விழித்திருப்பவன்

பாரிஸ் ரெவ்யுவின் ஆர்ட் ஆஃப் ஃபிக்‌ஷன் பகுதியில் இடாலோ கால்வினோவின் நேர்காணலைப் படித்துக்கொண்டிருந்தேன். தன்னால் காலை நேரங்களில் எழுத முடிவதில்லை என்றும் பெரும்பாலும் மதியத்தில்தான் எழுதுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். வினோதமான பிரகஸ்பதி. நமக்கெல்லாம் மதியம் என்பது நள்ளிரவு. என்ன செய்ய. பழகிவிட்டது.

ஆனால் இரவில் நெடுநேரம் கண் விழிப்பது தவறு என்று பொதுவாக அனைத்து மருத்துவர்களும் சொல்கிறார்கள். அது நாள்பட்ட வியாதிவெக்கைகளுக்கு வழி வகுக்கும். நானோ, பல்லாண்டுகளாக இரவில்தான் அதிகம் வேலை செய்கிறேன். என்ன முட்டி மோதினாலும் காலை பத்து மணிக்கு முன்பாக உட்கார முடிவதில்லை. ஒரு மணிக்குப் பின்பும் பணியாற்ற முடிவதில்லை. மதிய உணவுக்குப் பிறகு உறங்கி எழுந்தால்தான் பொழுதே விடிவது போலிருக்கிறது. மாலை ஆறு மணிக்கு அமர்ந்தால் சலிக்காமல் நள்ளிரவு இரண்டு வரைகூட வேலை செய்ய முடிகிறது. நாவல் வேலை இருக்குமானால் இதுவே அதிகாலை மூன்று மூன்றரை மணி வரை கூட வேகம் குறையாமல் செல்லும்.

அடிப்படையில் உறங்குவதில் பெருவிருப்பமுடையவன் நான். எட்டு முதல் பத்து மணி நேரங்கள் அடித்துப் போட்டாற்போலத் தூங்க மாட்டோமா என்று எப்போதும் ஏங்குவேன். அப்படி இருந்தும் எப்படி இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது என்று யோசித்துப் பார்த்தால் பழியும் பாவமும் ஜெயமோகனுடையது என்று தோன்றியது.

இன்றைக்குச் சற்றேறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன்னால் யாஹு மெசஞ்சர் என்றொரு அழைப்பான் இருந்தது. தமிழ் கூறும் நல்லுலகமே அதில்தான் எப்போதும் குடியிருந்தது (கூகுள் வராத காலம்). உலகின் எந்த மூலையில் வசிக்கும் நண்பரையும் உடனுக்குடன் தொடர்புகொள்ளலாம் என்ற வசதி மிகுந்த கிளர்ச்சியளித்தது. அதைவிட யாஹு மெசஞ்சரில் இருந்த இமோஜிகள் மிகவும் அழகாக இருக்கும். இன்று இங்கே ஃபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் இன்ன பிற இடங்களிலும் காணக் கிடைக்கும் பொம்மைகள் எதுவும் யாஹு பொம்மைகளின் தரத்துக்குக் கால் தூசு பெறாது. நான் இப்போதும் பயன்படுத்தும் :> யாஹுவின் ஒரு இமோஜிக் குறியீடுதான். அதை விடுங்கள்.

அப்போது நான் தட்டுத் தடுமாறி நாவல் எழுதப் பழகிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன், பின் தொடரும் நிழலின் குரலை எழுதி நிறைவு செய்திருந்தார். அந்தச் சமயத்தில் நாவல் குறித்து அவர் எனக்கு எழுதிய ஒரு நீண்ட கடிதம் ஒரு பாடநூலைப் போலவே உதவியது. அந்தக் கடிதத்தை சுமார் நூறு முறை படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இன்றளவும் எழுதப் பயில்பவர்களுக்கு அது ஒரு சிறந்த வழிகாட்டி என்று உறுதியாகச் சொல்வேன். துரதிருஷ்டவசமாக வீடு மாற்றங்களின்போது அது எங்கோ தொலைந்துவிட்டது.

கடிதம் தொலைந்தால் என்ன? ஜெயமோகன் யாஹு மெசஞ்சரில் அப்போது இருந்தார். மாலை ஏழு மணிக்கு மேல் நான் எழுத உட்காரும்போது மெசஞ்சரைத் திறந்தால் அவரது ‘அவைலபிள்’ விளக்கு எரிந்துகொண்டிருக்கும். உடனே உற்சாகமடைந்து நானும் எழுத ஆரம்பிப்பேன். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் மெசஞ்சரைப் பார்த்தால் அப்போதும் அவருடைய விளக்கு எரியும். மீண்டும் எழுதத் தொடங்குவேன். பதினொரு மணிக்கு ஒரு முறை பார்ப்பேன். பன்னிரண்டுக்கு ஒருமுறை பார்ப்பேன். மனிதர் பாத்ரூம் போக, கடைக்குப் போக, சாப்பிட கொள்ளக்கூடவா எழுந்து போக மாட்டார் என்று ஒரே வருத்தமாகிவிடும். (அப்போதெல்லாம் எப்போதும் பச்சை விளக்கு எரியாது. கணினி திறந்திருந்தால், வேலை செய்துகொண்டிருந்தால் மட்டுமே விளக்கு எரியும். மொபைல் வராத காலம் என்பதால் இரு இட லாகின் வசதியும் கிடையாது.) ஆனால் எனக்குக் கண்ணைச் சுழற்றும். விரல் நடுங்கும். யோசனை தடைபடும். தூங்கி எழுந்து எழுதலாம் என்று நிமிடத்துக்கொரு முறை தோன்றும். அதே சமயம் ஜெயமோகன் மட்டும் எழுதுகிறாரே என்ற பதற்றம் வரும். அவருக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரவில்லை என்று குழப்பமாக இருக்கும். எல்லாமே ஒரு பக்கம்தான். அவரிடம் அப்போது இதையெல்லாம் கேட்டது கிடையாது. என்ன சொல்வாரோ என்கிற தயக்கம்.

மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு எழுந்து போய் தண்ணீரை அடித்து வீசி முகம் கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்து மீண்டும் எழுத ஆரம்பிப்பேன். அவரது யாஹு விளக்கு அணைந்தபின் ஐந்து நிமிடங்களாவது நான் அதிகம் வேலை பார்க்க வேண்டும் என்பது கணக்கு. இதுதான் பன்னிரண்டு, ஒன்று, இரண்டு என்று என்னை நிரந்தர நடு நிசி நாயாக்கிவிட்டது.

சென்ற மாதம் ஏற்பட்ட உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பிறகு முன்போல் கண் விழிக்க உடல் இப்போது ஒத்துழைக்க மறுக்கிறது. பதினொரு மணிக்கு மேல் ஆணவமல்லாத ஏதோ ஒன்று கண்ணை மறைக்கிறது. படுத்துவிடுகிறேன். இதன் விளைவு, காலை எழும்போது எப்போதும் இருக்கும் மந்தத்தனம் இல்லை. பழையபடி உற்சாகமாக நடைப் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கிவிட்டேன்.

இப்போதைய லட்சியம், எப்படியாவது மதிய உறக்கத்தை ஒழித்துக் கட்டி இடாலோ கால்வினோவைப் போல அந்நேரத்தில் எழுதிப் பார்க்க வேண்டும்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!