பேயோன் 1000

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ் ட்விட்டர்வாசிகள் எல்லோருக்கும் தெரியும். சிற்றிதழ்களாலும் பேரிதழ்களாலும் கைவிடப்பட்ட ஓர் இலக்கிய நிராயுதபாணி என்று நண்பரொருவர் சொன்னார்.

எத்தனை அபத்தம் இது. பேயோனின் எழுத்தை வாசிக்க நேரும் எந்த ஓர் எடிட்டரும் துள்ளிக் குதித்து அள்ளிக்கொள்ளாதிருக்க வாய்ப்பே இல்லை. சுய எள்ளல் போர்வையில் அவரே சொல்லிக்கொண்டாலும் சந்தேகமின்றி,  சமகால, தனித்துவ எழுத்துதான் அவருடையது. சந்தேகமில்லை.

பேயோனின் பலம் அவரது அபாரமான நகைச்சுவை உணர்வில் உள்ளது. பலநாள் அலுவலகத்தில் வேலைக்கிடையே அவரது சில 140 கேரக்டர்களை வாசித்துவிட்டு என்னையறியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்திருக்கிறேன். சாலையில் செல்லும்போது, டாய்லெட்டில் இருக்கும்போது, கடைகளுக்குச் செல்லும்போது, ஏதாவது மீட்டிங்குகளில் இருக்கும்போது சற்றும் எதிர்பாராவிதமாக அவரது ட்வீட்களில் என்னவாவது ஒன்று நினைவுக்கு வந்து தொலைத்துவிடும். சூழல் மறந்த வெடிச்சிரிப்பைத் தவிர்க்க முடிந்ததில்லை.

நகைச்சுவை என்பது ஜோக்குகள் மட்டுமே என்றாகிவிட்ட சூழலில் பேயோனின் நகைச்சுவை, வாழ்வின், படைப்பின், தத்துவங்களின், மனித மனங்களின் சில வினோதப் புள்ளிகளை உறையச் செய்து எடுத்துக் காட்சிப்படுத்துவதாக அமைந்திருப்பதனாலேயே இதனை ரசிப்பதற்கு ஒரு தனித்துவமான தகுதி தேவைப்படுகிறது. அசோகமித்திரனின் பழைய சிறுகதைகள் சிலவற்றில் இதே ரக நகைச்சுவையை வேறு விதத்தில் நாம் காண இயலும். ஆனால் பேயொனின் எழுத்து அசோகமித்திரனுடன் ஒப்பிடக்கூடியதல்ல. அசோகமித்திரனுக்கு அவரது கதைகளில் வரக்கூடிய நகைச்சுவைக் கட்டங்களின் நோக்கம், நகைச்சுவையாக ஒருபோதும் இருந்ததில்லை. பேயோன் அப்படியல்ல. சற்றே அங்கதமாக்க வேண்டிவந்தாலும் பரவாயில்லை என்று அடித்து ஆடிப் பார்க்கிறவர். தன் மகன் நாத்திகனாகிவிடக்கூடாதென்பதற்காக காம்ப்ளானில் விபூதி கரைத்துக் கொடுக்கக்கூடியவர் வேறெப்படி இருக்க இயலும்?

ட்விட்டரில் தொடக்கத்தில் பேயோனைச் சீண்டுவதற்காகவே நான் சில காரியங்கள் செய்திருக்கிறேன். அவரிடமிருந்து சொற்களைப் பிடுங்குவது ஒன்றே என் நோக்கம். எங்கே சீண்டினால் என்ன பதில் வரும் என்று யூகித்துவைத்துக்கொண்டு சீண்டுவதில் ஓர் ஆனந்தம் எனக்கிருந்தது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் என் யூகங்களை அவர் உடைத்தெறிந்தே வந்திருக்கிறார்.

கொஞ்சமும் கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல், மிகு சொற்கள் கலவாமல், தனது இயல்பான நையாண்டி உணர்ச்சியை விடாமல், அதே சமயம் பொருத்தமான பதில்களைத் தருவதில் அவருக்கு நிகரே சொல்ல இயலாது. அவரை நான் முதலாழ்வார் என்று குறிப்பிட்டதற்காக என்னை சர்ரியலிஸ்ட் என்று அவர் ‘பழித்த’ தருணம் ஒன்றைத்தவிர அவர் பொருட்டு நான் கோபப்பட்டதே இல்லை.

ட்விட்டரில் முதல் நூறு ட்வீட்களை எழுதியவுடனேயே அதை பிடிஎஃப்பாக்கி, ஆரவாரமாக விளம்பரமெல்லாம் செய்து ஒருவழியாக்கியவர் அவர். ஆயிரம் ட்வீட் கடந்த அபூர்வ சிகாமணியாகிவிட்ட பிறகு சும்மா இருக்க இயலுமா?

சென்ற சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் தன்னுடைய ட்விட்டர் தொகுப்புகள் புத்தகமாக வெளிவரப்போகிறது என்று பேயோன் அறிவித்திருந்தார். அவரது வழக்கமான சமகால, தனித்துவ, கவித்துவ கப்ஸா என்று நினைத்தேன். இல்லை. நிஜமாகவே இப்போது பேயோன் 1000 நூல் வெளிவந்திருக்கிறது. அறுபது ரூபாய் விலை. ஆழி பதிப்பக வெளியீடு.

எண்பதுகளின் சிறுபத்திரிகை சகவாசம் பேயோனுக்கு அதிகம் போலிருக்கிறது. குச்சி எழுத்துகளும் குட்டி ஃபாண்டுகளுமாக, ஒரு மாதிரி ஒல்லிப்பிச்சான் வடிவத்தில், தூர இருந்து பார்த்தால் மட்டும் லட்சணமாகத் தெரியும்படி புத்தகம் இருக்கிறது. என்னதான் சமகால, தனித்துவப் படைப்பாளியானாலும் யூனிகோட் லதா ஃபாண்டை எட்டு பாயிண்டில் செட் பண்ணி அப்படியே அச்சுக்குக் கொடுப்பது வாசக விரோத செயல். பேருந்தில், நிறுத்தத்தில், பின் சீட்டில் இருந்தபடியெல்லாம் வாசிக்க இயலாது. பொருந்தி உட்கார்ந்துதான் வாசித்தாக வேண்டும். வாசகர்களை இவ்வாறு வருத்துவது பற்றி எழுதவும் அவரிடம் ஒருசில ட்வீட்கள் இருக்கக்கூடும். அது எதிர்காலத்தில் வரலாம்.

பேயோனைப் பரிச்சயமில்லாதவர்களுக்கு அவரது பேய்மொழிகளிலிருந்து ஒரு சில மாதிரிகள் கீழே:

* இயக்குநர் பியரி பலர்டியு இறந்துவிட்டார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ. அவரைப் பற்றி அறிந்தபின் 2002லேயே அவர் படங்களைப் பார்த்ததுபோல் எழுதவேண்டும்.

* விகடன் என் பத்தியைத் திரும்ப அனுப்பிவிட்டது. தகவல் பிழை ஒன்றுகூட இல்லையாம். எப்படி நடந்தது இந்தத் தவறு?

* யாரையாவது பிடித்து, எப்படியாவது ஒரு இந்தி திரைப்படத்துக்குக் கதை வசனம் பாடல்கள் எழுதிவிட வேண்டும். சாரு நிவேதிதா வயிறெரிவார்.

* பத்தி தொழில்துறைக்கு வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என பேட்டிகளில் தவறாமல் கேட்கிறார்கள். ஜப்பான் சென்று ஜென் துறவி ஆகியிருப்பேன்.

* இந்த பா. ராகவன் சிறுகதைத் தொடக்கத்திற்குத் தன் கதையிலிருந்தே உதாரணம் காட்டிக்கொள்கிறார். என் கதைகளில் முதல்வரியே இல்லையா?

* வெளியே போகிறேன். தெருவில் சிலரைத் தற்செயலாகச் சந்தித்து ட்வீட் செய்ய வேண்டியிருக்கிறது.

* எனக்கு ஜெயமோகனின் சமஸ்கிருதம் புரியாது. கோணங்கியின் சமஸ்கிருதம்தான் புரியும்.

* ரஜினிசார் என்பது ஒரே வார்த்தை. ரஜினி சார் என்று பிரிக்கக்கூடாது.

* ரியாலிடி ஷோவுக்கு வசனமெழுத அழைத்தார்கள். சரி என்று போனால் அருகில் அமர்ந்து ஒவ்வொரு வரிக்கும் திருத்தம் சொல்கிறார்கள். விலகிவிட்டேன்.

* சிபிஐ டைரக்டர் அஸ்வினி குமார் சென்னைக்கு வந்திருக்கிறாராம். துப்பறியும் படங்கள் எடுப்பவராக இருக்கலாம்.

* நாட்டார் தீபாவளி கொண்டாடும் முறையைப் பார்க்க தமிழகத் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறேன். நான் முதலில் பார்த்தவர் வேங்கடசாமி நாட்டார்.

* தொகுதி 2க்கான மேட்டரை நாளை காலைக்குள் தரவேண்டும் என்று ப்ரிண்ட்யுவர்ட்விட்டர்.காம் பதிப்பகத்தினர் கேட்டிருக்கிறார்கள். முடியுமா பார்ப்போம்.

பேயோனுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைத் தமது ட்வீட்களில் அள்ளித் தெளிப்பது அவரது வழக்கம். அதுபுரியாமல் அவரை ஒரு சமகால சக இணையர் என நீங்கள் வரித்துக்கொள்வீரானால் பெரும் சகதியில் விழுபவராவீர்கள்!

பெரும் சகதிக்கு அடிக்குறிப்பு வேண்டுவோர் http://twitter.com/writerpayon ல் தேடிப் பார்க்கவும்.

பி.கு: பேயோனின் ட்வீட் தொகுப்பு அவருடைய இணையத்தளத்தில் பிடிஎஃப்பாகவும் இருக்கிறது. ஆனால் இந்த நூலைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதுதான் ஒரு நல்ல எழுத்தாளனுக்கு நாம் செய்யக்கூடிய மிகக் குறைந்தபட்ச மரியாதை. பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நியூ புக்லேண்ட்ஸில் இருக்கிறது. நான் அங்குதான் வாங்கினேன்.

Share

12 comments

  • உலகசினிமா பார்ப்பதில் ஊறிப்போய்விட்டார் போல – இப்போதெல்லாம் ஆளையே காணோம். ட்விட்டரை சுவாரஸ்யமாக்கியதில் முதல் இடம் இவருக்குதான்.
    ”மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தமிழில் எழுதுகிறார்கள், நான் தமிழை எழுதுகிறேன்” – My alltime Favourite!

  • பேயோனுக்கு ஜெயமோகனுக்குமான ஒற்றுமையை உணர வைத்துவிட்டீர்கள். இருவருடைய எழுத்தையும் தேர்ந்த வாசகனால் மட்டுமே படிக்க முடியும் போலிருக்கிறது!.
     

  • கோயிஞ்சாமி 13, உன் கமெண்டைப் பார்த்தால் பேயோன் ஐயோ எரிந்த்ரா! என்பார்.

  • //கொஞ்சமும் கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல், மிகு சொற்கள் கலவாமல், தனது இயல்பான நையாண்டி உணர்ச்சியை விடாமல், அதே சமயம் பொருத்தமான பதில்களைத் தருவதில் அவருக்கு நிகரே சொல்ல இயலாது//
    அதே எத்தனையோ சீண்டல்கள் மனிதர் கோவப்பட்டு டிவிட்டியது கிடையாது 🙂
    வசீகரித்த பேயோன் டிவிட்களினை நிறையவே கூற இயலும் !
    சமகால இலக்கியத்தில் நிறையவே ஒர்க் பெண்டிங்க்ல இருப்பதால் விடுமுறை விட்டு விட்டு வருகிறார் போலும் :))
     
    விமர்சனத்திற்கு நன்றி
    பேயோன் பேரவை சார்பில்
     

  • //கொஞ்சமும் கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல், மிகு சொற்கள் கலவாமல், தனது இயல்பான நையாண்டி உணர்ச்சியை விடாமல், அதே சமயம் பொருத்தமான பதில்களைத் தருவதில் அவருக்கு நிகரே சொல்ல இயலாது//

    அதே எத்தனையோ சீண்டல்கள் மனிதர் கோவப்பட்டு டிவிட்டியது கிடையாது 🙂

    வசீகரித்த பேயோன் டிவிட்களினை நிறையவே கூற இயலும் !

    சமகால இலக்கியத்தில் நிறையவே ஒர்க் பெண்டிங்க்ல இருப்பதால் விடுமுறை விட்டு விட்டு வருகிறார் போலும் :))

    விமர்சனத்திற்கு நன்றி

    பேயோன் பேரவை சார்பில்

     

  • //பேயோனுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைத் தமது ட்வீட்களில் அள்ளித் தெளிப்பது அவரது வழக்கம். அதுபுரியாமல் அவரை ஒரு சமகால சக இணையர் என நீங்கள் வரித்துக்கொள்வீரானால் பெரும் சகதியில் விழுபவராவீர்கள்!//
     
    ஏதோ சொல்ல வருவதாகவே தோன்றுகிறது :))

  • அவர் ஒப்புக்கொள்ளாமலேயே அவரை எனக்கு குருநாதராக வலிந்து திணித்துக் கொண்டேன்.
    பேயோனாக இருவரை யூகித்திருக்கிறேன் :
    ஒருவர் பதிப்பக முதலாளி.
     மற்றொருவர் தனியார் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் ஒருவர்.
    நிச்சயமாக இந்த இருவரில் ஒருவர்தான் அவர் என்பது என் எண்ணம்.

  • //அவர் ஒப்புக்கொள்ளாமலேயே அவரை எனக்கு குருநாதராக வலிந்து திணித்துக் கொண்டேன்.//
     
    பாவம் நீங்க , உங்களுடைய “அந்த குருநாதர்” போன்றவரல்ல இவர் , 
     
    என்றும் வெளிப்பட மாட்டார் என்றாலும் , வெளிப்பாட்டால் அதிர்ச்சிகுள்ளாவீர் . அப்புறம் தத்துவம் 10002 என புலம்பவேண்டியதுதான்.

  • மதிப்புரைக்கு என்னாலான நன்றிகள். முதல் மதிப்புரையை எழுதி அழியாப்புகழ் தேடிக்கொண்டுவிட்டீர்கள். சிங்கப்பூரிலுள்ள எனது வாசகர்களின் பொதுவான நிதி வசதி பற்றி அறிய ஆவல்…

  • எழுத்தாளர் ’கடுகு’ தான் பேயோன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பதாக ஒரு மூத்த எழுத்தாளர் சொன்னார் யுவ கிருஷ்ணா! உண்மையா என்பது தெரியவில்லை. இருக்கலாம் என்பது என் அனுமானம்.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!