புலிகள் துரத்துகின்றன

உறக்கத்துக்கு பதிலாக உறக்கமின்மை, செழுமைக்கு பதிலாக வறுமை, பெருமைக்கு பதிலாக எளிமை என நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை நீங்கள் சூஃபிகளின் கூட்டத்தில் இணைய முடியாது – இப்ராஹீம் இப்னு அதஹம்.

இஸ்லாத்தின் ஒரு பிரிவினரான சூஃபி ஞானிகள் பற்றி அங்குமிங்குமாகக் கொஞ்சம் படித்திருக்கிறேன். பவுத்தத்தில் ஒரு ஜென் போல இஸ்லாத்துக்கு சூஃபித்துவம் என்று வெகுநாள்கள் வரை எண்ணிக்கொண்டிருந்தேன்.

இல்லை. நுண்ணிய வித்தியாசங்கள் நிறையவே இருக்கின்றன. நேற்றிரவு நாகூர் ரூமி எழுதிய சூஃபித்துவம் [Sufism] பற்றிய புத்தகத்தைப் படிக்க எடுத்து ஒரே இரவில் – நிறுத்தாமல் படித்து முடித்தபோது, மிக எளிதாகப் புரிந்துவிட்டது போலவும், ஒரு வரி கூடப் புரியாதது போலவும் இருவேறு உணர்வுகள் ஏற்பட்டன. ஆனால் படித்து முடித்த கணத்திலிருந்து இந்த வினாடி வரை புத்தியில் இதைத் தவிர வேறு எதுவுமே ஓட மறுக்கிறது. வண்ணமயமானதொரு பேருலகைச் சுற்றிப் பார்த்து வந்த பரவசம் இருக்கிறது. அபாரமானதொரு ரீங்காரம் இதில் உள்ளது. கற்கும் ஆவல் உண்டாகிறது.

ஆனால் குரு இல்லாமல் சூஃபி பயில இயலாது என்கிறார் ரூமி. இனிமேல் நான் எங்கே தேடிப்போவது? புத்தகத்தில் வருகிற ஏராளமான விளக்கக் கதைகளுள் ஒரு சில இங்கே உங்கள் பார்வைக்கு.

இந்தப் புத்தகம் ஜனவரி மாதம் வெளியாகும். எத்தனை பக்கங்கள் வரும், என்ன விலை என்பதெல்லாம் இப்போது தெரியவில்லை. நான் படித்தது மேனுஸ்கிரிப்ட்.

*

கற்க வேண்டியதையெல்லாம் கற்றுவிட்டதாக நினைத்த ஒரு சிஷ்யர், ஒரு நாள் வேகமாக ஓடி வந்து தன் குருவின் வீட்டுக் கதவைத் தட்டினார்.

யாரது? என்றார் உள்ளேயிருந்து குரு.

நான்தான் என்றார் சிஷ்யர்.

போ போ, இன்னும் நீ முழுமையடையவில்லை என்றார் குரு.

திரும்பிச்சென்ற சிஷ்யர் மேலும் சில ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு மறுபடியும் வந்து குரு வீட்டுக் கதவைத் தட்டினார்.

யாரது?

இம்முறை, நீங்கள்தான் என்றார் சிஷ்யர்.

உள்ளே வா. இருவருக்கு இடமில்லை இந்த வீட்டில் என்றார் குரு.

– இது ஜலாலுத்தீன் ரூமியின் மஸ்னவியில் வரும் ஒரு கதை. சூஃபித்துவத்தின் சாரம் இதுவே.

*

ஒருவனை ஒரு புலி துரத்திக்கொண்டு வந்தது. மலைப்பகுதியில் பயந்து ஓடிய அவன் ஒரு பாறையில் தடுக்கி விழுந்தான். எப்படியோ ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். அவனுக்கு ஆறடிக்கு மேலே அந்த புலி நின்றுகொண்டிருந்தது. நூறடியில் கீழே கடல் விரிந்து கிடந்தது. அவன் பிடித்துக் கொண்டிருந்த கிளையையும் இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருந்தன.

“இறைவா, என்னைக் காப்பாற்று” என்று அவன் அலறினான்.

“காப்பாற்றுகிறேன். ஆனால் முதலில் கிளையிலிருந்து உன் கையை விடுவி” என்று அசரீரி வந்தது.

காப்பாற்றக் கோருமுன் அவன் கையை எடுத்திருந்தால், அவன் சூஃபி.

*

ஆரிஃப் நாயகம் (ரிஃபாயி) ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார். அழைத்தவர் வீட்டுக்கு அவர் சென்றபோது, அவரைத் திரும்பிச் சென்றுவிடுமாறு சொன்னார் அழைத்தவர். ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்தார் ரிஃபாயி. பின் மறுபடியும் அதே மனிதரால் அழைக்கப்பட்டார். ஒன்றும் சொல்லாமல் ரிஃபாயி மறுபடியும் சென்றார். வீடுவரை வந்தபிறகு மறுபடியும் அவரைத் திரும்பிச் சென்றுவிடுமாறு சொன்னார் அழைத்தவர். ஒன்றும் சொல்லாமல் உடனே திரும்பி வந்தார் ரிஃபாயி. இவ்வாறு மூன்று முறைகள் நடந்தன.

நான்காவது முறை, ரிஃபாயி அழைத்தவர் வீட்டுக்கு வந்ததும், அழைத்தவர் அவரை உட்கார வைத்து, “உங்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. இறைவனுக்காக என் பிழை பொறுக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு ரிஃபாயி ஒரு பதில் சொன்னார். அதுதான் இங்கே முக்கியமானது.

“என்னைப் போன்ற ஒருவரைப் பார்த்ததில்லை என்று சொன்னீர்களே, நீங்கள் நாயைப் பார்த்ததில்லையா? எத்தனை முறை எஜமானன் அதை விரட்டி விரட்டி அடித்தாலும், மீண்டும் அழைக்கும்போதெல்லாம் அது வாலாட்டிக் கொண்டே திரும்பி வருவதை நீங்கள் பார்த்ததில்லையா?”

ஆணவமின்மை என்பது சூஃபித்துவத்தின் அடிப்படைகளுள் ஒன்று.

*

சூஃபித்துவம் என்பது இஸ்லாத்தில் இருப்பதுதான். பௌத்தத்திலிருந்து ஜென் தத்துவம் பிறந்ததுபோல, இஸ்லாத்திலிருந்து சூஃபித்துவம் வந்துள்ளது. சூரியனிலிருந்து வெளிச்சம் வருவதுபோல. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில், சடங்குரீதியான வைதீக இஸ்லாம் இல்லாமல் சூஃபித்துவம் இருக்க முடியும். ஆனால் சூஃபித்துவம் இல்லாத இஸ்லாம் உயிரற்ற உடலுக்கு ஒப்பானதாகிவிடும்.

பொதுவாக சூஃபிகளுக்கு எதிராகச் சொல்லப்படும் கற்பனையான குற்றச்சாட்டு அவர்கள் ‘ஷரியத்’ என்று சொல்லப்படும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் சடங்குகளுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை, அவற்றைப் பின்பற்றுவதில்லை, அவற்றுக்கு மாற்றமாக நடந்தார்கள் என்பது. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானதாக இருந்தது. சூஃபிகள் மார்க்கச் சட்டங்களை மிகவும் மதித்து, பேணி நடந்தார்கள்.

தமிழ் நாட்டின் கடற்கரையோர ஊரான நாகூரில் அடக்கமாகி, ‘நாகூர் ஆண்டவர்’ என்றறியப்படும் ஷாஹுல் ஹமீது ஆண்டகைக்கும் அவர்களது வளர்ப்பு மகனுக்கும்  ‘நிகழ்த்தப்படும் அற்புதங்கள்’ பற்றி ஒரு நாள் ஓர் உரையாடல் நடந்தது.

ஒரு வேளைத் தொழுகையைத் தவறவிட்ட தன் வளர்ப்பு மகன் யூசுஃப் இடம் அவர் கேட்டார், “மகனே, இத்தனை வருடங்களில் என்றைக்காவது நான் ஒரு வேளை தொழுகையை நிறைவேற்றத் தவறியதுண்டா?”

“இல்லை”

“ஒரு வேளைத் தொழுகையையாவது நேரம் தவறித் தொழுதிருக்கிறேனா?”

“இல்லை”

“இதைவிட வேறு என்ன அற்புதம் நான் நிகழ்த்த வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?”

*

ஒருமுறை பாலைவனத்தின் வழியாக ஓர் ஒட்டகத்தின் மீது உணவு, உடை போன்ற சுமைகளை ஏற்றிக்கொண்டு பிஸ்தாமி சென்றுகொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒருவன், “இந்த ஒட்டத்தின்மீது இவ்வளவு சுமைகளா? அநியாயமாக இருக்கிறதே” என்றான். அதைக்கேட்ட பிஸ்தாமி, “இந்த ஒட்டகம்தான் இச்சுமைகளை சுமக்கிறது என்று நினைக்கிறாயா? நன்றாகப் பார்” என்றார். அவன் மறுபடியும் பார்த்தபோது ஒட்டகத்தின் முதுகுக்கும் சுமைகளுக்கும் இடையில் ஒரு சாண் இடைவெளி இருந்ததைக் கண்டு, “இதென்ன அதிசயம்?” என்று கூறினான்.

“உண்மையை உன் கண்களிலிலிருந்து மறைத்தால் என்னை ஏசுகிறாய். உண்மையை உனக்குத் திறந்து காட்டினால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் என்னதான் செய்வது?” என்றார்.

*

முல்லா ஒருமுறை உரத்து சிந்தித்துக்கொண்டிருந்தார்.

“நான் உயிரோடு இருக்கிறேனா அல்லது செத்துவிட்டேனா என்று எப்படித் தெரிந்துகொள்வது?”

“என்ன உளறுகிறீர்கள்? செத்துப்போனால் உடம்பெல்லாம் ஜில்லிட்டுவிடுமல்லவா?” என்றார் முல்லாவின் மனைவி.

இந்த உரையாடல் நடந்த சில நாட்கள் கழித்து முல்லா ஒரு காட்டுப் பகுதிக்கு மரம் வெட்டப் போனார். அது குளிர் காலத்தின் மையப்பகுதி. மரம் வெட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென்று தன் கை கால்களிலெல்லாம் குளிர் ஏறி விறைக்க ஆரம்பித்தது முல்லாவுக்கு.

“ஐயையோ, நான் நிச்சயமாக செத்துவிட்டேன். செத்துப் போனவர்கள் வேலை பார்க்க முடியாதல்லவா?” என்று சொன்னவர், செத்துப் போனவர்கள் நிற்கவும் கூடாதென்றெண்ணி தரையில் பிணம் மாதிரி அசையாமல் படுத்துக் கொண்டார். அப்போது அங்கு வந்த சில ஓநாய்கள் மரத்தில் கட்டி வைத்திருந்த அவரது கழுதையைக் கடிக்க ஆரம்பித்தன.

“ம்..செய்யுங்கள். நான் செத்துவிட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஹும்.. நான் மட்டும் உயிரோடு இருந்தால் என் கழுதையை நீங்கள் இப்படி கடிக்க விட்டுவிடுவேனா?” என்றார்.

உயிரோடு இருப்பதனாலேயே ஒரு மனிதனால் உண்மையைப் புரிந்து கொண்டுவிட முடியும் என்ற கருத்தை சூஃபித்துவம் ஏற்றுக்கொள்வதில்லை.

Share

14 comments

  • அன்புள்ள ராகவன், என் சந்தேகம் தீர்ந்துவிட்டது. நீங்கள் புத்தகத்தை முழுவதும் படித்துத்தான் இருக்கிறீர்கள்! தமிழ் நாட்டில் வாழும் ஒரு டாக்டர் ஜான்சன் மாதிரி இருக்கிறீர்கள். அவர்தான் எத்தனை பக்கங்கள் கொண்ட நூல் என்றாலும் உங்களை மாதிரியே வெகு விரைவாக படித்துவிடுவார். எந்த இடத்தில் சந்தேகம் கேட்டாலும் சொல்வார். அப்படிப் படிக்க முடிவதுகூட ஒரு கொடுப்பினைதான். என்னால் முடியாது. புத்தகத்தை நான் ஒன்னாந்தேதியே முடித்துவிட்டேன். ஆனால் மீண்டும் படித்து முடிக்க இரண்டு நாள் ஆனது.

    ஆனாலும் இன்னும் நான் நிறைய சொல்லமால் விட்டுவிட்டேனேன் என்ற குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எவ்வளவு சொன்னாலும் இந்த உணர்வுதான் இருக்கும்போலவும் தோன்றுகிறது. இதுதான் சூஃபி உணர்வோ?!

    நான் இறைவனை அறிந்து கொள்ள வேண்டிய அளவு அறிந்து கொள்ளவில்லை என்று நபிகள் நாயகம் சொன்ன மாதிரி.

    அன்புடன்
    ரூமி

  • திரு. பா.ரா.

    இஸ்லாத்தின் எளிய அடிப்படை – திருக்குர்ஆனுக்கும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கும் முழு முற்றிலும் அடிபணிவது, அதற்கு எதிரானவற்றை முழு முற்றிலும் நிராகரித்து விடுவது. அவ்வளவு தான.

    பிறகு யாரும் எவரும் இஸ்லாமிய மார்க்கத்தில் எதுவும் ஒன்றும் புகுத்த முடியாது – அதன் மூலம் மேற்கூரிய இரண்டிலும் காணப்படாதவரை.

    இஸ்லாத்தை அதன் மூலங்களிலிருந்து படித்து அறிந்து விட்டால், பிறகு எதுவும் அது சார்பாய் படிக்க நேரும் போது அதன் மூல ஆதாரத்தை எங்கு தேடுவது எனப் புரிந்து விடும்.

    சூபிஸம் பற்றி ஒரு சிறு பார்வை
    http://www.islam-qa.com/en/ref/20375/

    தவிர இஸ்லாம் பற்றிய எந்த சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் மிகச் சரியான விளக்கங்கள் இதில் காணலாம், தேடலாம், கேட்கலாம் –
    http://www.islam-qa.com

    அன்புடன்
    அபூ வஸீலா

  • >>>>காப்பாற்றக் கோருமுன் அவன் கையை எடுத்திருந்தால், அவன் சூஃபி.

    அப்ப பாஞ்சாலி கூட சூஃபிதானா?

  • //“புலிகள் துரத்துகின்றன”//

    தலைப்பு 🙂

    ரசித்தேன். அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று பெற்ற பாராத்தனம் 🙂

  • சூஃபித்துவத்திற்கும் பதஞ்சலியின் ராஜயோகத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகள். imho, சற்றே கூர்ந்து நோக்கினால் கிட்டத்தட்ட இவை இரண்டும் ஒன்று தான், only the implementations differ.

  • Dear raghavan,
    You also go through the works of Thayumanvar.
    And also in the words of St.Augustine
    “Man is what he loves.
    If he loves a stone he is a stone;
    If he loves a man he is a man;
    If he loves God – I dare not say more,
    for if I said
    that he would then be God,
    ye might stone me!”
    If you try to find what you through sufism and spiritualism your “Existence” will be Blissfull.

  • சூபி ஆக இருந்தால் பாரா அல்லது ரூமி மாதிரி எழுதிக் குவிக்க முடியுமா :).சூபித்துவமெல்லாம் படிக்க இனிமை, நடைமுறை வாழ்க்கையில் அப்படி இருப்பதுதான் கடினம்.அதுதான் சிக்கல்.

    ‘ஆனால் குரு இல்லாமல் சூஃபி பயில இயலாது என்கிறார் ரூமி.’
    அது உங்களுக்காக சொன்னது, பாரா சூபித்துவத்தில் மூழ்கி எழுதுவதை நிறுத்திவிடுவார் என்ற கவலையில் சொன்னது :).
    குருவருள் இருந்தால்தான் குரு கிடைப்பார், குரு பெயர்ச்சிக்குப்
    பின் கூட கிடைக்கலாம் :).

  • எத்திசையில் திரும்பினும் இறைவனின் திருமுகமே காட்சி தருகிறது – குரான் ஷரீஃப்

    இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள், அவர்களின் காலத்தில் உலகப் புகழ் பெற்ற நிஜாமியா பல்கலை கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்து கொள்கிறார்கள். இதற்கு வெறும் சமயப் பயிற்சியால் ஏற்பட்ட விரக்தியே காரணமாக இருந்தது.

    அவர்கள், பிறகு சூபி என்ற தத்துவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஃபக்கீராக மாறினார்கள். சுமார் பத்தாண்டு காலங்கள் மெய்ஞ்ஞானப் பாட்டையில் பயணம் செய்து அமைதி (அல்லது வெற்றி) அடைந்தார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களை “இஹ்யா-அல்-உலுமல்-தீன்” எனும் கிரந்தத்தில் மெய் சிலிர்க்கும் வண்ணம் விவரித்து எழுதியுள்ளார்கள்.

    ஹஜ்ரத் எஸ்.அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் இந்த இஹ்யாவை மொழி பெயர்த்து ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள், அவர்களின் புத்தகங்களை நீங்கள் படித்திருக்கலாம். நாகூர் ரூமி அவர்கள் கூட அடுத்த விநாடியை அவர்களுக்கு தான் காணிக்கையாக்கினார்கள்.

    அவர்களிடம் அவர்களின் மாணவனாகிய நான் சட்டங்கள் சம்மந்தமாக அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பதுண்டு. நான் கடைசியாக கேட்ட ஒரு கேள்விக்கு இப்படி சொன்னார்கள், “ஏன்ப்பா, பொண்ண(மணப்பெண்ணை) வுட்டுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே கேட்டுட்டுருக்கிறியே..” என்று.

    எனக்கு என் ஒட்டு மொத்த கேள்விகளும் குப்பைகள் என்பது அப்போது தான் எனக்கு விளங்கியது.

    தஸவ்வுஃப் எனும் சூபித்துவ மெய்ஞ்ஞான பாதையை பற்றி முஹ்யித்தீன் ஆண்டவர்கள் கூறும் போது அது பின்வரும் பண்புகளை பெற்றிருப்பதாகும் என்று குறிப்பிட்டார்கள், அவற்றில் சில:

    இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் வல்லன்மை (சகாவத்)
    ஈஸா நபி(அலை)(ஜீஸல்) அவர்களை போன்று பயணம் செய்வது (சபர்)
    முஹம்மது நபி (ஸல்)அவர்களை போன்று ஏழ்மையை (ஃபக்ரை) தன்னுடைய பெருமையாக (ஃபஹ்ர்)கொள்ளும் இயல்பு

    ஒரு சூஃபித்துவ கருத்து இதோ:

    என்ன தான் உயர பறந்தாலும் குப்பைகளின் மதிப்பு உயர்ந்து விடப் போவதில்லை, ஆனால் குப்பையில் மாணிக்கம், மரகதங்கள் இருந்தாலும் அதன் மதிப்பு குறையப் பொவதுமில்லை

    நாகூர் ரூமி எழுதிய நூலை படிப்பதற்கு இல்லை இல்லை அனுபவிப்பதற்கு காத்திருக்கிறேன்

  • Dear para,

    Good intro to sufism. Sorry to ask this-why you are not writing consistently in web,while you were in chromepet you wrote more than kodambakkam, you said i will get more time and i will write more, but now you are doing the opposite, please dont mistake me and continue writing regularly.

  • //குருவருள் இருந்தால்தான் குரு கிடைப்பார்//

    தோழரே!ஒருவருக்கு இறையருள் கிட்டும் என்ற எண்ணன் குருவின் மனதில் தோன்றும் போதுதான் குருவருள் கிட்டும். :))

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி