குறுவரி

சர்வநாச பட்டன் – 9

அதிகாரம் 9: விருது

  1. எழுதுவது ஒரு வேலை என்பது போல விருது வாங்குவது இன்னொரு வேலை. மிகச் சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே மல்ட்டி டாஸ்கிங் கைவருகிறது.
  1. பண முடிப்பு இல்லாத, சொப்பு சாமான் மட்டுமே கொண்ட விருதுகளை நிர்த்தாட்சண்யமாக நிராகரித்துவிடுகிறேன். ஐம்பது வயதுக்கு மேலே சொப்பு வைத்து விளையாடக் கூச்சமாக இருப்பதுதான் காரணம்.
  1. நாற்பத்து நான்கு வயதில் நோபல் கொடுத்து ஆல்பர்ட் காம்யூவை பார்சல் பண்ணிவிட்டார்கள். அதனை நினைவுகூர்ந்தால் எண்பது தொண்ணூறு வரை இழுத்தடித்து ஞானபீட விருது தருவோரின் நல்லெண்ணம் புலப்படும். எதிர்பாராத முதியோர் பென்ஷனாக இருப்பதுதான் நல்ல விருதுக்கு லட்சணம்.
  1. சில எழுத்தாளர்கள், இனிமேல் வாங்கித் தொலைக்க ஒன்றுமில்லை என்னும் அளவுக்கு விருதுகளை வாங்கிக் குவித்துவிடுகிறார்கள். இதற்கு மேலாவது உருப்படியாக எழுதித் தொலைப்பார்களா என்று பார்த்தால் அஸ்குபுஸ்கு என்றுவிடுகிறார்கள்.
  1. தமிழ் இலக்கியப் பரப்பில் உன் இடம் என்ன என்று இனி எவனும் நாக்குமேல் பல்லைப் போட்டுக் கேட்க முடியாது. வரவிருக்கும் கனவு இல்லம் எத்தனை ஸ்கொயர் ஃபீட்டோ அதுதான் என்று முகத்தில் அடித்தாற்போலச் சொல்லிவிடுவேன். 
  1. பாண்டிச்சேரியின் மக்கள் தொகையைவிடத் தமிழ்நாட்டில் கலைமாமணிகள் அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மாஸ் காட்டும் கலை என்பது இதுதான்.
  1. குளோபல் கோல்டன் க்ராப் விருது பரிசீலனைக்காக அர்ஜெண்ட்டாகச் சில தலைப்புகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறோம்; உங்கள் அடுத்த நாவல் தலைப்பைச் சொல்லுங்கள் சார் என்று போன் செய்தார்கள். ‘இருய்யா, ஜிப்பு போட்டுகிட்டு வந்து யோசிக்கிறேன்’ என்றேன் கழிப்பறையில் இருந்தபடி. ‘சூப்பர் சார்!’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார்கள். இதுதாண்டா போலிஸ் ரகத் தலைப்பு என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
  1. எங்கே சந்தா கட்டினால் மாதம் ஒரு விருது வீடு தேடி வரும்?
  1. தமிழக அரசு ஆண்டுதோறும் தரும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் துவரம்பருப்பு அல்லது மிளகு பாக்கெட்டுக்கு பதிலாக சாஹித்ய மாமணி, சர்வரோக வினாசினி என்று ஏதாவது ஒரு விருதைச் சொருகி அனுப்பலாம். வாழ்வது ஒரு சாதனையே என்றால், அதை விருது கொடுத்து கௌரவிப்பது அரசின் கடமை அல்லவா?
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி