போட்டாச்சு.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, சரியாக நாற்பது நிமிடங்கள் கழித்து என்னுடைய வாக்கைப் பதிவு செய்தேன்.

எப்போதும் வாக்குச்சாவடியில் முதல் பத்து வாக்காளர்களுள் ஒருவனாக இருப்பதே என் வழக்கம். இம்முறை கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி குரோம்பேட்டை சென்று வாக்களிக்க வேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது.

நான் குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போதே நல்ல கூட்டம் இருந்தது. பொதுவாக அத்தனை காலை வேளையில் நான் அந்தளவு கூட்டம் பார்த்ததில்லை. காலியாக இருக்கும் என்றுதான் காலையில் செல்வேன். இம்முறை மக்களுக்குத் தீவிரமான ஜனநாயகக் கடமையுணச்சி எழுந்திருக்க வேண்டும். வெயிலும் அதற்கொரு காரணமாயிருந்திருக்கலாம்.

ஏற்பாடுகள் நன்றாகச் செய்யப்பட்டிருந்தன. கட்சிக்காரர்களும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் இருநூறு மீட்டர் தள்ளித்தள்ளி மேசை போட்டுச் சாலையோரம் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

குரோம்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குப் போய்விட்டது இம்முறை. டி.ஆர். பாலு, ஏ.கே. மூர்த்தி இருவரும்தான் நட்சத்திர வேட்பாளர்கள்.  அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தி.மு.க., பாமக, பகுஜன் சமாஜ் என்று மூன்று கட்சிகள் மட்டுமே. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் விஜயகாந்தின் தேமுதிக தொடங்கி, இந்திய பிரமிட் கட்சி, அகில இந்திய வள்ளலார் பேரவை, இந்திய மனிதநேயக் கட்சி என்று என்னென்னவோ பார்த்தேன். பல கட்சிப்பெயர்களை முதல் முறையாகக் காண்கிறேன் என்று தோன்றியது.

இம்முறை சுயேச்சைகள் அதிகம். காட்டுராஜா என்றொரு சுயேச்சை வேட்பாளர் எங்கள் தொகுதியில் நிற்கிறார். தமது பெயராலேயே பலபேரின் கவனத்தை அவர் ஈர்த்ததை வரிசையில் நின்றபோது காணமுடிந்தது. அவர் எப்படி இருப்பார்? பார்க்க ஆசையாக இருந்தது. ஒரு போட்டோ கூடப் பார்க்க முடியவில்லை.

வாக்குச்சாவடிக்குச் சரியாக இருநூறு மீட்டர் தொலைவில் இடப்புறம் எங்கள் வீடு இருக்கிறது. எனவே நேற்று மாலையே பாமககாரர்கள் வந்து என் அப்பாவிடம் பேசி வீட்டு வாசலில் துண்டு போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். (சென்றமுறை திமுக.)

நான் போகும்போது, என் வீட்டையே வாக்குச்சாவடி ஆக்கிவிட்டார்களோ என்று ஐயமுறும் அளவுக்கு அங்கே கூட்டம். வாக்காளர் பட்டியலும் சாம்பார் சாதப் பொட்டலங்களும் தண்ணீர் போத்தல்களும் கைகூப்பல்களும் ரகசிய, கடைசி நிமிட வாக்குச் சேகரிப்புகளுமாக ஒரே அமர்க்களம். எலங்கைல நம்ம ரத்தம் சாவுதுங்க. அது நெனப்புல இருந்தா திமுகவுக்கு ஓட்டுப் போடாதிங்க என்று ஒரு குண்டு பெண்மணி போகிற வருகிறவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அவரிடம் இலங்கை அதிபர் யார் என்று கேட்கலாம் என்று நினைத்தேன். ஏனோ கேட்கவில்லை. இருநூறு ரூபாயும் காப்பி டிபனும் மதியச் சாப்பாடும் கொடுத்தார்களாம்.

காலை வாக்களிப்பதில் இருந்த தீவிரம் பத்து மணிக்குப் பிறகு மெல்ல மெல்ல குறைந்துவிட்டாற்போல் தெரிந்தது. வெயில் காரணம். மதியம் மூன்று மணி அளவில் நான் புறப்பட்டபோது சாலையில் ஈ காக்காய் இல்லை. குண்டு பெண்மணி என் வீட்டு வாசலிலேயே ஒரு ஓரமாக முட்டாக்குப் போட்டு சுருண்டு படுத்திருந்தார்.

பெரும்பாலும் இன்று கடைகள் இல்லை. ஒயின் ஷாப்புகள் அல்ல; சோடா கடைகூட இல்லை. வியாபாரிகளுக்கு என்ன அச்சமோ. வீதிகள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. மூலைக்கு மூலை நிறைய போலீஸ் பார்த்தேன். பெரிய கலவரங்கள், களேபரங்கள் எதுவுமில்லாமல் அமைதியாகத் தேர்தல் முடிகிறது.

இன்னும் இரண்டு மூன்று தினங்கள். தெரிந்துவிடும்.

[பி.கு: சில புகைப்படங்கள் எடுத்தேன். ஆனால் என் மடிக்கணினியை ஃபார்மட் செய்ததில், மொபைல் இணைப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்ய மறந்துவிட்டேன். தகடைத் தேடி எடுத்தால்தான் இனி போட்டோ.]
Share

3 comments

  • // சோடா கடைகூட இல்லை. வியாபாரிகளுக்கு என்ன அச்சமோ. வீதிகள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன//

    ஆமாம். தூத்துக்குடியில் கூட முக்கிய சாலையில் இருக்கும் கடைகள் (மூக்குகண்ணாடி கடைகூட) மூடியிருந்தது

  • அது சரி! உங்கள் கணிப்பு என்ன? காங்கிரஸா! பா.ஜ.க வா?

    சும்மா ஒரு ஆர்வம் தான்.

    (சுத்தி வளைச்சு குழப்பக்கூடாது).

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter