அதிகாரம் 5: பெண்கள்
1. பெண்கள் இரண்டு வகைப்படுவர். 1. ஆண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. இதர பெண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள்.
2. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற முதுமொழியில் ஒரு தவறான புரிதலுக்கான வாய்ப்புள்ளது. பொதுவாகப் பெண்கள் இன்னொரு பெண்ணை எதிரியாகக் கூட அண்ட விடமாட்டார்கள்.
3. பெண்ணியம் என்பது சரியாக சாம்பார் வைக்க வராதவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம்.
4. இருபது வருடங்களுக்கு முன்பு, ‘நான் த்ரிஷா மாதிரியே இருக்கேன்ல?’என்று கேட்ட பெண்கள் இப்போது த்ரிஷாவுக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். பெண்களுக்கு இந்த விஷயத்தில் மட்டும் தான் எனும் அகந்தை நிச்சயமாகக் கிடையாது.
5. ‘ப்ராண்ட் நியூ’ பிள்ளை பெற்ற பெண்கள் சமூக ஊடகங்களில் நிகழ்த்தும் புகைப்படப் புரட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் திருமதி சிறுத்தொண்டரின் தியாகம் ஒன்றுமே இல்லை என்று தோன்றிவிடுகிறது.
6. கவிதை எழுதும் பெண்களைவிட நைட்டியுடன் வாக்கிங் போகும் பெண்கள் ஒப்பீட்டளவில் நல்லவர்கள்.
7. மனைவி உள்ளிட்ட பெண்களிடம் தப்பித்தவறி வாதம் செய்ய வேண்டி வருமானால், ‘நீ வென்றுவிட்டாய்’ என்று சொல்லிவிட்டுத் தொடங்குவது நல்லது. ஏனெனில் வெற்றி அல்லது வீர மரணம் என்கிற கருத்தாக்கத்தை அவர்கள் பொதுவில் ஏற்பதில்லை. வெற்றி எனக்கு; வீர மரணம் உனக்கு என்று சமமாகப் பிரித்து வைக்கும் உயரிய குணம் அவர்களுக்கு உடன் பிறந்தது.
8. சமைக்கப் பிடிக்கவில்லை, எழுத-படிக்க நேரமில்லை, ஊர் சுற்றுவதில்லை, படம் பார்ப்பதில்லை, சீரியல்கள் பார்ப்பதில்லை, கூட்டங்களுக்கு, குடும்ப விசேடங்களுக்குச் செல்ல முடிவதில்லை என்று வருத்தப்படும் பெண்கள் நமக்கு மறைமுகமாக உணர்த்துவது ஒன்றுண்டு. இருப்பது ஒரு பெரிய வேலை என்பதே அது.
9. நூறு இளைஞர்களைத் தாருங்கள். பாரத தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். அதெல்லாம் ஒரு சாதனையா? நூறு பெண்களைத் தாருங்கள். உலகையே உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.


