விளையாட்டாக ஆரம்பித்ததுதான். இத்தனை தீவிரமாக வலையுலகம் இதனைப் பரப்பும் என்று நினைக்கவில்லை. விபரீதம் ஏதும் விளையாதிருப்பதற்காக இந்தக் குறிப்பை இங்கே எழுதிவைக்கிறேன்.
சில காலம் முன்னர் பத்ரி தன் வலைப்பதிவில் மிகவும் உக்கிரமாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நீள நீளமான கட்டுரைகளை எதற்கோ நேர்ந்துகொண்டாற்போல தினமொன்றாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தார். சற்றும் தொடர்பில்லாமல் இடையிடையே உலக அரசியல், காந்தியம், கம்யூனிசம், தமிழ் ஈழம் என்று உலகிலுள்ள சகலத்தையும் ஒரு கை பார்த்துவிடுகிற உத்தேசத்துடன் அவரது கட்டுரைகள் எப்போதும்போல் ஒரு பீரங்கியிலிருந்து சீறிப் புறப்பட்ட குண்டுகளாக வந்து விழுந்துகொண்டே இருக்கும்.
எப்போதும் எழுதுபவர்தான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சற்று அதிகமாகவே எழுதினார். அந்தக் கட்டுரைகளுக்காக எத்தனை உழைத்திருக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், நினைவிலிருந்து எழுதுபவற்றுக்காக எத்தனை ஆதாரங்கள் சரி பார்க்க வேண்டும்! வியக்காதிருக்க முடிந்ததில்லை என்னால். உதாரணமாக, தமிழ் ஈழப் பிரச்னை – யுத்தம் அதன் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்த சமயத்தில் தொடர்ச்சியாக பத்ரி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தால் சுமார் நூற்று நாற்பது பக்கங்கள் வருகின்றன. புத்தக வடிவப் பக்கங்கள் என்றால் இதுவே இருநூறைத் தாண்டும். இதேபோல் காந்தியைப் பற்றிய பதிவுகளும் எண்ணற்றவை.
இவை எதுவும் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் காத்திரமாகவும் கடும் உழைப்பு, தகவல் சேகரிப்பு, அலசல், விமரிசனத்தைக் கொண்டதாகவும் இருந்தது, தொடர்ச்சியாக அவரை வாசித்த வரும் வாசகர்களுக்குத் தெரியும்.
ஆனால் இக்கட்டுரைகள் – இவற்றைவிடக் கூடுதல் உழைப்பு, கூடுதல் செறிவு மிக்க அவரது அறிவியல் கட்டுரைகள் வெளியானதுமே நான்கைந்து வாசகர்களின் கருத்துகள் வெளிவந்துவிடும். ஒரே வரிதான். நல்ல பதிவு, நன்றி பத்ரி.
வாசகர் இப்படி மாங்கு மாங்கென்று உழைத்து எழுதப்படும் கட்டுரைகளை முழுமையாக வாசிக்கிறாரா, உள்வாங்கிக்கொள்கிறாரா, ஏற்கிறாரா, வெறுக்கிறாரா, முரண் படுகிறாரா, அவர் சொல்லாமல் விடுத்த இடைவெளிகளை இவரால் நிரப்ப இயலுமா, அதற்கான எளிய முயற்சிகளையாவது அவர் மேற்கொள்ள விரும்புவாரா, எதுவும் தெரியாது. நல்ல பதிவு, நன்றி பத்ரி.
ஒரு அட்டண்டன்ஸ் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி சாப்பிடப் போய்விடுகிற புராதன அரசு ஊழியர் மனோபாவத்தை இந்த நடவடிக்கையில் காணமுடிந்தது. மிகவும் கோபமாக இருந்தது. அத்தகைய வாசகர் கருத்துகளை வலைப்பதிவில் வெளியிடாதீர்கள் என்று பத்ரியிடம் சொன்னேன். ஆனால் அவரது இணையக் கொள்கைகள் அதற்கு இடம் தரவில்லை. அதே சமயம் நல்ல பதிவு, நன்றி பத்ரி என்கிற நான்கு சொல் கருத்துகள் வரவும் குறைவதாகத் தெரியவில்லை. முன்னைக்காட்டிலும் மிக அதிகம் வரத் தொடங்கின.
இந்த ஆட்டோ ரிப்ளை கமெண்டுகளை எப்படி ஒழிப்பது என்று யோசித்ததன் விளைவுதான் நல்ல பதிவு, நன்றி பத்ரி கமெண்ட். அதே பிரயோகம். அதே நான்கு சொற்கள். ஆனால் அர்த்தம் வேறு. கோவிந்தசாமியின் பெயரால் இந்த கமெண்டைத் தொடர்ந்து எங்கள் க்ளப் உறுப்பினர்களின் வலைப்பதிவுகளில் மட்டும் வெளியிடத் தொடங்கினேன். 1) நான் வாசித்துவிட்டேன் 2) நீ எழுதியிருப்பது திராபை 3) இதற்குமேல் கருத்து சொல்ல ஒன்றுமில்லை 4) இத்தகைய கருத்துகள் நிறைய வரும், காத்திருந்து அனுபவி 5) வேறு உருப்படியாக எழுது – என்று அந்தந்தக் கட்டுரைகளின் தன்மைக்கேற்ப எங்கள் குழு உறுப்பினர்கள் இதற்கு அர்த்தம் புரிந்துகொள்வார்கள். எங்களுக்குள் இது ஒரு குழூஉ குறியாக அமைந்தது. [என் தளத்திலேயே நபநப கமெண்டுகளும் இதனைத் தொடர்ந்து எங்கள் குழு உறுப்பினர்களால் எழுதப்பட்டன. அவை எனக்கான எச்சரிக்கைகள்.]
நிச்சயமாக இந்த கமெண்டை எங்கள் குழுவில் இல்லாதோர் யாருடைய வலைப்பதிவிலும் நான் எழுதியதில்லை. இதனைத் தொடர்ச்சியான ஒரு செயல்பாடாக நான் செய்ததற்குக் காரணம், பத்ரியின் வலைப்பதிவில் வந்துகொண்டிருந்த நபநப கமெண்டுகளை நிறுத்தவேண்டும் என்பதுதான். நபநப வந்தாலே அது கிண்டல் என்பது அழுத்தந்திருத்தமாக வாசிப்போர் மனத்தில் பதியும்படி அதன் பெயரைக் கெடுத்துவைப்பதன்மூலம் அப்படிப்பட்ட கமெண்டுகள் வராதிருக்கச் செய்யலாம் என்று நினைத்தேன்.
நான் நினைத்த காரியம் முடிந்தது. பத்ரியின் பதிவுகளில் இப்போது நபநப வருவதில்லை.
ஆனால் யுவகிருஷ்ணா இந்தப் பிரயோகத்தின் நோக்கத்தை அறிந்துகொண்டபிறகு இது வேறு பரிமாணம் எடுத்தது. யுவகிருஷ்ணாவும் அவருடைய உயிரின் மறுபாதியான அதிஷாவும் போகிற இடங்களிலெல்லாம் நபநப என்று கமெண்ட் போடுவதும் அதுவும் கோயிந்தசாமியாகவே போடுவதும் சமீப நாள்களில் அதிகரிக்கத் தொடங்கியபிறகு விஷயம் விபரீதமானது. அந்த கமெண்டுகளுக்கு விவரமறிந்த சில நண்பர்கள் நன்றி பாரா என்றே பதில்வேறு போடத் தொடங்கினார்கள். [இதில் குசும்பனின் திருப்பணி முக்கியமானது.] இணையத்தில் என் ஆதி நண்பர்களுள் ஒருவரான இட்லிவடை நபநபவைப் பற்றியே ஒரு பதிவு எழுதவிருக்கிறேன் என்று பயமுறுத்தினார். நான் அதைக் கண்டித்து நிறுத்தியதும், பழிவாங்கும் விதமாகக் கனகவேல் காக்க திரைப்படத்துக்கு நபநப என்று ஒருவரியில் விமரிசனம் எழுதினார். அந்தக் கிண்டல்கூடப் புரியாமல், உங்கள் படத்தை நீங்களே நல்ல படம் என்று சொல்லிக்கொள்கிறீர்கள் என்ற அர்த்தம் வரும்படியாக அதற்கும் கமெண்டுகள் வந்தை என்னவென்று சொல்ல?
நபநப இன்னும் தேவைப்படவே செய்கிறது. ஆனால் இச்சொற்களாக அல்ல. வேறு வடிவில். வேறு தயாரிப்பில். வேறு கண்டுபிடிப்பாக.
நான் தொடங்கியதன் நோக்கம் முற்றுப்பெற்றுவிட்டது. இனியும் நல்ல பதிவு நன்றி பத்ரி எழுதவேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். இது வலைப்பதிவுகளிலிருந்து இடம் பெயர்ந்து ட்விட்டருக்குள்ளும் குடிபெயர்ந்தபோதே இதன் அபாயம் எனக்குப் புரிந்துவிட்டது. நிறுத்திக்கொள்ள அப்போதே முடிவு செய்தேன். ஆனால் நண்பர்கள், இந்தப் பிரயோகத்தின் உள்ளார்ந்த எள்ளல் அனுபவத்தை விட்டுவிடத் தயாராயில்லை போலிருக்கிறது. கூகுள் தேடலில் பத்ரி என்று போட்டுப்பார்த்தால் நபநபதான் நிறைய வருகிறது. உருப்படியாகச் சிந்தித்து, உழைத்து பல்வேறு விஷயங்களைப் பற்றித் தீவிரமாக எழுதிவரும் என் நண்பரை இத்தனை மோசமான வடிவில் நாளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் திருப்பணியை நானே தொடங்கிவைத்தது பற்றிக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் அபத்தமான அட்டண்டன்ஸ் கமெண்டுகளை ஒழிப்பதற்கு இது ஓரெல்லை வரை தீவிரமாக உதவி செய்திருக்கிறது – குறைந்தபட்சம் அவரது வலைப்பதிவிலாவது – என்ற திருப்தியுடன் இதனை முடித்துக்கொள்கிறேன்.
இனி நல்ல பதிவு, நன்றி பத்ரி என்று கோவிந்தசாமி பெயரில் எங்கள் குழு உறுப்பினர்கள் யாருடைய வலைப்பதிவிலும் நான் கமெண்ட் போடப்போவதில்லை. எங்கள் குழுவில் அல்லாதோர் யாருடைய பதிவிலும் இதுநாள் வரை நான் இதுவல்ல, வேறெந்த கமெண்டுமே போட்டதில்லை [ஒரு சில சந்தர்ப்பங்கள் நீங்கலாக.]
எனவே நண்பர்கள் இதனைப் புரிந்துகொண்டு நபநபவுக்கு என்னோடு சேர்ந்து விடைகொடுக்க வேண்டுகிறேன்.
நல்ல பத்ரி. பிழைத்துப் போகட்டும்.
நபநப
ஓ.. இதுதான் விஷயமா?
‘கடவுள் முரளி’ என்று கரியால்
சென்னை நகர சுவர்களில் ஒருவர்
தொடர்ந்து கிறுக்கி வந்தார்.முரளியின்
தீவிர ரசிகர் என தெரியவந்தது.
அப்படியே பத்ரியின் பதிவுகளால்
அதிகமாக பாதிக்கப்பட்ட யாரோ
ஒரு தனிநபர் இதை செய்கிறார்
என நினைத்தேன்.
மறற்படி, பத்ரி பெரும்பாலும் எழுதி
வருவது நுணுக்கமான அறிவியல்
அறிமுகக கட்டுரைகள். அவற்றைப்
பற்றி விவாதிக்க வேண்டுமானால்
வாசகனுக்கும் அவற்றைப் பற்றிய
அறிவு தேவை. எனவேதான்
அதைப்படித்த பிரமிப்பிலேயே
நல்லபதிவு என்ற ஒரு வார்த்தையில்
பாராட்டிச் செல்கிறான். இதை
பெரிய விஷயமாக எடுத்துச்
சென்றிருக்க வேண்டியதில்லை.
எனிவே இது ஒரு மர்ம காமெடியாக
இணையத்தில் நீடித்தது. வெளிப்
படுத்தி விட்டீர்கள்.
நல்ல பதிவு நன்றி பத்ரி. 🙂
நல்ல பதிவு நன்றி பாரா 🙂
Srini
வேறென்ன பின்னூட்டம் போட..
அதேதான்..
அதேதான்..
நீங்கள் நினைத்ததேதான்..
ஆனால் போடமாட்டேனே!
குழு மனப்பான்மையினால் ஏற்படும் விபரீதங்களை அறிந்த பின்னும் மூத்த எழுத்தாளரான நீங்கள் மீண்டும் மீண்டும் என் குழு என் குழு என்று எழுதுவது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய ஒரு செயல்.
இணையம் என்ற கட்டற்ற பெருவெளியை இப்படி ஒரு சிறிய குழுவிற்காக முன் வைப்பதை இனியேனும் நிறுத்துவீர்கள் என நினைக்கிறேன்.
மற்றபடி உங்கள் கருத்துக்கு நல்ல பதிவு நன்றி பத்ரி என்றே எழுதத் தோன்றுகிறது. எனவே
நல்ல பதிவு நன்றி பத்ரி (நபநப)!
இலவசம்: கோயிந்தசாமி குழுவைப் பற்றி நீங்கள் அறியாதிருப்பது துரதிருஷ்டமே. நீங்கள் குறிப்பிடும் குழுமனப்பான்மை இக்குழுவுக்குப் பொருந்தாது. இது அதிகாரபூர்வக் குழுவல்ல. நண்பர்கள் உறுப்பினர்களாக அவ்வப்போது வந்துபோகிற குழு. இக்குழுவுக்கென்று தனி மனப்பான்மை கிடையாது. உலகப்பொது மனப்பான்மையைத்தனி மனப்பான்மையாகத் தனித்தனியே கருதிக்கொள்வோர் இவர்கள். மேல் விவரங்களுக்கு நீங்கள் இத்தளத்திலேயே உள்ள கோயிந்தசாமியின் குணாதிசயங்கள் என்னும் அமரகாவியத்தைப் படிக்கலாம்.
இது தெரியாம ரெண்டு மூணு இடத்தில ரொம்ப சீரியசா யூசு பண்ணிட்டோமே 🙁 மன்னிப்புத்தான் கேட்டுக்கிடணும் !
கோயிஞ்சாமி கிளப் மெம்பர்ஸ் அல்லாது பிறரும் உபயோகித்த நபநபவுக்காக எல்லாருக்கும் போய் சேருவது மாதிரி ஒரு ஜெனரல்மன்னிப்பு தட்டிவிடமுடியுமா? 🙂
நல்ல பதிவு. நன்றி பாரா.
உண்மையிலேயே நல்ல பதிவு.உண்மையிலேயே நன்றி பா.ராண்ணே 🙂
நல்ல பத்ரி.. நன்றி பா.ரா..:)
நண்பர்களுக்கு ஒரு சொல். இந்தப் பதிவோடு இத்தளத்தில் நபநப கமெண்டுகள் முடித்துக்கொள்ளப்படும். அடுத்து வரும் எந்தக் கட்டுரைக்கும் நபநப கமெண்டுகள் ஏற்கப்படமாட்டா.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
Good Post.. Thanks Badri..
ஐயா,
இதைப் பற்றி (நப நப) நான் முன்பே கேட்க வேண்டுமென்று நினைத்தேன். சமயங்களில் ரசிக்கத் தக்கதாயும்,பல சமயங்களில் மிகவும் எரிச்சலூட்டுவதாயும் இருக்கும் இந்த ‘நப நப’வை – அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி திட்டிய ஒரு கெட்ட வார்த்தையை நினைவுறுத்தும் இதை – பதிவுலகில் இனிமேல் தடை செய்தால்தான் என்ன? ஆனால் அதுவும் சந்தேகம் தான். இது பதிவுலகு முழுவதும் ஒரு ”விஷக்கிருமிகள்” (நன்றி : பக்தவத்சலம்) போல் பரவி விட்டது. வேறு ஏதாவது பெயரில் வலம் வந்து கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சமயங்களில் விளையாட்டு வினையாகும். சில சமயங்களில் வினையும் விளையாட்டாகும்.
நல்ல கட்டுரை. நன்றி
:)))
நப பிபோ
கம்பேனி ரகசியத்தை வெளியிட்டுவிட்டீர்களே!
’மோசமான பதிவு நன்றி பா.ரா’ என்பதை ந ப ந ப விற்கு மாற்றாக பயன்படுத்துமாறு வலையுலக தமிழர்களை கேட்டுக் கொள்கிறேன்
இந்த கோயிஞ்சாமிகளையும், ‘நபநப’வையும் பார்த்திருக்கேன்…என்னவோ குழூவுக்குறின்னு மட்டுந் தெரிந்தது…இதானா விஷயம்…:))
நபநபா..
நல்ல பதிவு. நன்றி பேயோன் .
த்சோ.. த்சோ..
உங்கள் வருத்தம் முழுவதுமாக வெளிப்பட்டுள்ளது. நிச்சயமாக இனி அவ்வாறான கமெண்ட் போடமாட்டேன். முன்பும் போட்டதாக நினைவில்லை.
நபநப அர்த்தம் இதுதானா?
இதை சில பதிவு கமெண்ட்ஸ் பகுதியில் பார்த்துள்ளேன்
இப்போதுதான் அர்த்தம் புரிகிறது
// இலவசம்: கோயிந்தசாமி குழுவைப் பற்றி நீங்கள் அறியாதிருப்பது துரதிருஷ்டமே. நீங்கள் குறிப்பிடும் குழுமனப்பான்மை இக்குழுவுக்குப் பொருந்தாது. இது அதிகாரபூர்வக் குழுவல்ல. நண்பர்கள் உறுப்பினர்களாக அவ்வப்போது வந்துபோகிற குழு. இக்குழுவுக்கென்று தனி மனப்பான்மை கிடையாது. உலகப்பொது மனப்பான்மையைத்தனி மனப்பான்மையாகத் தனித்தனியே கருதிக்கொள்வோர் இவர்கள். மேல் விவரங்களுக்கு நீங்கள் இத்தளத்திலேயே உள்ள கோயிந்தசாமியின் குணாதிசயங்கள் என்னும் அமரகாவியத்தைப் படிக்கலாம்.//
ஸ்ஸ்ப்பா பாதிலயே கண்ணக்கட்டுதே~
:)- என்னுடைய அருமையான கம்மெண்டை வெளியிடாமல் நிராகரித்தது கருத்தியல் வன்முறை :)-
மணிகண்டன், எந்த கமெண்டையும் நிராகரிக்கவில்லையே? என்ன எழுதினீர்கள்? திரும்ப அனுப்பவும்.
தபநபா™. நானே சுயமாக யோசித்து எழுதும் படைப்புகளுக்கெல்லாம் ‘முடியல’ (இது எதனுடைய சுருக்கமோ!) போன்ற பின்னூட்டங்களை பார்க்கும்போது நபநப எவ்வளவோ தேவையில்லை.
நீங்கள் கூறியபடி டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் கடுப்பை கிளப்புகிறது!
நப நப விடை கொடுப்பார்கள் என்று நம்புவோம்!
கோயிஞ்சாமிகளுக்கு என்று தனிக் குழு இருந்தா அது கோயிஞ்சாமி குழு இல்லை. எந்த குழுவிலும் கோயிஞ்சாமிகள் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.
எல்லாரும் ஏதோ நபநப கமெண்ட் போடறாங்க, நாமும் போடலாமேன்னு நினைக்கற எல்லாருமே கோயிஞ்சாமிதான். அதையும் இனி செய்யக்கூடாது என்று சொன்னால் கோயிஞ்சாமி கூட்டம் என்னதான் செய்யும்? பரிகாரமாக புதிய கமெண்ட் ஒன்றை கண்டுபிடித்து பரப்புமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
நல்ல பதிவு நன்றி பாரா
நபநப கமெண்டுகளை அங்கங்கே பார்த்து அர்த்தம் புரியாமல் மண்டை காய்ந்து போனேன். இப்போது தெளிந்து விட்டது:)
இதை நான் ட்விட்டரிலும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன் விடை பகரவில்லை
அறியத் தந்ததற்கு நன்றி பா.ரா சார்
“me the 22nd” என்ற வரலாற்று சிறப்பு மிக்க கமெண்ட் டெலீட் செய்யப்பட்டது. நீங்கள் ‘me the 1st” போடக்கூடாது என்று சொன்னதை இன்றுவரை கடைப்பிடித்து வருவதால் எனக்கு தார்மீக கோபம் வந்தது.
ada kadavuLe!
ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்த நிம்மதி. ட்விட்டரில் கொத்தனார் எதற்கோ நபநப போட்ட பொது அர்த்தம் கேட்டேன். சுருக்கமாக எழுதியிருந்ததை விரித்துச் சொன்னார்கள் ஆனால் யாரும் அர்த்தம் சொல்லவில்லை.
நெசமாவே நல்ல பதிவு. விளக்கம்மளித்ததற்கு நன்றி ஐயா.
பி.கு. நடுவில் யாரோ நீங்கள்தான் பேயோன் என்ற ரீதியில் பின்னூட்டமிட்டிருக்கிறார். அது உண்மையா? பதிலை பகிரங்கமாக நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்று தெரியும். ட்விட்டரில் டி.எம். செய்யவும். 🙂
டாக்டர், நான் பேயோன் இல்லை. நான் பிசாசோன் இல்லை. நான் இட்லிவடை இல்லை. நான் வெறும் ரைட்டர்பாரா. இதை எத்தனை முறை திரும்பச் சொல்வேன்? நம் மக்களுக்குப் பொழுதுபோகாதபோதெல்லாம் என்னை யாரோவாக எண்ணிக்கொண்டு எழுதுவது வழக்கம். பேயோன் குறிப்பிடும் ரைட்டர்”யாரோ” ஒருவேளை நானாக இருக்கக்கூடும் 😉
நப நப . . . இதுல இவ்வளவு உள்குத்தா ?, இது தெரியாம, இட்லி வடையில பின்னூட்டம் வேற, கன்னி வெடி கேள்விபட்டிருக்கேன் . . . மொதொ தடவ சிக்கிட்டேன் . . . இனிமே பின்னூட்டமெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு தான் போடணும் போல . . . நம்மள வச்சு நல்ல காமெடி பண்றாங்கப்பா
இது கோட்டுக்குள் நடக்கும் வீர விளையாட்டு. நான் எப்போதும் போல பார்வையாளன். ஆனால் வருகை பதிவெடு உதாரணம் பல முறை யோசித்து வெறுத்துப் போனதுண்டு.
//தொடர்ந்து எங்கள் க்ளப் உறுப்பினர்களின் வலைப்பதிவுகளில் மட்டும் வெளியிடத் தொடங்கினேன்.//
ஓ… இது தான் குழு(மம்) என்பதா..