சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே.
இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி அரு. லட்சுமணன் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். கலைஞர் கருணநிதி பொற்கிழி விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றுபவர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எஸ். ஜெகத் ரட்சகன். வாழ்த்துரை வழங்குபவர் நல்லி செட்டியார்.
கலைஞர் பொற்கிழி விருது பெறுவோர்: தமிழண்ணல், கவிஞர் அப்துல் ரகுமான், பேராசிரியர் சே. இராமானுஜம், அம்பை, அர்ஜுன் டாங்லே [மராத்தி எழுத்தாளர்], பேராசிரியர் கா. செல்லப்பன் [ஆங்கில இலக்கியம்]
தொடக்க விழாவுக்கு நாளை முதல்வர் வரவில்லை என்பதால் பெரிய கெடுபிடிகள் இருக்காது என்று நினைக்கிறேன். அனைவரும் நாளையே வரலாம். நாளை தொடங்கி 17.01.2011 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வேலை நாள்களில் மதியம் 2.00 மணிக்குத் தொடங்கும். இரவு 8.30 வரை கண்காட்சி நடைபெறும். விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
கண்காட்சி வளாகத்தில் எங்களுடைய New Horizon Mediaவின் அரங்கு எண் F 13-14-15. எங்களுடைய கிழக்கு, வரம், நலம், ப்ராடிஜி, மினிமேக்ஸ் அனைத்து இம்ப்ரிண்டுகளின் புத்தகங்களையும் இங்கு பார்வையிடலாம்.
கண்காட்சி தினங்களில் அங்கேதான் இருப்பேன் என்றாலும் தினமும் மாலை 6 மணிக்கு New Horizon Media அரங்கில் நிச்சயமாக இருப்பேன். சந்திக்க விரும்பும் வாசகர்களையும் நண்பர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.