குறிப்புகளைப் பற்றிய ஒரு குறிப்பு

கையால் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் என் கையெழுத்து நன்றாக இருந்தது. எவருக்கும் புரியும்படி இருந்தது. குறிப்பாக, பவுண்டன் பேனாக்களைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே அச்செழுத்தைப் போலவே இருக்கும். பார்க்கர், பைலட் பேனாக்கள், எழுதுபவனின் கையெழுத்தை மெருகூட்டுவதற்கென்றே உருவாக்கப்படுபவை என்று தோன்றும்.

என் கையெழுத்து கெடத் தொடங்கிய புள்ளி, பால்பாயிண்ட் பேனாக்களில் எழுத ஆரம்பித்ததுதான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறிய பின்பு, கையால் எழுதுவது அறவே நின்று போனது. எப்போதாவது எழுத நேரும்போதுதான் அது கெடத் தொடங்கியிருக்கிறது என்பது உறைக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் கையால் எதற்கு எழுதப் போகிறோம் என்கிற அலட்சியம். அப்படியே விட்டுவிட்டதால் அது தன் இஷ்டத்துக்கு மோசமாகிப் போனது.

சென்ற மாதம் ஆன்லைன் கீதை வகுப்பு ஒன்றனில் சேர்ந்தேன். பதினெட்டு நாள் வகுப்பு. வகுப்பு நடத்தியவர் நல்ல ஞானஸ்தர். பேசும்போதே பத்தி பிரித்துத் தெளிவாகப் பேசுபவராக இருந்தார். கீதையை நான் அணுகும் விதமும் அவர் அணுகிய விதமும் முற்றிலும் வேறு வேறாக இருப்பினும் புதிதாகச் சில தரிசனங்கள் அந்த வகுப்பில் எனக்குக் கிடைத்தன.

விஷயம் அதுவல்ல. அந்த வகுப்பில் கலந்துகொண்ட பதினெட்டு நாள்களும் தவறாமல் அவர் பேசும்போது குறிப்பெடுத்தேன். அவர் என்னவோ நிறுத்தி நிதானமாகத்தான் ஒவ்வொரு சுலோகத்தையும் விளக்கினார். ஆயினும் என்னையறியாமல் கிறுக்கித் தள்ளித்தான் எழுதிக்கொண்டேன். மொத்த வகுப்புகளும் முடிந்த பின்னர் அந்த நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எனக்கே என் கையெழுத்து அவமானமாக இருந்தது. ஒரு அவசர ஆத்திரத்துக்குக் கூட இன்னொருவரிடம் எடுத்துக் காட்ட முடியாது என்று தோன்றியது. நல்ல வேளையாக நான் எழுதுவது எனக்கே புரியாமல் போவதில்லை. அதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன்.

ஒருவரது கையெழுத்து அவரது குணத்தை வெளிக்காட்டும் என்பதை நான் நம்பவில்லை. மிக அழகான கையெழுத்தைக் கொண்ட மிக மோசமான மனிதர்களை நான் அறிவேன். அதைப் போலவே மிக மோசமான கையெழுத்துடைய நல்லவர்களையும் அறிவேன். ஆனால், என் கையெழுத்தைக் கொண்டு என்னால் அறிய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். பழக்கம் விட்டுப் போனால் எதுவானாலும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

கடிதங்கள் வழக்கில் இருந்த காலத்தில் கையெழுத்து, பேசுபொருளாக இருந்தது. இன்று அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மிகவும் மோசமாக எழுதப்படும் கையெழுத்து மட்டும் எப்போதாவது சுட்டிக்காட்டப்படுகிறது. சமீபத்தில் சலம் நாவல் பிரதியில் வாசகர் ஒருவருக்கு ‘அன்புடன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்த லட்சணத்தைச் சுட்டிக்காட்டி நண்பர் ரமேஷ் வைத்யா ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்திருந்தார். சிறிது வெட்கமாக இருந்தது.

சில சமயம் தோன்றும். முயற்சி செய்தால் முடியாத செயல் என்ற ஒன்றில்லை. ஆனால் முழு மூச்சாக இறங்க வேண்டும். அப்படிச் சாதித்தவை பல உண்டு. கணிசமான நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயங்களை இப்போதெல்லாம் இது நமக்குத் தேவையா, எடுப்பதா வேண்டாமா என்று தீரப் பரிசீலிக்காமல் கை வைப்பதில்லை. எத்தனை மூட்டைகளைத்தான் முதுகில் ஏற்றிக்கொண்டே போவது?

கையெழுத்து சார்ந்து எனக்குள்ள கவலையெல்லாம் ஒன்றுதான். இப்போது நேரம் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் என் மகள் அவற்றைப் படித்துப் பார்க்க நினைக்கலாம். என் கதைகள், கட்டுரைகள் என்று எதுவும் கையெழுத்துப் பிரதியாக இப்போது இல்லை. பிறர் எழுதியவை, பேசியவை, நான் படித்தவை சார்ந்து எழுதி வைத்த குறிப்புகள்தாம் உள்ளன. அவற்றை அவள் எப்போதேனும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு தரமான ‘நோட்ஸ்’ தயாரிப்பாளன். என் குறிப்புகளைக் கொண்டு மிக நிச்சயமாக அந்தக் கருப்பொருள் சார்ந்து நான் அறிந்தவற்றின் முழுமையை எட்டித் தொட்டுவிட முடியும் என்று நம்புகிறேன். அதனைப் பிடித்துக்கொண்டு இன்னும் பரந்த வெளியில் தேடிச் செல்லவும் ஆங்காங்கே வழி சொல்லியிருப்பேன்.

சலம் எழுதுவதன் பொருட்டு சுமார் இரண்டாண்டுக் காலம் அதர்வ வேதத்தையும் அதன் உபநிடதங்களையும் மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலும் அலுவலகத்திலுமாகக் கையால் எழுதிய குறிப்புகள், கணினியில் டைப் செய்து வைத்த குறிப்புகள், போனில் எழுதி வைத்த குறிப்புகள், பிடிஎஃப்பில் ஹைலைட் செய்து, கமெண்ட் பாக்ஸில் எழுதியவை, பிடிஎஃப்களிலேயே பக்கவாட்டில் ஆப்பிள் பென்சில் கொண்டு எழுதிய குறிப்புகள், தொடர்பான இணையச் சுட்டிகள் என்று அவற்றை மட்டும் தொகுத்தால் இன்னொரு சலம் அளவுக்குப் புத்தகமே தேறும்.

எக்காலத்திலாவது என் மகள் அவற்றையெல்லாம் எடுத்துப் பார்ப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில குறிப்புகள் அவளுக்குப் புரியும். பெரும்பாலும் புரியாமல் போகப் போகிறதென்பதுதான் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முழுதும் ஒரு மனிதன் அப்படி என்ன கிறுக்கித் தள்ளியிருக்கிறான் என்கிற ஆர்வத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு அந்தப் பிரதிகளைத் தனக்கடுத்த தலைமுறைக்கு அவள் விட்டுச் செல்லக்கூடும்.

அவளது ஓய்வுக் காலத்தில், அதைப் படிக்க முடியாவிட்டாலும் இந்தக் குறிப்பைப் படிப்பாள் அல்லவா? என் புத்தகங்களில் என்னையும் என் நோட்டுப் புத்தகங்களில் என் அக்கறைகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதாவது அப்போது அவளுக்குப் புரியும்.

இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள குறுகிய இடைவெளியில்தான் வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading