உரியும் நன்றியும் – வளநாடு சேசு

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு,

பணிவான வணக்கங்கள் சார். இந்த நல்ல நாளில், ‘உரி’யின் பொருட்டு, தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

‘உரி’ நாவல் தொடங்குவதாகத் தாங்கள் அறிவித்தவுடன் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழுக்குச் சந்தா செலுத்தினேன். யதி, சலம் நாவல்கள் வரிசையில் உரி மூன்றாவது நாவல் என்னும் ஈர்ப்பே அதற்குக் காரணம்.

நாவல் பகுதி நாள்தோறும் இணைய இதழில் வெளிவரும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தைத் தங்களுக்கு எழுதி அனுப்பும் முயற்சியைத் தொடங்கினேன். நவம்பர் 6ஆம் தேதி வெளியான 190 வது அத்தியாயம் வரை நாள்தோறும் இடைவிடாது 190 கடிதங்கள் மின்னஞ்சல் வழியாக எழுதியதில், இப்போது பெரும் மன நிறைவயும், மகிழ்ச்சியையும் உணர்கிறேன். இது எப்படிச் சாத்தியமானது? காரணம், மிக எளிமையானது. ‘உரி’ தன்னுள் மூழ்க வாசகர்களை அனுமதித்தது. எங்களுக்குள் அதுவே நுழைந்து சிந்தைக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது. ஏறக்குறைய இந்த ஆண்டு முழுவதும் உரி நாவலே மனத்தை ஆக்கிரமித்திருந்தது என்பேன்.🙏🏻

மூன்றாவது நாள் வாசிப்பு அனுபவத்தை எழுதும்போதே ஒன்று புரிந்தது. இது வெறும் கதை மட்டும் அல்ல, சிந்தையைச் செம்மையாக்கும் செறிவான கருத்துகளைக் கொண்ட செவ்வியல் நாவல். இதில் அகத்தை நிறைக்கும் நற்சொற்கள் நாள்தோறும் வெளிவருகின்றன. எனவே, அவற்றை எனது குறிப்பேட்டிலும் மனத்திலும் தொடர்ந்து பதிவு செய்திட உறுதி கொண்டேன். அதன்படியே செயல்பட்டேன்..

ஓரிரு நாள்களிலேயே, எனது உரி வாசிப்பு அனுபவக் கடிதங்கள் அதற்குரிய வடிவத்தைப் பெற்றுக் கொண்டன. ஒவ்வொரு நாளும் வாசிப்பு அனுபவக் கடிதங்கள் – மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.

முதல் பகுதி, என் அகத்தை நிறைத்த சொற்களின் வரிசையாக இருந்தன. இரண்டாம் பகுதியில், அன்றைய அத்தியாயத்தின் சுருக்கத்தை, மூன்றில் ஒரு பங்காக மாற்றி எனது சொற்களில் தொகுத்துக் கொண்டேன். மூன்றாவது பகுதியில், அந்த அத்தியாயத்தில் என்னைக் கவர்ந்த காட்சிகள், உரையாடல்கள், அவை ஏற்படுத்திய தாக்கங்கள், எனக்குள் தேடலை உருவாக்கிய புள்ளிகள், எனது சந்தேகங்கள் என அனைத்தையும் குறிப்பிட்டுப் பகிர்ந்து கொண்டேன்.

இதோ 190 அத்தியாயங்கள் நிறைவு. ஆசிரியருக்குத் தொடர்ச்சியாக 190 மின்னஞ்சல் கடிதங்கள். மனத்திற்குள் ஒரு சின்ன நிறைவு. நன்றி சார் 🙏🏻.

இடையில் நிசும்பசூதனி ஆலயத்தையும், கருவூரார் சன்னதியையும் கண்டுவரச் சொல்லி ‘உரி’ ஆணையிட்டதாகப் புரிந்து கொண்டேன். அதன் காரணமாக இரண்டு முறை தஞ்சைக்குச் சென்று வந்தேன். சார்வாகன் தியானத்தின் வழியாக அன்னையைக் கண்டடைந்த ஆலயத்திற்கும், கருவூரார் சன்னதிக்கும் சென்று வந்தது பெரும் மனத் திறப்பை உருவாக்கின. அதற்கும் நன்றி சார் 🙏🏻.

‘உரி’ நாவல் என்ன செய்தது? எங்களது சிந்தனையின் மீட்சிக்கும், விரிவுக்கும் வழிகாட்டியது. எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், தொடர்ந்து விரல் பிடித்து அழைத்துச் சென்றது. இன்னும் இன்னும் நிறையச் சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக, வாசகர்களின் சார்பாக நன்றியைத் தெரிவிப்பது இப்போதைய உடனடிக் கடமையாகும்.

தங்களுக்கு ‘உரி’யைக் காட்டிய குருவுக்கும், எங்களுக்கு ‘உரி’யைக் கொடுத்த தங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சார்.

சொல் ஒன்று கதை சொல்ல, உண்மைச் சொற்களை மட்டுமே சிரம் மேல் கொண்ட கதை நாயகன், சொல்லையே குருவென ஏற்றுக்கொள்கிறான். அதன்வழி தக்கன பிழைக்கும் என்பதால், ‘உரி’யும் எந்நாளும் நிலைக்கும்.

நன்றியுடன்
வளநாடு சேசு.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி