உரி: சில குறிப்புகள் – 1

யதி எழுதிய நாள்களில் சிறிது பித்தேறிக் கிடந்தேன். கண்ணெதிரே நிகழ்வனவும் காதருகே வந்து சொல்லிவிட்டுச் செல்வனவும்கூடச் சிந்தையில் ஏற மறுத்த நாள்கள் நினைவிருக்கின்றன. தொடங்கும்போதோ முடிக்கும்போதோ அல்ல. இடையில் சில மாதங்கள் அவ்வாறு இருந்தன. பிறகு சுதாரித்துக்கொண்டேன்.

சலம் முற்றிலுமே என்னைப் புரட்டியெடுத்துவிடுமென்று நினைத்தேன். அதன் காலமும் (கிமு 1000-1200) களமும் மொழியும் எனக்கு அந்நியமானவை. நீண்ட – மிக நீண்ட பயிற்சிகளுக்குப் பிறகே எழுதத் தொடங்கினேன். நிறைய தடுமாற நேரிடும், தடங்கல்கள் உண்டாகும், முட்டிக்கொண்டு நிற்க நேரிடும் என்றெல்லாம் கணித்து, அனைத்துக்கும் முன்னேற்பாடுகள் செய்துகொண்ட பிறகே தொடங்கினேன். ஆனால் சற்றும் நம்ப முடியாதவிதமாக அந்நாவல் என்னை எளிதாக இயக்கிச் சென்றுவிட்டது. எண்ணிய விதமான இடர்கள் எதுவுமே எழுதும்போது ஏற்படவில்லை.

இவ்விரண்டினைப் போல அல்லாமல் உரியை அது எங்கே சென்று நிறையும் என்கிற புலப்படாத ஒளியினை மட்டுமே வைத்துக்கொண்டு தொடங்கினேன். ஏனெனில் அது முடியும் இடம் யதியின் தொடக்கத்துடன் எவ்விதமாகவேனும் தொடர்பு கொண்டாக வேண்டும். சொற்களாக அல்லாமல் சூக்குமமான உணர்வாக எனக்குள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரண்டு நிற்பது அது.

இம்மூன்றும் வேறு வேறு களம், வேறு வேறு கதாபாத்திரங்கள், வேறு வேறு காலத்தில் நடப்பவைதாம். சுமார் மூவாயிரம் வருட இடைவெளி. மூன்று நாவல்களின் கதைக்கும் ஒன்றோடொன்று நேரடித் தொடர்பில்லை. ஆயினும் இவை ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்பவை. அது கண்ணுக்குப் புலப்படாத கலப்பு. கங்கை, யமுனையுடன் சரஸ்வதி கலப்பது போல.

எப்போதும் போல நான் எண்ணியது ஒன்றாகவும் எழுதுவது வேறொன்றாகவும்தான் உரியிலும் வருகிறது. அதில் எனக்கு வியப்போ அதிர்ச்சியோ ஏமாற்றமோ இல்லை. பழகிவிட்டது. ஆனால் பெரும்பகுதிக் கதையைக் கடந்த பின்பும் இதன் நிறைவுப் புள்ளி இன்னும் புலப்பட்டபாடில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளில் இல்லாத விதமாகத் தமிழ்நாட்டில் மட்டும்தான் வாழும் சித்தாந்தமாக ஆத்திகமும் ஆளும் சித்தாந்தமாக நாத்திகமும் பன்னெடுங்காலமாகத் தழைத்து வந்திருக்கின்றன. முற்றிலும் நேரெதிரான இவ்விரண்டும் மோதலின்றிப் புழங்கும் இன்னொரு நிலம் அரிது. இங்கு இது எப்படிச் சாத்தியமாகியிருக்கலாம் என்கிற எளிய வினாவே உரியின் ஒரு வரியானது.

சலத்தின் உச்சமென நீயும் உன் வழி வந்த வேதமும் அறவே இல்லாது போவீர்களென்று மரணமற்ற அதர்வனுக்குக் குத்சன் இடும் சாபம் ஒன்று வரும். சதுர்வேதி மங்கலங்கள் தழைத்த தென் தமிழ்நாட்டில் இன்று அதர்வம் பயில்வோர் யாருமில்லை. கேரளத்திலும் வட கிழக்கு மாநிலங்களிலும் மிகச் சிலர் உண்டெனினும் குத்சனின் சாபம் முற்றிலும் பலித்த இடமெனத் தமிழ்நாட்டைத்தான் சொல்ல வேண்டும். சோழர்களின் காலத்தில் அதர்வ வேத பண்டிதர்களும் கணிசமாக வாழ்ந்த நிலம் இது. எனவே சலத்தில் வரும் குத்சனின் சாபம் பலித்த நிலமும் காலமுமென உரியில் அதையே கொண்டேன்.

ராஜராஜ சோழனின் காலத்தில் நடக்கிற கதைதான். ஆனால் நாவலின் ஒரு காட்சியிலும் இதுவரை அவன் நேரில் தோன்றவில்லை. அவனது அந்தப்புரமல்ல; அரண்மனை வாசலுக்கும் செல்ல நேரவில்லை. மன்னர்களினும், மக்களும் மண்ணுமே சரித்திரத்தை நெய்பவை என்று நம்புபவன் நான். இந்நாவலொரு புனைவுதான். ஆனால் ஒரு சரித்திரத்தின் மீது திடமாகக் காலூன்றி நிற்கும் புனைவு. (சலம், ஒரு பெரும் புனைவின் மீது கட்டியெழுப்பப்பட்ட மாய சரித்திரம்.)

சலம் – உரி – யதி என்பது வரிசை. எழுதத் தொடங்கியபோது யதி முதலில் வந்துவிட்டது. பிறகு சலம். இப்போது உரி.

இதையும் எழுதி நிறைவு செய்யும்போது என்னவாக இருப்பேனென்று தெரியவில்லை. கோழி உதிர்த்துச் சென்ற சிறகொன்று காற்றில் உருண்டு புரண்டோடுவது போல எடையற்றுப் போய்விடுவேனென்று நினைக்கிறேன்.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி