மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா

வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைகின்றன. எதிர்வரும் ஜூன் முதல் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஓர் இணைய வார இதழ் இன்றைய சூழலில் நான்காண்டுகளை இடையூறின்றிக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதனைச் சாத்தியமாக்கிய உங்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாமாண்டுப் பயணத்தை ஒரு சிறிய விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகெங்குமிருந்து நமது எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வரவிருக்கிறார்கள். வாசகர்களாகிய நீங்கள் உடனில்லாமல் நிகழ்ச்சி எப்படிச் சிறக்கும்?

மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 1 மணி வரை சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிறுத்தத்தை அடுத்துள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (நூலக அரங்கம்) இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

தொடக்கம் முதலே புதிய எழுத்தாளர்களின் முதல் புத்தகங்களை மெட்ராஸ் பேப்பர் வெளியிட்டு வருவதை அறிவீர்கள். இந்த விழாவிலும் நமது நான்கு புதிய எழுத்தாளர்களின் முதல் புத்தகங்கள் வெளியாகின்றன. ஆஷா ப்ரைட் எழுதிய ‘நூர்: அரபுப் பெண்களின் மறைக்கப்பட்ட வரலாறு’, ஜான்பால் எழுதிய ‘இரான்: நேற்று இன்று நாளை’, அசோக் ராஜ் எழுதிய ‘எரியாத நாளில்லை: சிரியாவின் அரசியல் வரலாறு’, சரண்யா ரவிகுமார் எழுதிய ‘ஜெஃப் பெசோஸ்: The Boss’ ஆகிய நான்கு புத்தகங்கள். இவற்றை மெட்ராஸ் பேப்பருக்காக ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிடுகிறது.

இவை தவிர நமது எழுத்தாளர்கள் கே.எஸ். குப்புசாமி, வினுலா, சிவராமன் கணேசன், நஸீமா ரஸாக், சிவசங்கரி வசந்த் ஆகியோரின் புதிய நூல்களும் விழாவில் வெளியிடப்படுகின்றன.

வாசகர்களாகிய நீங்கள்தாம் விழாவுக்குத் தலைமை ஏற்கிறீர்கள். எழுத்தாளர்கள் என். சொக்கன், மருதன், முகில், ஆர். முத்துக்குமார், ச.ந. கண்ணன், எஸ். சுஜாதா ஆகியோர் – சிறப்புரையோ, வாழ்த்துரையோ அல்ல – பயனுரை வழங்குகிறார்கள். இன்றைய எழுத்தாளர்களுக்கும் நாளைய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என்றென்றும் பயனளிக்கும் வகையில் அவர்களது உரைகள் திட்டமிடப்பட்டுள்ளன. கேட்டுக் களித்து இன்புறலாம்.

இவை அனைத்துக்கும் அப்பால் நமது தொழில்நுட்ப எழுத்தாளர் தி.ந.ச. வெங்கடரங்கனின் மென்பொருள் வெளியீடு ஒன்று நிகழ்ச்சியில் உள்ளது. தமிழில் எழுதுவோருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Text Editor – Neight.

ஆங்கிலத்தை மனத்தில் இருத்தி வடிவமைக்கப்பட்ட ஆயிரமாயிரம் டெக்ஸ்ட் எடிட்டர்கள் உலகில் உண்டு. முதல் முதலில், யுனிகோட் என்கோடிங்கில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களின் நடைமுறைச் சிக்கல்களை அறிந்து, அவை அனைத்தையும் களைந்து உருவாக்கப்பட்டிருக்கும் எழுத்துத் திரை இது. முற்றிலும் இலவச மென்பொருளான இப்புதிய படைப்பையும் விழாவில் வெளியிட்டு உங்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.

விழா சரியாகக் காலை 9.30க்குச் செல்வி பூர்ணிகா வசந்தராஜின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கும். நமது எழுத்தாளர்கள் நஸீமா ரஸாக், காயத்ரி ஒய் இருவரும் தொகுத்து வழங்க, ஸ்ருதி டிவி, இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்கிறது. (லைவ் கிடையாது. நிகழ்ச்சிக்குப் பிறகே ஒளிபரப்பப்படும்.)

மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகை தர அன்புடன் வேண்டுகிறோம்.

நினைவுக்கு:

விழா நாள்: மே 31, 2026 – ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை
தேநீர் இடைவேளை: காலை 11.30-11.40
இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகில், அண்ணா சாலை, சென்னை 600002.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி