சர்வநாச பட்டன் – 3

அதிகாரம் 3: பதிவர்

  1. சிறந்த பதிவரை இனம் காண்பது எப்படி? அனைத்து பக்கெட், டேக்சா சேலஞ்சுகளிலும் தன் இருப்பைச் சொல்லி, ஹேஷ் டேக் இட்டு டிரெண்டிங்குகளில் பங்களித்து, அவ்வப்போது செல்ஃபி போட்டு, சுதந்திர தினத்துக்கு ப்ரொஃபைலில் தேசியக் கொடி வைத்து, மோடி வரும்போது கோபேக் சொல்லி, மாதக் கடைசி ஆனால் ஃபேஸ்புக்கிலிருந்து விலகலாம் என்றிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போட்டு, மறு நாள் காலை, இனிய காலை வணக்கம் நட்பூஸ்களே என்று அன்பு செய்வார்.
  1. அன்பின் பிரியப்பட்ட சிநேகிதத்துக்கு அகவை தினத் தாலாட்டுகள் என்று வாழ்த்துவோரைக் காணும்போதெல்லாம் அவர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்கிற கவலை வந்துவிடுகிறது.
  1. சொறிநாய் கடித்து தொப்புளைச் சுற்றி ஊசி போட்டுக்கொண்டேன் என்று எழுதினால் பதிவர். நாய்மையினால் நோய்மையுற்றேன் என்று எழுதினால் நவீன இலக்கியவாதி.
  1. சிந்திக்கத் தூண்டும் அரிய பதிவு, வாசிக்கத் தூண்டும் சிறப்பான  விமர்சனம் என்றெல்லாம் கமெண்ட் செய்வோரிடம் நான் கேட்பது ஒன்றுதான். சிந்தித்தீர்களா? வாசித்தீர்களா?
  1. பதிவர் தாக்கப்பட்டார் என்று தன்னைப் பற்றித் தானே யாராவது படர்க்கையில் குறிப்பிட்டால் சரி என்ன இப்ப? என்று இரக்கமின்றிக் கேட்டுவிடுகிறேன். இதையெல்லாம் லைக் போட்டு வளர்த்துவிட்டால் நாளைக்குப் பதிவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ஃபேனில் தொங்கியபடி செல்ஃபி போட ஆரம்பித்துவிடுவார்கள்.
  1. வரலாற்றுச் சான்றுகளின்படி எழுத்து சொல் பொருள் யாப்பு அணியிடம் போராடி, பூரண சுதந்திரம் பெற்றது பதிவர் குலமே. நவீன இலக்கியவாதிகள் அநியாயமாக அதை லவட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
  1. ஒப்பீட்டளவில் பெண் பதிவர்கள் குறைவான இலக்கணப் பிழைகளையே செய்கிறார்கள். அதுவும் செல்ஃபி சரியாக அமையாதபோது நேர்வதுதான்.
  1. மார்க் என்னும் பதிவர் என்ன எழுதினாலும் பல்லாயிரக் கணக்கில் லைக் விழுகிறது. அவர் என்ன பாட் உபயோகிக்கிறார், அது ரிச்சி ஸ்டிரீட்டில் கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும்.
  1. கவிதை எழுதாத பதிவர்களை நான் மதிக்கிறேன். அவர்களுடைய காலை வணக்க போஸ்டுகளுக்குக் கூட “சூப்பர் ப்ரோ!” என்று கமெண்ட் போடச் சித்தமாக இருக்கிறேன்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி