
அதிகாரம் 2: கடவுள்
- ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும்.
- அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு, மாவை ஊற்ற வேண்டியதுதான்.
- மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம்.
- மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதற்கொரு ஆர்மி ஆரம்பித்துவிடுவேன்.
- எத்தனைக் கோடி சம்பாதித்து என்ன. வெங்கடாசலபதி உட்காருவதற்கு ஒரு நாற்காலி போட ஆந்திரத்தில் ஒரு நாதி கிடையாது.
- கடவுளே ஆனால்தான் என்ன. ஒன்று, பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு கல்யாணம் செய்திருக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி கான்செப்டைக் கடைப்பிடித்தால் ஊரில் ஒரு பயல் மதிப்பதில்லை.
- எப்படியும் தடுத்தாட்கொண்டுவிடுவான் என்பது நிச்சயமாகிவிட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் நான் தடுக்கி விழத் தயார். ஆனால் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி, கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்.
- நான் ஒரு சுத்த ஆத்திகன். கடவுளைத் தவிர மற்ற அத்தனை பேருக்கும் இது தெரியும்.
- கடவுளைப் பார்த்தேன் என்று கடைசியாகச் சொன்னது ராமகிருஷ்ண பரமஹம்சர்தான் என்று நினைக்கிறேன். எதற்கு ரிஸ்க் என்றுதான் பிறகு வந்தவர்களெல்லாம் நானே கடவுள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.