பேய் விடு தூது

குச்சிப் பாட்டிக்கு ஏன் அந்தப் பேர் வந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பாட்டி செத்துப் போனதை சாக்காக வைத்து துக்கம் கேட்கப் போகிற பாவனையில் மீனாட்சியைக் கிட்டத்தில் பார்த்துவிட்டேன். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட அழகி! இழுத்து எதிரே நிறுத்தி அதைச் சொல்லிவிட வேணும்போல ஒரு தவிப்பு. எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள். ஆனால் யார் நேரடியாகச் சொல்லியிருப்பார்கள்? ஆண் பிள்ளைகள் எல்லோரும் என்னைப் போலத்தான். வெறுங்கோழைகள். நினைத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது? அது ஒரு சொகுசு. கம்பளிக்குள் சுருண்டுகொண்டு குளிரைக் கொண்டாடுவது மாதிரி. அவ்வளவுதான். ஒரு வீரனுக்குத்தான் இதைச் சொல்ல வாய் திறக்கும். செருப்படி விழுந்தாலும் பரவாயில்லை என்கிற சுரணைகெட்டத்தனமும் கூடவே வேணும்.

ஏனென்றால், இந்தப் பெண் பிள்ளைகளுக்கு ஒரு கலியாண குணம் உண்டு. நீ அழகாக இருக்கிறாய் என்று யாராவது சொல்லுவதை ரொம்ப விரும்புவார்கள். ஆனால் அதென்னவோ கொலைக் குற்றம் மாதிரி அப்படி ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடவும் செய்வார்கள். மீனாட்சியே ஒன்றிரண்டு பயல்களை அவளது அப்பாவிடம் மாட்டிவிட்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன்.

நான் அந்தளவு வீரனெல்லாம் இல்லை. அதற்காகக் கோழை என்று சொல்லிவிட முடியாது. பாருங்கள், ஒரு பேயை சிநேகிதம் பிடித்திருக்கிறேன். உங்களால் முடியுமா? செத்தாலும் முடியாது. ஓ, இல்லை. செத்தால் ஒரு வேளை முடியலாம். ஆனால் நான் உயிரோடிருப்பவன். ஆனால் ஒரு பேயின் ஃப்ரெண்ட்.

இதெப்படி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

அன்றைக்கு ராத்திரி நான் அறைக்குத் திரும்ப ரொம்ப நேரமாகிவிட்டது. நைட் ஷோவுக்குப் போய்விட்டு நேரே வருவதென்றால் பன்னிரண்டரை மணிக்கே வந்திருக்கலாம். ஓட்டலுக்குப் போய் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று நினைத்ததுதான் தப்பு. பார்சல்தான் ரொம்ப லேட்டாகிவிட்டது.

வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இன்னும் இரண்டு நீண்ட சாலைகள், ஒரு குறுக்குச் சந்து, ஒரு குப்பை மேடு இவற்றைக் கடந்தால்தான் நான் தங்கியிருக்கும் மேன்ஷனுக்குப் போய்ச் சேரமுடியும். ஒரு ஆட்டோ பிடித்தால் அஞ்சு நிமிஷம்தான். அத்தனை சீக்கிரம் போய்ச் சேர்ந்து என்ன செய்யப் போகிறேன்? மீனாட்சியைத் தான் நினைத்துக்கொண்டு படுப்பேன். நினைத்துக்கொண்டு நடக்கவும் செய்யலாமே?

மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.

மீனாட்சிக்கு நகம் கடிக்கிற பழக்கம் இருக்கிறது.

மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.

மீனாட்சி கல்லூரியில் கடைசி வருஷப் படிப்பில் இருக்கிறாள். போன செமஸ்டரில் ஒரு பேப்பரில் ஃபெயில் வேறு ஆகியிருக்கிறாள்.

மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.

பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடு. அவளது அப்பா, வீட்டை ஒட்டியே ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறார். என்னை அவருக்குத் தெரியும். நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் குடியிருப்போரில் அவரது கடையில் சிகரெட் வாங்காத ஒரே இளைஞன் நாந்தான். (பக்கத்துத் தெருவுக்குப் போய் வாங்குவேன்.)

மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.

மீனாட்சியை அவரொன்றும் கலெக்டர் உத்தியோகத்துக்குப் படிக்க வைக்கப் போவதில்லை என்பதை நானறிவேன். எவனோ ஒருத்தனைப் பிடித்துக் கட்டிவைத்துவிடத் தான் போகிறார். அந்த ஒருவன் ஏன் நானாக இருக்கக்கூடாது?

மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.

நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் அன்பே. ரேஷன் கார்டில் குடும்பத்தலைவனாகும் தகுதி எனக்கும் வந்துவிட்டது. நீ இன்னும் கிடைக்காதபடியால்தான் நேரம் கடத்த நைட் ஷோ போகிறேன். நீ வந்துவிட்டால் உன்னோடு மாலைக்காட்சிக்குத்தான் போவேன்.

மறந்துவிட்டேன் பார்த்தீர்களா? விஷயத்தை இன்னும் என் வீட்டுக்குச் சொல்லவில்லை. போன முறை என்னைப் பார்க்க ஊரிலிருந்து அப்பாவும் அம்மாவும் வந்திருந்தபோது விவரம் சொல்லி நேரடியாகப் பெண் கேட்கச் சொல்லலாமா என்று நினைத்தேன். அம்மாவை மீனாட்சியின் அப்பாவுடைய பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திக்கூட வைத்துவிட்டேன். நல்ல மனுஷன். இங்கே ஒரு அவசர ஆத்திரத்துக்கு இவருடைய கடைதான் எங்களுக்கெல்லாம். நடு ராத்திரி எழுப்பிக் கடை திறக்கச் சொன்னாலும் பன்னும் பழமும் கொடுப்பார். பெரிய பரோபகாரி.

அறிமுகம் போதாது? ஆனாலும் ஏனோ மீனாட்சி விஷயத்தை எடுக்க முடியவில்லை. சரி போ, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கதாநாயகியான மீனாட்சியிடமே இன்னும் சொல்லவில்லை. அவள் என்ன நினைப்பாள் என்று தெரியவில்லை. அதற்குள் அம்மாவிடம் சொல்லி என்ன பயன்?

இவ்வாறாக நான் மீனாட்சியைக் குறித்து யோசித்தபடியே நடந்துகொண்டிருக்கும்போதுதான் அந்தக் குப்பை மேட்டுக்குள் இருந்து ஒரு குரல் வந்தது. ‘டேய், ரொம்பப் பசிக்குதுடா. கையில இருக்கற பார்சல குடுத்துட்டுப் போயேன்.’

‘யாரு?’

குரல் வந்த திசையில் தேடிப் பார்த்தேன். ஆள் யாரும் இல்லை. எனவே மீண்டும் கேட்டேன், ‘யாரு?’

‘அதெல்லாம் ஒனக்கு வேணா. எனக்குப் பசிக்குது. கையில பிரியாணிதான? அப்படி அந்த குத்துக்கல்லு மேல வெச்சிட்டுப் போயிடேன். இப்பந்தின்னேன்னா ஒரு பத்து நாளைக்குப் பசிக்காது.’

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. யாரோ பாவம் பரம தரித்திரவாசி. பொட்டலத்தின் வாசனை பிடித்து சரியாகக் கேட்டுவிட முடிந்திருக்கிறது. ஒழியட்டும் என்று அந்தக் கல்லின்மீது பிரியாணி பொட்டலத்தை வைத்தேன்.

‘நீ போ. தள்ளிப் போயிரு.’

தபார்றா என்று நினைத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் செல்பவன் மாதிரி நாலடி நகர்ந்து போனேன். ஆனால் நான் கில்லாடி அல்லவா? நடந்த வாக்கிலேயே சரேலென ஒரு அபவுட் டேர்ன்.

அடக்கெரகமே. கல்லின்மீது நான் வைத்த பிரியாணிப் பொட்டலத்தை இப்போது காணோம்! தடதடவென்று அந்தக் குப்பை மேட்டின் மீது ஏறி ஒரே தாவாக அந்தப் பக்கம் எகிறிக் குதித்து ஒரு முழு சுற்று சுற்றி முடித்துப் பார்த்தும் யாரையும் காணோம். என் காலெல்லாம் நாற்றம் பிடித்துக்கொண்டதுதான் மிச்சம்.

‘ஏய்.. நீ யாருன்னு சொல்லு? எங்க ஒளிஞ்சிட்டிருக்க? வெளிய வா.’ என்று சத்தம் போட்டேன்.

ம்ஹும். பதில் இல்லை.

இதென்ன கயவாளித்தனம்? பிரியாணி கொடு என்று கேட்டு வாங்கிச் சாப்பிடத் தெரிகிறது. நேரில் பார்த்து ஒரு நன்றி சொல்ல வக்கில்லாது போய்விடுமா? இது மட்டும் பகலாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. சரி போ. காசுக்குக் கேடு. இன்று நமக்கு பிரியாணி கொடுத்துவைக்கவில்லை. அறைக்குப் போனால் இரண்டு மலைப்பழங்கள் இருக்கும். சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கவேண்டியதுதான்.

இப்படியாக நான் மனத்துக்குள் சமாதானம் செய்துகொண்டு கிளம்ப நினைத்தபோது மீண்டும் அந்தக் குரல் வந்தது. ‘ரொம்ப நன்றி. இது பெரிய உதவி. மறக்கமாட்டேன்.’

இப்போதுதான் எனக்கு மெலிதாக ஒரு பயம் வர ஆரம்பித்தது. ஒருவேளை நிஜமாகவே பேயாக இருக்குமோ?

நான் கேட்டேன், ‘நீ யாரா இருந்தாலும் பரவால்ல. நேர்ல வா. நான் ஒன்ன பாக்கணும்.’

‘எனக்கு உருவம் இல்லடா. இருந்திருந்தா வந்திருக்க மாட்டனா?’

‘எழவே. மூஞ்சி இல்லாத முண்டத்துக்கு பசி மட்டும் இருக்குதாக்கும்.’

எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என் பயம்தான் என் குரலில் கோபத்தை ஏற்றி அனுப்பிக்கொண்டிருந்தது. இது ஏதடா வம்பாப் போச்சு? போயும் போயும் ஒரு பேயிடம் மாட்டிக்கொள்வதாவது? அதுவும் யாராவது ஒருத்தன் பிரியாணி கொடுத்துப் புதை குழிக்குள் விழுவானா?

என் பயமும் கலவர உணர்வும் அதற்குப் புரிந்துவிட்டது போலிருக்கிறது. ‘பயப்படாத. ஒன்ன நான் ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். ஒன்னன்னு இல்ல. யாரையுமே ஒண்ணுஞ்செய்யிற ஜாதி நான் இல்ல. இருந்த வரைக்கும் நல்லதா எதுவும் பண்ணல. அதுக்கே இப்படி ஒரு அவஸ்த. இப்ப பேயா திரியறப்பவேற பாவத்த தேடிக்கணுமா? அதெல்லாம் மாட்டேன். நீ பயப்படாத.’

‘நீ.. நீ நிஜமாவே பேயா?’

‘ஆமாமா. இன்னுமா ஒனக்கு சந்தேகம் தீரல? அதான் சுத்திப் பாத்தியே? ஆளு யாரும் கண்ணுல பட்டாங்களா?’

‘இல்ல. அதான் குழப்பமா இருக்கு.’

‘குழப்பமே வேணாம். நான் பேய்தான். ஆனா ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். நீ எனக்கு பசியாத்தியிருக்க.’ மீண்டும் உறுதியளித்தது.

எனக்கு நெஞ்சுக் குழியெல்லாம் உலர்ந்து போய்விட்டது. இடமும் காலமும் மறந்து உடல் நடுக்கம் ஒன்றே சாசுவதம் என்று தோன்றிவிட்டது. அது போய்விடு என்று சொன்னபோதே போயிருக்கலாம். நான் ஏன் நின்றேன்? இந்த அசட்டுத் துணிச்சல் மீனாட்சியிடம் காதலைச் சொல்ல மட்டும், வருவேனா என்கிறது. என்ன ஜென்மம் நான்?

‘ஆச்சி. சாப்ட்டு முடிச்சிட்டேன். நான் போயி தண்ணி குடிக்கறேன். நீ கெளம்பு. வீடு போய் சேரு.’

திடுக்கிட்டு மீண்டும் ஒருதரம் சுற்றிப் பார்த்தேன். ‘ஏய் இரு. நீ பேய்னு நான் எப்படி நம்பறது?’

‘நீ எதுக்கு நம்பணும்? பேய்க்கே பிரியாணி போட்டவன், மனுசனுக்கு என்ன வேணா செய்வ. நல்ல மனசு ஒனக்கு. நீ நல்லாருப்ப. போயிட்டு வா.’

‘இந்தா பாரு.. எனக்கு உன் ஆசீர்வாதமெல்லாம் வேணாம். ஒரு ஹெல்ப் பண்ணுவியா?’

இதை எப்படிக் கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கேட்டுவிட்டேன்.

சில வினாடிகள் பதில் ஏதும் வரவில்லை. பேய் தண்ணீர் குடிக்கப் போய்விட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு நான் கிளம்பும்போது, ‘என்ன செய்யணும் சொல்லு?’ என்று குரல் வந்தது.

கொஞ்சம் யோசித்தேன். ம்ஹும். இதெல்லாம் பெரிய விவகாரம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மடத்தனம் பண்ணிவிடக் கூடாது.

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் வரேன்’ என்று விறுவிறுவென்று நடக்கத் தொடங்கிவிட்டேன். எங்கே அது துரத்திக்கொண்டு அறை வரைக்கும் வந்துவிடுமோ என்று பயம்தான். நல்லவேளை, அப்படி எதுவும் ஆகவில்லை.

ஒரு நாலைந்து நாள் அந்தப் பக்கமே போகவில்லை. ஆனால் அந்தப் பேயை நினைக்காதிருக்க முடியவில்லை. வாழ்வில் மனிதாபிமானமும் நல்ல மனமும் கொண்ட ஒரு பேயைச் சந்திப்பேன் என்று நான் எண்ணிப் பார்த்திருப்பேனா. சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். அதுசரி, எதற்கு நம்பவேண்டும்?

அந்த வாரம் முழுவதும் ஆபீசுக்குப் போய் வேலை பார்த்துவிட்டு வாரக் கடைசியில் வழக்கம்போல் நைட் ஷோ பார்த்துவிட்டு மறக்காமல் பிரியாணி வாங்கிக்கொண்டு திரும்பும்போது மீண்டும் அந்தப் பேயை நினைத்தேன். இந்த முறை வேண்டுமென்றேதான் அந்தக் குப்பை மேட்டுப் பக்கமாகப் போனேன். அதே குத்துக்கல். ஒரு கணம் நின்று சுற்றிப் பார்த்தேன். குரல் ஏதும் வரவில்லை. ஆனாலும் பிரியாணிப் பொட்டலத்தை அந்தக் கல்லின்மீது வைத்தேன்.

ஒரு நிமிஷம் முழுதாக ஓடியிருக்குமா? பிரியாணிப் பொட்டலம் மறையவில்லை. ஆனால் பேய் வந்துவிட்டது. ‘எனக்கு இப்ப பசியில்லெ. போனவாரம் சாப்ட்ட பிரியாணி இன்னும் மூணு நாளைக்கித் தாங்கும்.’

நான் பதிலேதும் சொல்லாமல் பொட்டலத்தை எடுத்துக்கொண்டேன்.

‘என்னமோ உதவி வேணுன்னு சொன்னியே. என்னன்னு சொல்லேன்?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா நீ பேய்தானான்னு டெஸ்ட் பண்றதுக்கு சொன்னேன். விட்டுடு. அத மறந்துடு.’

‘இல்ல பரவால்ல சொல்லு. என்னால முடிஞ்சா செய்வேன். ஒரு நாலஞ்சு ஹெல்ப் பண்ணியாவது இந்த நாறப் பொழப்ப தாண்ட முடியுதா பாக்கறேன்.’

இப்போது எனக்கு சுவாரசியமாகிவிட்டது. பேய்க்குப் பரலோக ப்ராப்தி தேவைப்படுகிறது. சிறு உதவிகளின் மூலம் அது சாத்தியமா? தெரியவில்லை. பரீட்சை செய்து பார்த்துவிடுவதில் ஒன்றும் பிழையில்லையே? சரிதான், எனக்கும் ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. ஏ அன்பான பேயே, நான் மீனாட்சியை விரும்புகிறேன். ஆனால் அவளிடம் அதை எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. என் சார்பாக நீ அவளிடம் எப்படியாவது என் மனத்தில் இருப்பதைப் புரியவைக்க முடியுமா?

ஒரு வழியாகச் சொல்லிவிட்டேன். பேய் சில நிமிடங்கள் யோசிப்பதற்கு எடுத்துக்கொண்டது. பிறகு, சரி முயற்சி செய்கிறேன்; நீ ஒரு மாதம் கழித்து வா’ என்று சொன்னது. சரிதான். பேயே ஒரு மாதம் கேட்கிறதென்றால் பெரிய பிராஜக்ட்தான்.

அடுத்த வாரம் ஊரில் இருந்து என் அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். ‘டேய் ஒனக்கு பொண்ணு பாத்திருக்கம்டா’ என்று உள்ளே நுழையும்போதே அம்மா அறிவித்துவிட்டாள்.

‘யாரு?’ என்றேன் அசுவாரசியமாக.

‘எல்லாம் ஒனக்குத் தெரிஞ்ச பொண்ணுதாண்டா.. இந்த மேன்ஷனுக்கு எதிர் சைடுல பொட்டிக்கடை வெச்சிருக்காரே நீராத்து பாண்டி, அவரோட பொண்ணு மீனாட்சி.’

மீனாட்சியா!

அம்மா சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. போனமுறை அம்மா வந்திருந்தபோது எதிர்க் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தேன் அல்லவா? அன்றைக்கே மீனாட்சியின் அப்பா என் அம்மா அப்பாவிடம் பேச்சுக் கொடுத்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். என் உத்தியோகம், சம்பளம், உடன் பிறந்தோர், ஊரில் இருக்கும் நிலம் நீச்சு என்று சகலமான சேதிகளையும் பேசியிருக்கிறார்கள். மீனாட்சியின் போட்டோவைக் கொடுத்து, ஜாதகம் இருந்தா அனுப்புங்க, பாப்பம் என்று கேட்டிருக்கிறார். அப்பா ப்ரொபஷனல் கூரியரில் ஜாதகம் அனுப்பி, பொருத்தம் பார்ப்பது வரை நடந்திருக்கிறது.

‘தெனம் பாக்கற புள்ளதான? படிச்சிருக்க. வேல பாக்குற. சம்பாதிக்கற. அவருக்கு கல்யாண வயசுல பொண்ணு இருக்குது. சரியா இருந்தா முடிக்கலாம்னு நினைக்கறது ஒரு அதிசயமா?’

எனக்கு அதன் பிறகு எல்லாமே அதிசயமாகத்தான் இருந்தது. அடுத்த பத்து நாளில் கல்யாணமே முடிந்துவிட்டது. மீனாட்சியின் அப்பாவே எனக்கு நாலு தெரு தாண்டி ஒரு வீடு பிடித்துக் கொடுத்துக் குடி வைத்துவிட்டார். ஆபீஸ் போய்வர ஒரு ஸ்கூட்டர் வேறு வாங்கிக் கொடுத்திருந்தார்.

என் பதட்டப் பரவசமெல்லாம் தணிய மேலும் பத்து நாள் தேவைப்பட்டது. மீனாட்சியுடன் அந்த வார இறுதியில் ஒரு சினிமாவுக்குப் போயிருந்தேன். இண்டர்வலில் மீனாட்சி சொன்னாள். அவளது பாட்டிதான் முதல் முதலில் என் பேரை அவர்கள் வீட்டில் எடுத்தாளாம். துக்கம் கேட்கப் போனேனே, அந்தப் பாட்டி. ‘அந்தப் புள்ள பாக்க லச்சணமா இருக்காண்டா.. நல்லா சம்பாதிக்கறான். நம்ம மீனாச்சிக்குப் பாக்கறதுன்னா பாரு.’

அன்றிலிருந்தே மீனாட்சியின் அப்பா என்னை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். எல்லாம் பிடித்துப் போனபோதுதான் ஜாதகம் அனுப்பக் கேட்டிருக்கிறார்.

மீனாட்சி சொன்னாள். ‘ஆனா பொருத்தமெல்லாம் பாக்கவேயில்ல தெரியுமா? பாத்துட்டதா சொன்னாங்க. அவ்ளதான்.’

‘ஏன்?’

‘வீட்டுல ஒரு பெரிய சாவு விழுந்தா உடனே ஒரு நல்ல காரியம் பண்ணிரணும்னு ஐதீகம். செத்துப் போன பாட்டி எங்கப்பா கனவுல வந்து முன்னாடி சொன்னத திரும்ப ஒருதடவ ஞாபகப்படுத்தியிருக்கா. அதுக்குமேல எங்கப்பா யோசிக்கவேயில்ல. உடனே உங்கப்பாவுக்கு லெட்டர் எழுதிப் போட்டுட்டாரு.’

அதற்குமேல் எனக்குப் படத்தில் மனம் தோயவில்லை. மீனாட்சியை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பிரியாணி வாங்கப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

O

சொக்கன் பிறந்த நாளுக்கு இந்தப் பேய்க்கதை என் அன்புப் பரிசு 😉

Share

3 comments

  • Read the recent ‘Muththam’ and this story. I will read the past posts with interest. Some how, I haven’t come across your books so far but hope to read some this year. – R. J.

  • “ஏனென்றால், இந்தப் பெண் பிள்ளைகளுக்கு ஒரு கலியாண குணம் உண்டு. நீ அழகாக இருக்கிறாய் என்று யாராவது சொல்லுவதை ரொம்ப விரும்புவார்கள். ஆனால் அதென்னவோ கொலைக் குற்றம் மாதிரி அப்படி ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடவும் செய்வார்கள்.”
    நான் மிகவும் ரசித்த வரிகள்!
    பின் குறிப்பு:”நிலமெல்லாம் ரத்தம்” புத்தகத்தினைப் படித்தபிறகு மத்தியக்கிழக்கு பிரச்சினை குறித்து தெள்ளத்தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.தங்களுடைய பணி தொடர பாராட்டுக்கள்!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி