உரி: சில குறிப்புகள் – 6

சரித்திரம் சில வினாக்களுக்குத் தெளிவான விடை தரும். சிலவற்றுக்கு எவ்வளவு தேடினாலும் அகப்படாது. கவனியுங்கள். அது அகப்படாததுதான். இல்லாததென்றோ, கிடையாதென்றோ ஒன்றில்லை.

உரியின் பொருட்டு இராஜராஜ சோழனின் காலம் குறித்த ஆய்வறிஞர்களின் புத்தகங்கள் அனைத்தையும் வரிசையாகப் படித்துக்கொண்டிருந்த நாள்களில் அத்தகு விடையற்ற வினா ஒன்று அனைத்துக்கும் மேலாக எழுந்து சூழ்ந்து நின்றது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இறுதிவரை ஒரு மன்னன் என்னவெல்லாம் செய்தான், எப்படியெல்லாம் நல்லாட்சி தந்தான் என்பதை நடந்த விதமாகவே கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதிவு செய்வதன் மூலம் ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் வரலாற்றை மிகத் தெளிவாகச் சோழர்கள் ஆவணப்படுத்திவிடுகிறார்கள்.

ராஜராஜன் மட்டும்தான் என்றல்ல. அவனது மகனாகட்டும், அவனுக்கும் பிறகு பட்டமேற்றவனாகட்டும், அதற்கப்பாலும் ஆட்சி புரிந்த சாளுக்கிய சோழர்களாகட்டும். நடந்தவற்றை எடுத்துச் சொல்லித் தமது இருப்பின் நியாயத்தைக் காலத்தில் பதிவு செய்யாமல் போகவேயில்லை.

டைரி எழுதும் வழக்கம் உள்ள மனிதனால் எழுதவியலாமல் போகும் பக்கமென்பது ஒன்றுதான். அது அவனது மரணம். அதைப் பிறர்தாம் பதிவு செய்து வைத்தாக வேண்டும். இராஜராஜனின் அறப்பணிகளையும் ஆட்சி முறையையும் அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்திச் சென்ற அவனது மகன் இராஜேந்திரனும் தன் தந்தையைப் போலவே ஏராளமான கல்வெட்டுகளை விட்டுச் சென்றவன்தான். ஆனால் இராஜேந்திரனின் கல்வெட்டுகளிலும் இராஜராஜனின் மரணம் குறித்த விவரங்கள் இல்லை. இராஜேந்திரனின் மகன் காலத்துக் கல்வெட்டுகளில் இராஜேந்திரனின் மரணம் குறித்த விவரங்களும் இல்லை.

மாமன்னர்களின் மரணத்தை விவரித்து எழுதி வைப்பதில் பயனில்லை; வாழ்ந்த காலத்தில் அவர்கள் புரிந்த சாதனைகள் எதிர்காலத்துக்குத் தெரிந்தால் போதுமென்பது சோழர்களின் பொதுவான கருத்தாக இருந்திருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், அவர்கள் சுட்டிக்காட்டிய பள்ளிப் படைகளைப் பாதுகாப்பதில் பின்னால் வந்த அரசுகளுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை.

குலோத்துங்கன் கல்வெட்டுச் செய்தி

தஞ்சைக்கும் கும்பகோணத்துக்கும் இடையிலுள்ள சிரிகாங்கேயபுரம் என்கிற உடையாளூரில் இராஜராஜனின் பள்ளிப்படை அமைந்துள்ளது. அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு பாணலிங்கத்தினை அடையாளமாகக் கொண்டு (ஆவுடை இல்லாமல்) அது இராஜராஜன் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என்று பண்டைய ஆய்வாளர்கள் கருதினார்கள். அதே இடத்தில் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று கிடைக்க, அதில் இராஜராஜனின் பெயர் இருந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அவ்விடம் இன்றும் எப்படி உள்ளதென்பதை நேரில் சென்று யாரும் பார்க்கலாம்.

பெரிய கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரமெல்லாம் உண்டு. அதைக் கட்டியவன் துயிலும் இடத்தைக் கண்டுகொள்ள யாருமில்லை. மாமன்னன் என்பர். மும்முடிச் சோழன் என்பர் (சேர சோழ பாண்டிய நிலம் மொத்தத்தையும் சேர்த்து ஆண்டவன் என்ற பொருளில்). திரிபுவனச் சக்கரவர்த்தி என்று பரவசப்படுவர். ஆனால் அவனது சமாதி இருக்குமிடத்தைச் சென்றடைய ஒரு பேருந்துப் பாதைகூட இராது.

இராஜராஜனின் சமாதி என்று சொல்லப்படுகிற இடத்துக்கு ஆய்வாளர்கள் வராமல் இல்லை. இன்று மிகச் சிறிதாக ஒரு கூரை அமைக்கப்பட்டு, லிங்கமொன்று வைக்கப்பட்டு, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஒரு பழைய தகர அறிவிப்புப் பலகையும் வைக்கப்படாமல் இல்லை. ஆனால் அந்த ஏற்பாடும் அரசினுடையதல்ல. கிராமமென்று சொல்லவும் யோசிக்க வேண்டிய நிலையில் உள்ள – எளிதில் சென்றடைய வழியில்லாத அவ்விடத்தில் ஒரு சிலர் வசிக்கிறார்கள். அவர்களுள் ஒரு முதியவர் இராஜராஜனின் சமாதியைப் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு முன்னால் அவரது தகப்பனார். அவருக்கும் முன்னால் அவரது தகப்பனார். இவருக்குப் பிறகு இவரது வாரிசுகள் அதைத் தொடர்வார்கள். அது அம்மாமன்னனுக்கு அக்குடும்பம் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் மரியாதை. அது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் உறவாக இருக்கலாம். யார் அறிவர்?

ஆய்வாளர்களாலும் அகழ்வுத் துறை நிபுணர்களாலும் அரசுகளாலும் தொடர்ச்சியாக இவ்விஷயம் புறக்கணிக்க அல்லது ஒத்திப்போடப்பட்டு வருவதில் உள்ளது எழுதப்படாத சரித்திரமா, மறைக்கப்படும் சரித்திரமா என்கிற வினா எழுவது இயல்பு. உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் எத்தனையோ ஆயிரம் பேர் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சுற்றுலாவாக வருகிறார்கள். மூலைக்கு மூலை நின்று வியந்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியொரு கட்டடக் கலை அதிசயம் மீண்டுமொரு முறை எங்குமே நிகழவில்லை என்று சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துப் போகிறார்கள். ஆனால் கட்டுவித்தவன் கடைசியாகத் துயில்கொண்ட இடம் கவனிப்பாரற்றுத்தான் கிடக்கிறது. ஏன் இப்படி என்று யார் கேட்டாலும் பதிலளிக்க யாருமில்லை.

தகரத்தால் ஆன அறிவிப்புப் பலகை

ஆட்சியில் இருப்பவர்கள் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றால் பதவி போய்விடும் என்றொரு மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் உண்டு. ஆள்வோரும் மக்களும் இதனை நன்கறிவார்கள். இராஜராஜனின் சமாதியில் கைவைத்தாலும் அப்படி ஏதாகிலும் ஆகிவிடுமென்று யாரேனும் சோதிடர் எதையேனும் சொல்லி வைத்திருக்கலாம்.

உரியில் ஓரிடத்தில் கருவூர்ச் சித்தர், சார்வாகனிடம் சொல்வார், புலப்படாதவை அனைத்தும் இல்லாதவை என்றாகிவிடாது.

கிடைக்காத கல்வெட்டுகள், நிகழாத ஆய்வுகள், தோண்டப்படாத நிலங்களின் அடியில் சொல்லப்படாத சரித்திரமொன்று எக்காலத்திலேனும் படிக்கப்படக் காத்துக்கொண்டிருக்கிறது.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி