குறுவரி

சர்வநாச பட்டன் – 6

அதிகாரம் 6: புரட்சி

1. மிகப்பெரிய புரட்சிகளுக்கான முதல் புள்ளி பெரும்பாலும் சமையலறைகளில்தான் வைக்கப்படும். உதாரணமாக, விளாதிமிர் லெனினின் மனைவி நதெஸ்தா க்ருப்ஸ்கயா கட்சி வேலைகளில் லெனினைவிட பிசியாக இருந்ததால் கணவருக்கு நல்ல தேநீர் போட்டுத் தர வழியில்லாதிருந்தது. விளைவு, அடிக்கடி தோழர்களைச் சேர்த்துக்கொண்டு டீ குடிக்கச் சென்றவர், அப்படியே புரட்சியில் குதித்துவிட்டார்.

2. புரட்சிகர எழுத்துகளில் கலைத்தரம் இருக்காது. ஆனால் புரட்சிகர சினிமாக்களில் அது கூடும். உலகிலேயே புரட்சிக் கலைஞர் உள்ள ஒரே துறை தமிழ் சினிமாத்துறைதான்.

3. ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாகப் புரட்சி செய்துவிடுங்கள். சரித்திரத்தில் இடம் பெறாவிட்டாலும் பிக்பாஸ் வீட்டிலாவது இடம்பிடிக்க அதுவே சிறந்த வழி.

4. பன்னெடுங்காலமாக மனைவி இனத்தவரால் அடிமைப்பட்டுக் கிடப்பவர்கள் புரட்சி செய்து விடுதலை அடைய விரும்பினால் அதற்கு நெட் பிராக்டிஸ் அவசியம். மேற்படி இனத்தார் தமது அம்மா வீட்டுக்குச் சென்றிருக்கும் நாளைத் தேர்ந்தெடுத்து, அளவில் பெருத்த பூசனிக்காய் ஒன்றை வாங்கி வாருங்கள். அதை நடுவீட்டில் கட்டித் தொங்கவிட்டு இரண்டு கரங்களையும் பயன்படுத்திக் கடுமையாகத் தாக்கத் தொடங்குங்கள். முழுப் பூசனிக்காயும் சோற்றில் மறையும் அளவுக்குச் சிதறிச் சுக்கு நூறாக வேண்டும். பிறகு கீழே சிதறிய பூசனி அணுக்களைத் திரட்டி அல்வா கிண்டி வையுங்கள். மாலை அல்லது மறுநாள் மனைவி இனத்தவர் வீடு திரும்பும்போது டொட்டடொய்ங் என்று அதை எடுத்து அவர் முன் நீட்டுங்கள். மகிழ்ந்து, புன்னகை பூக்கிற அவசரத்தில், நீங்கள் புரட்சிக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்கத் தவறிவிடுவார். இவ்வாறாக குஸ்தி பயின்று தேறிய பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து, புரட்சியை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு அல்வா கடை போடலாம்.

5. ஏதாவது ஒரு சித்தாந்தப் பின்னணி இல்லாவிட்டால் இந்த சமூகம் நாம் செய்வதைப் புரட்சியாக ஒப்புக்கொள்வதில்லை. இதனால்தான் சித்தாந்தங்களுக்கு எதிரான ஒரு புரட்சி அவசியம் என்கிறேன்.

6. பேகான் ஸ்பிரே அல்லது ஹிட் அடித்து ஆறு கரப்பான் பூச்சிகளைக் கொன்றாலே ஜார் மன்னர் பரம்பரையை வீழ்த்திவிட்ட பெருமிதம் உண்டாகிவிடுகிறது. ஆனால் ஜார்கள் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்துபோய்விடுவதில்லை. மாதம்தோறும் பேகான் ஸ்பிரே அல்லது ஹிட் வாங்க வேண்டியிருக்கிறது. புரட்சியை மாதாந்திரத் தவணையில் செய்யும் மனப்பக்குவம் அவசியம்.

7. புரட்சி செய்வதென்றால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். யாரும் தத்தமது சோத்துக்கு வேட்டு வைத்துக்கொள்ளும்படியாக சொந்தக் களத்தில் புரட்சி செய்வதேயில்லை. இளையராஜா என்றைக்காவது இசையில் புரட்சி செய்திருக்கிறாரா? பேச்சுதான் அவரது புரட்சிக் களம்.

8. சரித்திரம் முழுதும் அரசர்களுக்கும் அதிபர்களுக்கும் எதிராகத்தான் புரட்சி நடந்திருக்கிறது. ஆனால் யாரும் எங்கும் உருப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு மாறுதலுக்கு, ப்யூன்களுக்கு எதிராகப் புரட்சி செய்து பார்க்கலாம். ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கும்.

9. பலன் தராது என்று தெரிந்தும் புரட்சி மனோபாவம் மேலோங்குகிறதென்றால் அதற்கொரு மாற்று உபாயம் உள்ளது. ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்கிவிடுங்கள்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி