இந்த வருடம் என்ன செய்தேன்?

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில திட்டங்கள் வகுப்பேன். கூடியவரை அதன்படியே நடக்க முயற்சி செய்வேன். பெரும்பாலும் சொதப்பியதில்லை. ஏனெனில் சாய்ஸில் விடுவதற்கென்றே எப்போதும் சிலவற்றைச் சேர்த்து திட்டமிடுவது என் வழக்கம்.

ஆனால் இந்த 2011 மட்டும் எனக்கு வேறு மாதிரி அமைந்தது. திட்டமிட்ட எதையும் செய்யாமல், திட்டமிடாத எத்தனையோ காரியங்களை இந்த ஆண்டு செய்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், முற்றிலும் மற்றவர்களால் இயக்கப்பட்ட வாழ்க்கையை மட்டுமே இந்த ஆண்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இதற்குமுன் இப்படி இருந்ததில்லை.

பெரிய வருத்தமில்லை. ஏனெனில் எப்போதும்போல் மகிழ்ச்சிதரத்தக்க வெற்றிகளும் லேசான வருத்தம் தந்த தோல்விகளும்தான் இந்த ஆண்டும் கிட்டியிருக்கின்றன.

 • ஆண்டின் தொடக்கத்தில் புதிய தலைமுறை வார இதழில் எழுதிய இம்சைகள் இலவசம் தொடர் மூலம் முற்றிலும் புதிய வாசகர் வட்டம் ஒன்று கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. இணையத்திலும் இந்தக் கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பு, நகைச்சுவை எழுத்துக்கு எப்போதும் உள்ள தனி மதிப்பை மீண்டுமொருமுறை புரியவைத்தது. 2012ல் சற்று வேறு விதமான நகைச்சுவை எழுதிப் பார்க்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
 • புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளிவரத் தொடங்கிய கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு வாராந்திர நிகழ்ச்சி, குறுகிய காலத்தில் பெரிய வெற்றி கண்டது அடுத்த மகிழ்ச்சி. கதையல்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதுவது இதுவே முதல்முறை. காட்சி ஊடகத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு எழுதுவது மிகவும் சுவாரசியமான  அனுபவமாக உள்ளது.
 • கடந்த ஆகஸ்ட் வரை தமிழ் பேப்பரின் ஆசிரியராக இருந்தபோது பல புதிய எழுத்தாளர்களை அதில் அறிமுகப்படுத்த முடிந்தது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது. இது நான் எழுதிப் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிது. தமிழ் பேப்பரில் தொடராக வெளிவந்த அப்புவின் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறும் பாலா ஜெயராமனின் வில்லாதி வில்லனும் வி. பத்மாவின் ஜென் மொழியும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களாக வருகின்றன. நான் மிகவும் எதிர்பார்த்தது, நாராயணனின் கருப்புப் பணம். கூர்மையான ஆய்வும் எளிய மொழியும் அழகாகக் கூடி வந்த தொடர் அது. துரதிருஷ்டவசமாக அவர் அதை முடிக்காமல் விட்டுவிட்டார். நரேன் மீது வருத்தமல்ல; கோபம். ட்விட்டரில் வெறும் மொக்கைகளாகப் போட்டுத்தள்ளிக்கொண்டிருந்த மாயவரத்தானை குட்டிக்குட்டி அரசியல் கட்டுரைகள் எழுத வைத்தது இன்னொரு மகிழ்ச்சி. இன்று அவர் டைம் டேபிள் போட்டுக்கொண்டு ஏராளமாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார். எல்லாம் அம்மா புராணம். கூடிய சீக்கிரம் ராஜ்ய சபா எம்பியாக அவர் அமர்த்தப்பட எல்லாம்வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
 • 2004 பிப்ரவரி முதல் பணியாற்றி வந்த கிழக்கு ஆசிரியர் பொறுப்பிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்டோடு விலகினேன். அடுத்தது என்னவென்று சிந்திக்கக்கூட அவகாசமில்லாமல் இரண்டு தொலைக்காட்சி சீரியல்களும் இரண்டு திரைப்படங்களும் என் நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் எழுத நினைத்த ஒன்றிரண்டு புத்தகங்களைப் பற்றி நினைக்கக்கூட முடியாமல் போய்விட்டது. அடுத்த ஆண்டு புத்தக எழுத்துக்காக முழுதாக மூன்று மாதம் ஒதுக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
 • ஆண்டிறுதியில், ஒரு புத்தகமாவது அவசியம் கொண்டுவாருங்கள் என்று என் நண்பர் பார்த்தசாரதி விடாமல் நச்சரித்தபடியால் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த சிலவற்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டேன். பதிப்பாளர்கள் அச்சுக்கு அனுப்பும் கெடு நாள்களெல்லாம் முடிந்தபிறகே இந்தப் பணி நிறைவடைந்திருக்கிறது. இருப்பினும் எப்படியாவது ஐந்தாம் தேதி கொண்டுவந்துவிடுகிறேன் என்று மதி நிலையம் மெய்யப்பன் வாக்களித்து எடுத்துக்கொண்டிருக்கிறார். கண்காட்சியில் வெளியாகிவிடும்.
 • இந்த ஆண்டு அதிகம் படிக்கவில்லை. இரண்டு மூன்று குண்டு புஸ்தகங்கள் படிக்க ஆரம்பித்துப் பாதியில் நிற்கின்றன. முழுக்க முடித்த ஒரே குண்டு என்று பார்த்தால் சென்ற கண்காட்சியில் வாங்கிய ட்ராட்ஸ்கி வாழ்க்கை வரலாறுதான். இதைப் பற்றித் தனியே எழுதவேண்டும் என்று அநேகமாக ஆறு மாதகாலமாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்னும் எழுதப் போகிறேன். திருவருட்பாவின் உரைநடைப் பகுதி, ராஜு ஜோக்ஸ், வியத்தகு இந்தியா, வ.ஊ.சியின் திலக மகரிஷி, சைவப் பெருவெளியில் காலம் (இரா. ராஜசேகரன்), ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு, ஜெயமோகனின் அன்னா ஹஸாரே ஆகியவை, வாசித்து முடித்தவற்றுள் உடனே நினைவுக்கு வருபவை. இவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு காரணங்களுக்காக மிகவும் விரும்பினேன்.
 • நினைவு தெரிந்த நாளாக வாசித்து வந்த குமுதத்தை இந்தாண்டு தலைமுழுகினேன். வீட்டில் குமுதம் வாங்குவது நிறுத்தப்பட்டது. அதேபோல் தினமலரிலிருந்து தினத்தந்திக்கு மாறியதும் ஒரு சரித்திர நிகழ்வு.
 • அயல்மொழிப் படங்கள் எதுவும் பார்க்கவில்லை. பார்த்த தமிழ்ப் படங்களில் எது ஒன்றும் மனத்தில் நிற்கவில்லை. (இதில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் சேர்த்தியில்லை.)
 • என் பழைய லெனொவாவைப் போட்டுவிட்டு ஒரு புதிய லெனொவா வாங்கியது, ஜாலிக்காக ஒரு குட்டி லேப்டாப் வாங்கியது இடையில் கிட்டிய அற்ப சந்தோஷம். ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள என் நண்பர் டைனோவின் இடைவிடாத கேன்வாஸிங்கினாலும் நேற்று வாசித்த அமுவின் இந்தக் கட்டுரையின் விளைவினாலும், மாயவரத்தான் சிபாரிசு செய்த ஆண்டிராய்ட் போனைத் தேடி தெருத்தெருவாக அலைந்து, கிடைக்காது போய்விட்ட கடுப்பினாலும் நாளை டிச. 31ம் தேதி ஒரு ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன். சாகித்ய அகடமி பரிசு, விஷ்ணுபுரம் பரிசு உள்ளிட்ட எதுவும் இந்த ஆண்டும் கிடைக்காதபடியால் இது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் பரிசு.
 •  இந்த ஆண்டு இணையத்தில் எழுதியது குறைவு என்று தோன்றுகிறது. சென்ற ஆண்டும், முந்தைய ஆண்டும் இப்படியேதான் தோன்றியது என்பதும் நினைவுக்கு வருகிறது. அடுத்த வருடம் வாரம் ஒரு கட்டுரையாவது எழுத நினைத்திருக்கிறேன்.
 • நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.
Share

11 comments

 • தங்களின் அறிவு சார்ந்த பதிப்புகளுக்கு அடியேன் என்றுமே ஒரு தொடர் வாசகன். எனது நண்பனின் வலை பூ மூலம் உங்கள் வலை பூ அறிமுகம் கிடைத்தது. உங்கள் பணி மென்மேலும் சிறப்பு அடையட்டும்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  http://www.thevoiceofindian.blogspot.com

  நன்றி.

 • வாழ்த்துகள்!!

  நீலக்காகம் தொடர் இணையத்தில் ஆரம்பித்தீர்கள் !! பேர் ராசியோ என்னமோ அத்தொடரும் அரிதாகிவிட்டது.

 • //அடுத்த ஆண்டு புத்தக எழுத்துக்காக முழுதாக மூன்று மாதம் ஒதுக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்//
  தயவு செய்து இந்த ஆண்டு நச்சுனு நாலு புத்தகம் எழுதிவிடுங்கள்.

  அனைத்து வாசகர் சார்பாக,
  வி. இராஜசேகர்

 • //அடுத்த வருடம் வாரம் ஒரு கட்டுரையாவது எழுத நினைத்திருக்கிறேன்//

  புத்தாண்டு வாழ்த்துகள் 🙂


 • பா.ரா.உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  அன்புடன்,
  Ganpat

 • நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்….

 • நயமானதும் கவர்ந்ததுதும் .. ரெண்டாம் வகுப்பு அம்மக்கள், பேசுகண்ணா பேசு , ஆயிரம் அப்பளநிலவுகள் 2012 வாழ்த்துக்கள்!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter