அன்பின் பாரா,
வணக்கம். உரி எழுதி முடித்ததற்கு வாழ்த்துக்கள். உங்களுடைய அளவில் சிறிய நாவல்களான புவியிலோரிடம், பூனைக்கதை போன்றவற்றைப் படித்திருக்கிறேன். அவைகளை நீங்கள் நேரடி புத்தகமாகதான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் ஏன் பெரிய நாவல்களான யதி, சலம், இப்போது உரி போன்றவைகளை தினசரி தொடர்களாக வெளியிடுகிறீர்கள்?
பாஸ்கர் மாரிமுத்து, கத்தார்
__
நாவல் என்று முடிவு செய்து எழுத அமரும்போது இது பெரிதாக வருமா, சிறிதாக முடியுமா என்று நிச்சயமாகத் தெரியாது. அடுத்தடுத்த அத்தியாயங்களே வேறு வேறு அளவுகளில் வந்திருப்பதைக் கண்டிருப்பீர்கள். தொடர்கதைகளுக்கும் நாவலுக்கும் உள்ள அடிப்படை முரண் இதிலிருந்தே தொடங்குகிறது. கதைகளைத் திட்டமிட முடியும். ஆணி அடித்தாற்போல ஓரிடத்தில் நிலைபெறச் செய்ய முடியும்; செய்தும் இருக்கிறேன். நாவல்கள் எழுதும்போது அது சாத்தியமில்லை. அது இழுத்துச் செல்லும் வழியில் அடிமை போலப் பின்னால் செல்வதொன்றே எழுதுபவன் செய்யக் கூடியது. இதனால்தான் வாரப் பத்திரிகைகள் வாழ்ந்த காலத்தில் நாவல்களை வெளியிட்டதில்லை. அவற்றுக்கென எழுதப்படும் தொடர்கதைகளே வெளியாகும். நானறிந்து வாரப் பத்திரிகைத் தொடர்களாக வெற்றிகரமாக நாவல் எழுதியவர்கள் இருவர் மட்டுமே. அசோகமித்திரன் (சாவியில் மானசரோவர்), பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்). ஜானகிராமனின் நாவல்களுள் பல தொடர்களாக எழுதப்பட்டவையே. ஆனால் அவை மாதத் தொடர்கள். ஜெயமோகனின் இணையத்தளத்தை நீங்கள் ஒரு நாளிதழாகக் கருதிக்கொள்ள முடியுமென்றால் அவரும் இவ்வகையில் இணைபவர்தாம்.
ஜந்து, மிருது போன்ற நாவல்களை நான் தினமொரு அத்தியாயமாக வாட்சப் சேனலில்தான் எழுதினேன். அவை சிறிய நாவல்களே. ஆனால் உரி போன்ற நாவல்கள் மனத்தில் கருக்கொள்ளும்போதே அதன் நீள அகலங்கள் ஓரளவு புலப்பட்டுவிடும். எழுதும்போது பெரும்பாலும் நமக்குப் புலப்பட்டதினும் விரிந்துதான் செல்லுமே தவிர, சுருங்க வாய்ப்பில்லை. இது நாவல் என்னும் கலை வடிவத்துக்கே உரிய தனிக் குணம்.
தினசரித் தொடர்களாக இவற்றை வெளியிடுவது ஒரு பாதுகாப்புக் காரணத்துக்காகச் செய்வதுதான். அந்த ‘கமிட்மென்ட்டை’ எழுத்தொழுக்கம் என்று வரையறை செய்வேன். அவ்வொழுக்கம் கூடினாலொழிய ஒரு நாவல் எழுதி முடிக்கப்படாது. அப்படியே முடிந்தாலும் நன்றாயிராது. ஒவ்வொரு நாளும் எழுத வேண்டுமென்பது ஒரு கட்டாயமாக்கப்படும்போது, நாவலின் மொழி ஒரு சுருதியில் இழுத்துக் கட்டப்பட்டுத் தளர்வுறாமல் நிற்கும். இடைவெளி விட்டு விட்டும் எழுத முடியும்தான். சுருதி மாறிப் போக அதில் வாய்ப்புண்டு என்பதால் அதிலெல்லாம் நான் விஷப் பரீட்சை செய்வதில்லை.
ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுத அமரும்போது என் சொற்கள் எனக்கெதிரே அணி வகுத்து நிற்கும். இடம் மாறியோ, நேரம் மாறியோ எழுதப் புகும்போதும் சிரமப்படுவேன். இதெல்லாம் பொருளற்ற கிறுக்குத்தனம் என்று அவ்வப்போது தோன்றும். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. என்னால் இப்படி இருந்தால்தான் எதையும் எண்ணிய விதமாகச் செய்து முடிக்க முடிகிறது.
கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் உரியின் முதல் அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தேன். நவம்பர் 4 ஆம் தேதி எழுதிய அத்தியாயம் வரை வீட்டில் உள்ள என்னுடைய படிப்பறையில், என் மேசையில்தான் எழுதினேன். ஆனால் ஐந்தாம் தேதி இறுதி அத்தியாயத்தை எழுத வேண்டிய நேரத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள என் அலுவலகத்தில் இருந்தேன். வேறு வழியே இன்றி அங்கே அமர்ந்து எழுத ஆரம்பித்தேன். எப்படியும் பிசிறுகள் இருக்கும்; வீட்டுக்குப் போய் சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்துத்தான் எழுதினேன். எழுதி முடித்து என் மனைவிக்கு அனுப்பியபோது, சொல்லி வைத்தாற்போல இது சரியில்லை, அது சரியில்லை என்று நான்கைந்து குறைகளைச் சுட்டிக் காட்டித் திருப்பி எழுதச் சொன்னாள். அந்நொடியே அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். அங்குள்ள என் அறை, என் மேசை. அதில் அமர்ந்துதான் எழுதி நிறைவு செய்தேன்.
என்னுடைய அலுவலகம்தான். அங்குள்ளதும் என் மேசை நாற்காலிதான். தொந்தரவு செய்ய யாருமற்ற முழுத் தனிமை வசதி அங்கே எனக்குண்டு. ஆயினும் நாவலின் முதல் அத்தியாயத்தை எங்கே தொடங்கினேனோ, அங்கேயேதான் எழுதி முடிக்க வேண்டியிருந்தது.
தினசரித் தொடர் என்பது என்மீது நானே விரும்பித் திணித்துக்கொள்ளும் கட்டாயம். அது இருந்தால் நான் ஒழுங்காக வேலை செய்வேன். இல்லாவிட்டாலும் செய்வேன் என்றாலும் இந்தளவுக்கு ஒழுக்கம் கூடும் என்று சொல்ல முடியாது.
பெரும்பணிகள் பாதியில் தடைப்பட்டுவிடாதிருக்க இத்தகைய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அவசியம். எழுத்துக்கு மிகவுமே அவசியம். என் கணினியில் பாதி வளர்ந்து நிற்கும் நாவல்கள் சில உள்ளன. அவை அனைத்துமே நாள்தோறும் எழுதவேண்டிய கட்டுப்பாட்டினை விதித்துக்கொள்ளாமல் ஆரம்பிக்கப்பட்டவை என்பதை நினைவுகூர்கிறேன். எனக்கு இப்படி இருப்பதுதான் வசதி.


