சர்வநாச பட்டன் – 4

அதிகாரம் 4: காதல்

  1. நவீன காதல் என்பது திருமணத்தை உத்தேசிக்க வாய்ப்பில்லை. ஆனால் விவாகரத்தை அது இரு கரம் தட்டி வரவேற்கும்.
  1. சிறந்த காதலர்கள் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள். காதலை வாழவைக்க வேறு நல்ல உபாயமில்லை.
  1. போயும் போயும் இவனை (அல்லது இவளை)க் காதலித்தோமே என்று தோன்றும்போதுதான் மேற்படியார்கள்  கவிதை எழுத ஆரம்பிக்கிறார்கள். இது குழந்தைகள் மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆசனவாயில் வெற்றிலைக் காம்பைச் சொருகுவது போன்றதொரு மருத்துவ முறை.
  1. பதினைந்து, பதினாறு வயதுக்குள் யாரையாவது உண்மையாகக் காதலித்து முடித்து ரிடையர் ஆகிவிட வேண்டும்.   திருமணத்துக்குப் பிறகு மனச்சாட்சிக்கு சேதாரமில்லாமல் வண்டை வண்டையாக மனைவியைப் புகழ்ந்து தள்ள அப்போதுதான் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்.
  1. காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் நடிகைகள், திருமணமான புதிதில் தருகிற பேட்டிகளில் ஒரு சுவாரசியம் உள்ளது. அவை எஃப்.எம் கோல்டு அலைவரிசையில் தினசரி காலை ஏழு மணிக்கு ஒலிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை ராகம் போட்டுப் பாடுவது போலவே ஒலிக்கும்.
  1. நீங்கள் காதலிக்கும் மறுபாலினத்தவருக்குப் பரிசுப் பொருள்கள் தந்து பணத்தை வீணாக்காதீர்கள். பத்து வருட சர்வீஸ் முடிந்தால் முதலீட்டை ஊக்கத்தொகையுடன் தருவதாக ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். ஆனால் மறக்காமல் கண்டிஷன்ஸ் அப்ளைபோட்டு, பாதியில் புட்டுக்கொண்டால் ஒன்றும் கிடையாது என்பதைக் குறிப்பிட்டுவிடுங்கள்.
  1. உண்மைக் காதல் என்ற ஒன்றில்லை. எங்காவது உப்புப் போட்ட ஐஸ் க்ரீம் சாப்பிட்டிருக்கிறீர்களா?
  1. காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்பவர்கள் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்வதில்லை. அவர்கள் கன்னத்தில் விரல் ஊன்றி போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களாகத் திரும்பவும்  பிறந்துவிடுகிறார்கள்.
  1. பேரன் பேத்தியெல்லாம் எடுத்து முடித்த வயதில் பழைய காதலியைச் சந்திக்க நேர்ந்தால், ‘உனக்கு கிட்கேட் பிடிக்கும்ல?’ ‘நி எட் ஷீரன் ஃபேன் இல்ல?’ என்று அபத்தமாக உளறாதீர்கள். மாறாக வோலினி ஸ்பிரே அல்லது கார்டிவாஸ் டேப்லட் வாங்கிக் கொடுத்து அன்பை ரென்யூ செய்யுங்கள்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி