.

இதே விரத ஸ்டைலை அசைவ உணவு கொண்டும் முயற்சி செய்யலாம். சிக்கன், மட்டனில் எல்லாம் கார்போஹைடிரேட் கிடையாது. இஷ்டத்துக்கு வெளுத்துக் கட்டலாம். என்ன ஒன்று, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று இறங்கிவிடாதிருக்க வேண்டும். பிரச்னை அந்த பிரியாணி அரிசியில்தானே தவிர சிக்கனிலோ மட்டனிலோ இல்லை என்பது புரிந்துவிட்டால் போதும்.

முதல் நாள் இரவு பத்து மணிக்கு விருந்து முடித்து, விரதம் தொடங்கினோம் அல்லவா? சரியாக அதே நேரத்தில் மறுநாள் விரதத்தை முடித்துவிட வேண்டும். முந்தைய நாளைப் போலவே ஒரு மகத்தான முழு விருந்து. இந்தப் பாணி விருந்து – விரத முயற்சியில் உடம்பு இயந்திரமானது பரம சுறுசுறுப்படைந்து வேகம் பெறும். மூளை மிக வேகமாக சிந்திக்கும். என்னைப் போல் நாளெல்லாம் நாற்காலி தேய்க்கிற ஜென்மங்களுக்கு இந்த ஒருவேளை உணவு முறை பெரிய வசதி. எடை கூடாது. கண்ட கசுமால வியாதிகள் அண்டாது. எப்போதும் பசி, எப்போதும் தீனி, அதனாலேயே உடல் பருமன் என்னும் தீரா மாய வட்டத்தில் இருந்து எளிதாக வெளியேறிவிட முடியும்.

இன்னொன்றும் செய்யலாம். விரதம் முடித்த மறுநாள் காலை ஒரு கீரை ஜூஸ் அருந்துங்கள். அரைக்கட்டு கீரையை ஆய்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பிடி புதினா, பிடி கொத்துமல்லி, ஒரு பத்து கருவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் சீரகம், மிளகு, ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், நாலு பல் பூண்டு, ஒரு பிடி தேங்காய் சேர்த்து அப்படியே பச்சையாக மிக்ஸியில் அரைத்து எடுத்தால் முடக்கத்தான் கீரை சேர்த்து அரைத்த தோசை மாவு மாதிரி ஒரு ஜூஸ் வரும். இதில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு அப்படியே குடித்துவிடுங்கள். பச்சைக் கீரை வாசனை ஒத்துக்கொள்ளாது என்றால் கொதித்த நீரில் கீரையை ஒரு ஐந்து நிமிடம் போட்டெடுத்து வடிகட்டலாம்.

இந்த கீரை ஜூஸானது ஒரு டிடாக்ஸ் தெய்வம். தேகஹானிக்குக் காரணமான கெட்ட சக்திகளை மொத்தமாகக் கழுவிக் கொட்டிவிடும். உடம்பு ஒரு சிறகு போலிருக்கச் செய்யும்.

இப்படியெல்லாம் விரதம் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்றால் ஒரே ஒரு பதில்தான். இன்னும் விதவிதமாக ருசித்துத் தீர்க்க உடம்பு நன்றாக இருக்க வேண்டாமா?

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!