1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கி வார இதழில் பணிக்குச் சேர்ந்தேன். சுமார் முக்கால் மணி நேரம் நாற்காலியில் உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து கீழே உள்ள அச்சுக் கூடத்தைச் சுற்றிப் பார்க்கப் போய்விட்டேன். ஓர் அச்சு இயந்திரத்தைப் பார்ப்பது என்பது அந்நாளில் என் பெருங்கனவாக இருந்தது. இந்த உலகின் வேறு எந்த அதிசயமும் அன்று எனக்கு அவ்வளவு ஆர்வமூட்டக்கூடியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கல்கியில் அன்று பெரிது பெரிதாக இரண்டு மூன்ற இயந்திரங்கள் இருந்தன. இயந்திரங்களுக்கு நடுவே மலை மலையாகக் காகித உருளைகள் அடுக்கப்பட்டிருக்கும். சத்தமென்றால் அப்படியொரு பெருஞ்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மலையைக் குடைந்துகொண்டு ஒரு ராட்சச வல்லூறு வெளியே வருவது போல அச்சான தாள்கள் இயந்திரத்துக்குள் இருந்து வெளியே வருவதை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது மடங்கி, ஃபாரம் ஆவது, பிறகு ஃபாரங்கள் இணைக்கப்பட்டு, பின் அடித்துப் புத்தகமாவதைப் பார்க்க அவ்வளவு பரவசமாக இருக்கும்.
பிறகு குமுதத்துக்குச் சென்றபோது இன்னும் பெரிய இயந்திரங்கள், இன்னும் அதிக இயந்திரங்களைக் கண்டேன். நாளெல்லாம், இரவெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திரங்கள். அச்சு இயந்திரங்கள் வெளிப்படுத்தும் சத்தம் ஒரு சிறந்த கவனக் குவிப்பு வைத்தியம். அங்கே போய் நின்றுகொண்டு என்ன யோசித்தாலும் மனம் ஆணி அடித்தாற்போல ஒரு புள்ளியில் நிற்கும். இது என் அனுபவம்.
பத்திரிகைப் பணியில் இருந்து வெளிவந்துவிட்ட பிறகு அச்சு இயந்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலாகிவிட்டது. சமீபத்தில் ஒருநாள் தரங்கம்பாடிக்குச் சென்றேன். இந்தியாவின் முதல் அச்சுக்கூடம் உருவான கடலோரக் கிராமம். ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்க் குறித்தும் அவர் தமிழ் கற்றுக்கொண்டு பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்து, அச்சிட்டு வெளியிட்டது குறித்தும் படித்திருப்போம். அந்த அச்சகத்தையும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட அப்புராதன அச்சு இயந்திரத்தையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தரங்கம்பாடியில் சீகன் பால்க் வசித்த வீட்டை அருமையாகப் பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கப் பெரிய பங்களா போலத் தோற்றமளித்தாலும் அவ்வளவு பெரிய பங்களாவெல்லாம் இல்லை. தரைத்தளத்தில் ஒரு குடித்தனம், மாடியில் ஒரு குடித்தனம் விடலாம். அவ்வளவுதான் அளவு. அவர் பயன்படுத்திய அச்சு இயந்திரங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள், அவர் அச்சிட்ட புத்தக மாதிரிகள் அனைத்தும் கண்ணாடி போட்டு மூடி, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரொம்ப முக்கியம், எதன்மீதும் தூசு இல்லை. அதனினும் முக்கியம், அங்கு பணியில் உள்ள உதவியாளர்கள், சீகன் பால்க் காலத்துப் புள்ளி வைக்காத தமிழ் எழுத்துகளைத் தடையின்றி வாசித்துக் காட்டுகிறார்கள். நாம் சிறிது யோசித்தால் பைபிள் தமிழுக்குத் தற்காலத் தமிழில் விளக்கமும் சொல்கிறார்கள்.
செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு அம்முதல் அச்சு இயந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்தேன். ‘நீங்கள் செருப்புடனேயே செல்லலாம்’ என்றார் பணியில் இருந்த பெண்மணி. மனம் வரவில்லை. சிறியதோர் அறையின் நடுவே பாய் விரித்த தோணியைப் போல நின்றுகொண்டிருந்தது அவ்வியந்திரம். ஒரு சாக்குக் கோணியை விரித்து அதன்மீது நிறுத்தியிருக்கலாம். அல்லது மரத்தாலான ஒரு சிறு மேடை அமைத்திருக்கலாம். ஏனோ செய்தித் தாள்களை விரித்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்துக்குமான ப்ளாக்குகள் தனியே இருந்தன. ப்ளாக் என்றால் என்னவென்று தெரியாத தலைமுறை நிச்சயமாகத் திகைத்துவிடும். அவ்வளவு அழகு. அவ்வளவு ஒழுங்கு. ஒருசிலவற்றை எடுத்துப் பார்த்தேன். முந்நூறு வருடங்களானாலும் முனை உடையாமல், மழுங்காமல் கூர் காட்டி நின்றன. சீகன் பால்க் அச்சிட்ட பக்கங்களில் சிலவற்றையும் அந்த அறையில் ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சற்றுத் தள்ளி, கட்டிங் மெஷின் ஒன்று இருந்தது. அதுவும் அவர் பயன்படுத்தியதுதான். அவர் சேகரித்த ஓலைச் சுவடிகள், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில புத்தகப் பிரதிகளும் இருந்தன.
சீகன் பால்க், கிறித்தவத்தைப் பரப்புவதற்காகத்தான் இந்தியாவுக்கு வந்தார். அனுப்பி வைத்த டென்மார்க் மன்னர் சகல சகாயங்களும் செய்துதான் அனுப்பி வைத்தார் என்றாலும் இங்கே அவருக்கு அவ்வளவு சிறப்பான வரவேற்பு இருக்கவில்லை. ஏனெனில், அவர் பரப்ப வந்தது ப்ராட்டஸ்டண்ட் கிறித்தவம். (லுத்தரன் சபையைச் சேர்ந்தவர்). இங்கிருந்த டானிஷ் கவர்னரும் பிற அதிகாரிகளும் அது கூடாது என்று கருதியவர்கள்.
சொந்த நாட்டுக்காரர்களின் சகாயம் அகப்படாமல் உள்ளூர் மக்களின் உதவியால்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். தரங்கம்பாடி மக்களிடமே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து மணலில் எழுதிப் பார்த்து எழுத்துகளை அறிமுகம் செய்துகொண்டாலும் சொற்களுக்கு அர்த்தம் விளங்கிக்கொள்வதில் நிறைய சிக்கல் இருந்திருக்கிறது. கிராமத்து மக்களுக்கு அவருக்குத் தெரிந்த ஜெர்மன் தெரியாது. அவருக்கோ, தமிழ் தெரியாது.
உள்ளூரில் ஏதாவது ஐரோப்பிய மொழி அறிந்த யாராவது இருப்பார்களா என்று தேடி அழகப்பன் என்றொருவரைக் கண்டுபிடித்திருக்கிறார். அழகப்பனுக்குச் சிறிது போர்த்துகீசிய மொழி தெரிந்திருந்தது. அந்நாளில் வியாபாரம் செய்ய வந்தவர்களுடன் பேசிப் பழகிய அனுபவம். நல்லவேளையாக சீகன் பால்குக்கு போர்த்துகீசிய மொழி தெரிந்திருந்ததால் தமிழ்ச் சொற்களுக்கு அழகப்பனிடம் போர்த்துகீசிய மொழியில் விளக்கம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை (மணலில்) எழுதி எழுதிப் பார்த்தே தமிழ் கற்றிருக்கிறார். பிறகு சில வல்லுநர்களைத் தேடிச் சென்று இலக்கணம் படித்து, தமிழில் இருந்து ஜெர்மனுக்கும், ஜெர்மனில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துப் பயிற்சி செய்தார்.
இந்தப் பயிற்சிக்கு உதவியது, அவருக்குக் கிடைத்த நான்கு மாத சிறைவாசம். வேறு வழி? சீகன் பால்கின் லுத்தரன் திருச்சபைக்க மக்கள் வரத் தொடங்கியது அன்றைய தரங்கம்பாடி டேனிஷ் கவர்னருக்கு ஆகவில்லை. ஏதோ ஒரு காரணம். என்னென்னவோ குற்றச்சாட்டுகள். பிடித்துப் போடு.
ப்ளுட்ஸோ என்கிற நண்பருடன் சீகன் பால்க் தரங்கம்பாடிக்கு முதல் முதலில் வந்து இறங்கியபோது அவருக்கு வயது 24. வருடம் 1706. தமிழில் முதல் முதலாக அவர் ஒரு நூலை (இரட்சிப்பின் ஒழுங்கு) அச்சிட்டு வெளியிட்டது 1712ம் ஆண்டு. அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்கள், எத்தனை எத்தனையோ மொழிபெயர்ப்புகள். இதன் பிறகுதான் தமிழ்நாட்டில் கிறித்தவம் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
பிரசங்கங்கள், பிரசாரங்கள் ஒருபுறம் இருந்தாலும் மக்களை உட்கார வைத்து, படிக்க வைத்து, சிந்திக்க வைத்து, முடிவெடுக்க வைத்தாலொழிய மன மாற்றமோ மத மாற்றமோ சாத்தியமில்லை என்பது சீகன் பால்குக்குத் தெரிந்திருக்கிறது. என்ன நோக்கத்துடன் அவர் தரங்கம்பாடிக்கு வந்தாரோ, அதை வெற்றிகரமாக சாதித்து முடித்தார்.
இன்றைக்குச் சரியாக 311 ஆண்டுகள் நிறைந்துவிட்டன. அச்சுத் துறையே அபாரமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து நம்ப முடியாத உயரங்களுக்குச் சென்றுவிட்டது. மறுபுறம், மின்நூல்களும் ஒலி நூல்களும் மெல்ல மெல்லப் பெருகத் தொடங்கியிருக்கின்றன.
நாம் ஊருக்கொரு புத்தகக் காட்சி நடத்திக்கொண்டு, கூடவே தமிழன் ஏன் புத்தகம் படிப்பதில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.