நவீன ஓவியக்கலையானது கிபி 18ம் நூற்றாண்டுக்குச் சிலபல ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சியாகப்பட்டது விலைவாசியைப் போல் தறிகெட்டு மேலேறிவிட்டதை ஓவியரல்லாதோர் அதிர்ச்சியுடன் கவனித்து வந்திருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் இந்த ஐரோப்பியர்கள்தான். நாடு பிடித்தோமா, நிறைய சம்பாதித்தோமா, குடித்து கூத்தடித்து வாழ்ந்து முடித்தோமா என்றில்லாமல், ஆடு மாடு வளர்ப்பதற்கு பதில் கலை வளர்க்கத் தொடங்கியதை ஒரு முக்கியத் திருப்பமாக சரித்திர ஆசிரியர்கள் (இவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்குப் புத்தகம் எழுதாதவர்கள்.) குறிப்பிடுகிறார்கள்.
நவீன ஓவியக் கலையின் முதல் கட்டமானது, அடுத்தது காட்டும் பளிங்குபோல் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லுவதைச் சற்றே அழகூட்டிச் சொல்வது என்பதாக இருந்தது. பின்னர் காலப்பெண்ணானவள் சில இசங்களைப் பிறப்பித்தாள். அவை எல்லாமே கம்யூனிசம்போல் அபாயகரமானதல்ல என்றாலும் ஒரு சில அப்படியும் இருக்கத்தான் செய்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த இசங்களின் வருகைக்குப் பின்னர் நவீன ஓவியமாகப்பட்டது தன் எழில்மிகு கோர நாக்குகளை நாலாபுறமும் நீட்டிச் சுழட்டி விதவிதமான வர்ண ஜாலங்களைக் காட்டத்தொடங்கியது. நிற்பது, நடப்பது, ஆடுவது, பாடுவது, அழுவது, சிரிப்பது, சண்டையிடுவது, வேட்டையாடுவது, விருந்துபசாரம் செய்வது, உண்டு களித்திருப்பது, போர் புரிவது, பிரசாரம் செய்வது, கழுவேற்றுவது, கழுவேற்றப்பட்டானைக் கட்டையில் கிடத்தித் தீமூட்டுவது, அதன்பின் கூடி நின்று அழுவது, அழுது முடித்துவிட்டு அரிசி உப்புமா சாப்பிடுவது இன்னோரன்ன யதார்த்தக் காட்சிகளை யதார்த்தம் தெரியாத அளவு திறமையாகக் காட்சிப்படுத்தத் தொடங்கினார்கள்.
இக்கலையின் பரவலாக்கம் இந்தியத் துணைக்கண்டத்துக்குக் கப்பல் மற்றும் தரைவழி மார்க்கங்களில் வந்து சேர்ந்தபோது இராஜா ரவிவர்மா போன்ற ஓவிய மேதைகள் இதனை சம்ரட்சித்து வளர்க்கத் தலைப்பட்டனர். அந்த ஓவியர்கள் காலமான பிறகு ஜெயராஜ், மாருதி, சியாம் போன்ற ஓவிய மேதைகள் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார்கள். இரவின் மயக்கம், பகலின் மப்பு கலைப்பு, ஹேங் ஓவர் அவஸ்தைகள் உள்ளிட்ட நுணுக்கமான உளவியல் மற்றும் தாவரவியல் சார்ந்த நுண்ணுணர்வுகளை ஓவிய மொழியில் இவர்கள் மொழிபெயர்த்துப் பிரசுரித்தார்கள்.
இந்தப் பிரசுரங்கள் பல இலட்சக்கணக்கில் விற்பனையான சரக்குகளின் இடையே சொருகிவைக்கப்பட்டதால் இவையும் விற்பனையானதாகவே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மதியப் பொழுதுகள், இடுப்பு வலி, முழங்கால் சிராய்ப்பு, ஆவக்காய் ஊறுகாய் போன்ற விவரிக்கவொண்ணாத அனுபவச் சிலிர்ப்புகளை இந்நவீன ஓவியக்கலையானது தாரை மற்றும் தப்பட்டையொலியாக உருமாற்றும் அதிரகசியம் ரசிக்கத்தக்கதே.
இவ்வியாசத்தின் மேலுள்ள நவீன ஓவியமானது 21ம் நூற்றாண்டில் (சரியாகச் சொல்வதென்றால் கிபி 2012 ஜுன் மாதம் இரண்டாம் தேதி இந்திய இரவு நேரம் 8.40) ஒரு நவீன ஓவியரல்லாதாரால் வரையப்பட்டது என்பது சரித்திரக் குறிப்புகளுக்காக. இவ்வோவியத்தின் தலைப்பு ‘காகம் இல்லாத வெளி’ என்பதாகும்.
இதுக்கு தமிழ்ல டிரான்ஸிலேசன் எங்க டாக்டர் சுகான்மேன் சார் செஞ்சு கொடுத்து அதை நான் படிக்கணும் அது 1தான் என்னோட இப்போதைய ஆசை #அம்புட்டுதேன்
சரி, புரிந்தது 😉
அதாகப்பட்டது காலவெளியான பெருவேளியிலே இந்த காகம் இல்லா வெளியாகப்பட்டது ஒரு தனித்தன்மையுடன் பேசப்படுவது நிச்சயம் 😀 What a man! 😀
லியனார்டோ டாவின்சியின் ஆரம்பகால ஒவியங்களை ஒத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 🙂
குழலினிது யாழினிது எனதொடங்கும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப தம் மகனோ மகளோ முதன் முதலில் ஓவியம் என்ற பெயரில் வரைந்து வைத்திருக்கும் அந்த அழகோவியத்திற்கு ஈடு இணையாக எந்த ஒருவருடைய ஓவியத்தையும் வைக்க முடியாது. மேற்காணும் ஓவியமும் அந்த வரிசையில் உள்ளதுதான்.
ராஷித் அஹமத்: உங்கள் கமெண்ட்டைப் பார்த்தால் என் அப்பா சந்தோஷப்படுவார் 😉
வரிகளுக்கு ஊடாகப் படித்தல் என்ற நுட்பத்தினைப் போன்று இங்கு வண்ணங்களுக்கு ஊடாக பார்வையாளனை சிந்திக்க வைக்கும் அற்புத நுட்பங்கள் ஓவியருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. மலைகளும். தென்னை மரத்தின் உடலும் பழுப்பு நிறம். வழக்கமான பசுமை அல்ல. புவி வெப்பமயமாதல், கானகம் அழிதல், மரங்கள் குறைதல், பாலைவனங்கள் பெருகுதல் போன்ற பல ஆச்சரியகரமான செய்திகளை இங்கு ஓவியர் பதிவு செய்கிறார். சூரிய கதிர்களை உற்று நோக்கினால் தெரிவது என்ன? “ஒழுங்கின்மை”. கால நிலை மாறுதல்களிலும். பருவ காலங்களிலும் இன்று நாம் காணும் சகல விதமான ஒழுங்கின்மைகளையும் இவை எல்லாவற்றிற்கும் ஆதாரமான சூரியனை வரைந்து விளக்குகிறார். தென்னையில் ஏறும் மனிதன் பாதி மரத்தில் நிற்கிறான். முழுவதும் ஏறவில்லை. காரணம்? இயற்கை சூழியலை இப்படி நாசப்படுத்தும் மனித குலம் தனது லட்சியத்தை அடையவே முடியாது என்பதை எப்படி விளக்குகிறார் பாருங்கள். இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தென்னையின் இலைகள் பச்சை நிறம். இதன் மூலம் அசைக்க முடியாத நம்பிக்கையின், சாதனைகளின், சாத்தியக் கூறுகளை பார்வையாளனுக்கு விட்டு செல்கிறார். மொத்தத்தில் இந்த ஓவியம் இன்றைய நிலையின் அபாயத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் ஒருங்கே விளக்குகிறது. ஓவியர் பல விருதுகளுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. (ஓவியரின் பெயர், அவரது மற்ற ஓவியங்கள் குறித்த விவரங்கள், வாழ்க்கைக் குறிப்பு போன்ற விவரங்கள் பதிவில் காணப்படவில்லை. தயவு செய்து எங்களுக்குத் தெரியப் படுத்தவும். நன்றி)
செல்வகுமார்
’ஓ’ என வியப்பவன், வியக்கவைப்பவனே ஓவியன் என்பதற்கேப, தாங்கள் வாரணமுகனின் வாகனத் தூரிகை-கைக்கொண்டு இயற்றிய இக்காவிய (பிற்சேர்க்கையில் காவி வண்ணமும் சேர்க்கவும்) ஓவியமானது மேவிய புகழ் பெற்று, ‘விளங்கட்டும்’ என, வாழ்த்த வயதில்லாததால் (இன்னுமா நேத்து எஃபக்ட் கண்டினியூ ஆகுது) வணங்குகிறேன். 🙂
unga daugher-ai varainju kodukka solli post pannittu neenga panninatha sollareengalaa?
