பாடசாலை (சிறுகதை)

கணேசன் வீட்டுக்கு வரும்போதே ஏதோ சரியில்லை என்று கௌசல்யாவுக்குத் தெரிந்துவிட்டது. என்ன, என்னவென்று நச்சரிக்கத் தொடங்கினால் சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வான். உண்மையிலேயே ஏதாவது பெரிய பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் எரிச்சலும் கோபமும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே அவனாகப் பேசுகிற வரை முகத்தை வைத்துத் தான் எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்கிற பாவனையைத் தொடரலாம் என்று முடிவு செய்தாள். எப்போதும் போல சாதாரண முகத்தை அணிந்துகொண்டு, ‘இரு, காப்பி எடுத்துட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

கணேசன் பேண்ட் சட்டையைக் கழட்டிவிட்டு பாத்ரூமுக்குச் சென்று முகம் கைகால் கழுவிக்கொண்டு லுங்கியில் வந்து உட்கார்ந்ததும் காப்பியைக் கொடுத்துவிட்டு, ‘சுவாதி பக்கத்து வீட்ல விளையாடிட்டிருக்கா. நான் போய் கூட்டிட்டு வரேன். இன்னிக்கு அவளுக்கு எக்கச்சக்க ஹோம் ஒர்க் வேற இருக்கு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

‘இரு’ என்று கணேசன் சொன்னான்.

‘எதாச்சும் வேணுமா?’

‘இல்ல. ஆபீஸ்ல ஒரு பெரிய சிக்கல். அநேகமா அடுத்த மாசத்துலேந்து நாப்பது பர்சண்ட் சம்பளம் கட் ஆயிடும் போல இருக்குது’ என்று சொன்னான்.

‘நாப்பது பர்சண்ட்டா?’

‘அப்படித்தான் பேசிக்கறாங்க. சர்க்குலேஷன் டோட்டலா இறங்கிடுச்சி கௌசல்யா. யாரும் எதுவும் பண்ண முடியல. டெய்லி பேப்பரெல்லாம் இனிமே வேலைக்கே ஆகாது போல.’

நான்கு மாதங்களுக்கு முன்னர்வரை கணேசன் ஒரு வாரப் பத்திரிகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கு முன்னும் வாரப் பத்திரிகைகளில்தான் இருந்திருக்கிறான் என்றாலும் அம்முறை அவனுக்குக் கிடைத்தது பெரிய இடம். பெரிய சம்பளம். ‘வாழ்க்கைல நாப்பதாயிரமெல்லாம் பாப்பேன்னு நினைச்சிப் பார்த்ததே இல்ல’ என்று முகம் காணாத மகிழ்ச்சியுடன் வந்து சொன்னான். கௌசல்யாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.

‘இன்னொண்ணு தெரியுமா? இம்ப்ரிண்ட்ல பேர் வரப் போகுது.’

‘நிஜமாவா?’

‘எடிட்டரே சொல்லிட்டாருடி. நீதான் வாராவாரம் பாக்கறியே. உதவி ஆசிரியர்கள்னு நாலு பேர் பேர் வருதில்ல? அஞ்சாவதா எம்பேரு.’

‘போகுது போ. இவ்ளோ வருஷம் பேர் இல்லாம வேல பாத்த. இப்பவாச்சும் பேர் வருதே.’

‘நேரம் வரணும். பாரு. இம்ப்ரிண்ட்ல பேரு. நாப்பதாயிரம் சம்பளம். இனிமே ரிடையர் ஆகுற வரைக்கும் இன்னொரு இடம் பாக்கணுன்ற அவஸ்தை இல்லை. இப்படியே செட்டில் ஆயிடுவேன்’ என்று நிம்மதியாகக் கால் நீட்டி அமர்ந்தபடி கணேசன் சொன்னான்.

அது சற்றுப் பெரிய பத்திரிகைக் குழுமம். ஏழெட்டு பத்திரிகைகள் அந்த நிறுவனத்திலிருந்து வந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் எந்தப் பத்திரிகைக்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கச் சொல்வார்கள் என்று கணேசன் சொல்லியிருந்தான். ஆனால் அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த யாரும் மற்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களைப் போல அடிக்கடி வெளியே வந்து புலம்பிக்கொண்டிருப்பதில்லை. ‘ஒவ்வொருத்தரும் அதே ஆபீசுல மினிமம் பத்து வருச சர்வீஸ் வெச்சிருக்காங்கடி’ என்று கணேசன் வியப்புடன் சொன்னான்.

‘போகுது போ. நம்ம கஷ்டம் இதோட முடியுதுன்னு நினைச்சிக்குவோம்.’

‘அதான் நினைச்சேன். கிட்டத்தட்ட கவர்மெண்ட் ஆபீஸ் மாதிரி நடத்துறாங்க. காண்டிராக்ட் முடிஞ்சி கன்ஃபர்ம் ஆயிட்டன்னா பிஎஃப் உண்டு. கிராஜுட்டி உண்டு. ஈஎஸ்ஐ உண்டு. அதையெல்லாம்கூட விடு. இன்னிய தேதிக்கு எவன் உனக்கு மாசாமாசம் பெட்ரோல் கூப்பன் தரான்? இவன் தரான் தெரியுமா?’

‘அப்படின்னா?’

‘ஆபீஸ் பக்கத்துல ஒரு பங்க்ல காண்டிராக்ட் இருக்கும்போல. அசைன்மெண்ட்னு வெளிய போயிட்டு, கன்வேயன்சுன்னு எழுதிக் குடுத்துட்டு, அக்கவுண்ட்ஸ் செக்‌ஷன்ல போய் இனிமே தேவுடு காக்க வேணாம். போறப்ப அந்த பங்க்ல டேங்க் ஃபில் பண்ணிட்டுப் போயிரலாம். மாசக் கடைசில கம்பெனியே நேரா செட்டில் பண்ணிடுமாம்.’

கௌசல்யாவுக்கு அப்போது பெரிய நிம்மதியாக இருந்தது. அதுவரை இருபத்திரண்டாயிரம் சம்பளத்தில் கணேசன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வாடகை, வீட்டுச் செலவுகள், குழந்தைக்கான செலவுகள், இதர செலவுகள் என்று சரியாக இருக்கும். மாதம் ஒரு சினிமாவுக்கோ, ஒரு வேளை ஓட்டலுக்கோ போகலாம் என்றால்கூட யோசித்து முடிவு செய்ய வேண்டிய சூழலே இருந்தது. சரி எல்லாருக்குமா இதெல்லாம் எளிதில் கிடைத்துவிடுகிறது என்று அமைதியாக இருந்துவிடுவாள்.

ஆனால் நெடுநாள்களாக ஒரு ஆசை வைத்திருந்தாள். எப்படியாவது மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்துவிட வேண்டும். வருடக் கடைசியில் அது பன்னிரண்டாயிரம் ரூபாயாக ஆவதை வாழ்நாளில் ஒருமுறை எண்ணிப் பார்த்து வியக்க முடிந்தால் போதும்.

‘பன்னெண்டாயிரம் ஆனா என்ன செய்வ?’ என்று கணேசன் கேட்டான்.

‘ஃபிக்சட் டெபாசிட்ல போடுவேன்.’

‘போட்டு?’

‘அது இருவத்தி நாலாயிரம் ஆகணும். அதுக்குள்ள இன்னொரு பன்னெண்டு சேத்துடணும்.’

‘சரி, சேக்கற. அம்பதாயிரமே ஆகுதுன்னு வையி. அப்ப என்ன பண்ணுவ?’

‘ஒரு லட்சத்துக்கு ஆசைப்படுவேன் கணேசா. ஏன், தப்பா?’

‘தப்பே இல்ல. ஒரு லட்சம் சேர்த்துடறன்னு வையி. அப்ப?’

‘லட்சியத்த ரெண்டு லட்சம் ஆக்கிடுவேன்.’

‘அடேங்கப்பா.’

‘உம்பொண்ணு காலேஜுக்குப் போறப்ப செலவு என்னவா இருக்கும்னு நினைக்கற? தகப்பனா லட்சணமா ஒரு நல்ல காலேஜ்ல, நல் கோர்ஸ்ல சேர்க்க வேணாமா நீ?’

கணேசன் பெரும்பாலும் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திப்பதில்லை. அதிகபட்சம் அடுத்த மாதம் வரை அவனால் யோசிக்க முடியும். நீண்ட நாள் திட்டங்கள் போடுவதற்கு ஒன்று பணம் இருக்க வேண்டும். அல்லது கனவு இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவன் அதையெல்லாம் நினைத்து பாரத்தை ஏற்றிக்கொள்ளக்கூடாது என்று நினைப்பான்.

‘ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான் கௌசல்யா. இவ்ள நாள் இந்த வண்டிய ஓட்ட வெச்சிருக்கான்ல? இனிமே மட்டும் அம்போன்னு விட்டுட்டுப் போயிருவானா?’

அந்தப் பெரிய பத்திரிகை ஒருநாள் திடீரென்று ஆள் குறைப்பு செய்வதாக அறிவித்தது. காண்டிராக்ட் அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்த அத்தனை பேருக்கும் வேலை போனது.

‘அவங்க போய் எப்படி இப்படி?’ என்று அன்றைக்கு கௌசல்யா சொல்லிச் சொல்லிப் புலம்பினாள்.

‘சர்க்குலேஷன் இல்லடி. யாரு என்ன பண்ண முடியும்?’

‘எவ்ளோ பெரிய பத்திரிகை!’

‘பேரு பெரிசுதான். இன்னிக்கு எவன் காசு குடுத்துப் பத்திரிகை வாங்கறான்னு நினைக்கற? நெட்டுல படிச்சிடுறான். இல்லன்னா திருட்டு பிடிஎஃப் கிடைச்சிருது. அதுவும் இல்லன்னா, படிக்காட்டா என்னன்றான். விழுந்து விழுந்து பத்திரிகை படிச்ச காலமெல்லாம் முடிஞ்சிருச்சி போல.’

‘இப்ப என்ன பண்ணப் போற?’

‘எனக்கு என்ன தோணுதுன்னா, லைஃப் டைம் நிம்மதியா செட்டில் ஆவணும்னா இனிமே டெய்லி பேப்பர்தான் சரி’ என்று அன்றைக்குத்தான் சொன்னான். ஆனால் அங்கும் அதே பிரச்னை இருக்கிறது போல. சர்க்குலேஷன் இல்லை. அதனால் சம்பளக் குறைப்பு.

‘நான் ஒண்ணு சொல்லவா?’ என்று கௌசல்யா மெதுவாகக் கேட்டாள்.

‘சொல்லு.’

‘அவசரப்பட்டு வேலைய விட்டுடறேன்னெல்லாம் சொல்லாத. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணானு ஆயிடும். நாம இருவத்திரண்டாயிரத்துல வாழ்ந்தவங்கதானே. அத நினைச்சிப்போம். பல்ல கடிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓட்டு. என்ன ஆகுதுன்னு பாப்போம்.’

‘இல்லடி. எனக்கென்னவோ இனிமே நியூஸ் சேனல்தான் சரியா வரும்னு தோணுது.’

‘டிவியா?’

‘ஆமா. ஏற்கெனவே எங்க பேப்பர்லேந்து முப்பத்தஞ்சு பேர் சேனலுங்களுக்குப் போயிருக்காங்க. அதுல சிலரோட பேசிட்டுதான் இருக்கேன்.’

‘அவசரப்படாதடா. எங்க போனாலும் இதான் பிரச்னைன்னா எதாவது ஒரு இடத்துல அழுத்தமா நின்னுக்கறதுதான் நல்லது.’

‘அப்படி இல்லடி. நியூஸ் சேனல்னா சர்க்குலேஷன் பிரச்னை இருக்காது…’

‘ஆனா ரேட்டிங் பிரச்னைன்னு ஒண்ணு இருக்கும்ல?’

கணேசன் சிறிது யோசித்தான். பிறகு, ‘நீ சொல்றது சரிதான். ரேட்டிங் ரேட்டிங்னு சொல்லி சாவடிப்பாங்க. ஆனா பன்னெண்டு நியூஸ் சானல் இருக்குது. ஒண்ணு இல்லன்னா இன்னொண்ணுன்னு சட்னு இடம் மாறிக்கலாம்.’

‘எவ்ளோ நாளைக்கு கணேசா?’

‘வேற என்ன செய்ய? எதுவுமே இல்லன்னா இருக்கவே இருக்குது யூட்யூபு. இந்தக் காலத்துக்கு அதுதாண்டி மீடியா. காலத்த புரிஞ்சி நடந்துக்கலன்னாத்தான் சிக்கலாகும்.’

‘முடிவு பண்ணிட்டியா?’

‘இல்லல்ல. இன்னிக்கு ஆபீஸ்ல இந்தப் பேச்சு வந்திச்சின்னு சொன்னேன். நாளைக்கே வேலைய விட்டுடப் போறேன்னெல்லாம் நினைச்சிடாத. பாப்போம். நிர்வாகம் கூப்ட்டுப் பேசுற வரைக்கும் அமைதியாத்தான் இருக்கப் போறேன்.’

அன்றிரவு கௌசல்யாவுக்கு நெடுநேரம் உறக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வேலை, ஏதோ ஒரு சம்பளம் இல்லாமல் போய்விடாது. ஆனால் முழு வாழ்வையும ஓர் அச்சத்துடன் எப்படி வாழ்ந்து தீர்ப்பது? கணேசனை மட்டும் குறை சொல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஏனென்றால் அவனுடன் வேலை பார்க்கும் பலபேரை அவளுக்குத் தெரியும். வீட்டுக்கு வருவார்கள். பேச்சு எங்கே சென்றாலும் இறுதியில் வேலை போவது குறித்தும் வேறு இடம் தேட வேண்டியிருப்பது குறித்தும் பேசி முடிக்காமல் யாரும் கிளம்புவதில்லை.

ஒருநாள் இரண்டு பேரும் சாதாரணமாக இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இதுக்குத்தான் எங்கப்பா கவர்மெண்ட் சம்பளம் வாங்குற மாப்ளையா எனக்குப் பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தாரு. கவர்மெண்ட் இல்லன்னாலும் கார்ப்பரேட்ல வேல பாக்குற சம்பந்தமாச்சும் இருந்தா நல்லாருக்கும்னுவாரு’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

கணேசன் கோபித்துக்கொள்ளவில்லை. சண்டையெல்லாம் போடவில்லை. ஆனால் அமைதியாக எழுந்து சென்றுவிட்டான். இரவு அவள் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டபோது, ‘விடு. நாளைக்கு நம்ம குழந்தைக்கு ஒரு வரன் பாக்குற நேரம் வர்றப்ப நாம மட்டும் வேற மாதிரியா யோசிப்போம்?’ என்று சொன்னான்.

இரண்டொரு தினங்களில் அந்தத் தகவல் வந்துவிட்டது. சம்பளக் குறைப்பு அறிவித்துவிட்டார்கள் என்று கணேசன் அலுவலகத்தில் இருந்து போன் செய்து சொன்னான்.

‘உன்னைக் கூப்ட்டு பேசினாங்களா?’

‘தனியா யாரையும் கூப்பிடல கௌசல்யா. பொதுவா எல்லாருக்கும் மெயில் அனுப்பியிருக்காங்க. இதான் நிலைமை. வேற வழியில்லன்னு சொல்லியிருக்காங்க.’

‘சொக்கலிங்கம் என்ன சொல்றாரு?’

‘அவரு ரிசைன் பண்ணிடப் போறதா சொல்றாரு.’

‘கிருஷ்ணமூர்த்தி?’

‘அவன் காச்சுமூச்சுனு கத்திக்கிட்டிருக்கான். பாவம் யாரு என்ன பண்ண முடியும்? எல்லாருக்கும் கஷ்டம்தான்.’

‘நீ ரிசைன் பண்ணப் போறேன்னு யார்ட்டயாச்சும் சொன்னியா?’

‘இல்லடி. நான் அத பத்தி இன்னும் யோசிக்கவேயில்ல.’

‘சரி. வீட்டுக்கு வா, பேசிக்கலாம்’ என்று சொல்லி போனை வைத்தாள்.

திரும்பத் திரும்பப் பலமுறை அதைக் குறித்து இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். வேறொரு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கும்போது இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அவசரப்பட வேண்டாம் என்று கௌசல்யா சொன்னாள். ‘தானா வரட்டும். நீயா போய் இனிமே எங்கயும் வேல கேட்டு நிக்காத.’

‘சரி.’

‘இப்ப தூங்கு.’

கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை. முப்பத்தைந்து வயதில் இப்படி அலைக்கழிக்கப்படுபவர்கள் சரியாக வாழப் பயிலவில்லை என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. இதற்குமேல் எங்கே போய் வாழ்க்கையைப் படிப்பது என்றும் தெரியவில்லை.

‘நீயே சொல்லு கௌசல்யா. நான் சின்சியரா வேல பாக்கறவன். அநாவசிய செலவு எதும் பண்றதில்ல. உன்னையும் குழந்தையையும் விட்டா உலகத்துல எனக்குன்னு வேற எதும் இல்ல. எல்லாம் சரியா இருக்கற மாதிரிதான் எப்பவும் தோணுது. ஆனா எங்க தப்பாகுதுன்னுதான் புரிய மாட்டேங்குது.’

எதிர்ப்புறம் திரும்பி, சுவாதியை அரவணைத்தபடி படுத்திருந்தவளைத் தோளைத் தொட்டுத் திருப்பிச் சொன்னான்.

‘ஏய், அழுகுறியா?’

‘இல்லடி. ஆனா கஷ்டமா இருக்குது.’

‘விட்றா. நாளைக்கே நீ வேலைய விட்டுட்டு வீட்ல இருந்தாலும் பிரச்னை இல்ல.’

‘அதுசரி.’

‘நிஜமாத்தான் சொல்றேன் கணேசா. அந்த வீக்லில ஆறு மாசம் நாப்பதாயிரம் சம்பாதிச்ச. இருவத்திரண்டாயிரத்துல செலவ முடிச்சிட்டு மிச்சத்த அப்படியே ஃபிக்சட்லதான் போட்டேன். இப்ப இந்த டெய்லில உனக்கு அம்பதாயிரம் சம்பளம். இருவத்திரண்டு இருவத்தஞ்சாச்சே தவிர, அதுக்கு மேல செலவில்ல. என்ன ஒண்ணு நாலு மாசத்துல இந்த ஆட்டம் முடியுது. அவ்ளதானே. ஆனா நாலு மாசம்னு பாக்காத. ஒரு லட்சம்னு பாரு.’

கணேசனுக்குத் திகைப்பாக இருந்தது.

‘நிஜம்மா ரெண்டு லட்சம் இருக்குன்றியா?’

‘லூசு. நீ சம்பாதிச்சதுதான். பத்திரமா இருக்கு.’

‘ரெண்டு லட்சம்னா பத்து மாசம் ஓட்டிடலாம்ல?’

கௌசல்யா புன்னகையுடன் அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள். ‘ஆமா. நிம்மதியா தூங்கு இப்ப’ என்று சொன்னாள்.

காலை அவன் கண் விழித்தபோது கிச்சனில் இருந்து குக்கர் சத்தம் வந்தது. நெடுநேரம் தூங்கிவிட்டோமோ என்று எண்ணியபடி அவசரமாக எழுந்து பாத்ரூமுக்குச் சென்றான். பாத்ரூம் கதவு மூடியிருந்தது.

‘கொஞ்ச நேரம் இரு. அவ குளிச்சிட்டிருக்கா. ஸ்கூலுக்கு டயம் ஆயிடுச்சி’ என்று அடுக்களையில் இருந்து கௌசல்யா சொன்னாள்.

கணேசன் ஹாலுக்கு வந்து உட்கார்ந்ததும் பாத்ரூமிலிருந்து சுவாதியின் குரல் வந்தது. அவள் எப்போதும் அழைப்பது போல அல்லாமல் வேறு விதமாக ‘அம்மா’ என்று கூப்பிடுவது போல இருந்தது. கணேசன் சட்டென்று எழுந்தான். அதற்குள், என்னடி என்று கேட்டுக்கொண்டே கௌசல்யா பாத்ரூம் அருகே சென்றாள். சுவாதி கதவைத் திறந்ததும் கௌசல்யா உள்ளே சென்று கதவை மூடியதும் பார்க்காமலேயே உணரக் கூடியதாக இருந்தது.

ஐந்து நிமிடங்களில் கௌசல்யா பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். ‘கணேசா..’ என்று அவள் அழைத்ததும் புன்னகை செய்தான். ‘சந்தோஷமா இரு. பாத்துக்கலாம்’ என்று சொன்னான்.

O

நன்றி: லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2023

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி