நன்றிக்குரியவர்கள்

பெரும்பணிகளில் தொடக்கம் முதல் இறுதி வரை உடனிருப்போர் ஏதோ ஒரு கட்டத்தில் இணைச் செயல்பாட்டாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆனால் அப்படி நீடித்து உடன் வருவது மிகவும் சிரமம்.

உரியில் அப்படி என்னோடு தொடக்கம் முதல் உடனிருந்தவர்கள் சிலர் உண்டு. தஞ்சாவூர் சரவணன் பாலாஜி. பாபநாசம் நடராஜன். வளநாடு சே. சுப்பிரமணியன், கும்பகோணம் அப்துல் காதர். தர்ஷனா கார்த்திகேயன்.

இவர்களுள் தஞ்சாவூர் சரவணனைத் தவிர மற்ற அனைவரும் நாள்தோறும் நான் எழுத எழுத உடனுக்குடன் படித்து, தமது கருத்துகளை மதிப்புரையாக எழுதி வந்தவர்கள். வேறு பலரும் மதிப்புரை எழுதத் தொடங்கினார்கள் என்றாலும் பாதியில் மூச்சிறைத்து நின்றுவிட்டார்கள். அது நிகழக் கூடியதுதான். அன்றாட வாழ்வின் நிர்ப்பந்தங்களைப் புறந்தள்ளி, எடுத்துக்கொண்ட பணியை நிறைவேற்றியே தீர்வது என்கிற வைராக்கியம் சிலருக்கே கூடும். செயலை யோகமாக்குவது அதுவே.

மேற்சொன்னவர்களுள் சரவணன் மதிப்புரை என்று ஏதும் எழுதவில்லையே தவிர, நாள்தோறும் படித்தார். அவ்வப்போது கருத்துச் சொன்னார். இந்நாவலுக்காக நான் மேற்கொண்ட ஆய்வின்போது, தஞ்சைப் பயணங்களின்போது உடனிருந்தார். நிழலாக என்னைத் தொடர்ந்துகொண்டே இருந்தவர் அவர்.

தர்ஷனா என்னுடைய மாணவி. நாள்தோறும் நான் எழுதுவதை ஒரு கணக்கு டீச்சர் போலப் படித்து வந்தவர் அவர். எங்கே இடறினாலும், எங்கெல்லாம் குழப்பம் ஏற்பட்டாலும், எங்கெல்லாம் விவரக் குறைபாடு தென்பட்டாலும் உடனுக்குடன் எடுத்துச் சொல்வார். அவரால் ஏற்கவியலாத கட்டங்கள் வரும்போதெல்லாம் உக்கிரமாகச் சண்டை போடுவார். எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் சிறிய சொற்றொடர்களின் முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துவேன். ஆனால் இந்நாவலின் பல இடங்களில் நீண்ட, மிக நீண்ட சொற்றொடர்கள் இடம் பெற்றன. தர்ஷனாவால் ஏற்கவே முடியாதது அதுவாகத்தான் இருந்தது. நாமே உருவாக்கும் சட்டகங்களையும் நாமே மீறும்படிச் செய்வதே நாவல் எழுத்தின் வசீகரம். அதைத் தவிர்க்கவே முடியாது. இடையில் உடைபடாத நீண்ட சொற்றொடர்கள் நாவலின் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் உண்டாக்கி நிறைக்கும் இசையைக் கூர்ந்து கேட்க முடியுமானால் அத்தகைய சொற்றொடர்களின் இன்றியமையாமை பிடிபட்டுவிடும். தர்ஷனா நிச்சயமாக ஒருநாள் நாவல் எழுதுவார். அன்றைக்குத் தான் போட்ட சண்டைகளை எண்ணி நாணமுறுவார். அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

இந்நாவலுக்கான ஆய்வின்போது நான் மிகவும் சிரமப்பட்டதும் மீளவே முடியாதோ என்று அஞ்சும்படியாகக் குழப்பமடைந்ததும் ஒரு கோயிலைக் கட்டியெழுப்பிக் குட முழுக்கு நடத்தும் நடைமுறைகள் சார்ந்தது. ஆகம-நிகம விவரங்கள் சார்ந்தது. பிரதிஷ்டை – பிராணப் பிரதிஷ்டைச் சடங்குகள் சார்ந்தது. மூல விக்கிரகங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் திசைக் காவல் கடவுள்களுக்குமான பிரத்தியேகச் சடங்குகள் சார்ந்தது. பழனி உள்பட அநேகமாக அனைத்துக் கோயில்களையுமே நிர்வாகக் காரணங்கள் கருதி இன்று ஆகம வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால் தஞ்சைப் பெரீய கோயில் உருவாக்கத்தின் பின்னணியில் கருவூர்ச் சித்தர்தான் இருந்திருக்கிறார் என்னும்பட்சத்தில் ஆகமத்துக்கு அங்கே இடமே கிடையாது. குட முழுக்கு என்ற ஒன்றன் தேவையும் கிடையாது. ஊருக்காகவும் உலகுக்காகவும் இராஜராஜன் அப்படியொரு சடங்கை நடத்தியிருக்கலாம் என்றாலும் கருவூராரே அதையும் நடத்தித் தந்திருக்கலாம் என்றாலும், அக்கோயில் நிகம முறைப்படி உருவாக்கப்பட்டதுதான். ஆயிரமாண்டுகளில் எவ்வளவோ மாறும். இதுவும் மாறிவிட்டது.

சுவாமி ஓம்காருடன் அவர் கட்டிய ஆலய முகப்பில்.

ஆனால் நாவலில் அந்தக் கட்டத்தை எழுதும்போது ஒரு சித்தரின் சிந்தை குவிந்து உருவான பேராலயத்தின் சிறப்பினைத் தற்கால நடைமுறையைக் கொண்டு விவரித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். இவ்விஷயத்தில் என்னைப் பூரணமாகத் தெளிவித்தவர் சுவாமி ஓம்கார். ஆகம-நிகம முறைகளின் வேறுபாட்டினையும் இரண்டின் நடைமுறைகளையும் எனக்கு விளங்கச் செய்தவர் அவர்தாம். கோவையை அடுத்த ஆனைகட்டியில் உள்ள அவரது பிரணவ பீடத்தில் வேதகால முறைப்படி அவரே எழுப்பியுள்ள ஆலயத்துக்குச் சென்றபோது எனக்கேற்பட்ட உணர்வெழுச்சியை விவரிக்கவே இயலாது. வடக்குப் பொய்கை நல்லூருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பெறும் உணர்வெழுச்சிக்குச் சற்றும் குறையாதது அது.

தனித்தனி நறுக்குகளாக, நூற்றுக்கணக்கான டெக்ஸ்ட் கோப்புகளாகத்தான் இதனை எழுதினேன். என்னால் மைக்ரோசாஃப்ட் வேர்ட், கூகுள் டாக்ஸ் போன்ற செயலிகளில் எழுத முடியாது. அலங்காரங்களுக்குச் சிறிதும் இடமில்லாத டெக்ஸ்ட் கோப்புகளாக எழுதிச் சேமித்திருந்தவற்றை நொடிப் பொழுதில் ஒரே docx கோப்பாக, chapter break, தானியங்கிப் பொருளடக்கப் பக்கத்துடன் வடிவமைத்துத் தரும் மென்பொருள் ஒன்றை என் மகள் பாரதி எனக்காக எழுதித் தந்தாள். ஒவ்வொரு நாவலை எழுதி முடித்து, எடிட் செய்ததும் ஒவ்வோர் அத்தியாயக் கோப்பையும் திறந்து காப்பி செய்து, அதை ஒரு ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் பேஸ்ட் செய்து, அத்தியாய பிரேக் விட்டு, தலைப்புகளை ஒழுங்கு செய்து பதிப்பகத்துக்கு அனுப்புவது ஒரு பெரும் வாதையாக இருக்கும். இம்முறை அது எனக்கு இல்லாமல் போகிறது.

இறுதியாக என் மனைவி. இந்நாவலின் முதல் வாசகி அவளே. நாள்தோறும் மெட்ராஸ் பேப்பரில் நேரம் தவறாமல் இது வெளியாகக் காரணமும் அவளே. எண்ணிப் பார்த்தால் அது ஒரு பெரிய விஷயமே அல்ல. இந்தப் பத்து மாத காலமும் கிட்டத்தட்ட பித்தனாகவே திரிந்த ஒருவனை வீட்டில் வைத்துச் சோறு போட்டுச் சமாளித்ததே அவளது பெரும் சாதனை. எப்போது நாவல் எழுதத் தொடங்கினாலும் சில பிரத்தியேகக் கிறுக்குத்தனங்கள் எங்கிருந்தோ வந்து இணைந்துகொள்வது வழக்கம்தான். இம்முறை அது சற்று அதிகம்.

அனைவருக்கும், அனைத்துக்கும் நன்றி.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி