bukpet

பயிலரங்கம் – சில குறிப்புகள்

writeroom முதல் பயிலரங்கம் இன்று நடந்து முடிந்தது. Free என்று அறிவித்திருந்ததால் ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அந்த விவகாரத்துக்குள் போகக்கூடாது என்று முதலிலிருந்தே கவனமாக ஒதுங்கியிருந்துவிட்டேன். பங்கேற்பாளர்களை என் மனைவிதான் தேர்ந்தெடுத்திருந்தார். என் அக்கவுண்ட் மூலமாகவேதான் அவரும் ஃபேஸ்புக் பார்க்கிறார் என்பதால் நானறிந்த அனைவரையும் அவரும் அறிவார். (என்னைவிட சிறிது நன்றாகவே.) தொழில்நுட்ப ஏற்பாடுகள் அனைத்தையும் நண்பர் செல்வ முரளி செய்தார். பவர் கட் ஏற்படாமல் எம்பெருமான் பார்த்துக்கொண்டான். ஏழு மணிக்கு ஆரம்பித்து எட்டே காலுக்குள் முடிந்துவிடும் என்று சொல்லியிருந்தேன். அவ்வளவு துல்லியமான நேரக்கணக்குடன் எனக்குப் பேசிப் பழக்கமில்லாததால் முக்கால் மணி நேரம் இழுத்துவிட்டது. சரி, என்ன இப்போது? தெரிந்ததைச் சொல்லித் தந்த மகிழ்ச்சி எனக்கு. உபயோகம் என்று எண்ணியிருப்பார்களானால் அது அவர்களுக்கும்.

இம்மாதிரியான பயிலரங்குகளில் பவர் பாயிண்ட், கிராஃபிக்ஸ் போன்றவை பயன்படுத்தப்படும் என்று கேள்விப்பட்டேன். எழுத்தை அப்படியெல்லாம் பொம்மைச் சட்டகத்துக்குள் பொருத்திவிட முடியுமா என்று தெரியவில்லை. கலையாக அன்றி, நுட்பமாக அணுகினாலுமே அது சிரமம்தான். இனி நடத்தவிருக்கும் வகுப்புகளிலும் பொம்மைச் சட்டகங்கள் இராது என்றே நினைக்கிறேன்.

எழுத்தெல்லாம் சொல்லிக் கொடுத்து வருமா என்று சிலர் கேட்டார்கள். கற்றுக்கொண்டால் வரும் என்பதே என் பதில். யோசித்துப் பார்த்தால் முட்டி மோதி தேறித் தெளிந்தவற்றுடன், எனக்கு போதித்தவர்கள் சொன்னவற்றையும் கலந்துதான் என்னை வடிவமைத்துக்கொண்டேன். இன்றுவரை இதனைத்தான் தொடர்கிறேன். என்னைத் தொடர்பவர்களால் இதனைத் தொடர முடியும் என்று நினைக்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம். நிகழ்ச்சி இலவசம் என்று முன்பே அறிவித்திருந்தேன். நூறு பேருக்கு மேல் இடம் கிடையாது என்பதையும் சொல்லியிருந்தேன். ஒரே ஒருவர் மட்டும், தேர்வான மின்னஞ்சல் அனுப்பப்பட்ட பிறகு தன்னால் பங்கு பெற இயலாது என்பதால் தனது இருக்கையை வேறொருவருக்குத் தந்துவிடும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். காத்திருப்பில் இருந்தவர்களுள் முதலில் இருந்தவருக்கு அவரது இடத்தை அளித்துவிட்டோம். மிகவும் தாமதமாக என்றாலும் அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடந்துகொண்டிருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் ஒன்றைக் கவனித்தேன். அப்படித் தெரிவிக்காமல் பலபேர் வராமல் இருந்துவிட்டார்கள் (குறைந்தது பத்துப் பேர்). ‘என்னை ஏன் அழைக்காமல் விட்டீர்கள்?’ என்று கேட்ட பலர் நினைவுக்கு வந்தார்கள். மானசீகமாக அவர்களிடம் என் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இதெல்லாம் இலவசத்தின் மோசமான விளைவுகளைச் சேர்ந்தவை.

இந்த அலட்சியம், இந்த மேம்போக்குத்தனம், இந்தப் பொறுப்பின்மை எழுத்து என்றல்ல; எங்குமே சிறக்கச செய்யாது. நல்லது. அவர்களிடமிருந்தும் ஒரு பாடம் பயில்கிறேன். இனியொரு வகுப்பு நடக்குமானால் அது இலவச வகுப்பாக நிச்சயம் இருக்காது. பணம் கட்டித்தான் வகுப்பில் சேர வேண்டும்.

நிகழ்ச்சி நன்றாக நடக்க ஒத்துழைத்த bukpet குழுவினருக்கு (செல்வ முரளி, பிரதீப் குமார், பாரதி மற்றும் என் அட்மின்) என் நன்றி. எனக்காக வந்திருந்து வாழ்த்துரை வழங்கிய என் நண்பர் ரமேஷ் வைத்யாவுக்கு நன்றி சொன்னால் திட்டுவார். அதனால் அன்பு.

நிகழ்ச்சி எப்படி இருந்தது என்று கலந்துகொண்டவர்கள் எழுதக்கூடும். (அறிவன் ஏற்கெனவே எழுதிவிட்டார்.) இரண்டு நாள் ஆறப் போட்டு, பதிவு செய்துள்ள விடியோவைப் பார்த்துவிட்டு அதன்பின் நான் எப்படிப் பேசியிருக்கிறேன் என்று என் கருத்தைச் சொல்கிறேன்.

பதிவான வீடியோவை யூ ட்யூபில் போடச் சொல்லி யாரும் கேட்காதீர்கள். அப்படி அவசியம் அதை வெளியிட்டே தீரவேண்டுமென்றால் அதற்குப் பணம் கட்ட வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே கிண்டில் இலவசங்களை நிறுத்தியிருந்தேன். இனி பயிலரங்கமும் அவற்றின் ஒளிப்பதிவும்கூட இலவசம் கிடையாது. (ஆனால் தொடர்ந்து நடக்கப் போகிறது.)

இந்த விஷயத்தில் நீங்கள் என்னை வடிவமைக்கிறீர்கள்!

 

Share

1 Comment

  • உண்மைதான்.. இலவசங்களை விடுத்து மினிமம் என ஒன்றை,:ைவப்பதுதான்.. சிறப்பு. / என்னால் கலந்துகொள்ள இயலாச் சூழ்நிலை..நன்றி.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி