கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 14

நாளையோடு விடுமுறை முடிகிறது. ஓடியது தெரியாமல் ஓடி முடிந்துவிட்ட ஒரு மாதம். முப்பது நாள்களில் தூங்கிய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் மனத்துக்குள் வளர்மதியை நினைத்துக்கொண்டிருந்தது தவிர வேறென்ன செய்தோம் என்று பத்மநாபன் யோசித்துப் பார்த்தான். குறிப்பாக ஏதும் நினைவுக்கு வரவில்லை. இடையில் ராஜலட்சுமி திரையரங்கில் ஒன்றிரண்டு படங்கள் பார்த்தது ஒரு முக்கிய சம்பவமாக அவனுக்கே தோன்றவில்லை.

நண்பர்கள் யாருமில்லை. எல்லோருக்கும் விடுமுறையைக் கழிக்க யாராவது ஒரு அத்தை வீடு, மாமா வீடு, தாத்தா வீடு என்று ஏதேனும் இருக்கிறது. தனக்கு மட்டும் பைபாஸ் முத்துமாரியம்மன் அம்மாதிரியான உறவுக்காரர்கள் வீடுகளைப் படைக்கத் தவறிவிட்டாள்.

‘ஏன், ஒனக்கென்னாடா கொறைச்சல்? போனன்னா அத்தைக்காரி ஆசையாத்தான் இருப்பா. உங்கம்மா உடுவாளா கேளு. பஸ் ஏத்தி வுட்டன்னா கருங்குழில அவ வந்து கூட்டிக்கினு போயிடுவா’ என்று அப்பா ஒரு நாள் சொன்னார்.

குடும்ப அரசியலின் ஏதோ ஒரு கண்ணியில் அத்தை உறவு விடுபட்டிருக்கிறது என்பதை பத்மநாபன் புரிந்துகொண்டான். எதற்கு அம்மாவிடம் இது குறித்துப் பேசி எதையேனும் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும்?

அவன் பேசாதிருந்துவிட்டான். எங்கும் போகவேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம். யாருமற்ற தனிமையில் வளர்மதியை நினைத்துக்கொண்டிருந்தால் போதும். அதுவும் அன்றைக்கு திடீரென்று நினைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனபோது வழியிலேயே கண்ணாடிக்காரர் கடை வாசலில் அவளைச் சந்திக்க நேர்ந்தது ஆயுசுக்கும் மறக்காது.

முற்றிலும் மாறுபட்ட வளர்மதியை அன்றைக்கு அவன் கண்டான். யூனிஃபார்ம் இல்லை. நீல வண்ணத்தில், கவிழ்த்த V ஷேப்பில் நெஞ்சையள்ளும் தாவணி. அப்போதுதான் குளித்திருந்தாள் போலிருக்கிறது. முகத்தில் எப்போதுமுள்ள மலர்ச்சிக்கு மேலும் சற்று நீரூற்றியது போலிருந்தது. மடித்துக்கட்டிய பின்னலும் அங்கே சிறகடிக்கும் பட்டாம்பூச்சி ரிப்பனும்.

‘டேய் குடுமி! நீயா?’ என்றாள் வியப்புடன்.

அவன் பார்த்தபோது அவள்தன் பத்து விரல்களிலும் மோதிர வத்தல் அணிந்திருந்தாள். ஐந்து பைசாவுக்கு இரண்டு என்று கிடைக்கும் மஞ்சள் நிற மோதிரம். அப்படியே கடித்துச் சாப்பிட்டுக்கொண்டே போனால் இறுதியில் பத்து விரல்களும் எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் பளபளக்கும்.

பத்மநாபனுக்கு அதைப் பார்த்ததுமே வெடுக்கென்று தானொரு மோதிரத்தைக் கடிக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் வளர்மதியின் விரல். தப்பு. அவளே நீட்டி எடுத்துக்கோ என்றால் நன்றாக இருக்கும். அப்போதுகூட மரியாதையாக விரலிலிருந்து உருவினால்தான் அழகே தவிர கடிப்பதல்ல.

‘ஊருக்கு எங்கியும் போகலியாடா?’ என்று வளர்மதி கேட்டாள்.

‘நீ போகலியா?’

‘மெட்ராஸ்தான் போனேன். எங்க பெரியம்ம வீட்டுக்கு நாலு நாள். போரடிச்சிது. வந்துட்டேன்.’ என்றாள்.

வேறென்ன பேசலாம்? பத்மநாபன் யோசித்தான். பத்தாம் வகுப்புக்கான புத்தகங்கள் வாங்கிவிட்டாளா? படிக்கத் தொடங்கிவிட்டாளா? யாரிடமாவது ட்யூஷன் போகப்போகிறாளா? லீவில் என்ன படம் பார்த்தாள் அல்லது பார்க்க திட்டமிட்டிருக்கிறாள்? ராஜாத்தி எங்கே போயிருக்கிறாள்? க்ளாரா பர்த்டே இந்த மாதம்தானே வருகிறது?

ஆயிரம் விஷயங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அன்பே, நீ என்னை எப்போது காதலிக்கப்போகிறாய்? அதைச் சொல் முதலில். அல்லது காதலிப்பதைத் தெரியப்படுத்தப் போகிறாய்?

கேட்கலாமா என்று நினைத்தான். திரும்பத் திரும்ப அதையே கேட்பது அவனுக்கே அலுப்பாக இருந்தது. பார்த்துக்கொண்டிருப்பதே காதலல்லவா? நினைத்துக்கொண்டிருப்பது அதனைக்காட்டிலும் மேன்மை பொருந்தியது.

மனத்துக்குள் என்னென்னவோ தோன்றுகிறது. சொற்களில்லாமல் உணர்ச்சி ஒரு வடிவமற்ற வர்ணஜாலக் குழம்பாகப் பொங்கிப் பொங்கித் தணிகிறது. அடிப்படை ஒன்றுதான். நோக்கம் ஒன்றுதான். வேட்கையும் அதுவேதான். ஆனால் எப்போது வடிவம் பெறும்?

‘பத்தாங்கிளாசுக்குப் படிக்கிறியாடா?’ வளர்மதிதான் கேட்டாள்.

சுதாரித்து, ‘இன்னும் இல்லை’ என்று பதில் சொன்னான். என்ன ஆனாலும் இந்தச் சந்திப்பில் காதல் குறித்து மட்டும் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டான். அவள் எதிர்பார்க்கட்டுமே? ஏண்டா குடுமி, என்ன லவ் பண்றேன்னு நீ சொல்லவேயில்ல? கேட்கட்டும். கேட்கத் தோன்றுமல்லவா. கடந்த ஆண்டு முழுதும் ஒவ்வொரு முறை பேசும்போதும் சொல்லியிருக்கிறான்.

சீ போடா. லூசு. பைத்தியம் மாதிரி பேசாத. பேக்கு. எங்க தாத்தாக்கு தெரிஞ்சா.. ஹெட் மாஸ்டர் என்ன பண்ணுவாரு தெரியுமா? நீ உதைபடப்போற. உங்கப்பாட்ட வந்து சொல்லட்டுமா? வேணாண்டா குடுமி. இதெல்லாம் தப்பு. வேற எதுமே பேசமாட்டியா?

சந்தர்ப்பங்களுக்கேற்ப பதில்கள் வெவ்வேறு விதங்களில் வந்திருக்கின்றன. மிகக் கவனமாக ஒரு முறை கூட அவள் கோபத்தை வெளிக்காட்டியதில்லை. அல்லது வெறுப்பை. தவிர்ப்பது கூட ஒரு விளையாட்டே என்பது போல. காதல் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதாக.

உண்மையிலேயே அப்படித்தான் நினைக்கிறாளா?

என்றால் எப்பேர்ப்பட்ட மடத்தனம்! காதல் எத்தனை பெரிய, உன்னதமான, தெய்வீகமான விஷயம்! அது மனத்துக்குள் வந்ததிலிருந்து கெட்ட சிந்தனைகள் அறவே இல்லாது போய்விட்டன. முன்பெல்லாம் ராஜலட்சுமி திரையரங்கில் ஞாயிறு காலை வேளைகளில் சிவப்பு பல்பு போட்டு திரையிடப்படும் படங்களையும் அவற்றின் போஸ்டர்களையும் பார்க்க மனம் எப்படி அலையும்! இப்போது அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கத் தோன்றுவதில்லை.

வளர்மதி. அவளைப் பற்றிய ஞாபகம் என்றால் முதலில் வருவது அவளது முகம். அப்புறம் குரல். சீ போடா என்கிற செல்லக் கோபம். அப்புறம் அந்த வி ஷேப் தாவணி. பட்டாம்பூச்சி பறக்கிற ரிப்பன். ஆ, அந்தப் பாதங்கள்!

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் எத்தனை மிருது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவன் ரசிப்பான். அவளுக்கென்றே எங்கிருந்தோ பூப்போட்ட செருப்பு கிடைத்துவிடுகிறது. ஒரு பூவின்மீது பயணம் செய்யும் இன்னொரு பூ.

‘ஊருக்கு எங்கயும் போகலியாடா?’ என்று வளர்மதி கேட்டாள்.

‘இல்ல வளரு. சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம்போறதில்ல.’

‘படம் போனியா?’

‘இல்ல.’

‘படிக்கிறியான்ன?’

யோசித்தான். ஆம் என்று சொல்லலாம். ஆனால் பொய். எனவே இல்லை என்று சொன்னான்.

‘வேற என்னதான் பண்ற?’

‘சும்மாதான் வளரு இருக்கேன்’

‘ஐயே, சும்மாருக்கற மூஞ்சியப்பாரு’ என்று சொல்லிவிட்டு ஒரு மோதிரத்தைக் கடித்தபடி நடக்கத் தொடங்கிவிட்டாள்.

பத்மநாபனுக்கு அந்தச் சந்திப்பே ஒரு மாதத்தைக் கடத்தப் போதுமானதாக இருந்தது. ரகசியமாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் நிறைய கவிதைகள் எழுதினான்.

அன்பே வளர்மதி!
உன்னை நினைத்து
ராத்திரியெல்லாம் நான்
தூங்குவதே இல்லை
நீ கண்ணைவிட்டு இறங்கினால்தானே
நான்
கண்மூட முடியும்

என்று எழுதி ஒரு கேள்விக்குறியும் இரண்டு ஆச்சர்யக்குறிகளும் போட்டுவிட்டுப் பார்த்தால் கவிதை பிரமாதமாக வந்துவிட்டதுபோலத் தோன்றியது. ஒரே பரவசமாகிவிட்டது.

யாரிடமாவது காட்டவேண்டுமென்று மிகவும் விரும்பினான். ஆனால் நண்பர்கள் இல்லாத மாதம். தானே திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து மேலும் மேலும் நிறைய கவிதைகள் எழுதினான். ஒரு பக்கம் ஓவியனாகும் எண்ணம் வேறு உயிரை வாங்கிக்கொண்டிருந்தது. அப்பா எங்கேயோ புக் பேங்கில் சொல்லி வைத்து பத்தாம் வகுப்புப் புத்தகங்களில் இரண்டு மூன்றை வாங்கிவந்திருந்தார். அட்டை கிழிந்திருந்த புத்தகம்.

‘மெதுவா படி. ஒண்ணும் அவசரமில்ல’ என்று எதற்கும் சொல்லிவைத்தார். அவரையாவது சந்தோஷப்படுத்தலாம் என்று அடுத்த இரண்டு தினங்கள் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் நோட்டுப்புத்தகத்தில் வளர்மதி கவிதைகள் எழுதினான்.

ஒரு விஷயம் அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அப்பா இனி தன்னை இம்சிக்கப் போவதில்லை. வளர்மதி தன் காதலை ஏற்கும்வரை தனது இம்சைகள் ஓயப்போவதுமில்லை. பைபாஸ் முத்துமாரியம்மா! இன்னும் எத்தனை நாளைக்கு என்னைப் படுத்தப்போகிறாய்?

மறுநாள் ரிசல்ட் என்றதும் அம்மா யூனிஃபார்ம்களைத் தோய்த்து அயர்ன் செய்து வைத்தாள். அவனது அழுக்கு சுமந்த புத்தகப் பைக்கும் ஒரு விடிவு வந்தது. தோய்த்துக் காயப்போட்டதில் நல்ல மொடமொடப்பாக விரைத்துக்கொண்டு நின்றது. அப்பா புதிய பேனா ஒன்று வாங்கித் தந்திருந்தார். இந்த முறை பாஸ் பண்ணுவானா என்கிற கவலை இல்லை. ரேங்க் எத்தனை என்பதுதான்.

‘ஏண்டா எப்படியும் அஞ்சு ரேங்குக்குள்ள வருவ இல்ல?’ என்று அன்று இரவு அப்பா கேட்டார்.

பத்மநாபனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. தேர்வு எப்படி எழுதினோம் என்பதே நினைவில் இல்லை. எல்லாமே சரியாக எழுதியது போலவும், அனைத்துமே தவறு என்பது போலவும் இருவிதமாகத் தோன்றியது.

கடவுள் விட்ட வழி என்று நினைத்துக்கொண்டுதான் ரிசல்ட் பார்க்கப் போனான். கும்பலில் நோட்டீஸ் போர்டை நெருங்கி, நம்பர் தேடி, இருப்பதைக் கண்டு அரை வினாடி திருப்தியடைந்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியே வந்ததுமே மகிழ்ச்சி என்ற ஒன்று தன்னிடம் இல்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.

ரிசல்ட் பார்க்க வளர்மதி வரவில்லை. அழுகை வந்தது. யாருடனும் பேசப்பிடிக்காமல் அவன் விறுவிறுவென்று வீட்டுக்கு நடக்கத் தொடங்கியபோது தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஹெட்மாஸ்டர் அவனைப் பார்த்து, கையசைத்தார். அருகே வரும்படி கூப்பிட்டார்.

[தொடரும்]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter