இந்த வருடம் என்ன செய்தேன்?

* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday.

* கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ. முத்துலிங்கம்), சூஃபி வழி (நாகூர் ரூமி).

* பயணம்? அதிகமில்லை. திருவண்ணாமலைக்கு ஒருமுறை. கன்யாகுமரிக்கு ஒருமுறை. இரண்டுமே அகங்காரம் அழிக்கும் இடங்கள். குமரி முனை ரயில்வே ஸ்டேஷன், இந்தியாவின் மிக அழகிய இடங்களுள் ஒன்று என்று எப்போது போனாலும் தோன்றும். இப்போதும்.

* இவ்வருடம் அறிமுகமானது ட்விட்டர். கொஞ்சம் தடுமாறினால் முழுக்க உள்ளிழுத்துக்கொண்டு விடும். எழுத்தாளனுக்குச் சோம்பல் வளர்க்கும் ஊடகம். சனியனைத் தலைமுழுக வேண்டும்.

* மிகக் குறைவாக எழுதிய வருடம் இது. பத்ரிக்கு வாக்களித்த புத்தகங்களில் எதையும் முடிக்கவில்லை. தொடர்கள் விழுங்கிவிட்டன. திரைப்படங்களும்.

* அடிக்கடி கண்ணில் பட்டுக் கவர்ந்தவர்கள் இரண்டு எழுத்தாளர்கள். விகடனில் திருமாவேலன். இணையத்தில் லக்கி லுக். இருவரும் மொழியை லாகவமாகக் கையாள்கிறார்கள். புனைவெழுத்தில் இப்படிப் புதிதாக யாரும் தென்படவில்லை.

* உடல் இளைத்தது சாதனை. பயிற்சியை விடுத்து, மீண்டும் பெருத்தது வேதனை. மாமி மெஸ், தாபா எக்ஸ்பிரஸ் அறிமுகமானதில் கலோரி பெருத்தது.

* சார்வாக மகரிஷிக்கு அடுத்தபடி கோர நாத்திகரான பத்ரியுடன் குப்பை கொட்டியபடி  கடவுளைப் பற்றி அதிகம் யோசித்தது மிக முக்கியம். தனியே எழுதவேண்டும்.

* ஏராளமாக இசை கேட்டேன். ஆண்டிறுதியில் அகப்பட்ட அனகா அனைத்தையும் மறக்கடித்துவிட்டாள். இந்தக் குழந்தைக்குச் சிறந்த எதிர்காலமுண்டு.

* சற்றும் ஓய்வில்லாது போய்விட்டதுபோல் ஓரெண்ணம். அடுத்த வருடம் முதல் மூன்று மாதங்களுக்குக் கண் காணாமல் போய்விட வேண்டும்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

10 comments

  • அப்படா!..இவ்வள்வு வேலைகளா?.. ம்ம் சரி நான் இந்த வருடம் என்ன செய்தேன்..

    உங்களுக்கு நேர் எதிர் ..வழகத்தை விட அதிகமாக தூங்கினேன், சாப்பிட்டேன்..

    உங்களுக்கு எழுதுவது முக்கியம் தான், ஆனால் ஓய்வும் அவசியம், உடலை கவனித்துக்கொள்ள வேண்டும்..சுவர் இருந்தால் தானே..

    இப்படி தான் யாரவது என்னிடம் மாட்டினால் போதும்..

    :)))))))))))))))))))

  • லக்கி லுக் – வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளரை அடையாளம் கண்டு சிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
    -ஒருவாசகன் – மணிவண்ணன்

  • லக்கிலுக்கிற்கு என் வாழ்த்துக்கள். கவ்னப்படுத்தியமைக்கு நன்றி. மேம்போக்கான நகைச்சுவை எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன் அவரினைப் பற்றி. நீங்கள் சொன்னதன்பின்பு இனி கவனித்துப் படித்துப் பார்க்கிறேன்!

  • நல்ல ரிப்போர்ட் பாரா! திருவண்ணாமலையையும் கன்னியாகுமரியையும் அகங்காரம் அழிக்கும் இடம் என்று சொல்வதன் காரணம் என்ன? விளக்குவீர்களா? திருமவேலனை இப்போதுதான் படிக்கிறீர்களா? அவர் பல வருடங்களாக விகடனில் எழுதுகிறாரே. லக்கிலுக் – டூமச்!;-) வேறு யாரும் உங்களுக்கு தென்படவில்லையா.

  • //மேம்போக்கான நகைச்சுவை எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன் //

    வலைப்பதிவில் அவர் எழுதுவதை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தால் அது சரியே. ஆனால் அவரால் வேறு விதமாகவும் எழுத முடிகிறது. புத்தகக் கண்காட்சி வரை பொறுங்கள். அவருடைய இரு புத்தகங்கள் வெளிவரும். அது உங்களுக்கு அவரது இன்னொரு வகை எழுத்தைக் காட்டும்.

  • //திருவண்ணாமலையையும் கன்னியாகுமரியையும் அகங்காரம் அழிக்கும் இடம் என்று சொல்வதன் காரணம் என்ன? //

    சுருக்கமாக இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. என்னைத் துரும்பாக உணரத்தக்க தருணங்களை இந்த ஊர்கள் தருகின்றன. மலைக்கும் கடலுக்கும் முன்னால் அது உண்மையும் கூட அல்லவா? தவிரவும் சொற்களில் பிடிபடாத சான்னித்தியம் இங்கே உண்டு. உணரமட்டுமே இயலும்.

  • //* அடிக்கடி கண்ணில் பட்டுக் கவர்ந்தவர்கள் இரண்டு எழுத்தாளர்கள். விகடனில் திருமாவேலன். இணையத்தில் லக்கி லுக். இருவரும் மொழியை லாகவமாகக் கையாள்கிறார்கள். புனைவெழுத்தில் இப்படிப் புதிதாக யாரும் தென்படவில்லை.//

    இதை வாசிக்கும்போது பயமாக இருக்கிறது 🙁

    ‘லக்கிலுக்கா – டூ மச்சி’ என்று சொல்லுபவர்கள் 2009 டிசம்பர் வரை பொறுக்கவும் 🙂

  • ட்விட்டர். கொஞ்சம் தடுமாறினால் முழுக்க உள்ளிழுத்துக்கொண்டு விடும். எழுத்தாளனுக்குச் சோம்பல் வளர்க்கும் ஊடகம். சனியனைத் தலைமுழுக வேண்டும்.—-

    🙂 😀 😛

  • //‘லக்கிலுக்கா – டூ மச்சி’ என்று சொல்லுபவர்கள் 2009 டிசம்பர் வரை பொறுக்கவும் //
    🙂
    ஸ்மைலியை பார்த்ததுமே, மொக்கைப் பின்னூட்டம் என்று ரிஜெக்ட் செய்துவிட வேண்டாம். இந்த ஸ்மைலி ஆணவ ஸ்மைலி 🙂

  • ம்ம் ஹ்ம்ம் உங்களிடமிருந்து புத்தம் படித்து நாட்கள் ஆகிவிட்டன 

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading