வாழ்வு தொடங்கி வாட்சப் வரை பரவலாகச் சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். இந்தக் குழு அமைப்பு என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது போல. பிரச்னை இல்லை. நான் குழுவில் இருக்க வேண்டும் என்று யாராவது நினைக்கிறார்கள். வேறு யாராவது சேர்க்கிறார்கள். எனவே, இருக்கும்படி ஆகிவிடுகிறது. ஆனால் எந்தக் குழுவிலும் நடவடிக்கைகளில் பங்களித்த நினைவில்லை. ஒரு பார்வையாளனாக இருப்பதில் உள்ள சௌகரியத்தை மட்டுமே அனுபவிக்க விரும்புகிறேன்.
நான் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கென்று ஒரு வாட்சப் குழு இருக்கிறது. இந்தக் குழுவில் அடிக்கடி வருகிற குறுஞ்செய்திகள் பெரும்பாலும் பார்க்கிங் தொடர்பானதாக இருக்கும்.
‘அன்பார்ந்த அசோசியேஷன் செகரட்டரி! என் பார்க்கிங்கில் யாரோ ஒரு முட்டாள் அவன் பைக்கை நிறுத்திவிட்டுப் போய்விட்டான். நான்கு தினங்களாக வண்டியை அவன் எடுக்கவேயில்லை. என் வண்டியை நிறுத்த இடமின்றி வெளியே நிறுத்துகிறேன். அதனால் என் வண்டி மீது புறாக்கள் அசுத்தம் செய்துவிட்டன. நாளைக் காலைக்குள் அந்த முட்டாள் தன் வண்டியை எடுத்துவிட்டு என் வண்டிக்கு இடம் தராவிட்டால் அவன் வண்டிமீது நான் அசுத்தம் செய்வேன். இனிய அன்புடன்…’
இது சிறிது நாகரிகமான குறுஞ்செய்தி. இடம் மாற்றி பார்க்கிங் செய்வோரின் ஏழு தலைமுறையை இழுத்து வைத்துக் காறித் துப்புவோர் பலர் இருக்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஹாருகி முரகாமி ரசிகர் வட்டம் என்றொரு குழுமம் இருக்கிறது. அவர் நமது தொழில் போட்டியாளர் என்பதால் நடப்பதை கவனிக்க நானும் அதில் உறுப்பினராக இருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு அக்குழுமத்தில் ஒரு புதிய ரசிகர் முரகாமியை எங்கிருந்து படிக்கத் தொடங்கினால் சரியாக இருக்கும் என்று ஒரு வினாவை முன்வைத்தார். இதற்கு வந்த பதில்களுள் ஒன்று:- ‘முரகாமி ஒரு ஓவர் ரேட்டட் எழுத்தாளர். படித்தே தீரவேண்டிய ஆள் அல்ல. படித்துத்தான் ஆக வேண்டும் என்றால் ஓசிப் புத்தகம் கிடைத்தால் மட்டும் படிக்கவும்.’
இது யாரோ எதிரிகளின் சதி என்று பார்த்தவுடன் தெரிந்துவிடுகிறது. குழு நிர்வாகிகள் இந்த கமெண்ட்டை அழித்துவிட்டு அமைதியாகப் போயிருக்கலாம். ஆனால் விடுவார்களா? சமகால ஜப்பானிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே பெயர் சொல்லித் திட்டத் தொடங்கினார்கள். அதாவது யார் யாரையெல்லாம்விட முரகாமி சிறந்தவர் என்பதை நிறுவுவதற்காக அம்மொழியின் அத்தனை மைந்தர்களின் உள்ளாடைகளையும் உருவிவிட்டார்கள். இந்தக் கலவரக் காட்சிகளை வேறொரு நேயர் லிங்க் எடுத்துச் சென்று முரகாமியின் பக்கத்தில் கொடுத்துக் கண்டு களிக்கச் சொன்னது இதன் உச்சக்கட்டம். நல்லவேளை, அவரது பக்கத்தை நிர்வகிப்பது அவரது அமெரிக்கப் பதிப்பு நிறுவனம் என்பதால் அந்தப் பதிவை உடனே அவர்கள் நீக்கிவிட்டார்கள்.
ஃபேஸ்புக்கில் தினமும் யாராவது ஏதேனுமொரு குழுவில் என் பெயரை இணைத்துவிடுகிறார்கள். முன்பெல்லாம் இது மிகவும் எரிச்சலாக இருக்கும். ஆனால் யாரும் சொல்லிக் கேட்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்ட பின்பு உணர்ச்சிவயப்பட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறேன். சகிக்கவே முடியாத குழுமம் என்றால் மட்டும் உடனே வெளியேறிவிடுவேன். மீண்டும் இணைக்க முடியாதபடி ஒரு டிக் செய்துவிட்டோ, அல்லது அக்குழுமமே ஒரு ஸ்பாம் என்று குறிப்பிட்டுவிட்டோ (இது அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது) இப்படிச் செய்கிறேன்.
வெளியேற முடியாத குடும்பக் குழுமங்கள், வெளியேற வழியே இல்லாத தொழில் சார்ந்த குழுமங்கள், வெட்டியாக ஆரம்பித்துவிட்டுப் பிறகு இயங்காமல் போன குழுமங்கள், நானே விரும்பிச் சேர்ந்து பிறகு தாங்க முடியாமல் வெளியேறிய குழுமங்கள், தினமும் பிரசங்கம் நடத்தும் தனி நபர் சுவிசேஷக் குழுமங்கள், புத்தகக் குழுமங்கள், சினிமா குழுமங்கள் – எண்ணினால் கட்டாது.
சில சமயம் தோன்றும். யார் கவனத்திலும் இல்லாமல், எல்லாருடைய நினைவில் இருந்தும் உதிர்ந்து போய், ஒரு வீதி எருமையாக எஞ்சிய காலம் முழுவதும் நடமாடிவிட்டுப் போய்விட முடிந்தால் போதும் என்று. யார் கண்டது, எருமைகளுக்கொரு சங்கம் இருக்காதென்று?
இப்படியே இருந்துவிடுகிறேன்.