காகம் இல்லாத வெளி, எண்ணிலடங்கா குறியீடுகளால் தன்னை தகவமைத்துக் கொண்டு நவீனத்தின் ஆகச்சிறந்த கூறுகளையும், பின்நவீனத்துவத்தின் பன்முக தன்மையோடும், இருத்தலியத்தின் இயல்போடும் வாழ்வின் அங்கதங்களை ஒரு சட்டகத்தினுள்ளே பார்வையாளனுக்கு காட்சிப்படுத்துகிறது. காகங்கள் இங்கே விளிம்பு நிலை மக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். சமூக அடுக்குகளில் இவர்கள் கடைசி படிக்கட்டுகளில் இருந்து காணாமல் போய் கொண்டிருப்பதை படிமங்களோடு நம் முன் முன் வைக்கிறது இவ்வோவியம்.
என் நண்பன் சுரேஷ் சென்னை ஓவியக்கல்லூரியில் படித்தான். அது முடித்தப்பின் சோழமண்டலம் எனப்படும் மகாபலிபுரத்தில் உள்ள பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து கோணல்மாணாலாக சிற்ப்பங்கள் மற்றும் புரியாத ஓவியம் வரைவது என்று பயிற்சி பெற்றான். இப்போது அமெரிக்காவில் அனிமேஷன் செய்து கொண்டிருக்கிறான்.
எனக்கு என்றுமே நவீன ஓவியங்கள் புரிவதில்லை. நவீன ஓவியங்களை வீட்டு வரவேற்ப்பரையில் மாட்டி வைத்து அழகு பார்க்கிறார்கள். மாட்டி வைத்திருக்கும் சொந்தக்காரருக்கு அந்த ஓவியங்களின் அர்த்தங்கள் விளங்குவதில்லை. நானும் இரண்டு நவீன ஓவியங்களை என் வரவேற்ப்பரையில் மாட்டி வைத்திருக்கிரேன் பந்தாவிற்க்காக. நவீன ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் ரசிக்கலாம்.
நவீன ஓவியத்தை ரசிக்க சில தகுதிகள் வேண்டும். முதலில், இதற்கு என்ன அர்த்தம் என்று சித்திரக்காரரிடம் கேட்கக் கூடாது.
நவீன ஓவியத்தை புதுக்கவிதைக்கு ஒப்பிடலாம். படித்துப் பார்க்கிறோம். பிடித்திருந்தால் நல்ல கவிதை என்கிறோம். பிடிக்கவில்லை என்றால், அந்தக் கவிதை நமக்குள் சிறகடிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். இதுபோல்தன் நவீன ஓவியமும்.
இதை ரசிக்க உங்களுக்கு ஒரு கலை விமர்சகரின் உதவி தேவையில்லை. அவரிடம் சென்றால், the linear rhythm of his line juxtapose with the organizational schema of variantly rich polychrome shades and strokes are of orchestration of colors are markedly original என்பார் தேவையா நமக்கு.
ஒரு முறை பிகாசோ கட்டம் கட்டமாக நவீன ஓவியம் வரைந்திருந்தாராம், அதை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அதில் கட்டடங்கள், சிங்கம், பறவை, மனிதமுகம் மற்றும் ஏதேதோ தெரிவதாக சொன்னாராம். அதற்க்கு பிக்காசோ சொன்னது “அதெல்லாமா தெரியுது இதுல”….
You did not include Elayaraja in this artist list… Have a look here http://elayarajaartgallery.com/