தெளிவாக அலசி ஆராய்ந்துவிட்டேன். இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையைச் சுண்டி இழுத்து சூனியம் வைக்க வேண்டுமானால் இன்ஸ்டாகிராமுக்குத்தான் குடி மாற வேண்டும்.
பிரச்னை என்னவென்றால் அங்கே எழுத முடியாது. எதைச் சொன்னாலும் பொம்மை போட்டுத்தான் சொல்ல வேண்டும். கேவலமான அஷ்ட கோணல் செல்ஃபிகளையெல்லாம் லட்சம் பேர் லைக் செய்கிறார்கள். நடிகைகளும் பெண் எழுத்தாளர்களும் இதில்தான் சதம் அடித்துவிடுகிறார்கள். என்னைப் போன்ற கொடுந்தடியர்கள் என்ன செய்ய முடியும்?
இதில் மாபெரும் வயிற்றெரிச்சல் ஒன்று உள்ளது. இங்கே ஃபேஸ்புக்கில் கொஞ்சிக் குலவும் வாசகச் செல்வங்களில் தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவீதத்தினர் புத்தகம் வாங்குவதில்லை; படிப்பதும் இல்லை. ஆனால் இன்ஸ்டாக்ராம் அப்படி அல்ல. இன்ன புத்தகம் இன்ன தேதியில் வெளியாகிறது; இன்று முதல் முன் பதிவு செய்யலாம் என்று ஓர் எழுத்தாளர் அறிவித்தால் உடனே பாய்ந்து சென்று அமேசானில் முன் பதிவு செய்துவிடுகிறார்கள். அந்த முன் பதிவு ரசீதுகளை சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு அனுப்பி, அவரும் கர்ம சிரத்தையாக அதைத் தனது ஸ்டோரியில் போட்டுவிடுகிறார். எழுத்தாளர் – வாசகர் உறவு அங்கே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தைப் போலிருக்கிறது.
இதையெல்லாம் நினைத்தால் துக்கம் பொங்குகிறது.
க்ளாமர் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் கேஎன் செந்திலாவது ஏழரை அடி உயர எழுத்தாளர் என்று சொல்லி போட்டோ போட்டுக்கொள்ள முடிகிறது. நானெல்லாம் இரண்டடி விட்டத்தையா திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருக்க முடியும்?
இந்த சர்வ தேசப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தே தீரவேண்டும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
இன்ஸ்டாவிற்கு ஆபத்து காத்திருக்கிறது..