சர்வநாச பட்டன் – 10

அதிகாரம் 10: உறவினர்

1. எனது ஸ்பாம் ஃபோல்டருக்கு ரிலேடிவ்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் செலக்ட் ஆல், டெலீட் பொத்தானை அமுக்கும்போதெல்லாம் அப்படியொரு ஆனந்தப் பரவசம் உண்டாகிவிடுகிறது.

2. என் அனுமதி இன்றி என்னைச் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி, மாப்ள, மச்சான், சகலை, தாத்தா, பேராண்டி என்றெல்லாம் அழைக்க எவன் எவனோ எவன் எவனையோ பெற்றுப் போட்டுவிட்டிருக்கிறான். இதெல்லாம் மனித உரிமை மீறலுக்கு உட்படாதா?

3. முதல் வரிசை உறவினர் வற்புறுத்தலின் பேரில் சில குடும்ப விசேடங்களுக்குப் போகவேண்டியதாகிறது. சிக்கல் என்னவென்றால், போன இடத்தில் யாராவது ‘என்னைத் தெரியுதா?’ என்று கேட்டுத் திகைக்க வைத்துவிடுகிறார்கள். சுதாரித்துக்கொண்டு, ‘தெரியாம என்ன. லாஸ்டா ஜே2 போலிஸ் ஸ்டேசன்ல பாத்தம்ல? அந்த பொம்பள கேசு அப்பறம் என்னங்க ஆச்சி? ஜாமின்ல வந்திருக்கிங்களா? கொஞ்சம் டீடெய்லா சொன்னிங்கன்னா எதுனா கதைல சொருகிடுவேன்’ என்பேன். எடுப்பான் பாருங்கள் ஒரு ஓட்டம்!

4. மனிதன் நல்லவன். உறவுக்காரன் அயோக்கியன். வேறு வழியில்லை. நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை.

5. முதல் வரிசை உறவினர் வழி உறவுகளை நான் விமரிசிப்பதில்லை. கருத்து சுதந்தரத்தைவிடக் காலை உணவு முக்கியம்.

6. நடிக்க சான்சு வாய்ங்க்குடேன், கத எழ்தினா என்னா குடுப்பான்? என்றெல்லாம் கேட்கும் உறவினர்களைப் பல்லாண்டுக் காலமாக நான் ஒரே விதமாகத்தான் சமாளிக்கிறேன். ‘செஞ்சிரலாம். இனிசியல் இன்வெஸ்மெண்ட்டு ஒரு அஞ்சு லச்சம் ஆவும். பொரட்டிட்டு வந்துருங்க.’

7. உரிமைக்குக் கை கொடுப்போம். உறவுக்குக் குரல்வளையைப் பிடிப்போம் என்ற பொன்மொழியைச் சொன்னவர் விளாதிமிர் புதினா? நிர்மலா சீதாராமனா? சட்டென்று மறந்துவிட்டது.

8. விவாகரத்து போல இதர உறவுகளையும் சட்டபூர்வமாக ரத்து செய்ய வழி இருப்பதுதான் செங்கோல் உள்ள ஜனநாயகத்துக்கு அழகு.

9. பெண்ணெழுத்தாளர்களில்கூட ஒன்றிரண்டு பேர் தேறிவிடுவார்கள். உறவினர் விஷயத்தில் வாய்ப்பே இல்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி