அதிகாரம் 8: நடைப் பயிற்சி
1. சகஸ்ரநாமமோ சஷ்டி கவசமோ கேட்டபடி காலை நடைப் பயிற்சிக்கு வருபவர்கள் இந்த உலகுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக அறிவிக்கிறார்கள். வீட்டில் அவர்களுக்கு நல்ல காப்பி கிடைப்பதில்லை என்பதே அது.
2. பெண்கள் முன்னேற்றத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறேன் என்று ஆவேசமாகக் கேட்டார் நண்பரொருவர். தினமும் நடைப்பயிற்சியின்போது என்னை அவர்கள் முந்திச் செல்ல விட்டு மகிழ்கிறேனே, போதாதா?
3. நடந்து நடந்து காந்தியைப் போல இளைக்க முடியாவிட்டால் என்ன? மகுடேசுவரனைப் போல குண்டாவதும் ஒரு சாதனையே.
4. நடந்து முடித்தபின் ஒரு வேள்வி போல வடை தின்று டீ குடிப்போரைக் கவனியுங்கள். கலோரியை மட்டுமல்ல; கச்சத்தீவை மீட்கவும் இந்த உபாயம் ஒருவேளை உதவக்கூடும்.
5. காலை நடை. ராஜா சார். டிவைன் என்று ஸ்டேடஸ் போடுகிறவர்களை நம்பாதீர்கள். அவர்கள் ஹிப்ஹாப் ஆதிக்கு ஆயுள் சந்தா கட்டியவர்களாக இருப்பார்கள்.
6. அரசியல், இலக்கியம், சினிமா, சம்சாரம், சாப்பாடு, ஆபீஸ், சம்பளம், முதுகுவலி, அடுத்த வீட்டுக்காரர் சார்ந்த உரையாடல்களைத் தவிர்க்கத் தெரிந்தவர்கள் மட்டும் காலை நடையில் என்னுடன் பேச்சுக் கொடுக்கலாம் என்று குடியிருப்பு வாட்சப் குரூப்பில் ஒரு மெசேஜ் போட்டேன். எவனோ அயோக்கியன், ‘ரிப் ப்ரோ’ என்று பதில் போட்டிருக்கிறான்.
7. நைட்டியும் கொலுசும் அணிந்து நடைப்பயிற்சிக்கு வரும் பெண்கள் சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
8. ஜெயமோகனின் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டே நடப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். நான்கூடத்தான் யூட்யூபில் சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஆல்பத்தை லூப்பில் போட்டுப் பார்த்தபடி நடக்கிறேன். இதையெல்லாம் சொல்லிக்கொண்டா திரிகிறேன்?
9. நடையில் முதிர்ச்சி வேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்ட சில எழுத்தாளர்கள்தாம் தினமும் பத்தாயிரம் அடி, இருபதாயிரம் அடி, அரை மாரத்தான் என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொண்டு நடந்து தள்ளுகிறார்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.


