பொதுவாக, எழுதுதல் என்னும் செயலுக்கு நான் அதிக நேரம் எடுக்க மாட்டேன். ஆனால் எழுதுவதற்கு முன் என்னைத் தயாரித்துக்கொள்ள மிக அதிக நேரமாகும். இதனாலேயே பெரும்பாலும் இரவுகளில் மட்டுமே எழுதுவது வழக்கமாக இருந்தது. இரவுணவுக்குப் பிறகு அமர்ந்தால் நள்ளிரவுவரை எழுதுவேன். பிறகு உறங்கி எழுந்தால், அப்போது தொடங்கி மீண்டும் இரவு எழுத அமரும்வரை தயாரிப்புப் பணிகளை மட்டுமே செய்வேன்.
இதில் ஓர் அற்ப மகிழ்ச்சி எனக்குண்டு. நாள் முழுதும் என்னைக் காண்பவர்கள் நான் எப்போதும் வெட்டியாக இருப்பதாகவே நினைப்பார்கள். போதாக் குறைக்குப் பகலில் இரண்டு மணி நேரம் தூங்கும் வழக்கமும் உண்டென்பதால் முழுச் சோம்பேறி, வெறும்பயல், வீணன் என்று கருதாதிருக்கவே முடியாது.
உண்மையில் நான் வேறு, என் சிந்தை வேறு. நான் என்று நீங்கள் காணும் நபர் ஒரு கல்லைப போல அசையாது கிடந்தாலும் உள்ளுக்குள் ஓயாத மின்னோட்டமொன்று எப்போதும் இருக்கும். அது அன்றன்றைக்கு எழுத வேண்டிய அத்தியாயத்தைச் சிந்திக்கும். அதற்குத் தேவைப்படும் ஆதாரங்களைத் தொகுக்கும். தரவுகளைப் புனைவினுள் பொதிக்கும் வழி தேடும். அப்பணி முடிந்த பிறகு மொழியை தியானம் செய்யும். அந்தந்த அத்தியாயத்தின் சுருதியும் முழு நாவலின் சுருதியும் எப்படியும் வேறு வேறாகத்தான் இருக்கும். அது படிப்பவர்க்குப் புலப்படாமல் ஒற்றைச் சுருதியில் ஒருங்கிணைக்கும் பணியை ஓயாது மேற்கொள்ளும்.
இவ்வளவையும் செய்து முடித்துவிட்டு எழுத அமர இரவாகிவிடும். இவ்வளவு தயாரிப்புக்குப் பிறகும் எண்ணி வைத்தது ஒன்றாகவும் எழுதுவது வேறொன்றாகவும் வரும். அது சிக்கலில்லை என்றாலும் அந்தத் தயாரிப்பில்லாமல் என்னால் ஒரு சொல்லைக் கூட எழுத இயலாது.
ஆனால் உரியை எழுதத் தொடங்கியதில் இருந்து என் நடவடிக்கைகள் தலைகீழ் மாற்றம் கண்டன. பெரும்பாலான அத்தியாயங்களை அதிகாலைகளில் மட்டுமே எழுதியிருக்கிறேன். ஆனால், அதுவே வழக்கமாகிவிடாமல் சில அத்தியாயங்களைப் பகலிலும் சிலவற்றைப் பழைய வழக்கப்படி இரவிலும் எழுதியிருக்கிறேன். ஆனால் இதனை எழுதிக்கொண்டிருந்த நாள்களில் (இன்று இருநூற்றைம்பதாவது நாள்.) இதைத் தவிர இன்னொரு பணி என ஒன்றைச் செய்யவில்லை. எனவே சுய இடையூறுகளுக்கு இடமே இல்லாது போய்விட்டது. இரவு என்றும் பகலென்றும் பிரித்துப் பார்க்கத் தோன்றாமல், விழித்திருக்கும் பொழுதெல்லாம் இதிலேயே வாழ்வதால் இது சாத்தியமானது.
மற்ற நாவல்களின்போது இல்லாத சிக்கலொன்று உரியில் இருந்தது. கல்வெட்டுகள் படிப்பது. நான் சரித்திர ஆய்வாளனோ கல்வெட்டு ஆய்வாளனோ, குறைந்தபட்சம் அவ்வியலில் விருப்பம் உள்ளவனோ அல்லன். சரித்திரமும் அரசியலும் சாமானியனுக்கு சாமானியனின் மொழியிலேயே சொல்லப்பட வேண்டுமென்ற எண்ணம் கொண்டவன். எனவே இன்றைய சாமானியனான எனக்கு அன்றைய சாமானியனின் மொழியிலேயே எழுதப்பட்டிருந்தாலும் கல்வெட்டு எழுத்துகள் அந்நியமானவையே. ஆய்வாளர்களின் விளக்கமெல்லாம் இன்றைக்கு எளிதாகக் கிடைக்கின்றன என்றபோதும் பெரும்பாலும் நான் மூலத்தையே நாடுவேன். அதுதான் சிக்கல் இல்லாதது. வாட்சப் சேனலில் எழுதும் குறளும் பொருளும் வரை இதைத்தான் கடைப்பிடிக்கிறேன். குறளைப் படித்துவிட்டு எனக்குத் தோன்றும் பொருளை எழுதி வைத்துவிடுவது. பிறகு மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு நான் எழுதியதைச் சுருக்கிப் பொருள் விளங்கச் செய்துவிட்டுப் பிரசுரித்துவிடுவேன்.
கல்வெட்டுகள் என்பவை ஒரு காலகட்டத்தின் சரித்திரத்தைப் பேசுபவை. பெரும்பாலும் மன்னர்களால் நேரடியாக விவரிக்கப்பட்டு, ஓலை நாயகர்களால் மொழியாக்கம் பெற்று, கற்கலைஞர்களால் செதுக்கப்பட்டவை. செதுக்கிய பிறகு பிழை திருத்தத்துக்கு வழியில்லை என்பதால் ஓலையில் எழுதும்போதே மிகத் துல்லியமான தரவுகளைத் தந்துவிடுவார்கள். (அதில் நேர்ந்த சில பிசகுகளே சரித்திர ஆராய்ச்சியாளர்களின் பிற்கால மோதல்களுக்கு வழி வகுத்தன.)
உண்மையில் அது ஒரு சுவாரசியமான இயலாகத்தான் இருக்க வேண்டும். என்னவோ என் மன அமைப்புக்கு அது சரிப்பட்டு வந்ததேயில்லை. எனவே கல்வெட்டுகளைப் படிக்க அதிக நேரம் எடுக்கிறது. பிறகு படித்ததை என் மொழியில் எழுதி வைக்கும் பணி. எதை எதை எங்கே இணைக்க வேண்டுமென்கிற திட்டம். எல்லா திட்டங்களையும் தகர்ப்பதுதான் நாவல் கலையின் சாகசம் என்றபோதும் திட்டமின்றிச் செயலில்லை.
இன்றைக்குச் சில தன்னார்வலர்கள் செய்து வைத்திருக்கும் வசதியால் தமிழி வடிவங்களையும் வட்டெழுத்து வடிவங்களையும் நொடிப் பொழுதில் இன்றைய தமிழுக்கு மாற்றிப் படித்துக்கொள்ள முடிவது வரம்தான். இதுவும் இல்லாவிட்டால் மிகவும் சிரமப்பட்டிருப்பேன்.
இன்னொன்று, இந்நாவலுக்காகத்தான் மிக அதிகப் பயணங்களை மேற்கொள்ள நேர்ந்தது. எங்கெங்கு சென்றேன், எத்தனை முறை சென்றேன் என்பதெல்லாம் பொருட்டே அல்ல. மொத்த நேரத்தையும் இதற்கே அளித்ததால்தான் இவையெல்லாம் முடிந்தன.
தமிழ்நாட்டில் ஆன்மிகம் தழைத்ததினும் பக்தி இயக்கம் ஆழமாக வேரூன்றியதன் தோற்றுவாய் இராஜராஜ சோழனின் காலத்தில் உள்ளது. அதை ஏன் அவன் அவ்வளவு முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்தான் என்பதற்குப் பின்னால் இருந்த சமூகத் தேவையும் தொலைநோக்கும் படித்துப் பார்த்தால் யாரையும் திகைப்படைய வைக்கும். பெரும்பான்மைத் தமிழர்களின் இன்றைய மதச்சார்பற்ற மனப்பான்மைக்கு வித்திட்டதும் அக்காலமே. எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாமென்று இன்று பெரிதாகப் பேசப்படும் விஷயத்தை முதல் முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவன் இராஜராஜன். தாந்திரிக வழியிலான நரபலிகள், அதனை நிகர்த்த பிற மூடச் செயல்கள் வட மாநிலங்களில் இன்றும் புழக்கத்தில் உள்ளதை அவ்வப்போது வருகிற செய்திகளின் மூலம் அறிகிறோம். தமிழ்நாட்டில் அவையெல்லாம் அறவே ஒழிந்தது அவனது காலத்தில்தான்.
இராஜராஜன் திட்டமிட்டுத்தான் இவற்றையெல்லாம் செய்திருக்கிறான். ஆனால் எந்தத் தரப்பின் விமரிசனத்துக்கும் அவதூறுக்கும் தூற்றலுக்கும் இலக்காகாமல், மிகவும் சாமர்த்தியமாக, ஏற்கெனவே இருந்த சட்டகங்களைக் கலைக்காமலேயே காணாமலாக்கியிருக்கிறான். தமிழ்நாடு என்றில்லை. இந்தியத் துணைக்கண்டத்திலேயே இத்தனை அறிவுச் செழுமை மிக்க இன்னொரு மன்னன் இருந்திருப்பானா என்பது சந்தேகமே.
என் வியப்பெல்லாம் இம்மன்னன் செய்துள்ள இத்தகைய உண்மையான சாகசங்களை எந்தச் சரித்திரக் கதாசிரியரும் எப்படி எழுதாமலே விட்டார்கள் என்பதுதான். எழுதலாம் என்று முடிவு செய்தபோது நான் வகுத்துக்கொண்ட விதி, இது நிச்சயமாகச் சரித்திர நாவலாகிவிடக் கூடாது என்பது.
இன்று 171 ஆவது அத்தியாயத்தை எழுதி முடித்தேன். இதுவரை ஒரு காட்சியிலும் இராஜராஜன் என்கிற மன்னன் நேரில் தோன்றவில்லை. ஆனால் அனைத்து அத்தியாயங்களிலும் அவனேதான் நிறைந்திருக்கிறான்.


