குறுவரி

சர்வநாச பட்டன் – 7

அதிகாரம் 7: டீக்கடை

  1. நாலு பேர் டீ குடித்துக்கொண்டு நிற்கும் கடைக்குப் புதிதாக வருபவன் ‘ஒரு காப்பி’ என்று கேட்டால் ஆணவப் படுகொலை செய்யப் போவது போலப் பார்க்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு, ‘ஒரு வடை’ என்று கேட்டு வாங்கி அதைக் காப்பியில் முக்கி எடுத்துக் கடித்தால்தான் சமாதானமாகிறார்கள். டீயும் வடையும் தமிழர் உணவு. காப்பி நாம் தமிழர் உணவு.
  1. இரண்டு ரூபாய்க்கு விற்ற டீ, பன்னிரண்டு ரூபாய் ஆகிவிட்டாலும் கிளாஸோ, அளவோ, தரமோ மாறுவதில்லை. இதைத்தான் மாற்றம் என்பது மாறாதது என்கிறார்கள். 
  1. பட்டப்பகல் பன்னிரண்டு மணிக்குத் தனியாக ஒரு பெண் டீக்கடைக்கு வந்து டீ குடிக்கும் காலம் ஏன் இன்னும் வரவில்லை என்று அபத்தமாகக் கேட்காதீர். டீக்கு வேண்டுமானால் நீங்கள் காசு கொடுப்பீர்கள். சிகரெட்டுக்கு உங்கப்பனா கொடுப்பான்?
  1. டீக்கடைகளில் இப்போதெல்லாம் யாரும் அரசியல் பேசுவதில்லை. சினிமா விமரிசனம் சொல்வதில்லை. வம்புக்கு இழுத்து டைம்பாஸ் செய்வதில்லை. ரத்த காயங்கள் உண்டாவதேயில்லை.  அங்கே நிற்கும் நாய்களுக்கு அன்பு பொங்கிப் பொறை வாங்கிப் போடுகிறார்களா என்றால் அதுவுமில்லை.  ஒரு கையால் டீ குடித்துக்கொண்டே மறு கையால் ஜிபே பண்ணிவிட்டு, அப்படியே நடையைக் கட்டிவிடுகிறார்கள். டீக்கடை ஒரு காலத்தில் எத்தனை சிறந்த ஃபேஸ்புக்காக இருந்தது! எல்லாம் முடிந்தது.
  1. இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் அரங்குகளுக்கு அருகிலுள்ள கடைகளில் தேநீர் அருந்தாதீர்கள். அங்கெல்லாம் டீத்தூளில் நைசாக சபீனா கலந்துவிடுகிறார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், மன விகசிப்புக்கு அதுதான் சிறந்த வழி என்று கூசாமல் சொல்கிறார்கள்.
  1. எந்த டீக்கடையிலும் இப்போதெல்லாம் பாய்லரோ, டீக்கடைக்காரர் மனைவியோ தென்படுவதில்லை. பாய்லர் இல்லாமல் போனதற்குக் கால மாற்றத்தையும் மனைவி இல்லாமல் போனதற்கு நவீன கவிஞர்களையும் காரணமாகச் சொல்கிறார் நானறிந்த ஒரு டீக்கலைஞர்.
  1. கொலையாளி, தேநீரில் விஷம் கலந்து கொடுத்துத்தான் ஆதித்த கரிகாலனைக் கொன்றார் என்று அடித்துவிடுகிறார் திடீர் உக்கிரப் பெருவழுதி சரவண கார்த்திகேயன். புதைசோழ ஆய்வாளர் சமஸ் புத்தகத்தில் சுந்தர சோழர் காலத்தில் கடம்பூரில் டீக்கடை இருந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
  1. தம்பி ராமையா, வி சேகரு, டிரம்ஸ் சிவமணியெல்லாம் பிரபலமாவுறதுக்கு முன்ன இங்கதாசார் டீ குடிக்க வருவாங்க. நம்ப முடியிதா? என்றார் நான் குடிக்கும் கடையோனர். ‘பெரிய விசயங்க. உயிர் பொழச்சி வாழறதோட நிறுத்திக்காம பிரபலமாவும் ஆனது கிரேட்டுதான்’ என்று சொல்லி வைத்தேன்.
  1. எப்படி சேரசோழப்பாண்டியபல்லவரெல்லாம்  அழிந்து களப்பிரர்கள் வந்தார்களோ அப்படித்தான் தமிழ்நாட்டில் நாயர் குலமும் இல்லாதுபோய் கலப்பினர்கள் வந்தார்கள். இன்று நாம் குடிப்பதெல்லாம் அவர்களுடைய தேநீரைத்தான்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி