நவம்பர் 2026 உயிர்மை இதழில் என்னுடைய நேர்காணல் வெளியாகியுள்ளது. நீண்ட, விரிவான பேட்டி. வாசக நண்பர்கள் படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்.
நேற்றுத்தான் உரியை எழுதி முடித்தேன். பெருஞ்செயல் எதையேனும் நிறைவு செய்யும்போதெல்லாம் ஒரு சிறு பரிசுக்காக மனம் ஏங்கும். பொதுவாக நம் சமூகம் அதையெல்லாம் செய்வதில்லை என்பதால் நானே எனக்கு எதையாவது பரிசளித்துக்கொண்டு விடுவேன். பெரும்பாலான தருணங்களில் என் மனைவி ஏதாவது செய்வாள்.
இம்முறை ஒரு மாறுதலாக, நேற்று முடித்த நாவலுக்கு இன்று வெளிவந்துள்ள உயிர்மை ஒரு பரிசாகிப் போனது. உரியைக் குறித்தும் இப்பேட்டியில் விரிவாகப் பேசியிருக்கிறேன். சலம் – உரி – யதி மூன்றன் கருப்பொருள் உருவானது தொடங்கி, அவை விரிவு கொண்டு, எழுதி முடிக்கப்பட்ட விதத்தைப் படிப்படியாக விவரித்திருக்கிறேன்.
அதனினும் முக்கியமானதொன்று உண்டு. முப்பத்தைந்தாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். எங்கிருந்து எங்கே வந்து சேர்ந்திருக்கிறேன் என்று நானே மீள்பார்வை பார்த்துக்கொள்ள இந்த நேர்காணல் எனக்கு மிகவும் உதவியது. முன்னொரு காலத்தில் கோமல் ஆசிரியராக இருந்த சுபமங்களாவில் எழுத்தாளர்களின் விரிவான நேர்காணல்கள் வரும். (அவற்றைத் தொகுத்து இளையபாரதி ஒரு புத்தகமாகவே வெளியிட்டிருக்கிறார்.) பிறகு நான் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது அதனைச் செய்தேன். தளவாய் சுந்தரம் அந்நாளில் ஜங்ஷனுக்காக எடுத்த பேட்டிகளெல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. அதற்கும் பிறகு இத்தனை விரிவான, முழுமையான எழுத்தாளர் பேட்டிகள் தொடர்ச்சியாக வெளிவருவது உயிர்மையில்தான்.
தீவிரம் குன்றாத அக்கறையுடன் இதனைத் தொடர்ச்சியாகச் செய்து வரும் மனுஷ்யபுத்திரனுக்கு மனமார்ந்த நன்றி. இந்தக் குறிப்பிட்ட என்னுடைய நேர்காணல் சிறக்க அவருக்கு உறுதுணையாக இருந்த விஜயகுமாருக்கும் புகைப்படங்கள் எடுத்த பிரபு காளிதாஸுக்கும் நன்றி.
__
உயிர்மை மாத இதழைச் சந்தா செலுத்திப் படியுங்கள். ஆண்டுச் சந்தா ரூ. 600. சந்தாத் தொகையை uyirmmaibooks.com மூலம் செலுத்தலாம்.


