இந்த வருடம் என்ன செய்தேன்?

எழுதினேன் என்று ஒரு வரியில் முடித்துவிட முடியும். ஆனால் இந்த வருடம் என்னைச் செலுத்திய சில மனிதர்களை நினைவுகூர வேறு பொருத்தமான சந்தர்ப்பம் அமையாது.

கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எண் புதிதாக இருந்ததால் யாரென்று தெரியாமல்தான் எடுத்தேன். ‘நான் முரளிராமன் பேசறேன். எப்படி இருக்கிங்க ராகவன்?’ என்றது குரல். திகைத்துவிட்டேன். மிகப் பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியில் நான் ஒரு சீரியலுக்கு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவர் அவர். ஜெயா டிவியின் பிரதான மூளை அவர்தான் அப்போது. ஓரிரு முறை சந்தித்ததுடன் சரி. பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் என்னை அவரும் அவரை நானும் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறோம்.

‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே? ராடன் ஆபீசுக்கு வரிங்களா?’ என்றார். மீண்டும் திகைப்புடன் கூடிய சிறு தயக்கம். ராடனில் முரளி ராமனா!

போன பிறகுதான் தெரிந்தது. அவர் அப்போதுதான் ராடனில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார். ஒரு சிறு முன்னுரை கூட இல்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘செல்லமேக்கு நீங்க எழுதணும்.’

செல்லமேவுக்கு நான் ஏற்கெனவே ஒரு முறை எழுதச் சென்றிருக்கிறேன். கொஞ்ச நாள்தான். சில அரசியல் காரணங்களால் தொடர இயலாமல் போய்விட்டது. முரளிராமனிடம் அதைப்பற்றிப் பேசுவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே ‘எழுதுங்க’ என்று அழுத்தமாகச் சொன்னார் சுபா வெங்கட். ராடன் க்ரியேடிவ் டீமின் தலைவர். சொன்ன கையோடு திருமதி ராதிகாவிடமும் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். சில நிமிடங்கள்தாம். என் எழுத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. எழுதவேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.

ஆனால் ஏற்கெனவே நான் இரண்டு சீரியல்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். முத்தாரம், முந்தானை முடிச்சு. ‘அதெல்லாம் சமாளிப்பிங்க. எனக்குத் தெரியும்’ என்றார் சுபா.

எனக்கும் தெரியும். முடியாதது என்று ஒன்று இல்லை. எல்லாமே திட்டமிடலில் இருக்கிறது. ஆனாலும் ஒரு தயக்கம் இருந்தது. இந்தக் கட்டத்தில் சுபா எனக்களித்த நம்பிக்கையும் உற்சாகமும் சிறிதல்ல. ‘மேடத்துக்கு உங்க ரைட்டிங் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கதான் எழுதணும்னு விரும்பறாங்க.. கதை இப்ப போயிட்டிருக்கற ஏரியாவுல உங்க காண்ட்ரிப்யூஷன் ரொம்ப முக்கியமா இருக்கும்’ என்றார்.

ஒரு சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய மூளைகள் நான்கு. இயக்குநர். திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. ஒளிப்பதிவாளர். நான் உள்ளே நுழைந்த சமயம் இந்த நான்கு பேருமே புதிதாக உள்ளே வரும் நேரமாக இருந்தது. இயக்குநர் ஓ.என். ரத்னம், எஸ்கேவியின் மாணவர். திரைக்கதைக்கு வந்திருந்த குரு சம்பத்குமாரை ஏற்கெனவே நான் நாதஸ்வரம் டிஸ்கஷனில் சந்தித்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர். அபாரமான திறமைசாலி. ஒளிப்பதிவாளர் காசி என் பழைய நண்பர். எப்போதும் என் விருப்பத்துக்குரிய டெக்னீஷியன்.

தயக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு உற்சாகமாக வேலையை ஆரம்பித்தேன். ஒரு நாளை மூன்று எட்டு மணிநேரங்களாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு செஷனுக்கும் இரண்டு மணிநேர ஓய்வு என்று வகுத்துக்கொண்டு எழுதினேன். தொடக்கத்தில் ஒரு சில தினங்கள் முழி பிதுங்கியது உண்மை. ஆனால் பழகிவிட்டது.

ஒரு மாதிரி இந்த வண்டி ஓடிவிடும் என்று நம்பிக்கை பிறந்த மறு நாளே சினி டைம்ஸில் இருந்து தயாரிப்பாளர் சித்திக் போன் செய்தார். ‘கொஞ்சம் நேர்ல வாங்களேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.’

மனெ தேவுரு.

இது நான் சத்தியமாக எதிர்பாராத விஷயம். தூக்கி வாரிப்போட்டுவிட்டது. ‘எப்படி சார் முடியும்? நாலெல்லாம் கட்டுப்படியே ஆகாது சார்’ என்றேன்.

‘எல்லாம் முடியும். பண்ணுங்க. நீங்கதான் பண்ணணும். நீங்கதான் பண்றிங்க’ என்றார்.

எனது நடைமுறைச் சிக்கல்களைச் சொன்னேன். ஒரு சீரியலுக்கு ஒரு நாளைக்கு எழுத ஆகிற நேரம். மூன்று சீரியல்களுக்கு அநேகமாக தினமும் 17 மணிநேரம் ஆகிறது. இதில் இன்னொன்றை எப்படிச் சொருகுவது? அதுவும் இது கன்னட சீரியல். நான் தமிழில் எழுதி அனுப்பி, அதை வேறொருவர் மொழி மாற்றி தினசரி ஷூட்டிங் நடந்தாக வேண்டும். நடக்கிற கதையா?

‘பண்ணிடுவிங்க’ என்று சிரித்தார்.

நான் மீண்டும் எனது நேர சார்ட்டைத் திருத்தி அமைக்க நேர்ந்தது. தினசரி காலை 9 மணிக்கு எழுத உட்கார ஆரம்பித்தேன். முன்னர் பத்து மணிக்குத் தொடங்குவேன்.  பன்னிரண்டு வரை எழுதிக்கொண்டிருந்ததை ஒன்றரை என்று திருத்தினேன். அதன்பின் சாப்பிட்டுப் படுத்தால் முன்பெல்லாம் ஐந்து வரை தூங்குவேன். அது நான்கு என்றாயிற்று. தூங்கி எழுந்து இரண்டு மணிநேரம் சும்மா இருப்பதை மாற்றி, ஒரு மணிநேரம் மட்டும் சும்மா இருப்பது என்று வைத்துக்கொண்டேன். மாலை ஐந்தரை, ஆறு மணிக்கு மீண்டும் எழுதத் தொடங்கினால் அதிகாலை இரண்டரை அல்லது மூன்று மணி வரை வேலை ஓடும். இடையிடையே ட்விட்டர். பிரவுசிங். மெசஞ்சரில் அரட்டை. இளையராஜா பாட்டு. நொறுக்குத்தீனி.

முதுகு வலி வராமலிருக்கும்படியாக ஒரு சௌகரியமான நாற்காலி வாங்கிக்கொண்டேன். என் உயரம் அல்லது குள்ளத்துக்குப் பொருத்தமாக இன்னொரு மேசை செய்துகொண்டேன். ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக ஒரு கீ போர்டு. கரண்டு போனாலும் எழுதியதை நேரத்துக்கு அனுப்பி வைக்க வசதியாக ஒரு டேட்டா கார்ட்.

ஒன்றும் பிரமாதமல்ல. சமாளித்துவிடலாம் என்றுதான் இப்போதும் தோன்றியது. உடனே மீண்டும் ராடனிலிருந்து சுபா அழைத்தார்.

சிவசங்கரிக்கு ஸ்க்ரீன் ப்ளே பண்ணணுமே ராகவன்?’

இடைப்பட்ட காலத்தில், திட்டமிடுகிற விஷயத்தில் முத்தாரத்தில் எனக்குப் பேருதவியாக இருந்த எஸ்கேவியின் இணை இயக்குநர் நீராவி பாண்டியன், மனெ தேவுருவுக்கு இயக்குநராகி பெங்களூர் சென்றிருந்தார். அதனால் முத்தாரம் வேலை கொஞ்சம் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்தது. இருப்பினும் ஒரு சவாலாக ஏற்று, சிவசங்கரிக்கும் எழுதத் தொடங்கினேன். [இதன் இயக்குநர் தங்கபாண்டியனும் எஸ்கேவியின் மாணவர்தான். ஒரு குருவுக்கும் அவரது நான்கு சீடர்களுக்கும் ஒரே சமயத்தில் எழுதும் ஒரே எழுத்தாளன் உலகிலேயே நாந்தான் என்று நினைக்கிறேன்]

நேர ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் இப்போது எங்கே போயினவென்று தெரியவில்லை. எந்த நேரமும் எழுதுகிறேன். எல்லா நேரமும் சிந்திக்கிறேன். ஜனவரியில் செல்லமே நிறைவடைந்து  ராடனின் அடுத்த ப்ராஜக்ட் ஆரம்பிக்கவிருக்கிறது. அதற்கும் எழுதியாக வேண்டும். இது முடியும் – அது தொடங்கும் ஒரு மாதகால அவகாசத்தில் இரண்டுக்குமே சேர்த்து எழுதியாக வேண்டியிருக்கும். ஆக, ஆறு.

பார்க்கிறவர்கள் அனைவரும் உடம்பை கவனிங்க சார் என்கிறார்கள். தினமும் கொஞ்சம் வாக்கிங் போகிறேன். அதைத்தாண்டி வேறெதுவும் செய்ய முடிவதில்லை. முன்னைப் போல் இப்போது நொறுக்குத்தீனிகள் நிறைய தின்பதில்லை. கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கிறேன். படிப்பு சாத்தியமில்லாமல் இருக்கிறது. டாய்லெட்டில் இருக்கும் நேரம் மட்டும்தான் படிக்க முடிகிறது. சமயத்தில் அங்கும் மொபைலை எடுத்துச் சென்று ஆங்ரி பேர்ட் விளையாட ஆரம்பித்துவிடுகிறேன்.

வெளியிடங்களுக்குப் போவது அறவே நின்றுவிட்டது. இந்த வருடம் என் அறையைத் தாண்டி ஹாலுக்குக் கூட அதிகம் போகவில்லை. மூன்று படங்கள் பார்த்தேன். ஒன்று மாற்றான். படு குப்பை. இன்னொன்று துப்பாக்கி. பிடித்திருந்தது. நீதானே என் பொன் வசந்தம் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. மனைவி விரும்பியதால் உடன் செல்ல நேர்ந்தது. இசையை மட்டும் ரசித்துவிட்டு வந்தேன்.

நீண்ட நாள் ஆசையான மேக்புக் ப்ரோ வாங்கவேண்டும் என்ற எண்ணம் இவ்வாண்டு அடிக்கடி ஒரு பேராவலாக எழுந்து இம்சித்துக்கொண்டிருந்தது. ஆனால், தயக்கம் பலமாக இருக்கிறது. குறைந்த அளவு நாள்களே என்றாலும் மத மாற்றத்துக்கான கால அவகாசத்தைத் தரக்கூடிய சூழல் எனக்கில்லை. இன்றுவரை எண்ணம், எண்ணமாகவேதான் இருக்கிறது. இன்னும் அதிவேக லேப்டாப் ஒன்று கிடைக்குமா என்றுதான் அவ்வப்போது திங்க்பேட் சைட்டில் தேடிக்கொண்டிருக்கிறேன். யாராவது ஒரு நல்ல கையடக்க சூப்பர் கம்ப்யூட்டரை சிபாரிசு செய்யவும்.

இந்த ஆண்டு படித்து முடித்த புத்தகங்கள் என்று பார்த்தால் மிகவும் சொற்பம். அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியா எனக்குப் பிடித்தது. கம்யூனிஸ்டுகளைக் காய்ச்சி எடுத்த அவருடைய வேறொரு புத்தகம் அதைக் காட்டிலும் அதிகம் பிடித்தது. கீதா ப்ரஸ்ஸின் பகவத்கீதை மொழிபெயர்ப்பில் அடிக்கடி என்னை இழந்தேன். அவர்களது அனைத்து சிறு வெளியீடுகளையும் மொத்தமாக வாங்கிப் படித்தேன். ஒரு சிலவற்றை நண்பர்களுக்குப் பரிசாகவும் அளித்தேன். நம்பூதிரிப்பாடின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, விடியல் வெளியீடாக வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கர் நூல் தொகுதியில் காஷ்மீர் குறித்த பாகம், ஷ்யாமா சரண் லாஹிரி குறித்த ஒரு புத்தகம், ரத்தப் படலம் என்ற காமிக்ஸ் புத்தகம் ஆகியவை படித்தவற்றுள் உடனே நினைவுக்கு வருபவை. பத்திரிகைகளில் பிரமாதமாக ஏதும் எழுதவில்லை. கோகுலத்துக்கு ஒரு சிறுவர் தொடர் எழுத ஆரம்பித்தேன். அதோடு சரி. இணையத்திலும் வெளியிலுமாக அவ்வப்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வருகிறது. அன்சைஸ். மனைவிக்கு இதில் மட்டும் பெரிய வருத்தம். கிருஷ்ணருக்கு ஒரு நவீன பயக்ரஃபி எழுதப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கான ஆயத்தங்களும் செய்ய ஆரம்பித்தேன். நேரமில்லாமல் அந்த வேலை பாதியில் நிற்கிறது. கட்டுரைத் தொகுப்பையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது, இந்த வருட இலக்கிய சேவை பத்தவே பத்தாது என்கிறார்.

எழுதியது போக, வீட்டுக்கு என்ன செய்தேன்? தெரியவில்லை. வீட்டில் இருந்தேன். வீட்டில் மட்டும்தான் இருந்தேன். அது போதுமா என்று கேட்டால் அடிக்க வந்துவிடுவார்கள்.

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்திப்போம்.

O

சென்ற வருடம் என்ன செய்தேன்?

Share

12 comments

  • ராட்சசத்தனமா எதோ பண்ணிட்டிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. இந்த சீரியல் உலகம் எனக்குப் பரிச்சயமில்லாதது. ஆனா உங்க வீட்ல சொல்ற மாதிரி இலக்கிய சேவை ரொம்பவே கம்மின்னு தோணுது. மிஸ் பண்றேன் (இந்த எழவை பேச்சுத் தமிழ்ல பொருள் இழக்காம கய்யாமுய்யான்னு இல்லாம எப்படி சொல்றது?). நீங்க அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரியலை.
    எப்பவாவது உங்களுக்கு நேரம் கெடச்சா சந்திக்கணும் (இங்கதான் பெருங்குடியில சொந்தக் கடை போட்டு சோப்பு சீப்பு வித்துகிட்டு இருக்கேன்).
    மேக்புக் – அவ்ளோ பணம் அதிலே தாரை வார்க்கமுடியும்னா தயவுசெஞ்சு வாங்கிப் போடுங்க. நீங்களும் ஆண்டாண்டுகாலமா டப்பா கம்ப்யூட்டர்களா வாங்கி டாமேஜ் ஆயிட்டு இருக்கீங்க. இதை ஒண்ணு வாங்கிப் போட்டுட்டா அப்புறம் நிம்மதியா நீங்க வேலையைப் பத்தி யோசிக்கலாம். உங்க ஸ்க்ரீன்ப்ளே வஸ்துக்கள் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமான்னு பார்த்துக்கோங்க. டெமோ வேணும்னா கேளுங்க. ரெட்டினா டிஸ்ப்ளே மேக்புக் ரெடியா இருக்கு.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்! புத்தகக் கண்காட்சிக்கு வர இந்த வருஷமும் குடுத்து வெக்கலை. வேறெங்காவது சந்திக்கலாம் 🙂

  • What you need is not a new faster computer, all you need is a good solid state disk. Ask someone in computer line (may be @nchokkan) I bet it will solve all your speed problems 🙂 all the best.

    Your blog post was very inspiring. See to that you do not get burnt with too much work.

  • யேயெப்பாடியோவ்வ்வ்வ்வ் 2013ல் சீரியல்கள் உங்க கைவசம் வந்துடுமளவுக்கு 2012ல் கடும் உழைப்பினை தந்திருக்கீங்க 🙂 வாழ்த்துகள் சார் எஞ்சாய் அப்பப்ப தீனி அப்டேட்ஸோட திருப்தியா எழுதுங்க 🙂

  • ஆனா எனக்கு ஒண்ணு புரியவே இல்லை.. ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்திக்கணும்? ரெண்டொரு சீரியல், கொஞ்சம் எழுத்து, கொஞ்சம் ட்விட்டர் அரட்டை. இதானே கரக்டா இருக்கும்?

    • பிரகாஷ்: அடிப்படையில் எப்போதுமே எனக்கு ஒரு வியாதி உண்டு. என்னால் அதிகபட்சம் என்ன செய்ய முடியும் என்று அவ்வப்போது நிரூபித்துப் பார்த்துக்கொள்ள விரும்புவேன். எழுத்து என்றில்லை. எல்லாவற்றிலுமே அப்படித்தான். சீரியல் எழுத ஆரம்பித்தபோது ஒன்று எழுதவே முழி பிதுங்கும் என்றார்கள். சற்று ஆராய்ந்தபோது துல்லியமான திட்டமிடலின்மூலம் இந்த மாயையை ஒழிக்க முடியும் என்று நினைத்தேன். தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்திக்கொண்டேன். வசனம் தவிர, மற்ற படப்பிடிப்புக் குறிப்புகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு மிகச்சுருக்க மொழியை உருவாக்கிக்கொண்டேன். மிக எளிய உதாரணம். ரியாக்‌ஷன் என்ற சொல். இது ஒரு தாளில் பத்து தடவையாவது வரும். ஒருமுறை எழுதி கண்ட்ரோல் சி போட்டு வைத்துக்கொண்டால் போதும். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். ஜாலி என்று நினைத்தால் ஜாலி. எனக்கு எழுத்து தொழில் மட்டுமல்ல. பொழுதுபோக்கும்கூட. ஒவ்வொரு வரியையும் ரசித்து ரசித்தே எழுதுகிறேன். நோ பெய்ன். ஒன்லி கெய்ன்.

  • எங்கப்பா அந்த லைக் பட்டன்? பிரகாசர் கேக்கற அதே கேள்விதான் எனக்கும் 🙂

  • let me know ur visiting date and time for this year book fair, vl help me to meet u on that day. thanking you.

  • வாழ்த்துக்கள் பாரா
    சுகமாக இருக்கிறது படித்து தெரிந்து கொள்ள.
    ஜெய விஜயீ பவ.
    நன்றி.
    மிகுந்த அன்புடன்,
    ஸ்ரீநிவாசன். V

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி