அங்கே இனி அவரில்லை

கடந்த சில நாள்களாகக் கவனித்திருப்பீர்கள். நாள்தோறும் அறிவிப்பில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கைக் குறிப்பிடுகிறேன். அது மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அறிவிப்புத் துளி. இன்றைக்கு வெளியிடத் தயார் செய்திருந்த அறிவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இதனை எழுதுகிறேன்.

ஓர் இணைய வார இதழ், நான்காண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு மாய யதார்த்தம். அதைக் கொண்டாட நினைத்தபோது மறு சிந்தனையே இல்லாமல் தேவநேயப் பாவாணர் அரங்கம் கிடைக்குமாவெனக் கேள் என்றாள் என் மனைவி.

மனுஷைத்தான் கேட்டேன். நான் பேசி வைத்த பத்தாவது நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒரு விழா அரங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமான நவீன கட்டுமானம் கொண்டு புதுப்பிக்கப்பட்ட அரங்கம் அது.

அரங்கம் மட்டுமல்ல. நூலகம் என்பதை ஓர் இடமாக அல்லாமல் இயக்கமாக மாற்றியதில் மனுஷின் பங்கு பெரிது. ஒவ்வோராண்டும் கோடைக் காலத்தில் அவர் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களுக்குச் சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். சென்னையில் மட்டும்தான் அவர் செய்தார். ஆனால் தமிழ்நாடெங்கும் நூலக இயக்கம் மறுமலர்ச்சி காண அதுதான் தொடக்கமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது.

ஆட்சி மாற்றம் நிகழவிருப்பதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரன் தனது பதவியில் இருந்து விலகவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது எதிர்பார்த்ததுதான். இன்னொரு தலைவர் நூலக ஆணைக் குழுவுக்கு அவசியம் வரத்தான் செய்வார். அவரும் தன்னாலானதைச் செய்யத்தான் பார்ப்பார். ஆனால் அது ஒரு கவிஞனின் கரம் பட்டு நடப்பது போல இராது.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி