பார்த்தசாரதிகளின் கதை [பாகம்3]

குமுதத்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அனுமார் குங்குமம் என்கிற ஆரஞ்சு நிற குங்குமப் பொட்டும் தலையில் கட்டிய கர்ச்சிப்பும் கையில் ஹெல்மெட்டுமாக அரக்கபரக்க அலுவலகத்துக்குள் நுழையும் பார்த்தசாரதி.

அறிமுகப்படுத்தியபோது, டாட்காம் இவருடைய பொறுப்பில்தான் வருகிறது என்று சொன்னார்கள். குமுதம் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் ஓய்வு பெறவேண்டிய சில கிழவர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு ஒண்டியாளாக அந்தப் புதிய முயற்சியைத் தூக்கி நிறுத்தப் போராடிக்கொண்டிருந்தார்.

பொதுவாகவே டாட்காம் குறித்த மயக்கங்களும் அதன் வருமான சாத்தியங்கள் குறித்த நிச்சயமின்மையும் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. குமுதம் டாட் காமை Pay Site ஆக்கினால் தாங்குமா, என்னென்ன செய்தால் அது ஒரு வருமானத்துக்குரிய கால்வாயாக உருமாற முடியும் என்று நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதியிடம் கேட்டிருந்தார். அவர் தினசரிப் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர். சுதேசமித்திரன், தினமணி என்று வலம் வந்தவர். கதை, கவிதை, திரைப்படம் உள்ளிட்ட கலைகளின் பக்கம் கனவில்கூடக் கால்வைக்காதவர். அடிப்படையில் க்ரைம் ரிப்போர்ட்டர். ஸ்டேஷன், கேஸ், மர்டர், நான்பெயிலபிள், செக்‌ஷன் 302, சர்க்கிள், எஸ்.பி., லாக்கப் என்று அவரது அகராதிச் சொற்கள் வேறு இனம் சார்ந்தவை.

குமுதம் டாட்காம், இன்னதுதான் என்றில்லாமல் வாசிப்பின் அனைத்துச் சுவைகளுக்கும் தீனிபோடக்கூடிய ஒரு தளமாக உருவாகவேண்டுமென்று மேலிடம் நினைத்தது. அங்கே செய்தியும் வரும், செய்யுளும் வரும். ஜெயலலிதாவும் வருவார், ஜெயமோகனும் வருவார். சிலுக்கு ஸ்மிதா வருவார், சிக்மண்ட் ஃப்ராய்டும் வருவார். ராஜேஷ்குமாரும் எழுதுவார். ராமாமிருதமும் எழுதுவார். கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையை உருவாக்கியவர்கள், அதற்கான அடிப்படை மாதிரியாகக் குமுதம் டாட்காமைத்தான் முன்வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

‘ஜீ, டாட்காமுக்கு நீங்க ஒரு column எழுதுங்களேன்.’

முதல்முதலில் பார்த்தசாரதி என்னுடைய அறைக்கு வந்து கேட்டபோது, ‘கஷ்டம்’ என்றுதான் பதில் சொன்னேன். உண்மையில் அன்றைய என்னுடைய வேலை நெருக்கடிகளில் ஒரு தொடர்பகுதி எழுதுவது என்பதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாமல் இருந்தது. ஆனால் அவர் விடாமல் தினசரி கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருபோதும் சலித்துக்கொண்டதில்லை. புன்சிரிப்பில் மாற்றம் இருந்ததில்லை. எத்தனை உக்கிரமாக மறுத்தாலும் சிரித்தபடியே திரும்பிச் செல்வார். முதல்நாள் மறுத்த நினைவே இல்லாததுபோல் மறுநாள் திரும்பவும் கேட்பார்.

டாட்காமுக்காகவோ, எனக்காகவோ இல்லாவிட்டாலும் அவரது அன்புக்காக நான் எழுதவேண்டும் என்று முடிவு செய்துதான் ‘தெரிந்தது மட்டும்’ ஆரம்பித்தேன். குமுதம் டாட்காமில் எனக்குத் தெரிந்து மிகப்பெரிய வரவேற்பு கண்ட முதல் column அதுதான்.

அப்போதெல்லாம் எனக்கு கம்ப்யூட்டர் கிடையாது. கையால்தான் எழுதுவேன். நான் முடிக்கும்வரை காத்திருந்து வாங்கிச் சென்று தானே கம்போஸ் செய்து வலையேற்றுவார். வருகிற வாசகர் கடிதங்களை அச்செடுத்து வந்து கொடுப்பார். பகுதி சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில் தெய்வங்கள் அருள்புரிய, எடிட்டோரியலுக்கென்று ஒரு கம்ப்யூட்டர் வாங்கப்பட்டது. முச்சந்திப் பிள்ளையார் போல் ஒரு கண்ணாடி அறையில் அது பயபக்தியுடன் வைக்கப்பட்டது. தினசரி துடைத்து, பூஜைகள் முடித்து மூடி வைக்கப்படும் மௌஸ் உள்ள பிள்ளையார்.

குமுதம் எடிட்டோரியலில் முதல் முதலில் ஒரு கம்ப்யூட்டரை தைரியமாகத் தொட்டு இயக்கியவன் என்கிற பெருமை என்றைக்குமே எனக்குண்டு.

கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்ததும் இயல்பாகவே எனக்கு டாட்காம் தொடரில் ஆர்வம் மிகுந்துவிட்டது. வேகமும் வந்துவிட, பார்த்தசாரதி கேட்பதற்குமுன்னால் அத்தியாயங்கள் அனுப்பத் தொடங்கினேன். அந்த உற்சாகத்தில்தான் அவர் ‘சுண்டெலி’ தொடர் ஆரம்பிக்கவும் வழி செய்தார்.

காஞ்சீபுரம் ஜூனியர் சங்கராச்சாரியாரை ஏகதேசம் நினைவுபடுத்தக்கூடிய கதாபாத்திரத்துடன் தொடங்கிய அந்நாவல், பாதியில் அகால மரணமடைந்து குமுதம் சர்வரில் ஏதோ ஒரு மூலையில் புதைக்கப்பட்டபோது ஏராளமான வாசகர்கள் தொடர் நிறுத்தப்பட்டது ஏன் என்று கேட்டு எழுதினார்கள். இன்றைக்கும் சுண்டெலி குறித்து எங்காவது, யாராவது கேட்காமல் இருப்பதில்லை. சுண்டெலியின் மரணத்துக்காகக் கண்ணீர் சிந்திய முதல் ஆத்மா, பார்த்தசாரதி.

‘தனியாவாவது எழுதி புக்கா போட்டுடுங்களேன்’ என்று சொன்னார். இன்னும் செய்யப்போகிறேன்.

0

குமுதத்தைவிட்டு வெளியே வந்தபிறகுதான் பார்த்தசாரதியின் நேர்த்தி நியமங்கள் குறித்து எனக்கு முழுதாகத் தெரியத் தொடங்கியது. அவரும் ஒரு பர்ஃபெக்‌ஷனிஸ்ட். கொஞ்சம் அபாயகரமான பர்ஃபெக்‌ஷனிஸ்ட் என்று சொல்வேன். அதாவது, ஒரு வருடம் முழுதும் தாம் பயணம் செய்த பேருந்து டிக்கெட்டுகள் அனைத்தையும் கசக்காமல் கொடுத்த மேனிக்கு அப்படியே ஃபைல் செய்து வைக்குமளவுக்கு.

டெலிபோன் பில்கள், மளிகை பில்கள், பேப்பர் பில்கள், ஹோட்டல் பில்கள், சம்பள ஸ்லிப்புகள், க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட்கள், கடிதங்கள் என்று ஆரம்பித்து அவருடைய ‘சேமிப்புகள்’ மலைப்பூட்டக்கூடியவை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஃபைல் வைத்திருப்பார். எதையும் எப்போதும் தேடவேண்டிய அவசியமில்லை. [எதற்குத் தேடவேண்டும்?] மேசை மீது ஒரு pen stand வைத்திருந்தால் அதற்குள் ஒரு இங்க் பேனா, ஒரு பால்பாயிண்ட் பேனா, ஒரு பென்சில், ஒரு ஸ்கெட்ச் பேனா, ஒரு மார்க்கர், ஒரு ரப்பர், ஒரு ஷார்ப்னர், ஒரு கத்திரிக்கோல், ஒரு அரையடி ஸ்கேல், ஜெம் க்ளிப், குண்டூசி, ரப்பர் பேண்ட், ஸ்டேப்ளர், பின் என்று ஒரு மினி ஸ்டேஷனரி கடையே இருக்கும்.

எனக்குத் தெரிந்து ஒரு ஆரஞ்ச் நிற ஸ்கேலை அவர் 1943ம் வருஷத்திலிருந்து பத்திரமாக வைத்திருக்கிறார். பளிச்சிடும் ஆரஞ்சு நிற ஸ்கேல். அடிக்கடி அதைத் துடைத்துவேறு வைப்பார். பயன்படுத்தும் பொருள்கள் அனைத்துக்கும் மரியாதை கொடுப்பது என்பது அவரது சித்தாந்தம்.

மேசை படு சுத்தம். புத்தகங்களிலோ, தாள்களிலோ ஒரு சிறு சுருக்கம், கிழிசல் பார்க்கமுடியாது. அனைத்தும் ராணுவ ஒழுங்கில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். சில சமயம் வேண்டுமென்றே அவரது மேசையைக் கண்டபடி கலைத்து, அனைத்தையும் தூக்கி வீசுவேன். வெறுப்பேற்றுவதற்காகவே பான்பராக் குப்பைகளை அவரது புத்தக வரிசைக்கு நடுவே போட்டுவைப்பேன். ஒருவார்த்தை சொல்லமாட்டார். சிரித்தபடியே சரி செய்து வைப்பார். குப்பை போடுவது என் குணம். ஒழுங்கு செய்வது அவர் குணம்.

ஒரு சமயம் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு அவருடன் சென்றிருந்தபோது அவர் எடுத்து வந்திருந்த சூட்கேஸை ஆராய்ச்சி செய்தேன்.

தேவையான துணிமணி எடுத்துச் செல்வதுதான் நம் வழக்கம். பார்த்தசாரதி, துணிகளை உலர்த்த ஒரு பிளாஸ்டிக் கயிறும் ஒன்றிரண்டு ஹேங்கர்களும் எடுத்து வந்திருந்தார்.

விளையாட்டுப் போல் நாம் என்ன கேட்டாலும் அது அவரிடம் கிடைக்கும். பார்த்தசாரதி, அமிர்தாஞ்சன் இருக்கா? இருக்கு. ஃபெவி ஸ்டிக் இருக்கா? இருக்கு. தேங்காய் எண்ணெய் இருக்கா? இருக்கு. சீப்பு இருக்கா? இருக்கு. விபூதி இருக்கா? இருக்கு. தலை வலிக்குது. ஏதாவது மாத்திரை இருக்கா? இருக்கு. சாப்பிட எதாவது வெச்சிருக்கிங்களா? அதுவும் இருக்கும். ஒரு சிறு கண்ணாடி டப்பாவில் சாக்கலேட்டுகளும் பாதாம் பருப்புகளும் பிஸ்கட்டுகளும் முறுக்குகளும்.

எனக்கு கட்டம் போட்ட அப்ளிகேஷன் ஃபாரம்களை ஃபில்லப் செய்யத் தெரியாது. கை உதறும். அவர்தான் செய்துகொடுப்பார். அவர் இண்ட்டு போட்டுக்கொடுத்த இடங்களில் நான் போட்ட கையெழுத்துகள் அதிகம். ஏடிஎம்மில் எனக்குப் பணம் எடுக்க வராது. உதறும். அவர்தான் உடன் வந்து எடுத்துக் கொடுப்பார். வங்கி விவகாரங்கள், வீட்டுக் கடன், அரசு அலுவலகங்கள் சார்ந்த நடைமுறைகள், காவல் துறை சார்ந்த நடைமுறைகள் எனத் தொடங்கி அவருக்குத் தெரியாத விஷயங்களே உலகில் கிடையாது என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

எங்கள் நிறுவனத்தின் மருத்துவம் சார்ந்த புத்தகப் பிரிவுக்கு [நலம்] அவர்தான் இப்போது ஆசிரியர். அவர் கைபட்டு வெளிவரும் புத்தகங்களில் மட்டும் கண்டிப்பாக அச்சுப்பிழை இருக்காது. இதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். க்ரைம் ரிப்போர்ட்டராக இருந்தவர் மருத்துவப் புத்தகங்களுக்கு எப்படிச் சரிப்படுவார் என்கிற கேள்வியே கிடையாது. சித்தா, யூனானி, ஆயுர்வேதம், அலோபதி, ஹோமியோபதி, சீத்தாபதி என்று எதைப்பற்றிப் பேசினாலும் அவருக்கு அவசியம் ஏதேனும் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் அவை பற்றித் தெரிந்தவர்களைத் தெரிந்திருக்கும். சென்னை நகரில் மட்டும் ஒருநூறு மருத்துவர்களையாவது அவருக்கு நெருக்கமாகத் தெரியும்.

சரி, அந்தத் துறை சார்ந்து பணியாற்றுகிறார்; அதனால் தெரிந்திருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. அவருக்கு நிறைய வழக்கறிஞர்களைத் தெரியும். இஞ்சினியர்களைத் தெரியும். மெக்கானிக்குகளைத் தெரியும். அரசியல்வாதிகளைத் தெரியும். சமூக சேவகர்களை, கல்வியாளர்களை, வியாபாரிகளை, வங்கியாளர்களை, பத்திரிகை ஆசிரியர்களை, வீட்டு புரோக்கர்களை, கமிஷன் ஏஜெண்டுகளை, கடன்காரர்களை, இன்னும் யார் யாரையோ தெரியும்.

தினமணியின் முன்னாள் ஆசிரியர் அமரர் இராம திரு சம்பந்தத்தின் சிஷ்யர் அவர். மனித வாழ்க்கை தொடர்புகளால் அர்த்தம் பெறுகிறது என்பது அவரது சித்தாந்தம்.

நேற்றுவரை என் ஒரே திருப்தி, பார்த்தசாரதிக்குத் தெரியாத ஒரே இனம் சினிமாக்காரர்கள்.

ம்ஹும். அதுவும் பொய்த்துவிட்டது. சமீபத்தில் ஒரு திரைப்பட இயக்குநரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தபோது அவர் இப்படித் தொடங்கினார்:

‘உங்களப்பத்தி பார்த்தசாரதி நிறைய சொல்லியிருக்கார் சார்.’

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி