Shorts

June 17, 2026 12:09 AM

நான்கைந்து தேநீர் சந்திப்புகள் ஒருவரை இலக்கியவாதியாக்கிவிடக் கூடும். நன்றாக எழுதினால் மட்டுமே எழுத்தாளராக நிலைக்க முடியும்.

June 16, 2026 6:28 AM
தொடர்ச்சியாகப் புத்தகங்களை எழுதி வெளியிடுவது பெரிய விஷயமல்ல. ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய ஒரு நபர் அகப்படுவது பெரும் பேஜார். இந்த சமர்ப்பண விஷயத்தில் ஜெயமோகனையும் சொக்கனையும் அடித்துக்கொள்ளத் தமிழ்நாட்டில் ஆளில்லை. சலிக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தை நினைவுகூர்ந்து சமர்ப்பணம் செய்திருப்பார்கள். இது குறித்து முன்பும் சில முறை எழுதியிருக்கிறேன். இருபது முப்பது புத்தகங்களைத் தாண்டிய பிறகு என் கான்டாக்ட் லிஸ்டிலேயே அதற்கு மேலே ஆள ...
Show more
May 25, 2026 12:45 PM

என் வேலையை நான் செய்கிறேன் என்பதில் சிறப்பில்லை. என் வேலையல்லாத எதையும் நான் செய்வதில்லை என்பதில்தான் என் கவித்துவ வில்லத்தனத்தை ஒளித்து வைக்கிறேன்.

May 23, 2026 10:15 AM

இல்லறம் என்பது என்ன?

மதியம் மீந்த புடலங்காய்ப் பொரியலை, இரவு மாவில் கலந்து தோசை சுட்டுவிட்டு, வெஜிடபிள் தோசை என்று சொல்வதே இல்லறமாகும். இத்தகைய இல்லறம், சுமார் பாதிகளால் முன்னெடுக்கப்படும். சிறந்த பாதிகள் அதைத் தின்றுவிட்டு அருமை என்று சொல்வதே இல்லறம் நல்லறமாக வழி வகுக்கும்.

May 22, 2026 8:31 PM

எத்தனை நெருக்கடியிலும் ஒரு பூ மலரத்தானே செய்கிறது என்று புல்லரிப்போரே, பூவுக்குக் கல்யாணம், குடும்பம், பிள்ளைக் குட்டி, மாமியார், கடன், லே ஆஃப் ஏதாவது இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள். இவை எதுவுமே இல்லாமல் சும்மா ஒருமுறை பூத்து உதிர்வதெல்லாம் ஒரு சாதனையா?

May 20, 2026 5:07 PM

இன்றைய சென்னை வெயில், ஃபேஸ்புக்கைவிட பயங்கரமாக இருக்கிறது.

May 19, 2026 11:44 AM

விருது பெறும் எழுத்தாளர்களுக்கும் விருது வாங்கும் எழுத்தாளர்களுக்கும் இடைப்பட்ட வெளியில் எழுதும் எழுத்தாளர்கள் இயங்குகிறார்கள்.

May 17, 2026 2:18 PM

வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வெளிநாடு போயிருக்கிறார் பிரதமர். நான்காவது குழந்தை பிறந்தால் நாற்பதாயிரம் தருவதாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர். தலைவர்கள் எதையோ குறிப்பால் உணர்த்த நினைக்கிறார்கள்.

May 14, 2026 8:28 PM

முதலமைச்சர் கோட். முதலமைச்சர் பேண்ட். முதலமைச்சர் சட்டை. முதலமைச்சர் பெல்ட். முதலமைச்சர் ஷூ. அனைத்தும் சேர்த்த சகாய விலை ரூ. 3999. சென்னை சில்க்ஸில் வந்துவிட்டதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். இது நையாண்டி உருவாக்கமாக அல்லாமல் உண்மையான விளம்பரமாக இருக்குமானால் மாநிலமே கோட் சூட்டுக்கு மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. அது நிகழும் நாளில் கோபிநாத் வேட்டி சட்டையில் நிகழ்ச்சி நடத்துவார்.

May 13, 2026 9:35 AM

சோழர்கள்கூடக் குடந்தை சோதிடரைக் கேட்டுத்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று புத்தமங்கலச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

May 12, 2026 8:22 PM

சுறா வெளியானபோதுகூட யாரும் இந்த அளவுக்குக் கரித்துக் கொட்டவில்லை என்பதை விழிப்புடன் நினைவுகூர்கிறேன்.

May 12, 2026 8:21 PM

புதிய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் புரட்சிகரமாக இருந்தால்தான் வரவேற்கக் குதூகலமாக இருக்கும். உதாரணமாக, முந்தைய அரசு இலக்கியவாதிகளுக்குக் கொடுத்த கனவு இல்லங்களைப் புதிய அரசு பேஸ்புக் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கலாம். அதனை உத்தேசித்தாவது இன்னும் சிலர் வாசிக்கத் தூண்டும் சிறப்பான பதிவுகளை எழுத நினைக்கலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில்தான் சொல்கிறேன்.

May 12, 2026 8:21 PM

எம் 4 மேக்புக் ஏரை அறிமுகம் செய்தபோது ஆப்பிள் அந்த நிறத்தைப் போர்த்திக்கொண்டுதான் வந்தது. அன்றைக்கு யாராவது மதித்தார்களா? இன்று த்ரிஷாவின் புடைவை நிறம் டிரெண்டிங் என்கிறார்கள்.

ஏ, தாழ்ந்த தமிழகமே!

May 9, 2026 9:47 AM

தொலைதூர உறவினர் யாராவது திடீரென்று அழைத்து, நான் யார்னு தெரியுதா என்று கேட்டால் வெலவெலத்துப் போய்விடுகிறேன். ஆனால் நமது அதிர்ச்சி அவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாதல்லவா? எனவே அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக, ‘டேய், உன்னைய தெரியாதா? பொம்பள கேசுல மூணு வருசம் உள்ள இருந்த பொறம்போக்குதான நீயி? இப்ப வெளிய வந்துட்டியா?’ என்று சகஜமாகப் பேசத் தொடங்கினால் மேற்படி வெலவெலப்பு அவர்களுக்குரித்தாகிவிடும். இதன் நிகர லாபங்கள் இரண்டு.

1. உடனே போனை வைத்துவிடுவார்
2. சாகும்வரை மீண்டும் அழைக்க மாட்டார்.

May 4, 2026 5:17 AM
ரிசல்ட்டு எப்டி இருக்கும்னு நினைக்கறிங்க. நான் நினைக்கலைங்க. இல்ல சார், இந்த விஜய் வேவ் எல்லாம் வேலைக்காகும்னு தோணுதா உங்களுக்கு? சென்னைல ஹீட் வேவ் கொஞ்சம் சாஸ்திங்க. அத கேக்கல சார். ஏடிஎம்கே, விஜய் கட்சி கோயலிசன் வரும்னு பேசிக்கறாங்களே, அதுக்கெல்லாம் சான்சு இருக்குதுன்னு நினைக்கறிங்களா? தெர்லிங்க. என்னா ஆளு சார் நீங்க! அரசியல் அன்றாட வாழ்க்கைய பாதிக்கற விசயம் சார். இப்படி அக்கறையே இல்லாம இருக்கிங்க? சாரி சார். நீங்க ஓட்டுப் போட்டிங்களா? ப்ச். எங்க.. அதான் எஸ்.ஐ.ஆர்.ல பேர் இல்லன்னுட்டாங்களே. ஓஹோ ...
Show more
May 3, 2026 6:49 AM
திடீர் திடீரென்று சில பேருக்குச் சில விருதுகள் கிடைக்கின்றன. இந்த திடீர்ச் சில விருதுகள் அறிவிக்கப்படும்போது, திடீரென்று அச்சிலர் எழுத்தாளர்கள் என்றோ, கவிஞர்கள் என்றோ தெரிய வருகிறது. இத்தெரியவரும் தகவல், திடீர்ச் சில விருதுகளினும் கலவரமூட்டக்கூடியதாக இருப்பதால், சொந்த மனநலத்தைப் பேணிப் பராமரிப்பதன் பொருட்டு ஒரு சுயநல உத்தியைக் கையாள்கிறேன். எந்த திடீர்ச் சில விருது எந்த திடீர்ச் சில எழுத்தாளர்களுக்கோ திடீர்ச் சில கவிஞர்களுக்கோ அளிக்கப்பட்டாலும், அது வைரமுத்துவைச் சார்ந்தது என்று நினைத்துக்கொண்டு ...
Show more
May 2, 2026 9:51 PM
பல்வேறு அளவுகளில் அகலம் குறைந்து, எந்த அளவிலும் நீளம் குறையாத பாரிமுனை வீதிகளில் இன்று நாளெல்லாம் சுற்றித் திரியும்படியான கலைப்பணி ஒன்று இருந்தது. மதிய உணவுக்கு பாம்பே அல்வா கடை என்கிற உணவகத்துக்குச் சென்றோம் (இந்த ஓம் தன்மைப் பன்மை அல்ல. பன்மைப் பன்மைதான்). சுமாரான வடக்கத்தி உணவை உண்டு முடித்த பின்பு, கடைப் பெயருக்குப் பெருமை சேர்க்கும் அந்த அல்வாவை ஆசையுடன் கேட்டேன். பேர்தான் சார் அல்வா கடை. இங்க அல்வாலாம் விக்கறதில்ல என்று நானறியாத இந்தியில் சொன்னார் பரிமாற்கலைஞர். வெளியீட்டு விழாக்களிலும் தே ...
Show more
May 2, 2026 6:06 AM

பிறன்மனை நோக்காப் பேராண்மை என்பது எழுத்தாளர்கள் எக்சல் ஷீட்டை அண்டாதிருப்பதையும் குறிக்கும்.

May 1, 2026 11:24 AM

கடவுளே, எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஷ்டத்த குடுக்கற? என்று எல்லா சீரியல் பெண்களும் தவறாமல் ஒவ்வொரு எபிசோடிலும் கேட்கிறார்கள். இந்நிலைமை மாறி, கடவுளே, நான் மட்டும் ஏன் எப்பவும் சந்தோஷமாவே இருக்கேன்? என்று கேட்கும் நாள் வரும்போது தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி, ஆட்சியைப் பிடித்திருக்கும்.

May 1, 2026 11:05 AM

இதை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும்?

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி