குற்றியலுலகம்

ட்விட்டராகப்பட்டது, கிபி 2006ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2008ம் வருடம் மே மாதம் 25ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது. ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை.

செய்திகள், தகவல்கள், வெண்பா(ம்)கள், சிந்தனைகள், நகைச்சுவை, உரையாடல், விவாதம், விதண்டாவாதம், இலக்கியம், சினிமா, வெட்டிப்பேச்சு என்று என்னவும் செய்யலாம். கடும் பணிகளுக்கு இடையே வெகு நிச்சயமாக ஒரு நல்ல ஓய்வையும் புத்துணர்ச்சியையும் ட்விட்டர் எனக்குத் தந்து வந்திருக்கிறது.

அதைவிட முக்கியம், ரசனை ஒருமித்த ஏராளமான நட்புகள் சித்திக்கும் பேட்டையாக இது இருப்பது. இவ்வகையில் FaceBookஐக் காட்டிலும் நான் ட்விட்டரை மிகவும் விரும்புகிறேன். ஃபேஸ்புக்கில் நட்பெனப்படுவது பெரும்பாலும் எண்ணிக்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ட்விட்டரில் அது ஆத்மார்த்தமானது. இந்தச் சந்து இல்லாது போனால் இன்றளவும் நண்பர்கள் என நினைத்ததும் மனத்தில் தோன்றும் பலபேர் எனக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள். ட்விட்டர் எனக்கு எம்பெருமானின் தனிக்கருணை.

0

முகப்பு ஓவியம்: பேயோன்

 

இந்த நூலில் நான் அதிகம் சேர்க்காத – ஆனால் பெருமளவில் நான் எழுதிய வெண்பாம் என்னும் நவீன இலக்கிய நாசகார வடிவத்தை முதல் முதலில் ட்விட்டரில்தான் பரிசோதித்துப் பார்த்தேன். அசப்பில் வெண்பாவைப் போலவே இருக்கும். ஆனால் அது வெண்பா அல்ல. இலக்கணங்களுக்குள் அகப்படாது. 140 கேரக்டர்கள் என்னும் ட்விட்டரின் இலக்கணம் ஒன்றுதான் இதற்கும் இலக்கணம். ஆனால் சந்தம் தப்பாது. எதுகை மோனை பிறழாது. வெண்பாமிலிருந்து வெண்பாவுக்குச் செல்வது மிகவும் சுலபம். சநாதனவாதிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளத்தக்க வகையில் – அதே சமயம், சமகால சங்கதிகளைக் குறுவரிகளில் பொதித்துத் தர வசதியாக இதனை நான் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

இதனால் கவரப்பட்டுப் பலபேர் வெண்பாம் எழுத முன்வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. வெண்பா உள்ளிட்ட அனைத்துப் பா வகைகளுக்கும் சுத்த இலக்கணம் அறிந்த இலவசக் கொத்தனார், பெனாத்தல் சுரேஷ், என். சொக்கன் போன்றவர்கள்கூட தயங்காமல் இதில் ஈடுபட்டது என் தனிப்பட்ட மகிழ்ச்சி. கிரிக்கெட் விமரிசனம், அரசியல் விமரிசனம், சினிமா விமரிசனம், புத்தக விமரிசனம், சமையல், சமூகம், சரித்திரம், சாராயம் என்று ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நாங்கள் வெண்பாம்களில் விளையாடித் தீர்த்திருக்கிறோம். அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து வினாடிகளுக்குள் வெண்பாம் எழுதும் புலிகளை நீங்கள் இந்தச் சந்தில் காணலாம். இவர்களால் வெண்பாக்களும் இதே வேகத்தில் எழுத இயலும் என்பதை ட்விட்டருக்கு வெளியே பலர் அறியமாட்டார்கள்.

0

எழுத்து எனக்குத் தவமல்ல. தரிசனமல்ல. கை பழகிய நுட்பம். புனைவாயினும், புனைவற்றதாயினும் எழுதும்போது இந்த உணர்வில்லாமல் நான் தொடங்குவதில்லை.

ஆனால் எழுத்து எனக்குச் சவாலாக இருக்கும் ஒரே பிராந்தியம் ட்விட்டர் மட்டுமே. ஒன்று, ஒன்றரை, அதிகம் போனால் ஒன்றே முக்கால் வரிகளுக்குள் ஓர் அனுபவத்தைத் தருவது என்பது எளிதல்ல. அதற்குள் ஒரு சிறு புன்னகையையாவது ஒளித்துவைத்து அனுப்பவேண்டும் என்பதே எனக்கு இதிலுள்ள ஆகப்பெரிய அக்கறை.

ஏனெனில், இந்தச் சுருக்கத்துக்கு நேர் எதிரான விரிவுரைகளையே பெரிதும் விரும்பும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இயங்கிக்கொண்டிருப்பவன் நான். இரு எல்லைகளுக்கும் நெருக்கமான பிராந்தியத்தில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்காகவேனும் ட்விட்டரை நான் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

0

ட்விட்டரில் எழுதுவதை ஒரு கடமையாகவோ, கட்டாயமாகவோ நான் எப்போதும் நினைத்ததில்லை. பொதுவில், இணையத்தில் எழுதும் எதையுமே பொழுதுபோக்குக்காக மட்டும் என்று தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறேன். ஆனால், பொழுதுபோக்கையும் ரசனையுடன் மேற்கொள்ள என்னைத் தூண்டியது ட்விட்டர். எனவே அதற்கு நன்றி சொல்லிவிட வேண்டும்.

ட்விட்டரில் உள்ள எனது சுமார் இரண்டாயிரம் நண்பர்களுள் சில நூறு பேருடன் மட்டுமே நான் விவாதித்திருக்கிறேன் என்பதை இதனைத் தொகுக்கும்போது கவனித்தேன். அதிலும் சுமார் 20-30 பேருடன்தான் தொடர்ந்து பேசி, விவாதித்து வந்திருக்கிறேன். நான் ட்விட்டரில் உலவும் நேரமும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

இயங்கியவரையில், பேயோனுடன் செலவழித்த பொழுதுகளை மிகவும் விரும்பினேன். இணையம் கண்டெடுத்த, நம்பமுடியாத அறிவு ஜீவி, திறமைசாலி. பல சந்தர்ப்பங்களில் நண்பர்கள் நானே பேயோனாக வருகிறேனோ என்று சந்தேகம் கிளப்பியிருக்கிறார்கள். அவர்கள் சந்தேகத்தை வலுப்படுத்துவதற்காக வேண்டுமென்றே என் மொழி நடையில் மாற்றம் செய்து சில ட்விட்களை நான் எழுதியிருக்கிறேன். அவரும் மிக அழகாக இந்த விளையாட்டுக்கு ஈடு கொடுத்திருக்கிறார். எழுத்தில் முடியாதது எதுவுமில்லை; வெட்டி விளையாட்டு உள்பட.

கடந்த நான்காண்டுகளில் சுமார் எட்டாயிரம் ட்விட்டுகளை எழுதியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் சேகரிக்க இயலாது போய்விட்டது. கிடைத்த கொஞ்சத்தில் எனக்குப் பிடித்த சிலவற்றை மட்டுமே இதில் தொகுத்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்க முடியுமானால் மேலும் சில நூறு ட்வீட்களைப் பிடித்திருக்க முடியும்.

ஆயினும் என்ன? பதம் பார்க்க இது போதும்.

0

இந்நூலை என் இனிய நண்பர் டைனோபாய்க்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன். தமிழ் இணையம் எனக்கு அறிமுகமான இரண்டாயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தில் உயிருடனும் உயிர்ப்புடனும் இயங்கிய ராயர் காப்பி க்ளப்பில் அறிமுகமாகி, இன்றைய ட்விட்டர் காலம் வரை நீளும் எங்கள் நட்புக்கு வயது அநேகமாக எட்டரை. ஒரே ஒரு முறைதான் இதுவரை நேரில் சந்தித்திருக்கிறோம். அதுகூட வெகு சமீபத்தில்.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பக்கத்து இருக்கையில் இருப்பவர் போலவே எப்போதும் நான் டைனோவை உணர்கிறேன்.

இதனைச் சாத்தியமாக்கியதும் ட்விட்டர்தான்.

[சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் என்னுடைய ‘குற்றியலுலகம்’ நூலுக்கான முன்னுரை. பதிப்பு மற்றும் விலை விவரங்கள் பிறகு.]
Share

10 thoughts on “குற்றியலுலகம்”

  1. அது திருமண்ணும் இல்லை. இது வைணவப் பிரசார நூலுமில்லை. பேய் போட்ட படம் பிடித்திருந்ததால் / பொருத்தமாகத் தோன்றியதால் கேட்டு வாங்கிப் பயன்படுத்தினேன். அவ்வளவுதான்!

 1. குறியீடுகள் இல்லை என்று நீங்கள் சாதித்தாலும் முற்றியலுலகம்* அதை நம்பாது!

  * முற்றியலுலகம் – எதிலும் குறியீட்டைத் தேடி முற்றிப்போனவர்களின் உலகம்

 2. ஆயில்யன்

  வாழ்த்துகள் சார்!

  ************
  //இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்க முடியுமானால் மேலும் சில நூறு ட்வீட்களைப் பிடித்திருக்க முடியும்.//

  குரு பேயோனின் வழிமுறையினை பின்பற்றி அவ்வப்போது செம்மொழி பதிப்புகள் வெளியீடு செய்திருந்தால் புடிச்சிருக்கலாம்!

  ************

  டைனோ கொழந்தையினை வயசான தோற்றத்தில் காட்ட முயற்சிக்கும் உங்களின் நுகபிநி!

 3. கோயிஞ்சாமி எண் 408

  பா – கால் போயி – ப ஆச்சோ?
  குற்றியலுலகம் என்பதால் நெடில் குறில் ஆச்சோ?

 4. நடுவில் ஒன்று குறைகிறதே? இது எப்படி வைணவ
  குறியீடாக இருக்க முடியும்?

 5. பார்த்தசாரதி ஜெயபாலன்

  வாத்யாரே…எனக்கு மிகவும் பிடித்த பாம்

  கஞ்சிக்கு பதில் காஞ்சீபுரம் இட்லியென
  நெஞ்சைக் குளிர்வித்தாள் வஞ்சி.

 6. பார்த்தசாரதி ஜெயபாலன்

  வாத்யாரே..எனது பின்னூட்டத்தில் பாதி மட்டறுக்கப்பட்டிறுக்கிறது.

  அது நீங்கள் “தமிழே தப்பிச்சுக்கோ” என்று கீழ்க்காணும் பதிவில் எழுதியதுதான்.

  http://writerpara.com/paper/?p=11

  ஏன் அதை நீக்கினீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.

 7. Pingback: இந்த வருடம் என்ன செய்தேன்? | பா. ராகவன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *