நாளைய விழா

BukPet இன் WriteRoom எழுத்துப் பயிற்சிக் குழுமத்தின் ஆறாம் ஆண்டு விழா நாளை காந்தி ஜெயந்தித் திருநாளன்று மாலை இந்திய நேரம் ஏழு மணிக்கு Zoom வாயிலாக நடைபெறுகிறது.

விடாப்பிடியாக இந்த விழாவை ஒவ்வோர் ஆண்டும் zoom வாயிலாக மட்டுமே நடத்துவதற்கு ஒரே காரணம்தான். உலகெங்கும் உள்ள WriteRoom மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். வாட்சப் என்ற ஒன்று வந்த பிறகு எல்லோரும் எப்போதும் அருகிலேயேதான் வசிக்கிறோம். ஆனால் நேரில் பார்த்துப் பேசுவதற்காகவேனும் விழா என்ற ஒன்று தேவைப்படுகிறது.

zoom இல் உள்ள சிக்கல் அதில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியுமென்பது. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிப்பதென முடிவு செய்துள்ளோம். விழா லிங்க், நாளை மாலை என்னுடைய வாட்சப் சேனலிலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியாகும்.

எழுத்துப் பயிற்சி வகுப்பென்பது, கோவிட் காலத்தில் விளையாட்டாகத் தொடங்கியதுதான். இதுவரை சுமார் இருநூறு பேர் இவ்வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் உந்தப்பட்டு எழுதத் தொடங்கிப் பலர் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். புத்தகங்கள் வெளியாகின்றன. விருதுகள் பெறுகிறார்கள். இது தரும் மகிழ்ச்சி மிகப் பெரிது.

கலையைக் கற்றுத்தர இயலாது. என்னால் என்றல்ல; யாராலும் முடியாது. ஆனால் நுட்பங்களைப் பயின்றுதான் தெளிய வேண்டும். என் வகுப்புகளில் நான் அதைத்தான் பகிர்ந்துகொள்கிறேன். எவை எனக்குப் பாடமாயினவோ அவை. இந்த வகுப்புகளில் நான் தீவிரமாக வலியுறுத்துவது ஒன்றனைத்தான். எழுத்தொழுக்கம். இதனைத் தொட்டு என்னை ஒரு சிறந்த பிற்போக்குவாதியாகச் சித்திரிக்கும் பணிகளெல்லாம் ஆங்காங்கே நடந்தன. அனைத்தையும் அமைதியாகக் கவனிக்கிறேன். எதற்கும் பதிலளிப்பதில்லை. மனித வாழ்வின் ஆகப்பெரிய நேரக்கொல்லி, பதிலளித்துக்கொண்டிருப்பது. நேரம் போனாலும் பலன் இருந்தால் நல்லதே என நினைப்போமானால் அதுவும் இராது. நிறைய பார்த்துவிட்ட பிறகே சமூக ஊடகங்களில் பதிலளிப்பதை நிறுத்தினேன். அதன் பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எழுத்து என்றல்ல; எந்தக் கலையுமே மிகத் தீவிரமான, கூர் மழுங்காத, சலிப்புறாத, நேர்மை குன்றாத தொடர் முயற்சிகளினால் மட்டுமே வெல்லும். ஒவ்வொரு துறைக்கும் ஓர் ஒழுக்கம் உண்டென்பது போல எழுதுவதற்கும் உண்டு. பகுதி நேரமாகச் செய்தாலும் அதை முறைப்படிக் கடைபிடித்தால் மட்டுமே இதில் முன்னுக்கு வர முடியும். பத்திருபது புத்தகங்கள் வெளியான பின்பும் நாம் இல்லாத இடங்களில் நான் அவரது வாசகன் / ரசிகன் என்று சொல்வதற்கு ஒரே ஒருவரைக்கூடப் பெறாத யாரும் எழுத்தாளர் அல்லர். அப்படி எழுத்தின் எந்த அம்சம் வாசகர்களோடு எழுதுபவனைப் பிணைக்கிறது என்பதைத்தான் இவ்வகுப்புகளில் சொல்கிறேன். அது கைகூடத் தேவையான ஒழுக்கத்தையே போதிக்கிறேன்.

முன்பாவது பத்திரிகை, புத்தகம் என்ற இரண்டு வாய்ப்புகள்தாம் இருந்தன. இன்று எழுதுவோருக்கான உலகம் மிகப் பரந்து விரிந்துள்ளது. content writing என்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துள்ளது. திரையுலகம், சீரியல் உலகம், வெப் சீரிஸ்கள், குறும்பட உலகம், யூட்யூப், தனியார் வானொலிகள், ஒலிநூல் உலகம், மல்டி மீடியா, பத்திரிகைகள், நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் என எங்கெங்கும் நுட்பம் அறிந்து எழுதுவோருக்கான தேவைகள் உள்ளன. எழுத்தென்பது சிறுகதையில் தொடங்கி நாவலில் முடிவதல்ல. அதன் எல்லைகள் பறந்து விரிந்தவை. நானறிந்தவற்றை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறேன், அவ்வளவுதான்.

ஆண்டுக்கொரு முறை என் மாணவர்களை இவ்விழாவில் மொத்தமாக நேரில் பார்க்கிறேன். விழா என்பதெல்லாம் பொதுவில் பயன்படுத்த உதவும் வெறும் சொல்தான். உண்மையில் இந்நிகழ்ச்சி ஒரு கலந்துரையாடலாகத்தான் நடக்கும். முதல் அரை மணி நேரம் சிறப்பு விருந்தினர் ஒருவரின் உரை இருக்கும். பிறகு உரையாடல், கேள்வி-பதில், தமது அனுபவம் சார்ந்து மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் சிலரது சிற்றுரைகள் இருக்கும். அவ்வளவே.

இந்த ஆண்டு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பரிசல் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தவிருக்கிறார். வகுப்பில் கலந்துகொண்டு, பயின்று தேறி மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கி இன்று பிரபல எழுத்தாளர்களாகத் திகழும் பிரபு பாலா, வினுலா, மதுசூதனன், பாலாஜி, ரிஷி ரமணா ஆகியோர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் BukPet-WriteRoom மாணவர்களும் நானும் இருப்போம். மாணவர்களின் எழுத்து சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பேன்.

எழுத்தார்வம் உள்ள வாசக நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி