கார்த்திகை ஒளித் திருநாளான இன்று உரியின் முகப்போவியம் வெளியிடப்படுகிறது. எப்போதும் செய்வதுதான். எளிய சடங்குதான். ஆயினும் இந்நொடி மனத்தில் நிறைந்து பரவும் உணர்ச்சிகளை நிதானமாக உற்று நோக்க முயற்சி செய்கிறேன்.
2011 ஆம் ஆண்டு என்று நினைவிருக்கிறது. மாதம், தேதி நினைவில்லை. என்றோ ஒருநாள் உறங்கி எழுந்த நேரத்தில் ஒரு பெரும் நாவலுக்கான வித்து மனத்தில் விழுந்தது. தோன்றியபோதே அது ஒரு நாவல் அல்ல; மூன்று தனித்தனி நாவல்கள் என்றும் தோன்றியது. ஆனால் இந்திய நிலப்பரப்பில் மூவாயிரமாண்டு காலப் பரப்பில் வேறு வேறு கட்டங்களில் நிகழும் சம்பவங்கள் தம்மியல்பில் ஒன்றுடன் ஒன்று தோன்றாப் பிணைப்பினைக் கொள்ளுமென்று அப்போது தெரியாது. அவை இந்தியாவின் வேத மரபு, சித்தர் மரபு, தாந்திரிக மரபு, சன்னியாச மரபுகளின் தன்மைகளையே முற்றிலும் தன் அகமாகவும் முகமாகவும் ஏந்தித் திகழுமென்று தெரியாது. புவியினடியில் ஓடி மறைந்த சரஸ்வதியினின்று புலப்படாத ஊற்றுக் கண்ணொன்று திறந்து ஒரு சொட்டு நீர் வெளிப்பட்டுச் சிந்தையைத் தொட்டு நிறைத்தது. அக்கணத்தில் ஒடுங்கிப் போனேன். அது உள்ளும் புறமும் ஒன்றாக நிகழ்ந்த ஒடுக்கம்.
அதற்கு முன்பு நிறைய ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன். திரைப்படங்கள் பார்த்தேன். நண்பர்களைச் சந்தித்தேன். கிடைத்த அனைத்தையும் படித்தேன். அனைத்தினும் முக்கியமாக எப்போதும் விண்ணேவத் தயார் நிலையில் இருக்கும் ஒரு கலத்தினைப் போலவே இருந்தேன். எல்லாம், எல்லாமே ஒரு மாயம் போல அடங்கி ஒடுங்கிப் போய்விட்டன. முன்பிருந்த நானில் இருந்து ஒவ்வோர் உறுப்பாக உதிரத் தொடங்கியதை விழிப்புடன் கவனித்தேன். எப்போதும் இந்நாவல்களையே சிந்திக்க ஆரம்பித்தேன். இதற்காக மட்டுமே பயிலவும் படிக்கவும் தொடங்கினேன். இடையில் எழுதிய பிற அனைத்தும்கூட இவற்றுக்கான மொழி சார்ந்த பயிற்சிகளாகவே அமைந்ததை நினைவுகூர முடிகிறது. அல்லது தாற்காலிக ஓய்வுக்குத் தேர்ந்தெடுத்த திண்ணைகளாக.
சலத்தை முதலாகவும் உரியை அடுத்தும் யதியை இறுதியாகவும் எழுத முடிவு செய்தது நான்தான். ஆனால் யதி முதலில் வந்ததன் காரணம் தெரியாது. சலம் அடுத்து வந்ததற்கும் உரி இறுதியாக இப்போது வருவதற்கும்கூடக் காரணம் அறியேன். இது இவ்வாறாக நிகழ வேண்டுமென்று எது விரும்பியதோ, அது தன் எண்ணப்படி நிகழ்த்திக்கொண்டது என்பதற்கு அப்பால் வேறு காரணம் புலப்படவில்லை.
எண்ணிய விதமாக உரியை இப்போது எழுதி நிறைவு செய்ய முடிந்தது என்பது அளிக்கும் நிம்மதி உணர்ச்சி விவரிப்புக்கு அப்பாற்பட்டது. சலம், யதியைக் காட்டிலும் இந்நாவல் அளவில் சற்றுப் பெரியதுதான். இதற்கான ஆய்வுப் பணிகளே மற்ற இரண்டைக் காட்டிலும் அதிக காலம் எடுத்தது. எழுதிக்கொண்டிருந்த ஓராண்டு காலமும் இதைத் தவிர இன்னொரு சிந்தனையே இல்லாதிருந்தேன்.
இது தேர் நிலைக்கு வரும் நேரம். உரியில் ஒரு வரி வரும். //ஒன்றுமில்லாமையின் பூரணம் என்பது ஒரு சிசு பிறந்த பின்பு தாயின் கருப்பைக்கு நிகழும் சுருக்கம் நிகர்த்தது.// அதைத்தான் இப்போது உணர்கிறேன்.
இன்னும் சில மணி நேரத்தில் ராம்ஜி உரியின் முகப்போவியத்தை வெளியிடுவார். இதர விவரங்கள் அனைத்தும் இன்று மாலை வெளியாகும்.
அனைவருக்கும் நன்றி. அனைத்துக்கும் நன்றி.


